கேரள திவ்ய தேசங்கள்

தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை                          

 விரை குழுவும் மலர்ப்பொழில்சூழ் வித்துவக் கோட்டம்மானே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரி சினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றுஅவள்தன்                    

அருள் நினைந்தே அழும்குழவி; அதுவே போன்றிருந்தேனே!    

- குலசேகராழ்வார் (5-ஆம் திருமொழி)

##~##

பொருள்: நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே! எனக்குத் தந்த இத்துன்பத்தை நீயே களைந்திடாவிட்டாலும், உனது திருவடிகளே அன்றி எனக்கு வேறு புகலில்லை; பெற்ற தாயானவள் பெரும் கோபம் கொண்டதனால், தனது குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், பின்பும் அத்தாயினுடைய கருணையையே வேண்டிக் கதறி அழுகின்ற இளம் குழந்தையை ஒத்தவனாக இருந்தேன்.''

சமுத்திரம் போல் காட்சியளிக்கிறது பாரதப்புழா ஆறு. இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான திருத்தலம்தான் திருவித்துவக்கோடு ஸ்ரீஉய்யவந்த பெருமாள் கோயில். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் - கள்ளிக்கோட்டைக்கு இடையில் உள்ள பட்டம்பி என்னும் இடத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. முன்னாளில் திருமிற்றக்கோடு என்று அழைக்கப்பட்டது இந்தத் தலம்.

கேரள திவ்ய தேசங்கள்

மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, தென்னிந்தியாவுக்கு வந்து பாரதப்புழா நதிக்கரையில் ஓர் அழகான இடத்தைத் தேர்வுசெய்து, அங்கே தங்கினர். தாங்கள் வழிபடுவதற்காக ஆலயம் அமைத்து, பெருமாள் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தனர். முதலில் அர்ஜுனன் மகாவிஷ்ணுவின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தான். இவரே மூலவர் ஸ்ரீ உய்யவந்த பெருமாள். தொடர்ந்து... தருமர், பீமன் ஆகியோரும் தனித்தனியே பெருமாள் விக்கிரகங்களை நிறுவ, நகுலன் சகாதேவன் இருவரும் சேர்ந்து மற்றுமொரு பெருமாள் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தனர்.

இப்படியாக நான்கு பெருமாள் மூர்த்தங்களும் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிய திருமுகத்தோடு காட்சியளிக்கின்றன. சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையோடு அந்த விக்கிரகங்கள் காட்சிதரும் அழகே அழகு! கோயில் கருவறைக்கு தத்துவ காஞ்சன விமானம் என்றும், புஷ்கரணிக்கு சக்கர தீர்த்தம் என்றும் பெயர்.

கேரள திவ்ய தேசங்கள்

கோயிலுக்குள் நுழைந்ததும், தனிச் சந்நிதியில் தரிசனம் தருபவர் சிவபெருமான். இவரின் திருநாமம்- காசி விஸ்வநாதர். இவரை தரிசித்து விட்டு, அதன் பிறகே பெருமாளை வணங்கவேண்டும் என்பது இங்கே மரபு. இதன்மூலம் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது இந்த ஆலயம்.

இந்த அற்புதத் திருத்தலத்தில் வாசுதேவர், அனிருத்தர், பிரத்யும்னர், சங்கர்ஷணர் ஆகிய வடிவங்களில் காட்சி தருகிறார் பகவான் மகாவிஷ்ணு. பெருமாள் தவிர, ஸ்ரீகணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீநாகர், ஸ்ரீபகவதி ஆகியோரும் இங்கே உறைந்து பக்தர்களுக்கு அருள்கிறார்கள். ஸ்ரீஉய்யவந்த

கேரள திவ்ய தேசங்கள்

பெருமாளின் மார்பில் தாயார் உறைந்திருப்பதாக ஐதீகம். தாயாரின் திருநாமம் ஸ்ரீநாச்சிவல்லி; பத்மபாணி நாச்சியார் என்று இன்னொரு திருநாமமும் உண்டு. அதேபோல், மூலவருக்கு 'அபய ப்ரதான்’ என்று இன்னொரு பெயர் வழங்கப்படுகிறது. துயர நேரத்தில் பக்தர்களுக்கு அபயம் அளித்துக் காப்பவன் என்பது இதன் பொருள்.

