Published:Updated:

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

Published:Updated:
சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!
##~##

சென்னை அடையாறு தாண்டி, அடர்த்தியான வியாபாரச் சூழலில், மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட ஒரு நந்தவனம் போல பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு. ஆறு மாடிக் கட்டடம். அதில் ஒரு செடியிலிருந்து - அதாவது ஒரு குடியிருப்பிலிருந்து சங்கீதம் புனல் போலப் பொங்கி வழிகிறது. அது, ஓ.எஸ்.அருணின் வீடு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சாஸ்திரிய சங்கீதத்துடன் பஜன் என்கிற விஷயத்தையும் கலந்து ஜனங்களைக் கட்டிப்போடுகிற வித்தைக்காரர், அருண். தன்னை, தன் சங்கீதத்தை முன்னிறுத்தி அதைத் திணிப்பதற்கு முயற்சி செய்யாது, 'நான் பாடுகிறேன், கேள்! என் பாட்டு உனக்குப் பிடிக்கும். உன்னைத் தலையசைக்க வைக்கும்’ என்பதாய், இந்துஸ்தானி இசையைக் குழைத்து சிறுசிறு பாடல்களாக, பக்தி ததும்புகிற சங்கீதமாக மாற்றி, அதைத் தெவிட்டாத தேனிசையாய் மக்கள் ரசிக்கும்படி பாடுகிற மாயாஜாலக்காரர். 'ஸ்ருதி மாதா, லயம் பிதா. எனக்கு லயம் முக்கியம். என்னோடு சேர்ந்து, என் பாட்டோடு சேர்ந்து எதிரே உட்கார்ந்து கேட்பவர்களும் தாளம் போட்டுப் பாடலில் ஈடுபட வேண்டும்’ என்கிற ஆசையுள்ளவர் ஓ.எஸ்.அருண்.

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

ஓ.எஸ்.அருணின் தகப்பனார் ஓ.வி.சுப்ரமணியம் இறக்கும் தறுவாயில் பாட்டுப் பாடிக் கொண்டே இறந்தவர். அப்பாவின் ஆசி காது வழியே நுழைந்து, மகனின் தொண்டையில் தங்கிக்கொண்டது.

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

கமகங்களும் பிருகாக்களும் அங்கு சுழன்று சுழன்று பொங்க, தன் தகப்பனாரே காரணம் என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார், ஓ.எஸ்.அருண். ஓ.எஸ்.தியாகராஜனின் இளைய சகோதரர் இவர். டெல்லியில் வளர்ந்து நிமிர்ந்து, இந்தி மொழியில் ஆளுமை பெற்ற ஓ.எஸ்.அருண், தன் தமையனார் தியாகராஜன் சென்னைக்கு வரச் சொல்ல, இங்கே குடியேறினார்.

பாலகுமாரன்: என் எழுத்து ஒரு தந்திரம் என்று நான் நினைக்கிறேன். என்ன செய்தால் வாசகர் அசருவார் என்ற எண்ணமும் அதில் பிரதானமாக இருக்கிறது. பிறகு, நல்ல செய்திகளைக் கோவையாகச் சொல்கிறேன். அதுபோல் சங்கீதமும் தந்திரமா? நீங்கள் என்ன விதமான தந்திரம் என்று நினைக்கிறீர்கள்?

அருண்: எல்லாக் கலையும் தந்திரம்தான். கணக்குதான். ஒரு கட்டத்துக்குள் அல்லது வட்டத்துக்குள் சீராக அடுக்கப்படுபவைதான். அந்த சீர்தான் கணக்கு; தந்திரம். மனிதனின் சாதாரணப் பேச்சுகூட, தினசரிப் பேச்சுகூட தந்திரம்தான். குழைவு, கோபம், சிடுசிடுப்பு, சந்தோஷம், பரவசம்தான். ஒவ்வொரு நேரத்துக்கு ஏற்ப எவ்வளவு குழைவு, எவ்வளவு சந்தோஷம், எத்தனை சிடுசிடுப்பு.

