தொடர்கள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

ம்போதி, அரி, அநிலம், ஆசுகம், உலவை, ஊதல், ஊதை, காலசம், காலிலி, சலனம், சுசனம்... இதெல்லாம் என்ன தெரியுமா? காற்றுக்கு இலக்கியங்கள் வழங்கியிருக்கும் வெவ்வேறு பெயர்கள்! 

##~##

இவைபோக, கீழ்க்காற்றை 'கொண்டல்’ என்றும், மேற்கில் இருந்து வருவது 'கோடை’, தெற்கில் இருந்து வருவது 'தென்றல்’, வடக்கில் இருந்து வீசுவது வடந்தை அல்லது வாடை என்றும் வாயுவை வகை பிரித்துப் பெயர் வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

ஆனால், திரேதா யுகத்தில் நிகழ்ந்ததோ இந்த மரபுக்கெல்லாம் மாறான ஓர் அற்புதம்!

வடக்கில் இருந்து புறப்பட்டபோதும், கங்கையைக் கடந்து குகனின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட போதும், பஞ்சவடியில் துணையைப் பிரிந்து, தான் வாடினாலும் மற்றவரை மகிழவைத்தபோதும், சபரியை மனம் குளிரச் செய்தபோதும் மிகச் சுகமாகவே திகழ்ந்தது ஸ்ரீராமன் எனும் தென்றல். அதுவே சேதுக்கரையைக் கடந்தபிறகு புயலாய் உருமாறிப் போனது.

அந்தப் பெரும்புயலில் இலங்கை வேந்தன் ராவணன் ஈறாக விஷ விருட்சங்கள் எல்லாம் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்ந்துபட்டன. பிறகென்ன... அதர்மம் அழித்து நீதியான் விபீஷணனுக்கு முடிசூட்டி, தர்மபத்தினியின் மகோன்னதத்தை தீயில் புகுத்தி வெளிப்படுத்தி, சொல்தவறாத தமது வாக்குவன்மையால் நந்திகிராமத்தில் தீயையும் வென்று தம்பி பரதனை தடுத்தாண்டு... இதோ, எல்லோரையும் வாழவைக்கும் உயிர்க்காற்றாய்த் திரும்பிவிட்டது அயோத்திக்கு. இனி பட்டாபிஷேகம்தான்!

தசாவதார திருத்தலங்கள்!

ஞான நூல்களுக்கெல்லாம் மணிமகுடமாய்த் திகழும் ராமாயணத்தில் நான்கு பட்டாபிஷேகங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது பாதுகா பட்டாபி ஷேகம். 2-வது சுக்ரீவ பட்டாபிஷேகம். அடுத்து, விபீஷண பட்டாபிஷேகம். இறுதியாக உலகத்தவர்க் கெல்லாம் ஒரு பட்டாபிஷேகம். ஆமாம், ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேகம்!

ஏழு சமுத்திரங்கள், பற்பல புண்ணிய நதிகள் அனைத்திலுமிருந்து தீர்த்தத்தைச் சேகரித்து பொற்கலசங்களில் சுமந்தபடி பறந்து வந்தார் அனுமன். பால பருவத்தில் கனியாக எண்ணி அவர் எட்டிப்பிடிக்க முயன்ற அதே சூரியன், இன்று மிக அதிகமாய் தகிப்பதாகப் பட்டது அவருக்கு.

'சரிதான்... இது சந்தோஷ தகிப்பு! இந்தச் சூரியன் ஈரேழு உலகங்களுக்கும் ஒளி தரலாம். ஆனால், இருள் அடைந்து கிடக்கும் உள்ளங்களில் எல்லாம் ஒளி ஏற்றும் சூரியன் நம் ராகவன் அல்லவா? அந்த ரவிராமனுக்குப் பட்டாபிஷேகம் என்றால் சும்மாவா? இன்று அவனில் பொருந்தி, நாமும் இன்னும் ஒளிகூடப் போகிறோம் எனும் மகிழ்ச்சியால் மிகுந்த வெம்மை இதுபோலும்!’

ஆதவன் மட்டுமா? தான் கண்டஅனைத்துப் பொருட்களும் ராம எண்ணத் தையே தோற்றுவித்தன அனுமனுக்கு. மிக்க களிப்புடன் பறந்து வந்து அயோத்தியில் தரையிறங்கினார். அங்கே அரண்மனை பட்டாபிஷேகத்துக்குத் தயாராக இருந்தது.

தசாவதார திருத்தலங்கள்!

அன்னையரிடமும் பெரியோரிடமும் முறைப்படி ஆசி பெற்ற பிறகு, பட்டாபிஷேக மண்டபத்துக்கு எழுந்தருளினார் ஸ்ரீராமன். அங்கே முனிவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும், மகரிஷிகளும் மன்னர்களும் சூழ்ந்திருந்தனர். மண்டபத்தின் நடுநாயகமாக... மாணிக்கப் பலகைகளும் வைரம் பாய்ந்த திண்மையான மரக்கால்களும் பொருத்திச் செய்யப்பட்ட மேன்மையான அரியாசனத்தில், திருவாகிய சீதாதேவியுடன் சிறப்பான ஆபரணங்கள் பூண்டு ஸ்ரீராமன் அமர்ந்திருக்க, மகா அபிஷேகம் ஆரம்பமானது.

வேத கோஷங்கள் முழங்கின. மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட, பூமழை பொழிய... ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேகம் நிகழ்ந்தது. முனிவர்களும் ஞானவான்கள் முதலான பெரியோர்கள் பலரும் முதலில் அபிஷேகித்தார்கள். அடுத்தடுத்து சுக்ரீவனும் அனுமனும் விபீஷணன் முதலான மற்ற நண்பர்களும் நீராட்டினார்கள்.

திருவான சீதையும் அந்தத் திருவுக்கு திருவான ஸ்ரீராமனும் கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் அபிஷேகத்தில் நனைந்து திகழ்ந்த காட்சி எப்படி இருந்ததாம் தெரியுமா?

மரகதச் சயிலம் செந்தா மரைமலர்க் காடு பூத்து
திரையெறி கங்கை வீசும் திவலையால் நனைந்து செய்ய
இருகுழை தொடரும் வேற்கண் மயிலொடும்
இருந்தது செவ்வி கண்டார் பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார்


- என்று பாடுகிறார் கம்பர். அடுத்து, அவன் மணிமுடி சூடிக்கொண்ட காட்சி இதைவிட அற்புதம்!

பெருமையும் சிறப்பும் மிக்க கோசல தேசத்தின் அரியணை யில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. அவரது திருவடிகளை நம் அனுமன் தாங்கிக் கொண்டிருக் கிறார். வாலியின் மைந்தனான அங்கதன் உடைவாளை ஏந்தியவண்ணம் அருகில் நிற்கிறான். இங்கேயாவது அண்ணனுக்குப் பணிசெய்யும் பாக்கியம் தனக்குக் கிடைக்காதா என ஏக்கத்துடன் நின்றிருந்த பரதன், ஓடோடிச் சென்று வெண்கொற்றக் குடையை ஏந்தி நின்றான். சரி... இளவல் லட்சுமணன் என்ன செய்துகொண்டிருக்கிறான்? அதோ... அண்ணலுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக் கிறான் பாருங்கள். இன்னொரு புறத்தில் நின்று வெண்சாமரம் வீசுவது சத்ருக்னன்.

அதோ, வசிஷ்ட மகரிஷி. அவரின் திருக்கரங்களில் சூரிய குலத்தின் மணிமகுடம். மாபெரும் சக்ரவர்த்திகளான இக்ஷ்வாகு, திலீபன், தசரதன் ஆகியோரின் திருமுடிகளை அலங்கரித்த அந்த மணிமுடி. இப்போது அண்ணலைச் சேர்ந்து பெருமைப்படப்போகிறது. மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருளான ஸ்ரீராமனுடைய திருமுடியை அடைவது என்பது எவ்வளவு பெரும்பாக்கியம்!

அரியணை அனுமன் தாங்க

   அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன் வெண்குடை கவிக்க

   இருவரும் கவரி பற்ற

விரைசெறி குழலி ஓங்க

   வெண்ணெய்மன் சடையன்

                 வண்மை

மரபுளோன் கொடுக்க வாங்கி...

ஸ்ரீராகவனுக்கு மகுடம் சூட்டி னார் வசிஷ்ட மகரிஷி!

ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம

              பாஹிமாம்...

ஜெய ராம ஜெய ராம

         ஜெய ராம ரக்ஷமாம்...

- தாரக மந்திர கோஷத்தால் அயோத்தி மகிழ்ந்தது; அந்த மகிழ்ச்சியில் அண்டச ராசரங்க ளும் பங்கேற்றுத் திளைத்தன.

ஸ்ரீராமனை உயிர்க் காற்று எனச் சித்திரித்தோம். அந்த உயிர்க்காற்றை நம் சுவாசத்தில் நிரப்புவோம். நம் இதயம் எப்போதும் 'ராம ராம’ என்றே துடிக்கட்டும். அப்போது நம் வீட்டுக்கும் குடிவருவார் ஸ்ரீராமன்; வந்து நம் மனமகுடத்தைச் சூடிக்

கொள்வார். அவர் வந்து விட்டால், பின்னாடியே திருவும் வந்துவிடமாட்டாளா? அதன் பிறகு நமக்கேது குறை?!

பட்டாபிஷேக வைபவத்தைத் தியானிப் பதோடு, அந்த அருட் கோலத்தில் ஸ்ரீராமன் அருளும் ஆலயங்களைத் தரிசிப்பதும் பெரும் புண்ணியம். அதன் பலனாய் இல்லத்தில் மங்கல காரியங்கள் ஸித்திக்கும்; வாழ்வில் வளம் பெருகும்; உத்தியோகத்தில் பதவி உயர்வும், தொழிலில் மேன்மையும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய மேன்மையான வரங்களை அருளும் ஆலயங்களை இனி தரிசிப்போம்.

- அவதாரம் தொடரும்...