கோயில் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச் சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜுனன் தபஸ் மற்றும் ஸ்ரீகிருஷ்ண லீலைக் காட்சிகளும் மிக அற்புதம்!

லிங்க வடிவில் அருளும் காசி விஸ்வநாதர் இங்கே எழுந்தருளிய வரலாறு சுவையானது.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு  முன்பு, இப்பகுதியில் வாழ்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று, அங்கே சிவன்மீது அதிக பக்திகொண்டு பூஜைகள் செய்து வந்தார். அப்படி இருக்கையில், அவருடைய தாயாருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல் வந்துசேர... பதறிப் போனார் பக்தர். உடனே, சொந்த ஊரான திருவித்துவக்கோட்டுக்குப் புறப்பட்டார். அவ்வாறு வருகையில், அவர் எடுத்து வந்த தாழங்குடையில், அவர் பூஜித்துவந்த காசி விஸ்வநாதர் ஒளிந்துகொண்டு அவருடனேயே வந்தாராம். இப்போதுள்ள கோயில் அருகே குடையை வைத்துவிட்டு, முனிவர் ஆற்றில் குளிக்கச் சென்றாராம். திரும்பி வந்தபோது, குடை வெடித்துச் சிதறி சிவலிங்கம் வெளிப்பட்டதாம். அப்படி இங்கு வந்தவரே ஸ்ரீகாசி விஸ்வநாதர் என்கிறார்கள்.

காசி விஸ்வநாதர் இங்கே எழுந்தருளியிருப்பதாலும், பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதியின் கரையில் கோயில் அமைந்திருப் பதாலும், இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது என்கிறார்கள்.

ஒருமுறை நபாகணன் என்ற அரசனின் மகனான அம்பரீஷன், பகவான் மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும் தவம் செய்தான். மகாவிஷ்ணு அவன் முன் தேவேந்திரன் வடிவில் தோன்றினார். 'நான் இந்திரனைப் பார்க்கத் தவம் செய்யவில்லை; ஸ்ரீமந் நாராயணனைத் தரிசிக்கவே தவம் செய்தேன்'' என்று பணிவாக கூறினான் அம்பரீஷன். அவனுடைய பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள், தன் உண்மை உருவை வெளிப்படுத்தி, அவன் கோரிய வரங்களை அருளினாராம்.

இதன்பிறகு, அம்பரீஷன் ஏகாதசிதோறும் ஸ்ரீமந் நாராயணனை நினைத்து விரதம் இருந்துவந்தான். விரதம் முடிந்து, பஜனைப் பாடல்களால்

பெருமாளைப் போற்றி, பின் ஒரு பக்தருக்காவது உணவளித்த பின்னரே அவன் உணவு உண்பது வழக்கம்.

ஒருமுறை, துர்வாச முனிவர் விரதம் முடியும் நேரம் அங்கு வர, அவரை உணவு ஏற்குமாறு அம்பரீஷன் வேண்டினான். அவரும் குளித்துவிட்டு வந்து உணவு ஏற்பதாக ஒப்புக்கொண்டார். போனவர் துவாதசி முடியும்வரை திரும்பி வரவில்லை. தன் விரதத்தை முடிக்கவேண்டிய கட்டாயத்தினால், அம்பரீஷன் நீர் பருகி விரதம் முடித்தான். இதை அறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தன் தவ வலிமையால் அரக்கன் ஒருவனை உருவாக்கி, அம்பரீஷனைக் கொல்ல ஏவினார்.

அம்பரீஷன் திருவித்துவக்கோடு ஸ்ரீஉய்யவந்த பெருமாளைத் துதிக்க, அவர் தன் சக்கரத்தை ஏவி, அந்த அரக்கனைக் கொன்றார். அதன்பிறகே துர்வாச முனிவர் அம்பரீஷனின் பெருமை தெரிந்து, அவனை ஆசீர்வதித்தார்.

