சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சாது தந்த ஆப்பிள்!

சாது தந்த ஆப்பிள்!

##~##

'உங்கள் துணிச்சல் மீதும், விதியின் மீதும், வாழ்க்கையிலும், கர்மாவிலும் நீங்கள் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்..!’

 - அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களின் அரங்கங்களில், கணீர்க் குரலில் துவங்கி பல மணி நேரம் நீளும் அவரது பேச்சில், ஒட்டு மொத்த மாணவர் கூட்டமும் கட்டுண்டு கிடக்கும்.

எனில், அவர் ஓர் இந்து மதத் துறவி அல்லது மகான் என்று நீங்கள் கருதினால், உங்கள் கணிப்பு தவறு!

அவர் ஓர் அமெரிக்கர். கணினி உலகில் முத்திரை பதித்த தனிப்பெரும் நிறுவனம் அவருடையது. ஆமாம்! ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் அவர். பிறப்பால் கிறிஸ்தவர் ஆனாலும், இந்து மதத்தின் மீதும் அதன் கர்மயோகத்திலும் அவர் கொண்டிருந்த பற்றுதலும் ஆர்வமும் அலாதியானது.

இந்தியாவுக்கு அடிக்கடி வரும் அவர், ரிஷிகேஷில் உள்ள ஆஸ்ரமங்களைத் தரிசிக்காமல் திரும்புவதில்லை. குறிப்பாக, நீம் கரோலி பாபா ஆஸ்ரமத்தில் தங்குவது அவருக்கு  மிகப் பிடித்தமானது. அப்படித்தான் முதல் முறை இந்தியா வந்தவர், ஓர் இந்து சந்நியாஸியைப் போன்று மொட்டை அடித்துக்கொண்டு, இந்து மத பாரம்பரிய உடையில் திரும்பியதைக் கண்டு, அமெரிக்காவில் அவரைச் சார்ந்தவர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

சாது தந்த ஆப்பிள்!

அவ்வளவு ஏன்... தமது நிறுவனத்தில்- அலுவலகத்தில் இருக்கும்போது, இந்து சந்நியாஸிகளைப் போன்று, காலில் செருப்பு போடாமல் நடப்பதையே வழக்கப்படுத்திக் கொண்டிருந்தாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.

தினசரி யோகா பயிற்சிகள், சைவ உணவு, பிராணிகளின்மீது அன்பு, அமெரிக்காவில் இருக்கும் தருணங்களில் தினமும் ஏழு மைல் தூரம் நடந்தே 'ஹரே கிருஷ்ணா’ கோயிலுக்குச் சென்று அங்கு தரப்படும் பிரசாதத்தையே உணவாக ஏற்று... என ஒரு பரிபூர்ண இந்துத் துறவி போன்றே வாழ்ந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தம்முடைய கடைசி நாட்களில், அவர் புத்த மதத்தைத் தழுவினார் என்றும் தகவல் உண்டு.

ஒருமுறை, அவர் ஹிமாலய மலைப் பகுதிகளுக்கு வந்தபோது, சாது ஒருவர் பச்சை நிற ஆப்பிள் ஒன்றைத் தந்தார். 'கடித்துத் தின்று பார்’ என்றார். ஸ்டீவ் ஜாப்ஸும் அந்த ஆப்பிளைச் சுவைத்துத் தின்றார். பிற்காலத்தில் அந்த ஆப்பிள்தான், புகழ்பெற்ற அவரது நிறுவனத்துக்கு அடையாளச் சின்னமானது!

- எஸ்.வி.என்.