சபையில் உட்காரும்போது உண்டான மனோ நிலையிலிருந்து இந்தச் சங்கீதம் வெளியே வருகிறது. அஸ்திரப் பிரயோகம்போல நடைபெறுகிறது. ஜனங்களை அஸ்திரப் பிரயோகம் செய்து கட்டுண்டவராக்குதல் ஒரு வித்வானின் கடமை. அதிலிருந்துதான் சிறந்த பாடகர், சிறந்த பாட்டு, சிறந்த கச்சேரி என்றெல்லாம் வெளிவருகின்றன. ஆனால் பல நேரங்களில், இந்த தந்திரம் ஆரம்பித்த சில மணித்துளிகளில் நான் என் பாட்டில் கரைந்து போய், நானே காணாமல் போய் என் சங்கீதத்தில் நானே லயித்து, சந்தோஷமடைந்துவிடுகிறேன். அப்போது தந்திரமான பாட்டைவிட, நான் என்னுள் வசப்பட்ட பாட்டு இன்னும் அழகாக அமைகிறது. எனவே, சங்கீதம் தந்திரமா என்றால், ஆமாம்தான்; இல்லையும்தான்.

''இதைத் தொடர்ந்து இன்னொரு கேள்வி. கொஞ்சம் ஆழமானது, கேட்க விரும்புகிறேன்'' என்றதும், அருண் இன்னும் அருகே வந்து உட்கார்ந்துகொண்டார். கேளுங்கள் என்பது போல் முகம் இருந்தது.

பாலகுமாரன்: சங்கீதத்தின் வழியாகத் தன்னைத் தேடுதல் அல்லது கடவுளைத் தேடுதல் என்பது உங்களிடம் நடைபெறுகிறதா? ஆம் எனில் எங்ஙனம்? அஃதெனில் எதனால்?

அருண்: கடவுளைத் தேடுதல் என்று அதற்குப் பெயரிட முடியுமா? தெரியவில்லை. ஏதோ என் நடு மத்தியில் இருந்து அது வெளிப்படுகிறது. வேகமாக உருவாகிறது. எந்தத் திட்டமும் அந்த மேடையில் அந்த க்ஷணம் இல்லை. புரண்டு, உருண்டு எல்லாவற்றையும் அடித்து வருகிற வெள்ளம்போல அது என்னிலிருந்து வெளிப்படுகிறது. இப்படி ஒரு சங்கதி இதற்கு முன் நாம் போட்டதே இல்லையே என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. அட, இது எதிரே இருக்கிற ஜனங்களுக்குள் விழுந்து தீப்பிடித்துக் கொண்டதே என்கிற சந்தோஷமும் பரவுகிறது. அந்த சந்தோஷத்தில் இன்னும் வேகமாக அந்த ஆலாபனை அல்லது நிரவலை செய்யத் துவங்குகிறேன். லிஸ்ட் கொடுத்துப் பாடச் சொன்னால், பாடமாட்டேன்; எனக்கு அது பிடிப்பதில்லை. என்னுள் மத்தியத்திலிருந்து வெளிவருகிற விஷயத்தை என்னையும் அறியாமல் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் எந்தவிதத் திட்டமும் இல்லாமல் உங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறேனே, இதற்குப் பெயர் கடவுள் தேடுதலா, தன்னைத் தேடுதலா... எனக்குத் தெரியவில்லை; தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. கடவுள் தேடுதல் என்கிற பிரமாண்டமான வார்த்தையைப் போட்டு இதை உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. அதுபோல ஏதோ ஒன்று உள்ளே நடக்கிறது. எல்லாப் பாடகர்களுக்கும் இது நடக்கும் என்று தோன்றுகிறது.

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

சங்கீதம் தந்திரம் என்று சொல்கிறீர்களே, அதில் திட்டமிடல் உண்டு; கணக்கு உண்டு; இன்னின்ன நடக்க வேண்டும் என்ற உத்தேசங்கள் உண்டு. அது எதுவும் இல்லாமல் சில சமயம் தன்பாட்டுக்கு நடந்துகொண்டிருக்கிறதே, அதை என்னவென்று சொல்ல? எனக்குப் பெயரிடத் தெரியவில்லை. அது என்ன என்று விசாரிக்கிற எண்ணமும் இல்லை. நானே என்னுள் லயித்துக் கிடக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதுவும் மிகப் பெரிய வார்த்தையோ என்ற பயம் வருகிறது.