கேரள திவ்ய தேசங்கள்

ஸ்ரீஉய்யவந்த பெருமாளைத் துதித்த அம்பரீஷன், அவருடைய 'வியூக தரிசன’த்தைத் தனக்கு அருளுமாறு வேண்டினான். எந்தத் திக்கில் பார்த்தாலும் பெருமாள் தெரிகிற மாதிரியான தோற்றமே வியூக தரிசனம். அம்பரீஷனுக்குப் பெருமாள் வியூக தரிசனம் அருளியபோது, பஞ்ச பாண்டவர்களும் அந்தத் தரிசனத்தைக் காணும் பேறு பெற்றார்கள். அதை மனத்தில் வைத்தே, அவர்கள் பெருமாள் திருவுருவைத் தனித்தனியாக பிரதிஷ்டை செய்தார்கள். பக்தன் அம்பரீஷனுக்கு மோட்சம் கிடைத்ததும், பஞ்சபாண்டவர்களுக்கு பாவ விமோசனம் கிட்டியதும் இங்குதான்.

நின்ற திருக்கோலத்தில் திருவித்துவக்கோட்டில் பெருமாள் வியூக தரிசனம் அளிப்பதுபோன்று, பள்ளிகொண்ட திருக்கோலத்தில் திருச்சித்திரகூட திவ்ய தேசத்திலும் (தஞ்சை அருகில் உள்ளது) பெருமாள் வியூக தரிசனம் அருளியுள்ளார். திருச்சித்திரகூடப் பெருமாளை திருமங்கை ஆழ்வாரும், திருவித்துவக்கோட்டுப் பெருமாளை குலசேகர ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்திருக் கிறார்கள். இரு தலத்துப் பாடல்களுமே சங்கராபரண ராகத்தில் இயற்றப்பட்டவையாகும்.

மலபார் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள திருவித்துவக்கோட்டு ஆலயத்தின் அதிகாரியாக இருப்பவர் ஜெயப்பிரகாஷ்.

''காலை 5 மணிக்குக் கோயில் திறந்து 10:30 மணிக்கு சாத்தப்படுகிறது. மறுபடியும், பிற்பகல் 5 மணிக்குத் திறந்து இரவு 7:15 மணிக்கு சாத்துகிறோம். தினம் காலை 3 முறையும் மாலையில் 2 முறையும் பெருமாளுக்கு பூஜை செய்யப்படுகிறது. தினமும் காலையில் சிற்றுண்டியாக உப்புமா சாம்பாரும், மாதம் இரண்டு நாட்கள் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.  

இத்தலத்துப் பெருமாளுக்கு தீபம் ஏற்றி, துளசி அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷம்! கட்டணம் செலுத்தினால், ரிக் வேத ஸ்லோகங்களைச் சொல்லி பெருமாளை நமக்காகத் துதிப்பார் ஆலயத்தின் போற்றி (அர்ச்சகர்). இதில் பங்கேற்றுப் பிரார்த் தித்தால், திருமணத்தடை நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும்; வேலை கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சித்திரை மாதம் வருடாந்திரத் திருவிழா, மகா சிவராத்திரி காலத்தில் நான்கு நாள் உத்ஸவம் மற்றும் வைகாசி மிருகசீரிடம், பெருமாள் பிரதிஷ்டை தினங்கள் இங்கே விசேஷமானவை.

அம்பரீஷனுக்குக் காட்சி தந்து, அவனைக் கொல்ல வந்த அரக்கனை வதம் செய்தவர் இந்தத் தலத்து பெருமாள் என்பதால்... இவரைத் தேடிவந்து வழிபட, நம் துயரங்கள் தீரும்; நாடி வந்தோரை அபயம் தந்து காப்பாற்றுவார் பெருமாள் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை!' என்று பக்திப் பரவசத்தோடு கூறுகிறார் ஜெயப்பிரகாஷ்.

படங்கள்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism