Published:Updated:

ஜோதிர்லிங்கங்கள்...

ஜோதிர்லிங்கங்கள்...

ஜோதிர்லிங்கங்கள்...

ஜோதிர்லிங்கங்கள்...

Published:Updated:
ஜோதிர்லிங்கங்கள்...

மக்குப் பிடித்த, நம் மனத்துக்கு நெருக்கமான உறவுகளையும் நட்புகளையும் எண்ணிப் பார்க்கும்போதே உள்ளுக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அவர்களையே நேரில் பார்த்துவிட்டால், சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. அப்படித்தான்... உருவம் இல்லாத இறைவனை ஓர் உருவத்தில் தரிசிக்கும்போது, பக்தியில் திளைத்துப் போகிறோம். சிவலிங்க வழிபாடும் அப்படித்தான்.

அண்ட பகிரண்டத்தையும் தன்னுள் அடக்கிய பரம்பொருள் ஜோதி ஸ்வரூபமானவர். அந்த ஜோதி ரூபம், லிங்க வடிவில் காட்சி தரும் திருத்தலங்களையே ஜோதிர்லிங்கத் தலங்களாகப் போற்றுகின்றன புராணங்கள். இதோ, மாக (மாசி) மாதம் துவங்கப் போகிறது. மாசிமகம், மகா சிவராத்திரி... என நம் சிந்தையில் சிவத்தை நிறைக்கும் இந்தப் புண்ணிய தருணத்தில், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களின் பெருமைகளையும் மகிமைகளையும் அறிந்து மகிழ்வோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோதிர்லிங்கங்கள்...

ராமேஸ்வரம்- ஸ்ரீராமநாதர்

இலங்கையில் ராவணனை அழித்து சீதாதேவியை மீட்டுத் திரும்பிய ஸ்ரீராமன், தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவ வழிபாடு செய்ய எண்ணினார். அதற்காக காசியில் இருந்து சிவலிங்கம் கொணரும்படி அனுமனைப் பணித்தார். அதன்படி காசிக்குச் சென்ற அனுமன் திரும்பி வரத் தாமதம் ஆனது. வழிபாட்டுக்குகந்த புண்ணிய காலம் நெருங்கிவிடவே, சீதாபிராட்டியார் மணலைப் பிசைந்து ஒரு லிங்கத்தை வடிவமைத்தார். ஸ்ரீராமனும் அந்தச் சிவலிங்கத்தை பூஜித்து வழிபட்டார். அதனால் அந்தச் சிவலிங்கத்துக்கு ஸ்ரீராமலிங்கம், ஸ்ரீராமேஸ்வரர் என்று திருப்பெயர்கள் அமைந்தன. வெகுநேரம் கழித்து அனுமன் வந்து சேர்ந்தார். அவர் கொண்டுவந்த இரண்டு லிங்கங்களும் இங்கே காசிலிங்கம், அனுமன் லிங்கம் என்ற பெயர்களுடன் காட்சி தருகின்றன. இங்கு

அருளும் அம்பிகை- ஸ்ரீபர்வதவர்த்தினி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ராமேஸ்வரம். காசி யாத்திரை செல்வோர், அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து, இங்கே ஸ்ரீராமேஸ்வரரை அபிஷேகித்து வழிபட்டால்தான், அந்த யாத்திரை பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை. தோஷங்கள் போக்கும் இங்குள்ள தீர்த்த கட்டங்களில் நீராடி பித்ரு கடன்கள் செய்வது விசேஷம்!

ஜோதிர்லிங்கங்கள்...

காசி- ஸ்ரீகாசி விஸ்வநாதர்

ஆதியில் பிரம்மனும் திருமாலும் தங்களுக்கான பணி என்னவென்று குழம்பித் தவித்தனர். அப்போது ஒலித்த ஓர் அசரீரி, கோடி சூரியப் பிரகாசத்துடனும், பஞ்சக்குரோச பரப்பளவுடனும் ஆகாயத்தில் திகழும் ஒரு நகரைச் சுட்டிக்காட்டி, 'அங்கு சென்று தவம் செய்து படைப்பை துவங்குக’ என்றது.

அதன்படியே பிரம்மனும் திருமாலும் ஸ்ரீபரமேஸ்வர னின் சூலாயுதம் தாங்கி நிற்கும் அந்த நகருக்குச் சென்று தவம் செய்து அருள்பெற்றனர். பிறகு, அந்த நகரம் பூமியில் இறக்கப்பட்டது. அதுவே, வாரணாசி எனப்படும் காசி என்கின்றன ஞான நூல்கள்.

ஒருமுறை, திருமால் இங்கே தவம் செய்துகொண்டிருந்த தருணத்தில், சக்ராயுதத்தால் தனக்காக ஒரு தீர்த்தத்தை உருவாக்கினாராம். இந்தத் தருணத்தில்... தட்ச யாகத் தீயில் பாய்ந்த ஸதிதேவியின் தேகத்தைத் தன் தோள்மீது தாங்கியபடி கோரத் தாண்டவம் புரிந்தார் சிவனார். அப்போது ஸதிதேவியின் காதணி கழன்று கீழே விழுந்தது. காசிக்கு வந்த ஈஸ்வரன், அங்கே தவம் செய்யும் திருமாலிடம், காதணி குறித்து விசாரித்தார். திருமால் தான் உருவாக்கிய தீர்த்தக் கிணற்றைச் சுட்டிக் காட்ட, பரமன் அதனுள் எட்டிப் பார்த்தார். அப்போது அவரின் குண்டலம் கழன்று, கிணற்றுக்குள் விழுந்தது. இதனால் கலங்கிய சிவனார், அங்கிருந்து மறைந்தார். அதே நேரம், கிணற்றுக்குள் இருந்து பேரொளியுடன் சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. பெரிதும் மகிழ்ந்த திருமால் அந்தச் சிவலிங்கத்தைப் போற்றி வழிபட்டு அருள்பெற்றார். அதுவே, ஸ்ரீகாசி விஸ்வநாதர் எனும் திருப்பெயர் கொண்ட ஜோதிர்லிங்கம்.

ஜோதிர்லிங்கங்கள்...

இங்கு இறந்தால் முக்தி. அப்படி இங்கே உயிரை விடும் ஜீவன்களின் காதில் சிவபெருமானே 'ராம’ எனும் தாரக மந்திரத்தை உச்சரித்து முக்தி அளிப்பதாக ஐதீகம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது இந்தத் தலம்.

த்ரியம்பகம்- ஸ்ரீதிரியம்பகேஸ்வரர்

பிரம்மனே பிரம்மகிரி எனும் மலையாகி நின்று மகேசனை வழிபடும் தலம் த்ரியம்பகம். இந்த மலையில் வசித்த கௌதம மகரிஷி, சக முனிவர்களது நயவஞ்சகத்தால் கோஹத்தி தோஷத்துக்கு ஆளானார். பிறகு சிவனருளால் கங்காதேவியே இங்கு கோதாவரியாகத் தோன்றி, முனிவரின் தோஷம்

அகற்றினாள். அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி, கௌதமரின் வாழ்வில் ஒளியேற்றிய ஈஸ்வரன் இங்கு ஜோதிர்லிங்கமாக அருள்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது இந்தத் தலம். மும்பையில் இருந்து ரயில் மூலம் நாசிக்கை அடைந்தால். அங்கிருந்து த்ரியம்பகம் செல்ல

நிறையப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500

அடி உயரத்தில் மலை மீது அமைந்துள்ளது ஆலயம். கருவறையில்... ஆவுடையார் போன்ற பீடத்தின் நடுவில் சிறு குழி; அதன் உள்ளே 3 சிறிய லிங்க பாணங்கள். இவற்றையே பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் என்கிறார்கள். ருத்ர லிங்கத்தின் அடிப் பாகத்தில் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது.

ஜோதிர்லிங்கங்கள்...

கேதாரம்- ஸ்ரீகேதாரீஸ்வரர்

'கேத ஹர ஈஸ்வரன்- அதாவது, துன்பத்தை அழிக்கும் ஈஸ்வரனாக இறைவன் அருளும் க்ஷேத்திரம் இது. பார்வதிதேவி கடும் தவம் இருந்து பரமேஸ்வரனின் திருமேனியில் பாதியைப் பெற்ற தலமும்கூட! மே மாதம்தான்

கோயில் திறக்கப்பட்டு, அக்டோபரில் மூடப்படும். சுமார் 3,586 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத்துக்குச் செல்வது, சற்றுக் கடினமான பயணம்தான். சென்னையில் இருந்து டெல்லி, அங்கிருந்து ஹரித்வார் வரையிலும் ரயில் பயணம். பிறகு, ரிஷிகேஷ்

வழியாக கௌரிகுண்ட் எனும் மலைப்பகுதி வரையிலும் பேருந்து அல்லது வாடகை வாகனங்களில் பயணித்து கேதார்நாத்தை அடையலாம். கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தூரம் நடைப் பயணம்தான். ஹரித்துவார் துவங்கி ரிஷிகேஷ், தேவப்ரயாகை, ருத்ர பிரயாகை, அகஸ்தியமுனி, குப்த காசி, கௌரிகுண்ட் என அமைகிறது கேதார்நாத் யாத்திரை.

இங்கே முதன்முதலாக ஆலயம் அமைத்த வர்கள் பாண்டவர்கள். கருவறையில் கேதார மலைச்சிகரங்களில் ஒன்றின் முகடு, சிவலிங்கமாக அருள்வது இந்தத் தலத்தின் விசேஷம். பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று! யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்தத்தையும் கொண்டு சென்று ஸ்ரீகேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

ஜோதிர்லிங்கங்கள்...

உஜ்ஜயினி- மகாகாளர்

பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை அடைய தேவ- அசுரர்களுக்கு இடையே கடும்போர் நிகழ்ந்தது. அப்போது, கலசத்தில் இருந்து அமிர்தம் தளும்பி பூமியில் சிந்தியது. அப்படி அமிர்தத் துளிகள் விழுந்த இடங்கள் புண்ணிய க்ஷேத்திரங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று உஜ்ஜயினி. இது, மோட்சம் தரும் சப்தபுரிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது (மற்றவை காசி, காஞ்சி, அயோத்தி, ஹரித்வார், வடமதுரை, துவாரகா). தன் அடியார்களைக் காக்கும் பொருட்டு, ஈஸ்வரன் பெரும் ஜோதிலிங்கத்தினின்று வெளிப்பட்டு தூஷணன் எனும் அசுரனை அழித்த தலம் இது. அசுர வதம் முடிந்ததும், மீண்டும் அந்த லிங்கத்திலேயே ஐக்கியமாகி, ஸ்ரீமகாகாளராக இங்கே அருள்பாலிக்கிறார் சிவனார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து சுமார் 180 கி.மீ. தூரத்தில் உள்ளது உஜ்ஜயினி. விக்ரமாதித்தன், சாலி வாஹனன், காளிதாஸன், தண்டி, பவபூதி, பர்த்ருஹரி ஆகியோர் பிறந்ததும் இந்த ஊரில்தான். பீஜாக்ஷேத்திரம் எனப் புராணங்கள் போற்றும் இந்தத் தலத்தில், ஸ்ரீமகாகாளருக்கு விடியற்காலையில் மயானச் சாம்பலால் அபிஷேகம் நிகழும். இதையே பிரசாதமாகவும் தருவர். அதேபோல், கார்த்திகை மாதம் ஒருநாள் நிகழும் 'பாங்’ எனப்படும் அபின் காப்பும், வெந்நீர் அபிஷேகமும் இங்கே விசேஷம்!

ஜோதிர்லிங்கங்கள்...

தாருகாவனம்\ ஸ்ரீநாகேஸ்வரர்

தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்கிய ஈஸ்வரன், அவர்களின் வேண்டுதலின்படி ஸ்ரீநாகேஸ்வரராக அருளும் தலம் இது. அரக்கக் கூட்டத்திடம் சிக்கிய சுப்ரியன் எனும் பக்தனைக் காக்க சிவனார் தோன்றி, தாருகன் எனும்

அசுரத் தலைவனையும் அவன் கூட்டத்தையும் அழித்த கதையையும் சொல்கிறார்கள். ஸ்ரீநாகேஸ்வரரை வழிபட, விஷப்பூச்சிகள் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை. குஜராத்தில் புகழ்பெற்ற தலமான மூலத் துவாரகையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.  

எல்லோரா- ஸ்ரீகுஸ்மேஸ்வரர்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பரத்வாஜ ஸ்தலம் எனும் சிற்றூரில் வசித்த தம்பதி  சுதர்மா- சுதேகா. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் கிட்டாததால், கணவனை 2-வது திருமணம் செய்யச் சொன்னாள் சுதேகா. அவளின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகு, குஸ்மா என்ற பெண்ணை மணந்தார் சுதர்மா. குஸ்மா சிறந்த சிவபக்தை. தினமும் 101 லிங்கங்களை பூஜித்து அருகில் இருந்த தடாகத்தில் இட்டு வந்தாள் குஸ்மா. சிவனருளால் விரைவில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு சுப்ரியன் என்று பெயரிட்டு வளர்த்தனர். அவன் வளர வளர, சுதேகாவுக்கு குஸ்மாவின் மீது பொறாமை வளர்ந்தது.

இந்த நிலையில் சுப்ரியனும் பெரியவனானான். அவனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. குஸ்மாவின் பெருமைக்குக் காரணம் சுப்ரியனே என்று தீர்மானித்த சுதேகா, ஒருநாள் இரவு உறங்கிக் கொண்டிருந்த சுப்ரியனைக் கொன்று, தடாகத்தில் வீசிவிட்டாள். மறுநாள், கணவனைக் காணாமல் கதறிய சுப்ரியனின் மனைவி, குஸ்மாவிடம் சென்று முறையிட்டாள். மகனின் பிரிவு பெரும் துன்பத்தை அளித்தாலும், 'இறைவன் கொடுத்ததை இறைவனே எடுத்துக்கொண்டான்’ என்று கருதிய குஸ்மா, அன்றைய சிவபூஜையை தொடர்ந்தாள். பிறகு வழக்கம்போல் 101 சிவலிங்கங்களையும் தடாகத்தில் இட்டாள். அப்போது 'அம்மா’ என்றொரு குரல்; தடாகக் கரையில் சுப்ரியன் உயிரோடு நின்றிருந்தான். மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்று மகனை ஆரத்தழுவிக் கொண்டாள் குஸ்மா. அதே நேரம், தடாகத்திலிருந்து ஜோதிப்பிழம்பாய் ஒரு சிவலிங்கம் தோன்றியது. அந்த லிங்கத்திலிருந்து சிவனார் தோன்றினார். நடந்ததை குஸ்மாவுக்கு விளக்கினார். சுதேகாவைத் தண்டிக்கத் தீர்மானித் தார். ஆனால், அவளை மன்னிக்கும்படி வேண்டிய குஸ்மா, அங்கேயே தடாகத்தின் நடுவில் கோயில் கொள்ளும்படி இறைவனைப் பிரார்த்தித்தாள். ஈஸ்வரனும் ஸ்ரீகுஸ்மேஸ்வரராக அங்கே கோயில் கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ பயணித்தால், எல்லோராவுக்கு அருகில் வேரூல் என்ற கிராமத்தில், 'எலா’ நதிக்கரையில் இருக்கும் இந்தக் கோயிலை அடையலாம். கருவறையில் செந்நிற லிங்க மேனியனாக அருள்கிறார் ஸ்ரீகுஸ்மேஸ்வரர். பார்வதியாள் குங்குமப்பூவால் அர்ச்சித்ததாக ஐதீகம். இவரைத் தரிசிக்க நம் துன்பங்கள் தொலையும்.

தேவ்கர்- ஸ்ரீவைத்தியநாதர்

ஸ்ரீவைத்தியநாதர் அருள்வது, ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தேவ்கர் தலத்தில். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பரலி வைத்தியநாதர் ஆலயமே

ஜோதிர்லிங்க தலங்களில் வரிசையில் வரும் என்று சொல்பவர்களும் உண்டு. எனினும், பழம்பெரும் ஞானநூல்களில், ஜோதிர்லிங்கத் தலமாக 'தேவ்கர்’ பற்றிய குறிப்புகளே காணப்படுகின்றன.

சிவனாரிடம் தான் பெற்ற வரத்தின் பலனைச் சோதிக்க, கயிலை மலையையே ராவணன் பெயர்த்தெடுக்க முயற்சித்து, இன்ன லுக்கு ஆளான கதை நாமறிந்ததே! பிறகு, சாம கானம் பாடி ஈஸ்வரனின் அருளால் இன்னல் அகலப்பெற்ற ராவணன், கயிலை மலையை இலங்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அது இயலாத காரியம் என்பதால், தனது அம்சமாக ஒரு லிங்கத் திருமேனியை அவனுக்கு அளித்தார் ஈஸ்வரன்.

அந்த லிங்கம் இலங்கை சென்றால் ராவணனின் பலம் கூடிவிடும்; தேவர்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். இதை உணர்ந்த திருமால்,  சிறுவனாக உருவெடுத்து வந்து காத்திருந்தார். புண்ணிய லிங்கத்துடன் இலங்கை செல்லும் வழியில் சிரம பரிகாரம் பண்ண எண்ணினான் ராவணன்.

அங்கிருந்த சிறுவனிடம் லிங்கத்தை ஒப்படைத்துச் சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் லிங்கத்தைத் தரையில் வைத்துச்சென்றுவிட்டான் சிறுவன். அது ஜோதிர்லிங்கம் ஆதலால், பூமியில் பாதாளம் வரை வேர்விட்டு அங்கேயே நிலைத்துவிட்டது. ராவணனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. எனவே இயலாமையுடன் இலங்கைக்கு திரும்பினான். அந்த லிங்கம் நிலை பெற்ற இடமே தேவ்கர். இங்கு வழிபட்ட பைஜு என்ற வேடனின் நினைவாக, பைஜுநாத் என்றும் அழைக்கப்படுகிறது இத்தலம். அவனுக்காக ராவணன் உருவாக்கிய 'சந்திரகூப்’ தீர்த்தமும் இங்குண்டு. சென்னையில் இருந்து பாட்னா, ஹெளரா ரயில் மார்க்கத்தில் சென்று ஜஸீடீஹ் என்ற ரயில் நிலையத்தில் இறங்கவேண்டும். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது தேவ்கர்.

ஜோதிர்லிங்கங்கள்...

சோம்நாத்- ஸ்ரீசோமநாதர் ஆலயம்

சர்தார் வல்லபபாய் படேல் முயற்சியால் திருப்பணி கண்ட திருத்தலம். சென்னையில் இருந்து அகமதாபாத் சென்று, அங்கிருந்து வேராவல் எனும் ஊருக்குச் செல்லவேண்டும். வேராவலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும், அந்நியப் படையெடுப்புகளாலும் பலமுறை சிதிலம் அடைந்து புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயம், நம் தேசத்தின் ஆன்ம பலத்தை உலகுக்கு உணர்த்தும் விதத்தில் கம்பீரமாக நிற்கிறது.

தட்சனின் 27 மகள்களை மணந்துகொண்ட சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே பிரியமாக இருந்தான். இதனால் மனம் வருந்திய மற்றவர்கள், தந்தையிடம் முறையிட்டனர். தட்சன், சந்திரனைச் சபித்தார். இதனால் களையிழந்த சந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு, மீண்டும் பொலிவு பெற்றான் என்கிறது ஸ்தலபுராணம்.

ஸ்ரீசைலம்- ஸ்ரீமல்லிகார்ஜுனர்

சிலாத முனிவர் தவம் செய்து பேறுபெற்ற தலமாதலால் ஸ்ரீசைலம் எனப் பெயர் வந்ததாகக் கூறுவர். அவரின் மைந்தன் தன் தவத்தாலும் வழிபாட்டாலும் சிவனாரைத் தாங்கும் நந்தி தேவராக உயர்வு பெற்றதாகவும், நந்தியே இங்கு மலையாக அமர்ந்து பெருமானைத் தாங்குவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

நம் பழநியம்பதியின் தலபுராணமே இந்தத் தலத்தின் கதையாக, சற்று வித்தியாசத்துடன் கூறப்படுகிறது. 'உலகை ஏழு முறை வலம் வரவேண்டும். முதலில் யார் வருகிறாரோ, அவருக்கே முன்னதாகத் திருமணம்’ என்ற நிபந்தனை இங்கே சொல்லப்படுகிறது. விநாயகர் போட்டியில் ஜெயித்துவிடுகிறார். கோபம் கொள்ளும் குமரன், கிரௌஞ்ச மலையை அடைகிறான். அவனைப் பிரிய இயலாமல் பார்வதியும், அவளைத் தொடர்ந்து சிவனும் இந்தப் பர்வதத்துக்கு வருகிறார்கள்.

எனவே, வேறு இடம் செல்ல நினைக்கிறான் குமரன். பிறகு தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்கி, இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு மலையில் கோயில்கொண்டான் என்கிறது தலபுராணம். இப்படி, முருகனுக்காக அம்மையும் அப்பனும் வந்து சேர்ந்த மலைப் பகுதியே ஸ்ரீசைலம் என்கிறார்கள்.

இந்தப் பர்வதத்தின் சிறு பகுதியைத் தரிசித்தாலும் பெரும் புண்ணியமாம். சென்னை- விஜயவாடா ரயில் மார்க்கத்தில், ஓங்கோல் ரயில் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீசைலத்துக்குப் பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம்.

பீமா சங்கரம்- பீம சங்கரர்

பூனாவில் இருந்து சுமார் 90 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தத்தலம். மலைப் பகுதியில் அமைந்துள்ளது ஆலயம். பீமன் எனும் அசுரனை அழித்தவர் ஆதலால், இங்குள்ள ஈஸ்வரனுக்கு பீமசங்கரர் என்று திருப்பெயர்.

பேஷ்வா ராஜாக்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் திருப்பணிகளும் நிவந்தமும் அளிக்கப்பட்ட கோயில் இது. கருவறையில் பஞ்சமுக லிங்கமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீபீம சங்கரர். பீமாநதியின் முகத்துவாரமான மோட்சகுண்டம், கோயிலின் அருகே உள்ளது. இதில் தீர்த்த நீராடி, ஆலயத்துக்கு வந்து ஸ்ரீபீமசங்கரரை வழிபட, நமது சங்கடங்கள் விலகும்; சந்தோஷம் பெருகும்.

ஓம்காரேஷ்வர்- ஓம்கார ஈஸ்வரர்

மகாமேரு பர்வதத்தைவிட தான் உயரமாக வளர வேண்டும் என விரும்பினான் விந்தியனான விந்திய மலை. எனவே, பிரணவ ரூபமாக யந்திரம் ஒன்று வரைந்து, அதன் மீது மண்ணால் லிங்கம் அமைத்து, பூஜித்து வந்தான் விந்தியன். அதன் பலனாக அவன் விரும்பிய வரம் கிடைத்தது; ஒரு நிபந்தனையுடன்! 'வரத்தால் ஆணவம் கொண்டு அலைந்தால், ஓர் அடியார் மூலம் அடக்கப்படுவாய்’ என்பதே அந்த நிபந்தனை (இதைத் தொடர்ந்து, விந்தியனின் கர்வத்தை அகத்தியர் அடக்கியதாகக் கதை விரியும்).

அந்தத் தருணத்தில் தேவர்களும் அங்கே எழுந்தருளி, 'விந்தியனுக்கு அருளிய இந்த இடத்திலேயே தாங்கள் கோயில்கொள்ள வேண்டும். அனுதினமும் இரவில் நாங்கள் வந்து வழிபட்டு செல்வோம்'' என சிவனாரை வேண்டினர். அப்போது, விந்தியன் வரைந்திருந்த பிரணவ யந்திரம் ஒரு குன்றாக வளர்ந்து நிற்க, அதன் மீது அவன் வழிபட்ட மண் லிங்கம் ஜோதிர் லிங்கமாக

நிலைகொண்டது. ஓம்கார வடிவிலான குன்றின் மீது கோயில்கொண்டதால் ஸ்வாமிக்கு ஸ்ரீஓம்காரேஸ்வரர் என்று திருப்பெயர். மத்தியப்பிரதேசம், கண்டுவா எனும் ஊரிலிருந்து சுமார் 77 கி.மீ. தூரம். இங்கு வரும் பக்தர்கள், கோயிலின் அருகிலேயே ஸ்ரீஆதிசங்கரரின் குரு கோவிந்த பகவத்பாதர் தவம் செய்த குகையையும் தரிசிக்கலாம்.

படங்கள்: சு.குமரேசன், பொன்.காசிராஜன்