பாலகுமாரன்: நீங்கள் கனவுக்குள் பாடுகிறீர்களா? கனவில் பாடியதுண்டா?

அருண் ஆழ்ந்து யோசிக்கிறார்; சிரிக்கிறார்; இருபுறமும் பார்க்கிறார்; எதிரே உட்கார்ந்திருக்கும்

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

மனைவியைக் கண்களால் கேள்வி கேட்கிறார். பிறகு...

அருண்: கனவுக்குள் பாடியதாக ஞாபகம் இல்லை. ஆனால் என் பாடலை, நான் நேசிக்கிற, பெரிதும் மதிக்கிற பெரிய பாடகர்கள் பண்டிட் ரவிசங்கர், குலாம் அலிகான் போன்றவர்கள் பாராட்டுகிறார்கள் என்பதாகக் கனவு வந்திருக்கிறது. அதாவது, நான் நன்றாகப் பாடியிருக்கிறேன். அந்தப் பாட்டை யாரோ பாராட்டுகிறார்கள். பாட்டும் ஞாபகம் இல்லை. பாடியதும் ஞாபகம் இல்லை. பாராட்டு மட்டுமே நிற்கிறது. அது ஒருவேளை என் ஆசையின் வெளிப்பாடாக, ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.

பாலகுமாரன்: இந்துஸ்தானி சங்கீதம் கற்றுக்கொண்டீர்களா?

அருண்: இல்லை. காதால் கேட்டதுதான். செவி வழி உணவுதான் அது. அது என்னை நன்றாக வளர்த்தது. ஆனால், சங்கீதத்தை என் தந்தையாரிடம் கற்றுக்கொண்டேன். பிறகு, இங்கு உள்ள சில ஜாம்பவான் களிடம் மெருகேற்றிக் கொண்டேன். எனக்கு குரு அப்பா. குருவே அப்பா. அப்பாவே குரு. இது பெரிய பாக்கியம்.

பாலகுமாரன்: ஒரு பாடகர் என்னிடம் சொன்னார்... மேடைதான் வெளிச்சமாக இருக்கும். எதிரே இரண்டு வரிசைகளுக்கு மேடையின் வெளிச்சம் இருக்கும். அதற்குப் பிறகு இருட்டுதான். யார் கேட்கிறார்கள், எப்படிக் கேட்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. மேலும், பாடும்போது கண்களை மூடிக்கொள்வதால், எதிரே இருப்பவர்களும் மறைந்துபோகிறார்கள். நான் எனக்காகப் பாடுகிறேன். அதை ஜனங்கள் ரசிக்கிறார்கள் என்கிறார். உங்களுடைய சங்கீதம் எப்படி? நீங்கள் உங்களுக்காக பாடுகிறீர்களா? ரசிகர்களுக்கா?

அந்த பாகவதர் தொடர்ந்து கேலியாகச் சொன்னார்... 'சூடா போண்டா இருக்கு சார், சாப்பிடறேளா’ என்று கேட்பதுபோல, ரசிகர்களின் விருப்பத்துக்குப் பாடுவது சங்கீதபவனாக அமைந்துவிடும்; ஓட்டல் சரக்காகப் போய்விடும். என்னுடையது அப்படியில்லை’ என்று மார் தட்டிக்கொண்டார். இதைப் பற்றியும் சொல்லுங்கள்.

அருண்: நான் எனக்காகவும் பாடுகிறேன். மற்றவர்களுக்காகவும் பாடுகிறேன். மி ஷிவீஸீரீ ணீஸீபீ ஷிமீக்ஷீஸ்மீ. நான் பரிமாறுகிறேன்; யார் சாப்பிடுகிறார்கள் என்று கவனித்துப் பரிமாறுகிறேன். நானே அந்தப் பண்டத்தை உருவாக்குகிறேன். சமைத்ததும் நானே; பரிமாறுவதும் நானே; ஓரமாக நின்று, 'அட... ரசித்து ரசித்து ரசம் உண்ணுகிறார்களே’ என்று பெருமைப்படுவதும் நானே! ஒரே ஆளாக, வெறுமே சங்கீதக்காரனாக என்னால் இருக்க முடியாது. உங்களுடைய அபிப்ராயம் எனக்கு முக்கியம். எதிரே இருப்பவருடைய கரகோஷம் எனக்கு முக்கியம். எவ்வளவு ரசித்திருக்கிறார்கள் என்பதை ஓரளவு அந்தச் சபையிலிருந்து நான் தெரிந்து கொள்ள முடியும். இதைக் கூடுதலாக்க வேண்டும் என்று நான் முயற்சிக்கவும் முடியும். ஆக, இது எனக்காகப் பாடுகிறேன் என்ற இடத்தில் நான் இல்லவே இல்லை.

பாலகுமாரன்: ஓ.எஸ்.அருணுடைய சமுதாய நலன் தரும் செயல்கள் என்ன?

அருண்: ஆலாபனா டிரஸ்ட் என்று ஒன்று வைத்திருக்கிறோம். அதன் மூலம், வயதானவர்கள் தங்கியிருக்கின்ற இடங்களுக்குப் போகிறோம். அனாதைக் குழந்தைகளுக்கான பள்ளிகளுக்குப் போகிறோம். அங்கு போய் என்னாலான உணவு, துணிமணிகளை கொடுக்கிறேன். பிறகு, அவர்களுக்குப் பாடுகிறேன். தலையைத் தடவி, கண்ணீர் உகுத்து ஆசிர்வதிப்பவர்கள் உண்டு. குழந்தைகள் சந்தோஷமாக என்னோடு சேர்ந்து பாடும். இம்மாதிரியான செயல்கள் மிகுந்த நிம்மதியை தருகின்றன. இங்கு சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே பிரதானமாக இருக்கிறது. இவர்களுக்கு என்ன பிடிக்கும் என்ற யோசனையிலேயே, அந்த இடம் நோக்கி நான் நகருகிறேன். இது பாட்டு மட்டுமே அல்லாது, பாட்டின் மூலம் மட்டுமே அல்லாது பொருளாதார உதவிகள் செய்வதும், செய்யமுடியும் என்கிற நிலைமையையும், எனக்கு என் வாழ்க்கையைப் பற்றிய திருப்தியையும் ஏற்படுத்துகிறது. நான் சந்தோஷமாக இருக்கக் காரணம் இம்மாதிரியான செயல்கள்தான். அந்தச் சந்தோஷத்திலிருந்து என் சங்கீதம் பீறிடுகிறது.

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

பாலகுமாரன்: சங்கீதம் தெரியாதவர்களுடன் ஓ.எஸ் அருணுக்குச் சம்பந்தம் உண்டா?

அருண்: எனக்கு எல்லோரோடும் தொடர்பு உண்டு. ஓ.எஸ். அருணைத் தொடர்புகொள்ள சங்கீதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. சங்கீதம் தெரியாவிட்டால் என்ன, ஏதோ ஒரு பாட்டு, சினிமாப் பாட்டாவது தெரியுமல்லவா? அது எனக்குப் போதுமானது. நான் எப்படிப்பட்ட பாடகர் என்று அவருக்குத் தெரியாது போனால் என்ன? அதைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. நான் அவர் கேட்டாலும் பாடுவேன்; உங்களைப் போன்றவர்கள் கேட்டாலும் பாடுவேன்.

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்களை முதன்முதலில் பார்த்தவுடனேயே எனக்குப் பிடித்துவிட்டது. இது யாரோ மிகச் சரியான ஆள் என்ற எண்ணம் தோன்றி விட்டது. நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்தவுடன் அந்தக் கச்சேரி எனக்கு மிக முக்கியமானதாகப் போய்விடுகிறது. உங்களுடைய சங்கீத ஞான அளவு பற்றி எனக்கு அக்கறை இல்லை.

நான் யார் கேட்டாலும், எங்கு கேட்டாலும் பாடுகின்ற மனோநிலையில் இருக்கவே விரும்புகிறேன். என் பாட்டு தெரியவில்லையா, பிடிக்கவில்லையா; அதனால் பரவாயில்லை. பரஸ்பரம் நீயும் நானும் மனிதர்கள். அது போதும்! இசை எனக்கு இறையருள். அதேபோல விமர்சனங்களும், பதவிகளும் பட்டங் களும் இறை அருளாகக் கிடைக்க வேண்டும். உங்கள் நட்பைப் போல..!

- சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிக்கிறார் ஓ.எஸ்.அருண். அவரின் சிரிப்புகூட சங்கீதமாக இருக்கிறது.

ஓ.எஸ்.அருணின் மனைவி ஹேமா. வீட்டுக்குள் துள்ளிக் குதித்து மான் குட்டி போல இடதும் வலதும் ஓடுகிறார்.

காபி கொண்டு வருகிறார். கீழே ஓடிப்

போய் குழந்தையைப் பள்ளிக்கூடத் திலிருந்து அழைத்து வருகிறார்.

கணவருக்கு முன்பு தரையில் அமர்ந்து, அவர்

பாடுவதைக் கண்கள் பனிக்க, வியக்கக் கேட்கிறார்.

ஓ.எஸ்.அருணின் ஆதாரம் அந்தப் பெண்மணிதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சங்கீதம் தவிர வேறு எந்தக் கவலையும் தன் கணவர் படக்

கூடாது என்பதில், அவர் மெனக்கெட்டுச் செயலாற்று வதை சிறிது நேரப் பழக்கத்திலேயே புரிந்துகொள்ள முடிகிறது. ஓ.எஸ்.அருணுக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை- மகள் ஹர்ஷினி. இரண்டாவது குழந்தை- மகன் அபிநவ் கிருஷ்ணன்.

பாலகுமாரன்: சங்கீதம் அல்லாது உங்கள் பொழுதுபோக்கு என்ன?

அருண்: நீலக்கடல், உச்சிமலை, பசும் பள்ளத்தாக்கு, புரண்டு ஓடும் நதி என்கிற மாதிரியான இடங்களில் தனியே நிற்பது. உள்ளே சங்கீதம் நிரம்பி வழியும் தருணம் அது. ஆனால், இது எப்போதாவதுதான் கிடைக்கும். வீடு, மனைவி, குழந்தைகள் என்று இந்த இடத்தில் இவர்களோடு கொஞ்சிக்கொண்டிருக்கும் நேரம் உள்ளே குதூகலம் நிரம்பி, அதன் வெளிப்பாடாய் சங்கீதம்தான் வரும். என் வீடு ஒரு நிம்மதியான இடம்.

சங்கீதம் = வில்; பாடல் - அம்பு!

அவர் முகம் அன்பில் மிளிருகிறது. ஓ.எஸ்.அருண் பல வெளிநாடுகளுக்குப் போய் வந்ததைச் சந்தோஷமாக நினைவுகூர்கிறார். லண்ட னில் மிகப்பெரிய சபையில் பாடியதும், மேலை இசை ஜாம்பவான்கள் வந்திருந்து கேட்டதும் அவரை நெகிழ்த்தியிருக் கின்றன. பிரெஞ்சுக்காரர்கள் மட்டுமே நிறைந்த ஒரு மொரீஷியஸ் சபையில் இவர் பாட, 'நாராயண... நாராயண’ என்று சபையோர் பாடி ஆடியதை விவரிக்கிறார். இசை, மொழி கடந்தது; தேசம் கடந்தது. கலாசாரங்களை மீறிக் கொண்டு கம்பீரமாய் நிற்பதுதான் சங்கீதம் என்பது எனக்குப் புரிந்தது.

ஓ.எஸ்.அருணுக்குத் தமிழில் பிடித்தது பாபநாசம் சிவன் பாடல்கள்.

அருண்: அவர் பாடல்களில் வரிகள் சுத்தமாக இருக்கும். கனத்த அர்த்தம் இருக்கும். இன்னொருவர் சுப்ரமணிய பாரதி. அவரை மகாகவி என்பதற்கும் மேலே என்ன சொல்லமுடியும்? நானே இசையமைத்து அவர் பாடல்களைப் பாடுவேன். எல்லா விதமான ராகங்களுக்கும் அவர் பாட்டு ஈடு கொடுக்கும்.

நான் அர்த்தம் தெரியாமல் பாடுவதில்லை. தமிழ்ப் பாட்டை எப்படிப் புரிந்துகொள்கிறேனோ, அதே மாதிரி மற்ற மொழிப் பாடல்களையும் புரிந்து, தெரிந்துகொண்டுதான் பாடுகிறேன். பாடல் என்ன சொல்கிறதோ, அதை பாவம் சொல்ல வேண்டும். அதாவது, பாடலின் பொருளை இசை அதிகரித்துக் காட்ட வேண்டும்; பாடல் அல்லது கவிதைக்கு மிகத் துணையாக நிற்க வேன்டும். 'கிருஷ்ணா, இங்கு ஓடி வா!’ என்பதைத் தமிழில் பாடலாம்; கன்னடத்தில், தெலுங்கில், மலையாளத்தில், மராட்டியில் பாடலாம். அந்தச் சபையில், அந்தப் பாட்டுக்குக் கிருஷ்ணன் ஓடி வரவேண்டும்; அவனை ஜனங்கள் மனதில் வைத்துக் கொஞ்ச வேண்டும். இந்த நிறைவுக்கு என் கடின உழைப்பு அடிப்படையாக இருக்கிறது.

பாலகுமாரன்: இன்னும் இசையில் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அருண்: பண்டிட் ரவிசங்கர் போன்றவர்களால் இந்துஸ்தானி சங்கீதம் நெருக்கமாய் மேலை நாடுகளில் இருக்கிறது. சிதார் பற்றித் தெரிந்திருக்கிறது. அந்த அளவுக்கு நாகஸ்வரம் பற்றித் தெரியுமா என்பது

சந்தேகமே! கர்னாடக இசையை மூலை முடுக்கெல்லாம்

தெரியப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. பீட்டில்ஸ்

எனக்குப் பிடிக்கும். எவ்வளவு எளிதாக அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்! இதை நம்மால் செய்ய முடியாதா என்ற தேடல் எனக்கு உண்டு.

கலியுகத்தில், நாம சங்கீர்த்தனமே மனிதரைக் கரையேற்றும் ஒரே வழி என்பார்கள். குரல் வளம், இசைஞானம் மிக்க ஓ.எஸ்.அருண் இதன் மூலம் மக்களை கட்டிப் போடுகிறார். நாம சங்கீர்த்தனம் என்ற கலையில்  வைரக் கீரிடம் ஓ.எஸ்.அருண்.

பாலகுமாரன்: உங்கள் சங்கீதத்தின் அடிப்படை சங்கீதமா, பக்தியா?

அருண்: சங்கீதம்தான் முதல். பக்தி, அதில் பயணிக்கிறது. துடிப்பான குதிரையை ஒரு திசை நோக்கி பக்தி நகர்த்துகிறது. உங்களுக்கு ராமர் தெரியும்; அவர் சரிதம் தெரியும். உன்னத புருஷன் என்று தெரியும். 'ரகுபதே ராமச்சந்த்ரா’ என்று பாடினால், பேசுவதைவிட, உபன்யாசத்தைவிட நூறு மடங்கு அதிகமாய் ராமர் உங்களிடம் வந்துவிடுவார். அதே நேரம், ராமர் இல்லாதும் சங்கீதம் இருக்கும். வார்த்தையற்ற ஆலாபனையிலேயே ஒருவர் மனதைக் கரைத்துவிட முடியும். அழவோ புன்னகை பூக்கவோ செய்துவிட முடியும். சங்கீதம் மிக வலுவான வில். பாடல் கூரிய அம்பு. இரண்டும் சரியான முறையில் இணையும்போது, குறி பிசகுவதில்லை. பாடுகிறவருக்கு வில் வித்தையில் பயிற்சியிருக்க வேண்டும்.

மெலிதாகச் சிரிக்கிறார் ஓ.எஸ்.அருண். அவரின் நற்பண்புகள் அவரை மேலும் உறுதியானவராக்கும்; உலகளாவிய புகழைக் கொண்டு வந்து சேர்க்கும். பல பத்ம விருதுகள் அவர் எதிரே வரிசை கட்டி நிற்கும். வாழ்க ஓ.எஸ்.அருண்!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism