மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பர்த்ருஹரி... பட்டினத்தாரின் சீடரா?

கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

தங்களின் பல்வேறு கட்டுரைகளிலும் பர்த்ருஹரியின் கருத்துக்களை மேற்கோள் காட்டியிருப்பீர்கள். அவர்தான் பட்டினத்தாரின் சீடராகத் திகழ்ந்த பத்ரகிரியாரா?

-கே. கோமதி விநாயகம், கோவை

##~##

இல்லை. பர்த்ருஹரி என்பவர் ஓர் அரசர். மக்களை நல்வழிப்படுத்தும் இயல்பு கொண்டவர். ஒருநாள் அவரின் தர்பாருக்கு வந்த முனிவர் ஒருவர், மன்னனுக்கு ஒரு மாங்கனியைத் தந்தார்.  

முனிவரை நன்கு உபசரித்தான் மன்னன். விடைபெறும் தருணத்தில், ''மன்னா, நான் தந்த மாங்கனியைச் சாப்பிடுப வர், நீண்ட நாள் வாழ்ந்து சிறப்பு பெறுவர். தாங்களும் நீண்ட நாட்கள் அரசாள வேண்டும் என்ற எண்ணத்தில் அதைத் தங்களுக்குத் தந்தேன்'' என்று கூறிச் சென்றார் முனிவர். மன்னர் யோசனையில் ஆழ்ந்தார். தனது பட்டத்தரசி இளமையோடு வாழ விரும்புபவள் என்று கருதி, பழத்தை அவளிடம் தந்தார். அவளோ, தனது மனத்துக் கினியவனான, குதிரை லாயத்தின் பாதுகாவலனுக்கு அந்தப் பழத்தைத் தந்தாள். அவன் அந்த பழத்தைத் தன் மனைவிக் குக் கொடுத்தான். அவள், 'அரசாங்கத் துப்புரவுப் பணியில் இருக்கும் எனக்கு இளமை பயன்படாது. அரசர் இளமையுடன் இருந்தால், நாடு செழிப்புறும்’ என்று எண்ணி, பழத்தைக் கொண்டு வந்து அரசரிடம் கொடுத்து, அதன் பெருமையை விளக்கினாள். விழித்துக்கொண்டார் அரசர். மாம்பழம் தன்னிடம் திரும்பி வந்த விதத்தை அறிந்து வெட்கப்பட்டார்.

ஆசை கண்மண் தெரியாமல், தராதரம் பார்க்காமல் இப்படி விளையாடுகிறதே என்று கலங்கினார். ஏறத்தாழ இன்றைய சூழல் அன்றைக்கே இருந்தது. மனம் நொந்துபோன அரசர் ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களைச் சீர்படுத்த குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் ஆகிய அனைவருக்கும் அறிவூட்ட விரும்பினார். அதன்பொருட்டு நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்ற பெயரில் மூன்று நூல்களை இயற்றினார். அரசைத் துறந்து துறவறம் மேற்கொண்டு, தொண்டு செய்யத் துணிந்தார். இருக்க இடம், குடிக்கக் கஞ்சி, உடுக்க உடை என்ற சிறு வட்டத்தில் தனது கடமையைச் சுருக்கிக் கொள்ளாமல், மக்களின் இதய பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தியது அவரது பெருமைக்குச் சான்று.

கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கடவுள் இல்லை என்ற நாத்திக வாதம் அடிக்கடி தலை தூக்குகிறதே... இதுபோன்ற விவாதங்கள் கடவுள் நம்பிக்கைக்கு இடையூறு அல்லவா?

- ஐஸ்வர்யா, சென்னை-17

'இல்லை’ என்ற வாதம், 'உண்டு’ என்பதற்கு இடையூறு ஆகாது. மற்றவர்கள் எட்டிய இலக்கை முயற்சி செய்தும் எட்ட இயலாமல் தவிக்கும்போது, அதற்கு ஒரு முதலுதவியாக இலக்கைப் பழிப்பான் என்கிறது சாஸ்திரம் (அசக்த:தத்பதம் கந்தும் தத்ரநிந்தாம் ப்ரகுர்வதெ).

