Published:Updated:

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

Published:Updated:
பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

ழகிய பிருந்தாவனத்தில் நாம் தரிசிக்கவேண்டிய கோயில்கள் நிறைய உண்டு. பிருந்தாவனம் நகரின் குறுகிய வீதிகளுக்குள் புகுந்து அந்தக் கோயில்களைத் தேடுவது, வெளியூர்வாசி களான நமக்குச் சிரமமான காரியமாகவே இருக்கிறது. குரங்குகள் தொல்லையும் அதிகம். கொஞ்சம் அசந்தாலும், நம் கையில் இருக்கும் பையை லபக்கென்று பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றன. அதனால், கிரெடிட்,

டெபிட் கார்டுகள் அடங்கிய பர்ஸ், செல்போன் உள்ளிட்ட பைகளை இறுக்கமாகப் பிடித்து கொண்டு, உஷாராகப் பயணிப்பது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிருந்தாவனத்தில் நாம் எந்தெந்தக் கோயில்களுக்குச் செல்ல வேண்டுமோ, அதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்வது நல்லது. அவரவர் வசதிக்குத் தகுந்தாற்போன்று ரிக்ஷாவிலோ ஆட்டோவிலோ அல்லது டாக்ஸியிலோ பயணிக்கலாம். நாங்கள், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று, ஏற்கெனவே பயன்படுத்திய ஆட்டோவை ஓரிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ரிக்ஷாவை தேர்வு செய்தோம். ஒருநாள் முழுவதும் பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களைச் சுற்றிக் காண்பிக்க ரூ.300 முதல் ரூ.400 வரை கேட்கிறார்கள்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் இருந்தாலும், ஐந்தாறு கோயில்கள் மிகவும் முக்கியமானவை. நாங்கள் முதலில் சென்றது ராதாகோபி மந்திர்.

சின்னஞ்சிறிய சந்துகளுக்குள் லாகவமாக ரிக்ஷாவை ஓட்டிச் சென்றார், அதன் ஓட்டுநர். ஒரு நாலடிச் சந்தில் ரிக்ஷா நின்றது. அங்கேதான் ராதாகோபி மந்திர் கோயில் இருக்கிறது. கோயிலுக்குள் நுழைந்ததும், சிறிய வாசல் ஒன்று தென்படுகிறது. 'கோயில் பரிக்ரமா’ என்று இதைச் சொல்கிறார்கள். இங்கே வலதுபுறம் ராதையும் கண்ணனும்... கறுப்பு நிறப் பளிங்கினால் செய்யப்பட்ட சிற்பங்களாய் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். கோயிலில் சரியான பராமரிப்பு இல்லை. கூரைகள் பழுதடைந்து, தரைகள் பெயர்ந்து காணப்படுகின்றன.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

தொடர்ந்து நடந்தால்... ஒரு விலாசமான திறந்தவெளி முற்றத்துக்கு வருகிறோம். இங்கே கண்ணன் விக்கிரகம் குழலூதும் விதமாகக் காட்சியளிக்கிறது. ராதை ஒரு பக்கமும், அவரின் தங்கையான அனங்கமஞ்சரி இன்னொரு பக்கமும் இருக்க... நடுவில் கண்ணன் வீற்றிருக்கும் அழகோ அழகு! அதோடு, லலிதா மற்றும் விசாகா சிற்பங்களும் கொஞ்சம் சின்ன வடிவில் காட்சி அளிக்கின்றன.

இங்கே உள்ள ஸ்ரீகண்ணனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தவர் வஜ்ரநாபர் என்பவர் என்கிறார்கள். இவர் ஸ்ரீகண்ணனின் பேரனாம். இந்த விக்கிரகம், இடையில் காணாமல் போய்விட்டதாம். அதை ஓர் ஆலமரத்துக்குக் கீழே பரமானந்த கோஸ்வாமி என்ற சாது கண்டெடுத்தாராம். ராஜபுதன அரசர் ராய்செல் மண்டாவா என்பவர்தான் இப்போதிருக்கும் ஆலயத்தைக் கட்டினார் என்கிறார்கள். 1559-ல் கட்டப்பட்ட கோயில். 1670-ல், ஒளரங்கசீப் இந்தக் கோயிலை இடிக்க வந்தபோது, மூலவர் விக்கிரகத்தைப் பாதுகாக்க, அதை ஜெய்ப்பூருக்குக் கொண்டுபோய்விட்டதாகச் சொல்கிறார்கள். கோயிலை ஒளரங்கசீப் இடித்து விட்டதால், இடித்த கோயிலை அப்படியே விட்டுவிட்டுப் புதிதாக ஆலயம் ஒன்றை பின்னாளில் எழுப்பி இருக்கிறார்கள். தற்போது பழைய மற்றும் புதிய கோயில்களைப் புதுப்பிக்க நிதி திரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

அடுத்ததாக, நாம் சென்றது மதுவனம். ஸ்ரீகண்ணன், குழந்தைப் பருவத்தில் விளையாடி மகிழ்ந்த வனங்கள் மொத்தம் 12. அவற்றில் யமுனை ஆற்றுக்கு மேற்குக் கரையில் ஏழும், கிழக்குக் கரையில் ஐந்தும் இருக்கின்றன. அவை: மகாவனம், காம்யவனம், மதுவனம், தாளவனம், குமுதவனம், பாண்டிரவனம், பிருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், பஹுளாவனம் மற்றும் பில்வனம். இவற்றில், மதுவனம் மிக விசேஷமானது!

மதுவனத்தை 'நிதிவனம்’ என்கிறார்கள். இதுதான் ஸ்ரீகண்ணனின் ராஜலீலைகள் நடந்த முக்கியமான இடம். கோபியருடன் ஸ்ரீகண்ணன் விளையாடி மகிழ்ந்தது இங்குதான். இப்போதும் இரவில் கண்ணனும் கோபியரும் இங்கே வருகிறார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், அவர்களைப் பார்க்க யாரும் முயற்சிக்கக் கூடாது என்றும் சொல்கிறார்கள். அதனால், இரவு 9 மணிக்கு மேல் இங்கு யாருமே நடமாடுவதில்லை.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று செடிகள் மண்டிக் கிடக்கின்றன, மதுவனத்தில். மொத்தப் பரப்பும் சேர்ந்து சுமார் அரை சதுர கிலோமீட்டர் இருக்கும். ஸ்ரீகண்ணன் காலத்தில் மிகப் பெரிய பரப்பாக இது இருந்ததாம். ஆளுயரம் வளர்ந்த ஒரே வகையான செடிகள் நிறைய உள்ளன. அடிப்பாகம் பருத்துக் காணப்படும் அவை அத்தனையும் துளசிச் செடிகள்தான் என்றார் எங்களுடன் வந்த கைடு. ஆனால், செடிகளை முகர்ந்தால் வாசம் வரவே இல்லை. அதுபற்றிக் கேட்டால், 'இது காட்டுத் துளசி; வாசம் வராது’ என்று விளக்கம் கிடைக்கிறது. இந்தக் காட்டுத் துளசி இருக்கும் மண் தரையைச் சுத்தமாகக் கூட்டிப் பெருக்கி வைத்திருக்கிறார்கள். நடந்து போகக் கல் பாவிய பாதை இருக்கிறது. இங்கே குரங்குகள் நடமாட்டம் மிகவும் அதிகம். இங்குள்ள கோயில்களில் பொரியும் மிட்டாயும் முக்கிய இடம் பெறுவதால், அவற்றை வாசம் பிடித்தே குரங்குகள் நம்மைப் பின்தொடர்கின்றன. எங்கள் குழுவில் ஒரு பெண் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியைக் குரங்கு ஒன்று பறித்துக்கொண்டு ஓடியதைத் தொடர்ந்து, கண்ணாடி அணிந்திருந்தவர்கள், அதை உடனடியாகக் கழற்றிப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

தொடர்ந்து மதுவனத்தில் பயணித்தோம். ஓரிடத்தில் சிறிய குட்டை ஒன்று தென்பட்டது. இறங்கிப் போய்ப் பார்க்கப் படிகள் உள்ளன. தண்ணீர் முழுக்கப் பாசி படிந்திருக்கிறது. 'இதுதான் லலிதா குண்ட்’ என்றார் கைடு. ஸ்ரீகண்ணனோடு ஆடி மகிழ்ந்த கோபிகை லலிதாவுக்குத் தாகம் எடுத்ததாம். அப்போது ஸ்ரீகண்ணன், தன் கையில் இருந்த புல்லாங்குழலால் தரையில் குத்தி, நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தினாராம். அதில் இருந்து வந்த தண்ணீர் தேங்கிக் குட்டையாகிவிட்டதாம். அதுதான் இந்த 'லலிதா குண்ட்’ என்றார்கள்.

இன்னோர் இடத்தில், சிறிய கூரையோடு ஒரு சந்நிதி தென்படுகிறது. அதன் சுவர் நெடுகிலும் ராதா, கண்ணன், கோபிகைகள் படங்கள் இருக்கின்றன. தரையில் வட்டமாக ஒரு பளிங்கு மேடை. அதிலும் நான்கைந்து படங்கள். காணிக்கையை எதிர்நோக்கி பூஜாரி அமர்ந்திருக்கிறார்.

வனத்தினுள் மேலும் நடக்கிறோம். ஒரே அறை மட்டும் கொண்ட சிறிய இடம் ஒன்று தென்படுகிறது. அதில், மெத்தை விரித்த கட்டில் ஒன்று உள்ளது. அதை 'ஸ்ருங்கார்கர்’ என்கிறார்கள். ராதா ராணி ஓய்வெடுக்கும் அறையாம் இது. தினமும் இந்த அறையைப் பூட்டுவதற்கு முன்னர் பூ, பழங்கள் முதலியவற்றை வைக்கிறார்கள். பெண்கள் கூட்டம் இங்கு மிக அதிகம். ராதா ராணிக்கு ஸ்டிக்கர் பொட்டு, குங்குமம், வளையல், பூ என்று படைக்கிறார்கள். பத்து ரூபாய் கொடுத்தால் ராதா ராணியின் குங்குமப் பிரசாதம் கிடைக்கிறது. வனத்தில் இன்னொரு கோயிலில் ராதா ராணி, கண்ணனாக வேடமிட்டு நிற்கிறார். இருபுறமும் விசாகா மற்றும் லலிதா நிற்கிறார்கள்.

மதுவனத்தை அடுத்து நாம் சென்ற இடம்

'காஞ்ச் கா மந்திர்’. சிறிய தெரு ஒன்றில்தான் கோயில் அமைந்துள்ளது. சுத்தம் என்பதைத் தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. ஏகப்பட்ட ஆஸ்ரமங்கள் கண்ணில் தென்பட்டன. இது 'கிளாஸ் டெம்ப்பிள்’ என்று கைடு ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருந்தார். கண்ணாடியால் ஆன கோயிலாக இருக்கும் என்று ஏக எதிர்பார்ப்புடன் நுழைந்தோம். கோயிலுக்கு உள்ளே இருக்கும் சுவர்கள், தூண்கள் போன்ற அனைத்திலும் முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுகளை ஒட்டி வைத்திருக்கிறார்கள். இதை 'மிர்ரர் டெம்ப்பிள்’ என்றால்தான் பொருத்தமாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. கோயிலின் முகப்பு வாயில் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அழகான மூன்று நிலைக் கட்டடமாக மின்னுகிறது இந்தக் காஞ்ச் கா மந்திர். கோயிலின் உள்ளே இருக்கும் கோவர்த்தன்கிரியைக் குடையாகப் பிடித்த கண்ணன், பசுக்களுடன் அழகாய்க் காட்சி அளிக்கிறார். அடுத்து நாங்கள் பயணித்தது, கோவிந்த தேவ் கோயிலுக்கு.

இந்தக் கோயில், பரபரப்பான சரித்திர நிகழ்வுகளுக்குச் சொந்தமான இடம். 1590-ஆம் ஆண்டு, ராஜா மான்சிங் என்னும் ராஜபுதன மன்னர் கட்டிய ஆலயம் இது என்றார்கள். கோயிலைக் கட்டுவதற்காக, அக்பர் சக்ரவர்த்தி கற்கள் கொடுத்து உதவி இருக்கிறார் என்கிற தகவலும் கிடைத்தது. ஒளரங்கசீப் காலத்தில், மேலே இருந்த நான்கு அடுக்குகளை இடித்துவிட்டார்களாம். நான்காவது மாடியை இடிக்கும்போது பெரிய பூகம்பம் வந்ததால், மேற்கொண்டு இடிக்காமல் போய்விட்டார்கள் என்று கைடு விளக்கம் சொன்னார்.

இந்த ஆலயத்தின் மேற்கூரை, கவிழ்த்து வைத்த தாமரைக் கிண்ண வடிவில் அழகாக இருக்கிறது. தூண்கள், மாடங்கள் அனைத்திலும் சிற்ப வேலைப்பாடுகள் மிளிர்கின்றன. மூலவர் ஸ்ரீகோவிந்தருக்கு மட்டுமே சந்நிதி இருக்கிறது. அவருக்கு இருபுறமும் சைதன்யா மற்றும் நித்யானந்தா சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒளரங்கசீப்பின் படையெடுப்பின்போது, பாதுகாப்பு கருதி, மூலவரை ஜெய்ப்பூர் கொண்டு சென்றுவிட்டார்களாம். அங்கே, அரண்மனைக்கு வெளியே இருக்கும் கோயிலில் இப்போதும் இருக்கிறார் என்று சொன்னார் கைடு.

இந்தக் கோயில்கள் தவிர, நாம் அவசியம் தரிசிக்கவேண்டிய இன்னும் சில கோயில்களும் பிருந்தாவனத்தில் உண்டு. அவற்றை, அடுத்த இதழில் தரிசிப்போம்.

- யாத்திரை தொடரும்...

தகவல் உதவி மற்றும் படங்கள்: துளசி கோபால்