
ஞானப் பொக்கிஷம் - 23

##~## |
'சோழ மன்னன் குலோத்துங்கன்மீது கவிபாடிக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று சொல்லி, விறகுவெட்டி வாசித்த கவிதையை அரசவையில் இருந்த எல்லோரும் கேலி செய்து சிரித்தார்கள். வாய்க்கு வந்ததை உளறும் விறகுவெட்டிக்குத் தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என்றார்கள்.
சபையினரை ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்த கம்பர், ''ஏன் சிரிக்கிறீர்கள்? இந்தப் பாடலின் பொருள் என்ன என்பதைச் சொல்வதில்தான் புலவர்களின் சாமர்த்தியம் உள்ளது. பாடலை எழுதியவரே அதற்குப் பொருள் சொல்வது முறையல்ல. மேலும், நாம் வித்வான்கள் என்று பெயரை வைத்துக்கொண்டு, பாடலுக்குப் பொருள்
சொல்லும்படி, அடுத்தவரிடம் கேட்பதில் நமக்கென்ன பெருமை? அவர் சொன்ன பாடலுக்கு, இங்கு யாராவது விளக்கம் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.

சபையில் இருந்த பெரும் புலவர்களோ, ''எவனோ ஒரு பைத்தியக்காரன் வந்து, எதையோ வாயில் வந்தபடி உளறியதைப் பாடல் என்றும், அதற்குப் பொருள் சொல்லும்படியும் கேட்கிறீரே! நீர் அவனைவிடப் பெரிய பைத்தியக்காரராக இருப்பீர் போலிருக்கிறதே!'' என்றார்கள்.
கம்பர் நிதானமாக, ''உங்களுக்கு இந்தப் பாடலின் பொருள் தெரியவில்லை என்றால், அதை நேர்மையாக ஒப்புக்கொள்ளுங்கள். மாறாக, ஒரு பெரிய கவிஞரை பைத்தியக்காரன் என விமர்சிக்காதீர்கள்'' என்று கூறிவிட்டு, அரசர் பக்கம் திரும்பினார். ''மன்னா! பெரியவர்கள் இப்படித்தான், நீறு பூத்த நெருப்பைப்போல் இருப்பார்கள். அவர்களின் வெளித் தோற்றத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது. மேலோட்டமான வார்த்தைகளில் ஆழமான பொருளைப் பொதித்திருப்பார்கள் அவர்கள்.
இந்தப் புலவர் பாடிய பாடலுக்கு நானே விளக்கம் சொல்கிறேன். பாடலின் தொடக்கமான 'மண் உண்ணி’ என்ற சொல், மண்ணை உண்டு தன் வாயில் உலகத்தையே காட்டிய (கண்ணன்) மகாவிஷ்ணுவைக் குறிக்கும். மன்னவரை, மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கூறுவது நமது மரபு. அதையட்டியே பாடலை அவ்வாறு துவக்கி இருக்கிறார். அடுத்து, 'மாப்பிள்ளையே’ என்கிறது பாடல். 'மா’ என்றால் லட்சுமி என்று பொருள். மிகுந்த செல்வம் படைத்தவர்களை, லட்சுமிபுத்திரன் என்று சொல்வது உலக வழக்கம்தானே? அதை அனுசரித்தே 'மா (லட்சுமியின்) பிள்ளையே’ என்றார்.
கற்பக நாடான தேவர் உலகத்துக்குத் தலைவனே என்பதை 'காவிறையே’ என்றும், மக்களாய்ப் பிறந்தவர்களில் மிகவும் சிறந்தவனே என்பதை, 'கூவிறையே’ என்றும் குறிப்பிடுகிறார். அடுத்த வரி அற்புதம்! 'உங்கள் அப்பன் கோ’ என்பதில் 'கோ’ என்பது மன்னனைக் குறிக்கும். 'மன்னா! நீ மட்டுமல்ல; உன் தந்தை முதலானோரும் அரசாளப் பிறந்தவர்கள்தான்’ என்பது அதன் பொருள். 'வில் பெருச்சாளி’ என்பதை, வில் - பெரிசு - ஆளி எனப் பார்க்க வேண்டும். விற்போரில் புறமுதுகு காட்டாமல் சிங்கம் போலப் பகைவரை வெல்பவர் என்பது இதன் பொருள்.
கொடையில் கர்ணன் என்பதை 'கன்னா’ என்ற சொல்லும், பொறுமையில், அந்தக் கர்ணனுக்குப் பின்னால் பிறந்த தர்மர் என்பதை 'பின்னா’ என்ற சொல்லும் குறிக்கின்றன. நெடுங்காலம் அழிவின்றி வாழ்வாய் என்பதை 'மன்னா’ என்ற சொல்லாலும், தமிழ்ப் புலமையில் பாண்டிய மன்னனைப்போல இருப்பாய் என்பதை 'தென்னா’ என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இவ்வாறெல்லாம் சொல்லி, 'சோழ நாட்டில் பெரியவனே’ எனப் பாடலை முடித்திருக்கிறார் இந்தக் கவிஞர். அற்புதமான பாடல்!'' என்று, விவரித்து முடித்தார் கம்பர். அரசர் உள்பட அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும், சோழ மன்னருக்கு விஷயம் தெரியாதா என்ன... 'ஒரு விறகுவெட்டியின் உளறலுக்குக்கூட இத்தனை நுட்பமாகப் பொருள் கூறிய இந்தக் கம்பர் பெருமானுக்காகவாவது அந்த விறகுவெட்டியை நாம் பெருமைப்படுத்த வேண்டும்’ என்று முடிவு செய்தார். அதன்படியே, அந்த ஏழை விறகுவெட்டிக்கு ஏராளமான வெகுமதிகளைத் தந்து அனுப்பினார்.
ஆனால், அதன் பிறகு கம்பர் சும்மா இருக்கவில்லை. தன் மாணவர்கள் மூலம் நாள்தோறும் அந்த விறகுவெட்டிக்குக் கல்வி கற்பித்தார். ஆர்வமுள்ள அவரும் அதிவிரைவிலேயே கல்விமானாக ஆனார். அதன்பின், அவர் ஒருநாள் சோழ மன்னர் அவைக்குச் சென்று, சொந்தமாகவே ஒரு கவிதை புனைந்து பாடி, தன் புலமையை நிரூபித்தார். கல்வியில் சிறந்த கம்பர், கல்வியறிவில்லாத ஒருவரை கல்விமானாக ஆக்கிய வரலாறு இது.
இந்தக் கதையை, சோழ மன்னரின் அரசவையில், பாண்டிய மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி, சடையப்ப வள்ளல் சொல்லிக்கொண்டு வந்தார். அவர் கதையைச் சொல்லி முடித்ததும், பாண்டிய மன்னர் ஒரு பெரும் தந்தப் பல்லக்கைக் கம்பருக்குப் பரிசாக அளித்தார்.
உண்மையான கல்விமான்களுக்கு மரியாதை இருந்த காலம் அது. அதே நேரம்... கல்விமான்கள் தாங்கள் கற்றதை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்து, கல்வி வளரப் பாடுபட வேண்டும் என்பதை உணர்த்தும் வரலாறு இது.
இந்த வரலாறு இடம்பெற்ற நூலின் பெயர் 'விநோத ரச மஞ்சரி’. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த இந்த நூல், நம் நாட்டுப் புலவர்களின் வரலாறுகள், கீத வாத்தியங்களைப் பற்றிய தகவல்கள், நன்றி மறவாமையின் மகத்துவம் எனப் பல அற்புதத் தகவல்கள் கொண்ட பொக்கிஷம்!
- இன்னும் அள்ளுவோம்...