பார்வைக்கு இலக்காகாதவர்- உணரப்பட வேண்டியவர் கடவுள். உணர இயலாதவர்களுக்கு அவர் இல்லை என்பது உண்மை. வேதம் பொய், சாஸ்திரம் பொய் என்று கேட்கக் கேட்க அதைப் பற்றிய சிந்தனை வளர்ந்து, வேதத்திலும் சாஸ்திரத்திலும் தேடுதலை உண்டாக்க, இறுதியில் அவர்கள் கடவுளை உணர்ந்துவிடு கிறார்கள். ஆக, மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையைத் தூண்டிவிட, 'இல்லை’ என்ற வாதம் உதவும். கும்பமேளாவில் வியாபாரத்தில் இறங்கிய நாத்திகன், மற்றவர்களைப் பார்த்து தானும் நீரா டலில் சேர்ந்துவிடுகிறான். திருச் செந்தூருக்கு வியாபாரியாகச் செல் பவன், பிரம்மோத்ஸவத்தில் கலந்து, தூண்டுதல் இல்லாமலேயே கடவுளை வணங்குகிறான். அற நூல்களை அழிக்க முற்படும்போது, அதைப் புதுப்பிக்கும் எண்ணம் மேலோங்கி, அறத்தை காக்க விழைகிறான்.

கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

நாத்திகன் மறை முகமாக, சுணக்கமுற்று இருக்கும் ஆத்திகனை உசுப்பிவிடுகிறான். மனம் படைத்தவன் தனது சிந்தனையில் உண்மையை அறிந்து மகிழ்வான். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற எண்ணத்தை ஏற்ற மனம், ஆழ்ந்து ஊடுருவும் சிந்தனையில் இறங்காது. உடம்பை இயக்கும் ஆன்ம சைதன்யம் கடவுளின் மறு உருவம். நான் யார் என்ற தேடலில் இறங்கினால், அந்தத் தேடல் கடவுளில் முற்றுப்பெறும். அதற்குப் பிறகு சிந்தனை நிலைத்துவிடும் (ப்ரம்மவைவாச: பரமம்வ்யோம).

வாழ்வில் தோல்வியைச் சந்தித்த நாத்திகனும் ஆத்திகனும் இடம் மாறுவர். தோல்வியையே உண்டு- இல்லை என்பதற்கு ஆதாரமாக வைப்பார்

களே தவிர, சிந்தித்து முடிவை அறிவிக்க மாட்டார்கள். இருவரின் மனமும் ஆசையில் கட்டுண்டு இருப்பதால், ஆண்டவனை எட்டமாட் டார்கள். ஆசை நிறைவேறாத ஆத்திரத்தை மறைக்கக் கடவுளைத் தூற்றுவார்கள். ஆசை நிறை வேறியவன் கடவுளைப் போற்றுவான். இருவரது கூற்றும் ஏற்கத்தக்கதல்ல. அவர்கள் தங்களின் அனுபவத்தை வைத்துக் கொள்கையை மாற்றிக்கொள்கிறார்கள்.

நாத்திகனிடம் ஆத்திரம் மேலோங்கியிருக்கும். சிந்தனை இன்றிச் செயலில் இறங்குவான். மத்தியான வேளையில் சூரியனின் கிரணம் பட்டு, முதுகில் சூடேறித் தவித்தது, காட்டில் வளைய வரும் மத யானை ஒன்று. அது, அங்கிருக்கும் தாமரைக் குளத்தில் இறங்கி, துதிக்கையால் பூக்களைப் பறித்துத் தரையில் வீசியது; ஆதவனோடு பொருத இயலாத யானை, அவன் கிரணத்தால் மலர்ந்த தாமரைகளைத் தாக்கியது; இப்போது ஆதவனை எதிர்த்து வெற்றி பெற்றதாக எண்ணி அதன் மனம் நிம்மதி அடைந்தது என்ற தகவல் சுபாஷிதத்தில் உண்டு. யானை குளித்தாலும் பயன் இல்லை. குளித்த பிறகு, மண்ணை வாரி உடம் பில் பூசிக்கொள்ளும். ஆகையால், சூட்டைத் தணிக் கவோ அல்லது நீராடவோ அது தடாகத்தில் இறங்க வில்லை. ஆதவனின் பெருமையில் மலர்ந்த மலர்களை அழித்து, ஆதவன் மீதான தனது கோபத்தை அழித்துக்கொண்டது என்று ஒரு செய்யுள் உண்டு (ரவிதப்த....).

