Published:Updated:

மும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்திமலை!

தை அமாவாசை தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இது! இங்கே சிவனாரின் திருநாமம் - ஸ்ரீஅமனலிங்கேஸ்வரர். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தை 'தென் கயிலாயம்’ என்று போற்றுகின்றனர், பக்தர்கள்.  

 மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று தீய குணங்களையும் நீக்கி அருள்பவர் என்று சிவனாரைப் போற்றுகின்றனர். இவரை வழிபட்டால், பஞ்ச பூதங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்திமலை!

அத்திரி மகரிஷிக்கும் அவர்தம் மனைவி அனுசூயைக்கும் அருள்வதற்காக, இந்த மலையில் இருந்தவர்களின் இல்லத்துக்கு மும்மூர்த்திகளான சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் வந்தனர். அப்போது மூன்று பேரையும் குழந்தைகளாக்கி, அமுது படைத்தாள் அனுசூயை. மும்மூர்த்திகளும் இல்லாததால் உலகச் செயல்பாடே தடைப்பட... உமையவள், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாலட்சுமி ஆகியோர் அனுசூயாவிடம் வந்து முறையிட்டனர். அதையடுத்து, மும்மூர்த்தியரையும் பழைய உருவுக்கு மாற்றினாள் அனுசூயா என்கிறது ஸ்தல புராணம். இன்றைக்கும் திருமூர்த்தி மலையில் அனுசூயாதேவிக்குக் கோயில் உள்ளது.

மும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்திமலை!

பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. மருத மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட இந்த ஆலயத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில், திருக்கார்த்திகை நன்னாளில் தீபமேற்றிக் கோலாகலமாக வழிபடுவார்கள் பக்தர்கள்.

இங்கே, முருகப்பெருமானுக்கும் விநாயகருக்கும் தனித்தனிச் சந்நிதி அமைந்துள்ளது. இரண்டு பேரின் சந்நிதிக்கு நடுவில் உள்ள 'வருடிக் கல்’ என்பது மிகப் பிரசித்தம். இந்தக் கல்லில் தேங்காய் வைத்து வழிபட்டால், விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், இங்கே உள்ள சப்தகன்னியர் சந்நிதியில் மஞ்சள் பூசி வேண்டிக் கொண்டால், கணவனின் தீராத நோயும் தீரும்; மாங்கல்ய பலம் பெருகும்.

குடைவரைக் கோயிலாகச் சந்நிதி கொண்டிருக்கின்றனர் மும்மூர்த்திகள். இங்கே மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தரிசனம் செய்தால், நம் ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும்; பித்ருக்கள் மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.

குறிப்பாக, தை அமாவாசை நாளில், முதல்நாள் இரவே இங்கு வந்து, தங்கிவிடுகின்றனர் பக்தர்கள். விடிந்ததும் முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய திதி மற்றும் கடமைகளை, பாலாற்றங்கரையில் நீராடிவிட்டுச் செய்கின்றனர். பிறகு ஆலயத்துக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள்கூட, தை அமாவாசை நாளில் இங்கு வந்து, தர்ப்பணம் செய்து வழிபடுவது பலனைத் தரும் என்கின்றனர், பக்தர்கள்.  

  - இரா.வசந்த்

படங்கள்: கி.விக்னேஷ்வரி