Election bannerElection banner
Published:Updated:

தேவி சரணம்!

தேவி சரணம்!

தேவி சரணம்!
##~##

ஞ்சபூத சக்தி பீடங்களில் ஆகாயத் தலம் - காஞ்சிபுரம். சென்னைக்கு அருகில் உள்ள புண்ணிய நகரமான காஞ்சியம்பதி, சக்திபீடங்களில் முக்கியமான தலம். இதை ஒட்டியாணபீடம் என்பார்கள்.   

ஸ்ரீகாமாட்சியுடன் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீவாராஹி, ஸ்ரீபைரவர், ஸ்ரீகணபதி என்று ஸ்ரீவித்யைக்கு உரிய தேவதைகள் எட்டுப்பேரும் அருளும் கோயில் இது. இழந்த ராஜ அதிகாரத்தையும் ஜெயத்தையும் வழங்குகிற அன்னை ஸ்ரீகாமாட்சி அம்பாள். இவளின் கடைக்கண் பார்வை பட்டு, புகழ்பெற்ற தலைவர்கள் ஏராளம்.

அம்பாளின் சந்நிதி காயத்ரி மண்டபத்தில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது என்பார்கள். இங்கே 24 அட்சரங்களும் 24 தூண்களாக இருப்பதாக ஐதீகம். காயத்ரி மண்டபத்தில் இருந்த படி ஒரேயரு முறை காயத்ரீ ஜபத்தைச் சொன்னாலே போதும்... கோடி ஜபம் செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

தேவி சரணம்!

காஞ்சியம்பதியில் தங்கி, காமாட்சி அம்மையின் திருவடியில் இருந்து முக்தி அடைந்தார் ஆதிசங்கரர். எனவே, இதை மோட்சபுரி என்று குறிப்பிடுவார்கள். முக்தி தரும் காசி, அயோத்தி, மதுரா, மாயா, அவந்திகா, துவாரகா, காஞ்சி ஆகியவற்றுள் காஞ்சியம்பதி மட்டுமே தென்னகத்தில் உள்ளது எனும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.

வேறு எந்தத் தலத்து அம்பிகைக்கும் கிடைக்காத பெருமை, ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கு உண்டு. அதாவது, இங்கேயுள்ள எல்லாக் கோயில்களும் காமாட்சி அம்பாள் கோயிலை நோக்கியே அமைந்துள்ளதும், அந்த ஆலயங்களின் உத்ஸவ விழாக்களில், திருவீதியுலா வரும் தெய்வங்கள், காமாட்சி அம்பாள் கோயிலை வலம் வரும் என்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று.

தேவி சரணம்!

ஸ்ரீகாமாட்சி, தன்னுடைய இடக் கண்ணில் லட்சுமியையும், வலக் கண்ணில் சரஸ்வதியையும் வைத்திருப்பதாக ஐதீகம். அதனால், காமாட்சியை வழிபட்டால் கல்வியும் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். மேலும், காமாட்சியம்மனின் கருவறை முன்மண்டபத்தின் தென்புறம் வராஹி அம்மன் எழுந்தருளியிருக்க, அவள் எதிரே சந்தான ஸ்தம்பம் உள்ளது. இதை வலம் வந்து வழிபடும் தம்பதிக்கு வம்ச விருத்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  

காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாளின் பெருமை களையும் அவளின் பேரருளையும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அத்தனை பிரமாண் டமான, புராதனமான இந்தக் கோயிலில் மாசி மாதம் 3-ஆம் தேதி பிரம்மோத்ஸவம் துவங்கு கிறது. அதாவது, பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கி, 27-ஆம் தேதி வரை நடைபெறும் பிரம்மோத்ஸவ விழாவில், திருவீதியுலாவில் நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வரும் அம்பிகையைத் தரிசித்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.

தேவி சரணம்!

கோயில்களில் உத்ஸவங்கள் நடைபெற்றால், அவை அந்த ஆலயத்தின் நன்மையைக் கருதி நடைபெறும் விழா என்றோ, 'பல விழாக்களில் இதுவும் ஒன்று’ என்பதாகவோ நினைக்கிறோம். தேர்த் திருவிழா முதலான முக்கிய மான விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறோம். மற்ற உத்ஸவ விழாக்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், உத்ஸவம் என்பதே, உலக மக்கள் அனைவருக்கும் பலன் தரக்கூடிய, பலம் தரக்கூடிய முக்கியமான வைபவம் என்பதை அறிவது அவசியம்!

உத் ஸவம். இதில், ஸவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும். தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவருவதைப் பிரஸவம் என்கிறோம். அதேபோல், எல்லாம் வல்ல பரம்பொருளின் சக்தி, ஆலயத்தின் கருவறை யில் மூலமூர்த்தமாக எழுந்தருளியுள்ளது. அப்படி, மூலமூர்த்தமாக இருக்கிற இறைவனை, இறைசக்தியை, உத்ஸவரின் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து, உலக நன்மைக்காக கோயிலில் இருந்து ஸ்வாமி வீதியுலா வருகிற வைபவமே உத்ஸவம்!

தேவி சரணம்!

தீமைகள் அழிந்து, உலகில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்வதற்காகவே உற்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கின்றன, ஆகமங்கள்.  'பரம் சாம்பவி தீக்ஷ£க்யம் உத்ஸவம் பாபநாசனம் ஸர்வ கல்யாண மித்யுக்தம் உத்ஸவம் ஞானஸம்பவம்’ என விவரிக்கிறது காரணாகமம் எனும் சிவாகமம். வீதியுலா வரும் இறைவனை பக்தியுடனும் பரிபூரண நம்பிக்கையுடனும் சரணடைந்தால், பாவங்கள் விலகும்; மங்கலங்கள் பெருகும்; 'சாம்பவீ தீ¬க்ஷ’ சிவஞானத்தை எளிதில் பெற்று வாழலாம்!

அதாவது, இறைவனானவன் எந்த ஸ்பரிசமும் இன்றி, நம் மீது பெருங் கருணையுடன் இந்த தீ¬க்ஷயை அளித்தருளத் தயாராக இருக்கிறான். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?!

இறைத்திருமேனி வீதியுலா வரும் போது தெருக்களைச் சுத்தம் செய்து, நீர் தெளித்து, வண்ணக்கோலங்களால் அலங்கரித்து, இறைவனை வரவேற்க வேண்டும். இதில் மகிழும் இறைவன், நம் கர்மவினைகளை போக்கி, நம் வாழ்வையும் வண்ணமயமாக்குவான்.

இந்த பிரம்மோத்ஸவங்களால் இயற்கைச் சீற்றங்கள் குறையும் என்கின்றன ஞான நூல்கள். பசுமை செழித்து, விவசாயம் கொழிக்கும். குடும்பத்திலும் தேசத்திலும் ஒற்றுமை மேலோங்கும். நிம்மதியும் அமைதியுமாக ஆனந்தமாக மக்கள் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

பிரம்மோத்ஸவத்தை முதன்முதலில் நடத்தியதே ஸ்ரீபிரம்மதேவன்தான் என்கிறது புராணம். எனவே, பிரம்மோத்ஸவ நாளில் ஸ்ரீகாமாட்சி அன்னையை கண்ணாரத் தரிசித்துப் பலன் பெறுவோம்.

            படங்கள்: ரா.மூகாம்பிகை

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு