Published:Updated:

ஆலயம் தேடுவோம்! - திருமணஞ்சேரி

ஆலயம் தேடுவோம்! - திருமணஞ்சேரி

ஆலயம் தேடுவோம்! - திருமணஞ்சேரி

ஆலயம் தேடுவோம்! - திருமணஞ்சேரி

Published:Updated:
ஆலயம் தேடுவோம்! - திருமணஞ்சேரி

'நடந்து நடந்து காலெல்லாம் வலிக்கிறது’ என்று அந்தப் பசு அலுத்துக் கொண்டது. இளைப்பாற இடம் தேடி, ஒவ்வொரு ஊராக மெள்ள நடந்து வந்தது. வில்வ மரங்களும் மகிழ மரங்களும் சூழ்ந்த அந்த வனப்பகுதியை அடைந்ததும், 'இங்கே கொஞ்சம் உட்கார்ந்து ஓய்வு எடுத்தால்தான், உடலில் பழைய தெம்பு திரும்பவும்  கிடைக்கும்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

ஓரிடத்தில், அடர்ந்த கிளைகள் கொண்ட வில்வ மரத்தின் கீழே படர்ந்திருந்த நிழலைக் கண்டு, அங்கே கால்களை மடக்கியும் நீட்டியும் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டது பசு. அருகில் உள்ள காவிரி நதி நீரில் பட்ட காற்று, அப்படியே தவழ்ந்து வந்து வனத்தைச் சூழ்ந்துகொண்டது. பசுவின் மீதும் அந்தக் குளிர்ந்த காற்று வந்து மோத, அந்த இதத்தில் நெகிழ்ந்த அந்தப் பசு கழிவிரக்கத்தோடு, 'என் சிவனே... இனியேனும் மனமிரங்கக்கூடாதா என் மீது?’ என்று கண்ணீர் விட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தக் கண்ணீர், சிவத்தை அசைத்திருக்கும்போல! அந்த இடத்தில் நறுமணம் இன்னும் அதிகரித்தது. குளிர்ந்த காற்று சூழ்ந்துகொண்டு, இடத்தை மகோன்னதமாக்கியது. வெயிலின் தாக்கம் குறைந்து, பூமி குளிரத் துவங்கியது.

ஆலயம் தேடுவோம்! - திருமணஞ்சேரி

'பூலோகத்தில் நான் பசுவாக அலைந்து திரிந்தது போதாதா? திரும்பவும் திருக் கயிலாயம் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுவது உங்களுக்குப் புரியவில்லையா? சாபத்தைத் தந்த நீங்களே அதில் இருந்து விமோசனமும் எனக்குத் தந்தருளக்கூடாதா? இதோ... இந்த ரம்மியமான இடத்தில் மீண்டும் உங்களை நினைத்து தவம் செய்கிறேன்’ என மனமுருகி வேண்டிக்கொண்டது பசு. அந்தப் பசு வேறு யாருமல்ல... சாட்ஷாத் ஸ்ரீபார்வதிதேவிதான்.

பசுவாக பூலோகத்தில் அவதரித்த தன் சகோதரிக்காக, அவளுக்குத் துணையாக தானும் பசுவாக உருவெடுத்து, அவள் போகும் இடங்களுக்கெல்லாம் கூடவே சென்று கொண்டிருந்தார் திருமால். அதன்படி இந்த இடத்துக்கும் வந்தவர், சூட்சுமமாக இங்கே சிவனார் குடிகொண்டிருப்பதை அறிந்தார். 'உமா... இங்கே தவத்தில் ஈடுபடு. உன்னை சிவபெருமான் ஆட்கொள்ளும் தருணம் வந்துவிட்டது’ என அருளினார்.

ஆலயம் தேடுவோம்! - திருமணஞ்சேரி

ஸ்ரீபார்வதிதேவியின் தவத்தைக் கண்டு நெகிழ்ந்துபோன சிவனார், அங்கே உமையவளுக்கும் திருமாலுக்கும் திருக்காட்சி தந்தார். குளிர்ந்துபோன தேவி, மகிழ்ச்சியில் சிவனாரை நமஸ்கரித்து வணங்கினாள். 'இந்தத் தலத்திலேயே உன் சகோதரியை மணம் புரிந்துகொள்கிறேன்’ என திருமாலுக்கு அருளினார் ஈசன். பிறகென்ன... அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சூழ... சிவ-பார்வதியின் திருமணம் இனிதே நடந்தேறியது. அந்தத் தலம்... திருமணஞ்சேரி!

கும்பகோணம் அருகில் உள்ள திருமணஞ்சேரி தலத்தைத் தெரியாதவர்கள் யார்? திருமணத் தடையால் கலங்குவோர் இங்கு வந்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பதையும் நாம் அறிவோம்தானே? அத்தனை பெருமை மிகுந்த தலத்தில், திருமாலும் தனியே கோயில்கொண்டிருக்கிறார்.

சகோதரியின் திருமணத்துக்கு வந்திருந்த தேவர்பெருமக்களையும் முனிவர்களையும் வரவேற்று உபசரிப்பதற்காக ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தார் திருமால். அந்த இடத்தை எதிர்கொள்பாடி என்றும் மேலத் திருமணஞ்சேரி என்றும் அழைக்கின்றனர். அந்த இடத்திலேயே கோயில்கொள்வது எனத் திருவுளம் கொண்ட பெருமாள், இன்றைக்கும் ஸ்ரீலட்சுமியுடன் ஸ்ரீலட்சுமி நாராயணராக சேவை சாதிக்கிறார்.

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது குத்தாலம். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமணஞ்சேரி திருத்தலம். திருமணஞ்சேரி ஸ்ரீஉத்வாகநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே உள்ளது ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். தம்பதி சமேதராக இருந்து சிவ- பார்வதியும் ஸ்ரீலட்சுமியும் ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இது.

திருமணஞ்சேரியில் உள்ள சிவாலயத்தைத் தெரிந்தவர்களும் தரிசித்தவர்களும் ஏராளம். அதே வேளையில், அதே ஊரில் உள்ள வரமருளும் பெருமாள் கோயிலை எவ்வளவு பேர் தெரிந்து வைத்திருப்பார்கள்; எத்தனை பேர் தரிசனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால், தன் பொலிவு மொத்தத்தையும் இழந்து நிற்கிறது ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில்.

இங்கே, மேற்கு நோக்கியபடி பெருமாள் காட்சி தருவது சிறப்பு என்கின்றனர். அதாவது, திருமணக் கோலத்தில் நின்றருளும் சிவ- பார்வதியைப் பார்த்தபடியே அந்தத் திசை நோக்கி நிற்கிறாராம் பெருமாள். உத்ஸவரின் திருநாமம்- ஸ்ரீவரதராஜர். மடியில் ஸ்ரீலட்சுமியை அமர்த்தியபடி, கருணையும் கனிவும் பொங்கக் காட்சி தரும் ஸ்ரீலட்சுமி நாராயணரைத் தரிசித்தால் சகல பாவங்களும் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.

வைகானஸ ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் இந்தக் கோயில், பொலிவுற்றிருக்கவேண்டும்; நித்தியப்படி பூஜைகள் நடைபெறவேண்டும் என்பதற்காக, திருமணஞ்சேரி லட்சுமி நாராயண பெருமாள் டிரஸ்ட் எனும் அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள் தற்போது திருப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தன் திருக்கரத்தில் அமிர்த கலசத்தை ஏந்தி, வடக்குப் பார்த்தபடி ஸ்ரீதன்வந்திரி பகவான் தனிச்சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். அஸ்த நட்சத்திர நாளில் அல்லது புதன்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீதன்வந்திரிக்கு மூலிகைத் தைலம் சார்த்தி, நெய் தீபமேற்றி, 11 முறை வலம் வந்து பிரார்த்தித்தால் தீராத நோயும் தீரும்; ஆரோக்கியம் கூடும் என்பது ஐதீகம்!

ஆலயம் தேடுவோம்! - திருமணஞ்சேரி

ஸ்ரீதும்பிக்கையாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ஐந்து தலை நாகர், ஸ்ரீராமானுஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில், ஐந்துதலை நாகருக்கு தீபமேற்றி, துளசிமாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், ராகு தோஷம் விலகும்; சத்ரு பயம் நீங்கும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஒருகாலத்தில், பிரம்மோத்ஸவமும் திருக்கல்யாண உத்ஸவமும்  கோலாகலமாக நடைபெற்ற ஆலயம்தான் இது. ஆனால், இன்றைக்கு நித்தியப்படி பூஜைக்கே வழியின்றித் தவிக்கிறது. கல்யாண வரத்தைத் தந்தருளும் ஆலயம், கல்யாணக் களையின்றி பொலிவு மொத்தத்தையும் இழந்து பரிதாபமாகக் காட்சி தருவதைப் பார்க்கப் பார்க்க, நெஞ்சே வெடித்துவிடும்போல் பதறித் தவிக்கிறது.

சாபத்தை நீக்கி அருளும் தலம்; சந்தோஷத்தைப் பெருக்கும் அற்புதமான ஆலயம்.; ராகு தோஷங்களைப் போக்கும் கோயில்; எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடச் செய்யும் திருமணஞ்சேரி ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் தற்போது பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் மெள்ள நடந்து வருகின்றன.

பெருமையும் புண்ணியமும் நிறைந்த திருமணஞ்சேரி ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் பழைய பொலிவுக்கு வரவேண்டும்; ஒரு குறைவுமின்றி நித்தியப்படி பூஜைகளும் நைவேத்தியங்களும் வீதி புறப்பாடுகளும் விழாக்களும் விமரிசையாக நடந்தேறவேண்டும். விரைவில் இங்கே கும்பாபிஷேக வைபவம் நடைபெறவேண்டும். ஸ்ரீநாராயண நாமத்தைச் சொல்லும் அன்பர்கள், ஸ்ரீலட்சுமி நாராயணர் கோயிலின் திருப்பணிக்கு உதவுங்கள். சகல புண்ணிய பலன்களும் கிடைத்து, சந்ததி சிறக்க வாழ்வீர்கள். இது நிச்சயம்!

  படங்கள்: ஜெ.ராம்குமார்