புனலூர் தாத்தா - 7

"அப்பாவோ அம்மாவோ இல்லாமகூட ஒருத்தர் வாழ்ந்துடலாம். அவங்க அதுவரைக்கும் காட்டின அன்பையும், வளர்த்து ஆளாக்கியிருக்கிற நிலையையும் வைச்சுக்கிட்டே மிச்சசொச்ச நாட்களைக் கடத்திடலாம். ஆனா, குருவுடனான உறவுங்கறது பூர்வ ஜன்மத்துக் கொடுப்பினை. அப்பேர்ப்பட்ட குருநாதரின் வழிகாட்டுதல் இல்லேன்னாலும் நம்மால உயிர் வாழ முடியும்னாலும்... நிம்மதியான, சந்தோஷமான, பெருமிதமான, தெய்வ கடாட்சம் நிறைஞ்ச ஒரு பரிபூர்ண வாழ்க்கையை வாழ முடியுமான்னு தெரியலை!'' என்கிறார் ராமகிருஷ்ண ஐயர்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''ஒருத்தரோட வாழ்க்கைல முதன்முதலா ரோல்மாடலா இருக்கிறது அப்பாதான். அப்பாவைப் போலவே நடக்கறதும், அவரைப் போலவே சட்டையை மடிச்சு விட்டுக்கறதும், வளர்ந்த பிறகு அப்பாவாட்டமே மீசை வைச்சுக்கறதுமா... அப்பாங்கறவர் மனசுல முழுசுமா வியாபிச்சிருப்பார். அந்த வகையில், புனலூர் தாத்தான்னு எல்லோராலயும் அன்பாக அழைக்கப்படுற என்னோட அப்பாவே எனக்கும் ரோல்மாடலா, குருநாதரா அமைஞ்சது என் இந்த ஜன்மத்து பாக்கியம்!'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் புனலூர் ராமகிருஷ்ண ஐயர்.

''சடங்கு சாங்கியங்களை ஒருபோதும் விட்டுடக்கூடாது, நித்திய அனுஷ்டானங்களை ஒருபோதும் பண்ணாம இருக்கக் கூடாதுங்கறதுல அப்பா எப்பவுமே உறுதியா இருப்பார். இன்னிக்கி வரைக்கும் அதை வேதவாக்கா எடுத்துக்கிட்டு, நித்திய அனுஷ்டானங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் தவறாம கடைப்பிடிச்சுக்கிட்டிருக்கேன்.

புனலூர் தாத்தா - 7

'அப்பாடா... இன்றைய கடமையைச் செவ்வனே செஞ்சு முடிச்சிட்டேன்’னு நினைக்கும் போதெல் லாம், சாஸ்தாவோட முகமும் அப்பாவோட முகமும் சட்டுன்னு முன்னாடி வந்துட்டுப் போகும். அதுவே எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம்!'' என்று நெகிழ்கிறார் ராமகிருஷ்ணன்.

இன்றைக்கு ஐயப்ப மலைக்கு மாலையணிந்து செல்பவர்களுக்கு நித்தியக் கடமைகளை, அன்றாடப் பணிகளை மலைக்குச் செல்லும் வேளையில் எப்படிச் செய்வது, எங்கே செய்வது என்றெல்லாம் தெரியாது. பெரிய பாதை வழியாகவும் சின்னப் பாதை வழியாகவும் அழைத்துச் செல்லும்போது, குருசாமிமார்கள்தான் அந்தந்த நேரத்தில் அந்தந்த அனுஷ்டானங்களைக் கடைப் பிடிப்பதற்கான இடங்களைத் தெளிவுறச் சொல்லி, கடமையாற் றச் செய்வார்கள். 'இந்த இடத்துலதான் குளிக்கிறதுக்குத் தண்ணி கிடைக்கும். இங்கேதான் உடல் உஷ்ணம் போக, நல்ல காற்று கிடைக்கும். இங்கே இளைப்பாறினா, பயமில்லாம கொஞ்சம் தூங்கி ஓய்வு எடுக்கலாம். மிருகங்கள் நடமாட்டம் இல்லாத பகுதி இதுதான்! எங்க குருசாமி போட்டுக் கொடுத்த ரூட் இதுதான்’ என்று சொல்லும் குருசாமிமார்கள் இருக்கிறார்கள். கேரளம், தமிழகம், ஆந்திரம் என்று பல மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப சாமிகளை அழைத்துக்கொண்டு வரும் பல குருசாமிகளுக்கு, புனலூர் தாத்தாதான் ரோல்மாடல். குளிப்பதற்கும் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் நல்ல இடங்களைத் தேர்வு செய்து கொடுத்தவர் புனலூர் தாத்தாதான்.

புனலூர் தாத்தா - 7

''ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் பத்து முறையா வது புனலூர் தாத்தாவைப் பத்தி யார்கிட்டயாவது பேசிடுவேன். அப்படிப் பேசினாத்தான், மனசுக்கு ஒரு நிறைவு. ஐயப்ப பக்தனா மட்டும் இருந்த எனக்கு நல்லதொரு குருவா, வழிகாட்டியா, மிகச் சிறந்த ஞானத் தகப்பனா இருந்த புனலூர் தாத்தாவை, இந்த வாழ்க்கை முழுக்கச் சொல்லிக்கிட்டே இருப்பேன். அப்படிச் சொல்றதுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கு'' என்கிறார் சாஸ்தா தாசன்.

''ஒருமுறை, பெரியானை வட்டம் பகுதியில் போயிட்டிருக்கோம். அங்கே கொஞ்ச நேரம் ஆசுவாசமா இருந்துட்டுக் கிளம்பறப்ப, 'கொஞ்சம் இருங்க. இங்கே ஒரு பூஜை பண்ணிட்டுக் கிளம்புவோம்’னு சொன்னார் புனலூர் தாத்தா. ஆனா, அர்ச்சனை பண்றதுக்குப் பூக்களே இல்லை. என்னடா பண்றதுன்னு யோசிச்சுட்டு, 'சரி... அட்சதையைக் கொண்டே அர்ச்சனை பண்ணிடலாம்’னு முடிவு செஞ்சு, பூஜை ஏற்பாட்டுல இறங்கினோம். 'சாஸ்தாவுக்கு பூ வேணும்னா அவரே வாங்கிப்பார். குழப்பம் இல்லாம பூஜை பண்ணு’ன்னு சொன்னார் தாத்தா.

அப்பல்லாம், பம்பைலேருந்து சும்மாடு வைச்சு, சுமையைத் தூக்கிட்டு வர்றதுக்கு பத்து ரூபா கூலி. அன்னிக்கின்னு பார்த்து ஆளே வரலை. ஐயப்ப நாமாவளியைச் சொல்லி, பூஜையை ஆரம்பிச்சாச்சு. அந்த நேரத்துலதான் அப்படியரு அதிசயம் நடந்துது. யாரோ ஒருத்தர் எங்க பக்கத்துல வந்து, 'இதுல மூணு கூடை பூ இருக்கு. நாங்க பூஜையெல்லாம் முடிச்சிட்டோம். இந்தப் பூவை அப்படியே வைச்சிருந்தா, வாடித்தான் போகும். நீங்க வேணா பூஜைக்கு வைச்சுக்கங்க’ன்னு சொல்லிக் கொடுத்துட்டு, அவர்பாட்டுக்கு விறுவிறுன்னு போயிட்டார்.

புனலூர் தாத்தா - 7

நானும் என்கூட வந்திருந்த ஐயப்ப சாமிகளும் சிலிர்த்துப்போயிட்டோம். பூஜைல இருந்த தாத்தாவை எல்லாரும் நமஸ்காரம் பண்ணினோம். ஆனா அவரோ, 'சரி சரி, அந்தப் பூவை எடு. அர்ச்சனை பண்ணி, பூஜையை நடத்து’ன்னு ரொம்பச் சாதாரணமா, இதை முன்னாடியே எதிர் பார்த்திருந்தவர் மாதிரி சொல்லிட்டு, பூஜையில மூழ்கினார். அந்த குருவை காலம் பூரா வணங்கித் தொழணும்!'' என்று நெக்குருகிச் சொல்கிறார் சாஸ்தா தாசன்.

சபரிமலைக்குத் தன்னுடன் பக்தர்களை அழைத்துச் செல்லும்போது, ஆங்காங்கே சில இடங்களில் தங்கி, பூஜை செய்வது புனலூர் தாத்தாவின் வழக்கம். சாஸ்தா தாசனும் அப்படி ஐயப்ப சாமிகளை அழைத்துச் செல்கிறபோது, ஒவ்வொரு இடத்திலும் பாட்டும் பஜனையும் களை கட்டுமாம்! முக்கியமாக, புனலூர் தாத்தாவின் புகைப்படத்தை வைத்து, பூக்களால் அலங்கரித்து, ஐயப்பனின் பெருமைகளைப் பாடி, சரண கோஷங்களைச் சொல்லும் வேளையில்... அந்த இடத்தில் உள்ள எல்லாரும் பரவசமாகிப் போவார்கள்.

புனலூர் தாத்தா - 7

'என்னைப் பொறுத்தவரைக்கும், வருஷா வருஷம் சென்னைல புனலூர் தாத்தாவுக்கு குருபூஜை பண்ணும்போதும் சரி... சபரிமலை வழியில பூஜை செய்யும்போதும் சரி... அந்த இடத்துல சூட்சும ரூபமா புனலூர் தாத்தா இருந்து, ஐயப்ப பக்தர்கள் அத்தனை பேரையும் ஆசீர்வதிக்கிற மாதிரியான உணர்வு எனக்கு ஏற்படும். அந்த இடத்துல புனலூர் தாத்தாவோட வாசம் இருக்கிறதா உணர்ந்து பூரிச்சுப் போயிருக்கேன்.

நல்ல குருநாதரைத் தேடிக் கண்டடையணும். அவரைக் கெட்டியாப் பிடிச்சுக்கணும். உண்மையான அன்பும் பக்தியும் கொண்டு குருநாதர்கிட்ட இருந்தா, மறைவுக்குப் பிறகுகூட சூட்சுமமா இருந்து, நம்மை வழிநடத்திட்டிருப்பார் குருநாதர். அப்படித்தான் என் உள்ளுணர்வு சொல்லுது.

ஒவ்வொரு டிசம்பர்லயும் குரு பூஜை பண்ணி முடிச்சதும், மனசுக்குள்ளேயும் உடம்புக்குள்ளேயும் சட்டுன்னு ஒரு உற்சாகம், ஒரு பரவசம், ஒரு புத்துணர்ச்சி தொத்திக்கும். அதுதான் அடுத்த வருஷம் வரைக்கும் என்னை ஒரு குறைவும் இல்லாம இயங்க வெச்சிட்டிருக்கிற வைட்டமின் மாத்திரைகள்!'' என்று கைகூப்பிச் சொல்லும் போது, சாஸ்தா தாசனின் கண்களில் இருந்து கரகர வென வழிகிறது, நீர். அது நல்ல குருநாதர் கிடைத்திருப்பதால் உண்டான ஆனந்தக் கண்ணீர்.

- சரண கோஷம் தொடரும்