உண்மையான கடவுளை எதிர்க்க இயலாதவன் கடவுளைப் போற்றுபவர்களையும், அவர் அருளால் செழிப்பான வாழ்வைப் பெற்றவர்களையும் பழித்தும் துன்புறுத்தியும் நிம்மதி பெறுவான். மாறுபட்ட சிந்தனைகள் தோன்றினால்தான் சிறந்த சிந்தனையை அடையாளம் காண இயலும். நாத்திகர்களின் சிந்தனையும் நிலையாக இருக்காது. ஆத்திகன் நாத்திகன் ஆனதையும், நாத்திகன் ஆத்திகனாக மாறியதையும் பழைய சரித்திர ஏடுகளில் இன்றும் பார்க்கலாம். நிலை இல்லாத வாதம் சிரஞ்ஜீவியாக இருக்காது.

கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிரபல ஜோதிடர்களை அணுகி ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்த திருமணங்களும் விவாகரத்தில் முடிகின்றன. பெண்ணின் ஜாதகமே தப்பு என்பார்கள் பிள்ளை வீட்டார். பதிலுக்கு அவர்களும் பிள்ளையின் ஜாதகத்தைக் குறை சொல்வர். தலையைப் பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு டென்ஷனே மிஞ்சும். இதற்கொரு தீர்வு சொல்லுங்களேன்.

- மணிகண்டன், மதுரை-2

ஜாதகப்பொருத்தம் என்பது, இணைந்து வாழ்வதற்கான தகுதியை மட்டுமே சுட்டிக்காட்டும். ஆயுள், ஆரோக்கியம், சிந்தனை, மனவளம், பண்பு பொறுமை, சகிப்புத்தன்மை, இணைந்து வாழும் பாங்கு, நீக்குபோக்குடனான செயல்பாடு, சமுதாய திட்டத்தை மதித்தல், தாம்பத்திய சட்ட திட்டத்தை மதித்தல், சேர்ந்து வாழும் தகுதியை நிலைநிறுத்தல், லோக அபவாதத்தில் பயம், கடமைகளில் பற்று, குடும்பச் சூழலைப் பேணிக் காத்தல், பொது நலத்துக்கு முன்னுரிமை அளித்தல், பிறர் சுதந்திரத்தை மதித்தல், ஈவு- இரக்கம், பரோபகாரம், ஏற்ற பொறுப்பை பேணிக் காத்தல் ஆகிய அத்தனை குணங்களும் தம்பதியிடம் இருந்தால் மட்டுமே கூடி வாழ இயலும்.

கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பண்டைய நாட்களில் ஜாதகத்தைவிட இந்த நல்லெண்ணங்களே தாம்பத்தியத்தைச் சுவைக்க வைத்தன. 10 பொருத்தங்கள் பொதுப்படையானவை. தனி நபருக்கு உத்தரவாதம் அளிக்காது, அவர்களது சிந்தனை ஓட்டத்தை ஆராய வேண்டும். மனம், சிந்தனை ஆகியவற்றை அலசி ஆராயும் ஜாதக நூல்கள் ஏராளம் உண்டு. பராசரரும், மந்திரச்வரரும், வராஹமிகிரரும் அதற்கு முன்னுரிமை அளித்தவர்கள். சறுக்கி விழுவதும், சங்கடத்தில் ஆழ்வதும், அதிலிருந்து மீள்வதும் மனிதன் செயல்பாட்டில் விளைவது. ஆசையின் ஈர்ப்பில் இணைவதும், சந்தர்ப்பவாதத்தைக் கையா ளுவதும் தாம்பத்திய சுகத்தை ஈட்டித் தராது. இருவ ரது சம ஈர்ப்பில்தான் தாம்பத்தியம் இனிக்கும்.

