Published:Updated:

அமாவாசையில்... தில்லைக் காளி தரிசனம்!

அமாவாசையில்... தில்லைக் காளி தரிசனம்!

அமாவாசையில்... தில்லைக் காளி தரிசனம்!

அமாவாசையில்... தில்லைக் காளி தரிசனம்!

Published:Updated:
அமாவாசையில்... தில்லைக் காளி தரிசனம்!

திருச்சி- உறையூர் சாலை ரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமவல்லி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம். காந்திமதி எனும் சிவபக்தை கர்ப்பிணியாக இருந்த வேளையில், ஸ்ரீதாயுமான ஸ்வாமி (ஈஸ்வரன்) சிவலிங்க வடிவமாகக் காட்சி கொடுத்த இடத்தில் கோயில் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

இந்தத் தலத்து நாயகன்- ஸ்ரீதான்தோன்றீஸ்வரர். சுயம்புமூர்த்தம். அம்பாள் -ஸ்ரீகுங்குமவல்லி அம்பாள். கர்ப்பிணிகளும் திருமணமான பெண்களும் இங்கு வந்து வழிபட்டால், சுகப்பிரசவம் நிகழும்; மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கே, தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் வளைகாப்பு விழா வெகு பிரசித்தம். இந்த நாளில், ஆயிரக்கணக்கான வளையல்களால் அலங்கரித்த அம்பாளைத் தரிசித்து, அவளின் வளையல் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டால், பிள்ளை பாக்கியம் இல்லை என வருந்துவோருக்கு விரைவிலேயே குழந்தை வரம் கிடைக்கும்; சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை.

அமாவாசையில்... தில்லைக் காளி தரிசனம்!

தெற்கு நோக்கியபடி அம்பாள் கொள்ளை அழகுடன் காட்சி தரும் அழகே அழகு! இவளே இங்கு பிரதான நாயகி. குங்குமவல்லி அம்மன் ஆலயம் என்றால்தான் பக்தர்கள் பலருக்கும் தெரிகிறது. சக்தியும் கருணையும் கொண்ட தெய்வம் இவள். அதேபோல், நவக்கிரகங்கள் தம்பதி சமேதராக இங்கே காட்சி தருவதும் விசேஷம் என்கின்றனர்.

இங்கேயுள்ள பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் சிறப்புற பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த நாளில் ஸ்ரீபைரவரை வணங்கினால், தரித்திரம் விலகும்; எதிரிகள் காணாது போவார்கள் என்று தெரிவிக்கின்றனர், பக்தர்கள். ஸ்ரீபிரம்மா, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.

அமாவாசையில்... தில்லைக் காளி தரிசனம்!

தில்லையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீகாளி, இங்கே தில்லைக்காளியாக நின்ற திருக்கோலத்தில் இருந்தபடி அனைவரையும் காத்தருள்கிறாள். ஒவ்வொரு அமாவாசை நாளிலும், தில்லைக்காளிக்கு சிறப்பு பூஜைகள், யாகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, தை அமாவாசை நாளில் ஸ்ரீகாளியை வழிபட்டால், நம் முன் ஜென்ம வினைகள் யாவும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

அமாவாசை நாளில், தில்லைக் காளிக்கு 108 திரவியங்களால் அபிஷேகமும் விசேஷ யாகமும் நடைபெறும். தை அமாவாசை நாளில் இங்கு வந்து, ஸ்ரீகாளிக்குப் புடவை சார்த்தி, நம் குறைகளை அவளிடம் முறையிட்டால் போதும்... விரைவில் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைத்து அருள்வாள் தேவி என்கின்றனர் பெண்கள்.

யாகத்தில், அபூர்வ மூலிகைகளுடன் மிளகாய் வற்றலும் போடப்படுகிறது. இதில் கலந்துகொண்டு வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; குடும்பத்தில் தம்பதிக்குள் ஒற்றுமை மேலோங்கும்; வழக்கில் வெற்றி கிடைக்கும்; சகோதரச் சண்டைகள் யாவும் தீர்ந்துவிடும்; தீயசக்திகள் விலகி ஓடும்; கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தை அமாவாசை நாளில், தில்லைக்காளியின் வழிபாட்டில் கலந்துகொண்டு அவளை நாமும் தரிசிப்போம். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வாள் தேவி!

        - பி.விவேக் ஆனந்த்

           படங்கள்: தே.தீட்ஷித்