Published:Updated:

கடன் தொல்லை நீக்கும் நெய்யபிஷேக வழிபாடு!

'மாசி மக' தரிசனம்

கடன் தொல்லை நீக்கும் நெய்யபிஷேக வழிபாடு!

'மாசி மக' தரிசனம்

Published:Updated:
##~##

திருக்கயிலாயத்தில் இருந்து பூலோகத்தில், மதுரையம்பதியில் பெண்ணாகப் பிறந்தாள் பார்வதி தேவி. வீரத்துடன் திகழ்ந்தவள், பெண்களுக்குரிய நாணமின்றியும் இருந்தாள். 'மாலையிடும் மணாளனைக் காணும் வேளையில், பழைய உருவெடுப்பாள்’ என்று ஒருநாள் அசரீரி கேட்டது. அதன்படி, வீரதீரத்துடன் போர்வீரனைப்போல் வந்த சிவனாரைக் கண்டதும் பழைய திருவுருவைப் பெற்றாள் என்கிறது புராணம். மேலும், அதுவரை உமையவளின் நெஞ்சில் சிவலிங்கமாகவே வீற்றிருந்தார் ஈசன் என்றும் தெரிவிக்கிறது. உமையவள் நெஞ்சின் நடுவில் குடிகொண்டிருந்ததால், நடுநக்கர் எனும் திருநாமம் அமைந்ததாம் இறைவனுக்கு. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளூர் கிராமம். இந்தத் தலத்து நாயகனின் திருநாமங்கள் - நடுநக்கர்; மத்தியபதீஸ்வரர். அம்பாளின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருநாமம் - ஸ்ரீசிவகாமி. சூரசம்ஹாரத்துக்காக உமையவளிடம் முருகன் வேல் வாங்கிய ஊர் இதுதான் என்கிறது ஸ்தல புராணம் (முருகன் சக்திவேல் பெற்றது 'சிக்கல்’ திருத்தலம் என்றும் சொல்வர்). எனவே, இந்தத் தலம் வேளூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு வெள்ளூர் என மருவியதாகச் சொல்வர்.

கடன் தொல்லை நீக்கும் நெய்யபிஷேக வழிபாடு!
கடன் தொல்லை நீக்கும் நெய்யபிஷேக வழிபாடு!

வீரபாண்டிய சடவர்மன், குலசேகர பாண்டிய மன்னன் ஆகியோர் காலத்தில் கட்டப்பட்ட புராதனமான

ஆலயம் இது. இங்கு திருமணக் கோலத்தில் காட்சி தரும் சிவ- பார்வதி கொள்ளை அழகு! ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீஆறுமுகநயினார், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக் கின்றனர்.

வருடம் முழுவதும் திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் இருந்தாலும், மாசி மக நன்னாளில் பத்து நாள் திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பத்து நாட்களும் ஸ்வாமியும் அம்பாளும்... புருக்ஷ£மிருகம், தந்தப்பல்லக்கு, ரிஷபம், யானை, குதிரை முதலான வாகனங்களில் திருவீதியுலா வருவதைக் காணக் கண் கோடி வேண்டும். 10-ஆம் நாள் தேரோட்டம் சிறப்புற நடைபெறும்.

அம்பிகைக்குப் பச்சை நிறப் புடவை, பச்சை வண்ண வளையல், 21 வகை அபிஷேகங்கள் செய்து செவ்வரளி மாலை சார்த்தியும், ஸ்வாமிக்கு பச்சைக்கரையிட்ட வெள்ளை வஸ்திரம், வில்வ மாலை ஆகியவற்றை அணிவித்தும் பிரார்த்தித்துக் கொண்டால், திருமணம் முதலான சகல சுபகாரியங்களும் தோஷங்கள் நீங்கி இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்!

பச்சரிசிப் பாயச நைவேத்தியம் செய்து வழிபட்டு அன்னதானம் செய்தால், கல்யாண

தோஷம் நீங்கும்; வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்கின்றனர் பக்தர்கள்.

பிரதோஷம் மற்றும் மாசி மகத் திருவிழாவின்போது, நந்திகேஸ்வரருக்கு நெய்யபிஷேகம் செய்து சிவனாரையும் அம்பிகையையும் வேண்டிக்கொண்டால், வியாபாரத்தில் விருத்தி உண்டு; கடன் தொல்லை நீங்கும்; வழக்கில் வெற்றி கிடைக்கும்.

வியாழக்கிழமைகளில் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, மஞ்சள் அரளி மாலை சார்த்தி, வெல்லம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

- ச.காளிராஜ்

படங்கள்: ஏ.சிதம்பரம்