புனலூர் தாத்தா
##~##

ந்தக் காரியத்தைச் செய்யவேண்டும் என்றாலும், ஒரு குருவிடம் முறையாகப் பயில்வதும், அவரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதும் மிகவும் முக்கியம். குருவின் வழிகாட்டுதல் என்பது நூறு யானை பலத்துக்குச் சமம். அவரின் ஆசீர்வாதம் கிடைப்பது, பெற்றோர்களின் அன்புக்கும் ஆசீர்வாதத்துக்கும் இணையானது. முக்கியமாக, கடவுளின் பேரருள் கிடைப்பதற்குக் குருவருள் மிகக் கண்டிப்பாக அவசியம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆமாம்... விசா இருந்தாத்தானே எந்தவொரு வெளிநாட்டுக்கும் போக முடியும்? அந்த நாட்டின் அனுமதிதான் விசா! விசா கிடைக்கணும்னா, முதல்ல நம்மகிட்ட பாஸ்போர்ட் இருக்கணும். 'இவர் இந்தியக் குடிமகன். இந்த மாநிலத்துல, இந்த மாவட்டத்துல, இந்தத் தெருவுல, இந்த எண் கொண்ட வீட்ல வசிக்கிறார்’னு இந்திய அரசாங்கம் நம்மை இந்தியக் குடிமகன்னு சொல்லி, பாஸ்போர்ட் கொடுக்கும். அந்த பாஸ்போர்ட் இருந்தாத்தான் வெளிநாட்டுலேருந்து, 'சரி... எங்க நாட்டுக்கு நீங்க தாராளமா வரலாம்’னு விசா கொடுப்பாங்க. ஒரு நாட்டுலேருந்து கிளம்பி, இன்னொரு நாட்டைப் போய்ப் பார்க்கறதுக்கே இப்படின்னா, கடவுள் தேடலுக்கும் இறைவனின் பேரருள் கிடைக்கிறதுக்கும்

புனலூர் தாத்தா

பாஸ்போர்ட் மாதிரி ஒரு விஷயம் வேணாமா? அதுதான் 'குருவருள்’. அதனாலதான் 'குருவருள் இருந்தால் திருவருள் நிச்சயம்’னு சொல்லி வைச்சாங்க பெரியவங்க!'' என்கிறார் பின்னணிப் பாடகர் வீரமணி ராஜூ.

''குருவின் வழிகாட்டுதலும் அவரின் துணையும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறவர் ஐயப்ப ஸ்வாமி. அவருக்குக் கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, விரதமிருந்து, இருமுடி எடுத்து, சபரிமலைக்குச் செல்வதற்கு குருசாமியின் துணை மிகவும் அவசியங்கறதை காலங்காலமா உணர்த்திக்கிட்டே இருக்கு, இந்தச் சபரிமலை யாத்திரை. குருவை தினமும் வணங்கறதும், 'சாமி சரணம்’ சொல்றதும், அவரையும் குழுவையும் வீட்டுக்கு அழைத்து பஜனையும் பூஜையும் செய்வதும்... முக்கியமா, வந்திருப்பவர்கள் அனைவரையும் குருமார்களாகவே பாவித்து, அவங்களுக்குப் பாத பூஜை செய்வதும் ரொம்பவே சிலிர்ப்பான, சிறப்பான விஷயங்கள்!'' என்கிறார் ராமகிருஷ்ண ஐயர்.

''கடவுள் அனுக்கிரகத்துல, எனது இந்த வாழ்க்கைக்கும் அமைதியான சூழலுக்கும் அப்பாதான் (புனலூர் தாத்தா) காரணம். எனக்கு அவர் அப்பாவா மட்டும் இல்லாம, ஆயிரக்கணக்கான பேருக்கு எப்படி நல்ல குருநாதரா இருந்தாரோ... அதேபோலவே எனக்கும் அமைஞ்சார். இது பூர்வ ஜன்ம புண்ணியம். அவரோட ஞானமும் இடைவிடாத ஜபதபங்களும்தான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியோட பரிபூரண அருள் அவருக்குக் கிடைக்கக் காரணமா இருந்துது. இது எல்லாமும் சேர்ந்துதான், எங்க வம்சத்துக்குப் பெரிய கௌரவத்தையும் மரியாதையையும் தந்திருக்கு. எங்க அப்பா இறந்து எத்தனையோ வருஷங்களாகிட்டாலும்கூட, புதுசா மாலை போட்டுக்கிட்டு சபரிமலைக்கு வர்ற கன்னிசாமிங்க பல பேர், 'புனலூர் தாத்தாவையும் சண்முக விலாசத்தையும் சொல்லாத ஐயப்ப பக்தர்களே இல்லை. அடேங்கப்பா... ஐயப்ப ஸ்வாமிக்குக் கிடைச்ச அற்புதமான பக்தர் புனலூர் தாத்தா’ன்னு சொல்லிட்டுப் போறாங்க. இதைவிட வேறென்ன வேணும், சொல்லுங்க?'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் புனலூர் சுப்ரமணிய ஐயரின் மகன், ராமகிருஷ்ண ஐயர்.

புனலூர் தாத்தா

சபரிமலைக்கு வருடந்தோறும் செல்கிற பக்தர்கள் லட்சக்கணக்கானோர். அதேபோல் கன்னிசாமியாக, முதன்முதலில் மாலையணிந்து செல்பவர்களும் மிக அதிகம். தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களில் இருந்து வருகிற பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்தந்த ஊர்களில் இருக்கிற குருசாமிகள் எல்லாம் குறைந்தது 20, 30 வருடங்களாகச் சபரிமலைக்குச் சென்று வருகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த குருசாமிகள் எல்லாரும் புதிதாக வருகிற கன்னிசாமிகளிடம் சாஸ்தாவின் மகிமைகளையும், புனலூர் தாத்தாவோட பெருமைகளையும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருகட்டத்தில், புனலூர் தாத்தாவின் ஆத்மார்த்தமான பக்தியையும், மனிதர்கள்மீது அவர் கொண்டிருக்கிற பேரன்பையும் உணர்ந்து, தங்களின் குருநாதராகவே புனலூர் தாத்தாவை மானசிகமாக வரித்துக்கொண்டு, வழிபடுகின்றனர்.

''எங்க குருநாதர் புனலூர் தாத்தாதான் ஐயப்ப பக்தர்களுக்கான மிகச் சிறந்த ரோல்மாடல். குருவின் பரிபூரண ஆதரவும் அருளும் எங்களுக்கெல்லாம் நேரடியாவே கிடைச்சது, கடவுளோட மிகப் பெரிய கருணை. சபரிகிரிவாசனைத் தரிசனம் பண்றதுக்காக புனலூர் தாத்தா குருசாமியா இருந்து எங்களையெல்லாம் கூட்டிட்டுப் போனதையும், அப்ப தன்னோட நித்தியானுஷ்டங்களை கர்ம

புனலூர் தாத்தா

சிரத்தையா செஞ்சதையும் மறக்கவே முடியாது.

இன்னிக்கு நிம்மதியும் அமைதியுமா, நிறைவோடயும் பூரிப்போடயும் உற்சாகமா வாழ்ந்துட்டிருக்கறதுக்குக் காரணம், குருசாமியா எங்களுக்கு இருந்த புனலூர் தாத்தாதான். இன்னிவரைக்கும் சூட்சும ரூபமா இருந்து எங்களை வழிநடத்திட்டு வர்றார் புனலூர் தாத்தா'' என்று நெக்குருகிச் சொல்கிறார், சென்னை அம்பத்தூரில் வசிக்கும் சாஸ்தாதாசன்.

''வருஷா வருஷம் கார்த்திகை மாசம் பொறந்ததும் விரதம் இருக்க ஆரம்பிக்கறது போலவே, எனக்கும் என்னைப் போல ஆயிரமாயிரம் பக்தர்களுக்கும் குருசாமியா வாழ்ந்த புனலூர் தாத்தாவுக்கு மார்கழியில குருபூஜை செய்யறதை நாங்க வழக்கமாவே வைச்சிருக்கோம். எங்களோட 'அனுக்கிரக சாஸ்தா சாரிட்டபிள் டிரஸ்ட்’ உறுப்பினர்கள் எல்லாருமா சேர்ந்து, டிசம்பர் மாதத்தின் கடைசி ஞாயித்துக்கிழமையில் ஐயப்ப பக்தர்களையெல்லாம் வரவழைச்சு, மிகப் பிரமாண்டமா குருபூஜை விழா நடத்திட்டு வரோம். அந்த நாள்ல, புனலூர் தாத்தாவோட திருவுருவப் படத்தை மாலை போட்டு அலங்கரிச்சு, குரு சரணம் சொல்லி, ஐயப்ப ஸ்வாமி பாடல்களைப் பாடி, விசேஷ பூஜை செய்வோம்.

இந்த விழாவுல, புனலூர் தாத்தாவுக்கு ரொம்பவும் நெருக்கமா இருந்தவங்களைச் சிறப்பு விருந்தினர்கள் மாதிரி அழைச்சு, அவங்களை கௌரவிக்கறதையும் கடமை யாவே செய்துட்டிருக்கோம். இந்த விழாவுல, தன் தள்ளாமையைக் கூடப் பொருட்படுத்தாம, ஆர்வத்தோடயும் சுறுசுறுப்பாவும் வாஞ்சீஸ்வர ஐயர் கலந்துக்கறதைப் பார்க்கும்போதே மொத்த பக்தர்களும் உற்சாக மாயிடுவாங்க. இதோ... இந்த முறை நடந்த குருபூஜை விழாவுலகூட, வாஞ்சீஸ்வர ஐயர் கலந்துக்கிட்டார்'' என்று வியந்தபடி சொல்கிறார் சாஸ்தாதாசன்.

''குருவை மதிச்சு பூஜிக்கறதுன்னா, வருஷம் தவறாம அவரை நினைச்சு, குரு பூஜை செய்றது மட்டும் இல்லை. எங்க குருநாதர், அந்த அகண்ட மலையில ஐயப்ப பக்தர்கள் அத்தனை பேருக்கும் சளைக்காம சாதம் போட்டவர். 'அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா’ன்னு சரண கோஷம் சொல்லாத சாஸ்தா பக்தர்கள், இருக்காங்களா என்ன? அந்த வார்த்தையை தன்னோட வாழ்க்கையாவே எடுத்துக்கிட்டு, அன்னதானம் பண்ணினவர் புனலூர் தாத்தா. அவரின் அடியற்றி வந்த அவரின் சிஷ்யர்கள் நாங்களும் எங்களோட டிரஸ்ட் சார்பா அன்னதானத்துக்கும் குருபூஜைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். குறிப்பா, குருபூஜை நாள்ல அன்னதானம் அமர்க்களப்படும். எல்லாம் குருவருள்; ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமியின் பெருங்கருணை!'' என்று சொல்லும்போதே, கரகரவெனக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது சாஸ்தாதாசனின் கண்களில்.

- சரண கோஷம் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism