சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம் - 24

ஞானப் பொக்கிஷம் - 24

ஞானப் பொக்கிஷம் - 24

'கல்வி கரையில; கற்பவர் நாள் சில’ என்கிறது நாலடியார். ஆம்... கல்விக்கு எல்லையே கிடையாது. ஆனால், கற்கக்கூடிய நமக்கோ ஆயுளின் எல்லை... ஊஹூம்! எப்போது, எது நடக்கும் என்று சொல்லமுடியாது. நடுவில் (இப்போதெல்லாம் தொட்டில் பருவத்தில் இருந்தே) நோயின் கொடுமைகள் வேறு. அதன்பிறகு குடும்பம், அதன் பாதுகாப்பு என்று நேரம் போய்விடுகிறது.

##~##

 இப்படிப்பட்ட நிலையில் படிக்க எங்கே நேரம்? அப்படியே சொற்ப நேரம் கிடைத்தாலும், அதில் எதை தேர்ந்தெடுத்துப் படிப்பது? முதலில், இது நல்லது- கெட்டது என்று தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு, ஒதுக்க வேண்டியவைகளை ஒதுக்கி, கற்க வேண்டியவைகளைக் கற்க வேண்டும். ஆனால் நாமோ தேவையற்ற குப்பைகளைப் படிப்பதிலேயே நம் வாழ்நாளைத் தொலைத்துவிடுகிறோம்.

இப்படிப்பட்ட நிலையில், நல்லவற்றை மட்டுமே கொண்டதாக ஒரு நூல் இருந்தால், அது மனித குலத்துக்கே பேருதவியாக இருக்காதா? இதை உணர்ந்தே, 1898-ஆம் ஆண்டில் ஓர் அபூர்வமான நூல் உருவானது. ஐம்பெருங்காப்பியங்கள், பாரதம், ராமாயணம், தலபுராணங்கள், காசி கண்டம், வாயு சங்கிதை, சூதசங்கிதை, புறப்பொருள் வெண்பாமாலை, பிரபுலிங்க லீலை, சூளாமணி எனப் பலவிதமான பழைமையான நூல்களில் இருந்தெல்லாம் தொகுக்கப்பட்டது அந்த நூல். அதில் இடம்பெற்றுள்ள நூல்களின் பெயர்களே ஒரு தனிப்பட்டியலாக இருக்கும்.

இவ்வளவு பெருமைபெற்ற அந்த நூலின் பெயர், அது உருவான விதம் ஆகியவற்றை வழக்கம்போல் கட்டுரையின் முடிவில் பார்க்கலாம். அதற்கு முன்பாக, அந்த நூலில் இருந்து மாதிரிக்கு ஒரு சில பாடல்களுக்கான விளக்கத்தைப் பார்த்துவிடுவோமா?

பயனில்லாதவை எவையெவை என அந்த நூலின் ஒரு பாடல் இப்படிப் பட்டியல் இடுகிறது...

பொறுமை இல்லாத அறிவு, போகங்களை அனுபவிக்காத இளமை, இறங்கி நீராட வழியில்லாத குளம், அலங்காரங்கள் பல இருந்தாலும் நல்ல ஆடையில்லாதவனுடைய தூய்மை, வாசனை இல்லாத மாலை, நற்கல்வி (ஒழுக்கம்) இல்லாத புலவர்களின் புலமை, நல்லவர்களால் காவல் செய்யப்படாத நகரம், நீரில்லா ஊர், பிள்ளை இல்லாதவர்களின் பெருஞ்செல்வம் ஆகிய அனைத்துமே பயனில்லாதவை.

பொறையிலா அறிவு போகப்
புணர்விலா இளமை மேவத்
துறையிலா வனசவாவி
துகில் இலாக் கோலத்தூய்மை
நறையிலா மாலை கல்வி
நலமிலாப் புலமை நன்னார்ச்
சிறையிலா நகரம் போலும்
சேயிலாச் செல்வமன்றே!

(பன்னூற்றிரட்டு 160-ஆம் பாடல்)

அடுத்து, மாதவம் செய்யும் முனிவர்களுக்கும் நரகம் வாய்க்கும் என்று ஒரு தகவலைச் சொல்கிறது நூல். அது எப்படி?

ஞானப் பொக்கிஷம் - 24

படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகாவிஷ்ணு, ஒடுக்கும் கடவுள் சிவபெருமான் என மும்மூர்த்திகளான இவர்கள் வேண்டுதல்- வேண்டாமை இல்லாதவர்கள்; தயாள குணம் நிரம்பியவர்கள். அப்படிப்பட்ட மும்மூர்த்திகளுக்குக்கூட கடும் கோபம் வருமாம். அதுவும், யாரிடத்தில் என்கிறீர்கள்... மாதவம் செய்யும் முனிவர்களிடத்தில் கோபம் வருமாம். ஏன்?

முனிவர்கள், பெற்ற தாயையும் தோளில் தாங்கி அரவணைத்து வளர்த்த தந்தையையும் வணங்கி, அவர்களின் அனுமதி பெற்றுத்தான் துறவு மேற்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டுப் பெற்றோர்களுக்கு மனவருத்தம் உண்டாக்கி, அவர்களை ஆதரவில்லாமல் தவிக்க விட்டுவிட்டு, 'நான் துறவு மேற்கொண்டு தெய்வத்தை அடையப் போகிறேன்’ என்று கிளம்பினால், அவர்களிடம் தெய்வங்களுக்கே கோபம் வரும். அவர்களுக்கு நரகம்தான்.

துறவிகளுக்கே இந்த நிலை என்றால், நம்மைப் போன்று சாதாரணர்களின் நிலை என்ன?

பெற்றோர்களைக் காப்பாற்றாதவன் எப்படிப்பட்ட உயர்நிலையில் இருந்தாலும், அவனுக்கு நரகம்தான். அவன் மேல் தெய்வங்களே கோபம் கொள்ளும் எனும் தகவலைச் சொல்கிறது இந்த நூல். அந்தப் பாடல்...

ஈன்ற தாயினை ஈன்றுஎடுத்து
இரு புயத்து அணைக்கும்
ஆன்ற தந்தையை அரந்தைசெய்து
அகன்று போய் அடவி
தோன்றி மாதவம் தொடங்கினோர்
இவர்களைத் தொல்லை
மூன்று தேவரும் முனிவுற
நிரயம் உற்று இழிவார்!

(பன்னூற்றிரட்டு 166-ஆம் பாடல்)

தந்தையையும் தாயையும் போற்றிச் சொன்ன இந்த நூல், மற்றொரு பாடலில் தாயின் மேன்மையை சொல்கிறது. அது...

'எதி(துறவி)களேனும் வணங்குவர் தாயை
தந்தை அந்த மைந்தனைப் போற்றல் வேண்டும்’

(பன்னூற்றிரட்டு 167-ஆம் பாடல்)

உலகம் போற்றும் துறவியாக இருந்தாலும், அவர் தன் தாயை வணங்கித்தான் ஆகவேண்டும். ஆனால், இந்த நியதி தந்தைக்குப் பொருந்தாது. பெற்ற தந்தையாக இருந்தாலும், அவர் அந்தத் துறவியை வணங்குவதே முறை.

பெற்று வளர்த்த தாய்- தந்தைக்கு எந்தவொரு மனிதனாலும் கைம்மாறு செய்து விடமுடியாது. ஒரு மனிதன் நூறு வருட காலம் தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதாக வைத்துக் கொள்வோம். அதுவும், சாதாரணப் பணிவிடை அல்ல; முழு மனத்தோடு ஓர் அடிமை போன்று சேவகம் செய்கிறான். உலகத்தில் உள்ள பொருட்களை எல்லாம் தாய்- தந்தையின் திருவடிகளில் குவிக்கிறான். நல்ல மனத்தோடு தாய் தந்தையை கடவுளுக்கும் மேலாக மதித்து வழிபடுகிறான். இப்படி நூறு வருடம் பணிவிடை செய்தாலும், பெற்றோர் இவனை ஒரு நாள் வளர்த்ததற்கு ஈடாகாது. அதை விளக்கும் பாடல்:

ஈன்று வளர்த்த தாய் தந்தைக்கு
எவரே கைம்மாறு இயற்றிடுவார்
ஆன்ற மதலை நூறு வயது
அளவும் அடிமைத்திறம் பூண்டு
மூன்று புவனத்து உள்ளபொருள்
முற்றும் அளித்து முறைமுறையே
ஏன்று வழிபாடு இயற்றிடினும்
ஒருநாள் வளர்த்ததற்கு இயையாதே!

(பன்னூற்றிரட்டு 171-ஆம் பாடல்)

இப்படிப்பட்ட அரும்பெரும் பாடல்கள் மக்கள் மத்தியில் பரவுவதில்லை. விளைவு? முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன.

இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் நிறைந்த இந்த நூலின் பெயர்- பன்னூற்றிரட்டு. பலவிதமான தலைப்புகள், ஒவ்வொரு தலைப்பிலும் பழங்கால நூல்கள் பலவற்றிலும் இருக்கும் பாடல்கள் என அற்புதமான முறையில் அமைந்துள்ளது. இந்த நூல் வெளியான (1898-ஆம் ஆண்டு) அந்தப் பழைமையான காலத்திலேயே தமிழ் அறிஞர்களின் உள்ளங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்த நூல் இது. இந்த நூலை உருவாக்கியவர், ராமநாதபுரம் பாலவனத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர்.

இந்த நூல் உருவாக இரண்டு ஆண்டுகள் ஆயின. இதை உருவாக்க, பாண்டித்துரை தேவர் ஊர் ஊராகச் சென்று முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்படி அவர் கும்பகோணம் சென்றிருந்தபோது, அங்கே தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரைச் சந்தித்தார். அவரிடம் தன் எண்ணத்தைத் தெரிவித்தார். அதற்குத் தமிழ்த் தாத்தா, ''அருமையான முயற்சி! இப்படிப்பட்ட அரிய நூலைத் தொகுக்கும்படி பலர் என்னைக் கேட்டார்கள். ஆனால், இப்போது அதைச் செய்ய எனக்கு அவகாசமில்லை. நீங்கள் செய்யுங்கள். விடாமுயற்சியோடு விரைவில் முடியுங்கள். என்னிடம் 'புறத்திரட்டு’ என்ற நூல், கையெழுத்துப் பிரதியாக இருக்கிறது. அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அதையும் வைத்துக்கொள்ளுங்கள்!'' என்று சொல்லி, அந்தக் கையெழுத்துப் பிரதியையும் அளித்தார்.

இவ்வாறு பெரும் முயற்சி செய்து, அருமையான நூல்களிலிருந்து அற்புதமான பாடல்களைத் தொகுத்து, ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட முத்தாரம் போன்று உருவான இந்த நூல், அனைவரிடமும் கட்டாயம் இருக்கவேண்டும்.

- இன்னும் அள்ளுவோம்...