கட்டுக்கடங்காத ஆசையில் ஆராயாமல் இணைந்து, சங்கடத்தை ஏற்கும் தாம்பத்தியமும் உண்டு. தாம்பத்தியத்தை புனித இணைப்பாக நினைக்கவேண்டும். விலங்கினங்கள் போன்று புலன்களின் வேட்கையைத் தணித்துக் கொள்வதற் காகத் திருமண இணைப்பை ஏற்கக்கூடாது. பிள்ளைகளின் திருமணப் பொறுப்பு பெற்றோரிடம் இருந்த காலத்தில் திருமண இணைப்பு துண்டிக்கப் படாமல் இருந்தது. தாம்பத்தியத்தில் கசப்பு இருந்தால், நல்ல குணங்களும் சகிப்புத் தன்மையும் அந்தக் கசப்பை இனிப்பாக்கும். குடும்பத்தில் அமைதி, குழந்தைச் செல்வங்கள் ஏராளமாக இருந்தாலும், அந்தச் சுமை தெரியாமல் கூடி வாழ்ந்தனர். குடும்ப சுகம் பசுமையாக இருந்தது. அன்று அறத்துக்காக இணைந்தார்கள். இன்று ஆசைக்காக இணைகிறார்கள்.

பதவியில் பெருமையும், பொருளாதாரச் செழிப்பு மாக நிறைவை எட்டியவர்களிடம், இடையூறுகளைத் தகர்த்தெறிந்து ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உந்துதல் தூக்கலாக இருக்கும். தனிநபர் சுதந் திரத்தை மதிக்கும் சமுதாயமும் அதற்குத் துணை போகிறது. கலாசாரமும் பண்பும் ஆசைக்கு அடிமையாகிப் போக... சுயநலத்தை எட்டிப்பிடிப்பதில் முனைப்பு ஏற்பட்டு, தாம்பத்தியத்தின் சிறப்பை உருக்குலைக்கத் துணிபவர்களும் இருக்கிறார்கள். இதய பரிவர்த்தனம் வேண்டும். நல்லுரைகளோ ஆலோசனைகளோ காதில் ஏறாமல் போக, மறுமணமும் விவாகரத்தும் ஏற்கப்பட்ட நிலையில், கொழுந்துவிட்டு எரியும் ஆசைகளை நெய் வார்த்து ஊக்கமளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நல்ல தீர்வை அளிக்கும் பொறுப்பை ஏற்ற ஜாதகம், சிக்கல்களை அதிகமாக்கி வேதனையைச் சுமக்கவைக்கிறது. ஜாதகத் தகவலை- சூழலுக்கு உகந்த வழியில் விஷயங்களை எடைபோட்டு ஆராய்ந்து முடிவை எட்டவேண்டும். அது, மனித சிந்தனைக்கு மட்டுமே இலக்காக இயலும். கணினி என்பது தீர்மானமான விஷயங்களை மட்டுமே திருப்பிச் சொல்லும். ஜாதகத்தில் ஆராயப்பட வேண்டிய அத்தனைத் தகவல்களும் கணினியில்

இணையவில்லை. ஜோதிடத்தில் எதிரிடையான தகவல்களும் குவிந்திருக்கும். அவற்றில் எதை எப்போது ஏற்பது, எதை விலக்குவது என்பதை, அந்த வேளையில் சிந்தனையில் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

ஜாதகம் கணிப்பதிலும் பலமுறைகள் தென்படு கின்றன. வியாபார நோக்கில், அந்த முறைகளின் பெருமைகள் உயர்த்திக் காட்டப்படுகின்றன. அட்வைஸாகப் பயன்பட்ட 'ஜாதகம் பார்த்தல்’ என்பது இன்றைக்கு வியாபாரமாக மாறிவிட்டது. அது வியாபாரமாக உருவெடுத்தால், பொய்யும் ஊடுருவிவிடும்.

ஜாதக பரிவர்த்தன கேந்திரம், வளர வழி வகுத்தது. திருமணம் ஈடேறுவதற்குப் பரிகாரம் தேவைப்படாது. திருமணம் என்பது பரிணாம வளர்ச்சியின் பண்பின் அடிப்படையில் நிச்சயம் நிறைவேற்றவேண்டிய ஒன்று. பக்தி வேண்டும். வழிபாடு வேண்டும். அதைப் பொருத்தத்துடன் இணைப்பது தேவையற்றது.

ராசியும் அம்சகமும் மட்டும் குறித்த ஜாதகத்தை வைத்து, தங்களின் சிந்தனையால் தகவலை ஆராய்ந்து முனிவர்கள் சொன்ன பலனை, பொருத்தத்துடன் இணைத்துப் பார்த்து உள்ளதை உள்ளபடி, தங்களின் சரக்கை சேர்க்காமல் ஜோதிடம் சொல்பவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றைக்குத் தகவலைத் திரட்டிக் கொடுக்கும்விதம் ஜாதகம் பெருத்து ஒரு புஸ்தகமாக வளர்ந்து, வியாபாரச் செழிப்பை நிலைநாட்டுகிறது.

டெல்லியில் வாழும் ஒருவனுக்குத் திருமணஞ்சேரிக்கு சென்று பரிகாரம் செய்யச் சொல்வார்கள். அந்த ஊர் அவனுக்கு புதிது. இதுவரை பார்த் திராத- மனத்தில் ஏறாத தெய்வமானது, அவரது பணிவிடையை ஏற்று வெற்றி அளிக்கும் என்பது சான்றில்லாத நம்பிக்கை. கணவன் இறந்து மனைவி விதவையாவதையோ, மனைவியை இழந்து கணவன் விதுரநாவதையோ ஜாதகத்தால் மாற்றி அமைக்க இயலாது.

செவ்வாய் தோஷத்தை விஸ்வரூபமாக்கி பயமுறுத்தி, அதை இல்லாமல் செய்து சுகமான தாம்பத்தியத்தை அளிக்கிறார் ஒரு ஜோதிடர் என்பது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று. ஜோதிடர்களை அணுகிப் பொருத்தம் பார்த்துச் செய்தாலும் விவாகரத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது; பொருத்தம் பார்க்காவிட்டாலும் விவாகரத்து உண்டு என்றால், பொருத்தம் பார்ப்பது தானாகவே செத்துவிட்டது என்றாகிவிடும்.

பல மணி நேரம் ஆராய்ந்து சொல்லவேண்டிய தீர்வை, ஒரு நொடியில் ஜோதிடர் சொல்லிவிடுகிறார். தற்கால சிந்தனை அதை நம்பாது. அவர் தைய்வீக ஜோதிடர் என்கிறார்கள். தெய்வங்கள், தங்களின் பக்தர்களுக்கு ஜோதிடம் சொல்லி பிழைப்பு நடத்த அவருக்கு உதவுகின்றன என்பதை ஏற்க மனம் துணிவதில்லை.

ஆகையால், தாங்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இணைந்தால் எந்த கஷ்ட- நஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு,  திருமண இணைப்பைத் துண்டிக்காமல் வாழும் மனோவலிமையைப் பெறவேண்டும். அதன் புனிதத்தை அவர்களுக்கு உணர்த்தி, கஷ்ட- நஷ்டங்களைச் சமமாகப் பார்க்கும் மன நிலையை வளர்த்துக்கொள்ளும் பண்பை வளர்த்து, தாம்பத்தியத்தின் செழிப்பை அனுபவிக்க வேண்டும் என்று முன்னரே எச்சரித்து, இணைப்பை ஏற்கச் செய்தால், விவாகரத்து தலைதூக்காது!

- பதில்கள் தொடரும்...