சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பிருந்தாவனத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுமே நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. ஸ்ரீகண்ணனின் பூமி என்பதால் நமக்குள் அப்படியொரு சிலிர்ப்பு! இந்த இதழிலும் பிருந்தாவனக் கோயில்கள் சிலவற்றைத் தரிசிப்போம்...

##~##

பாங்கே விஹாரி மந்திர்- பெயர் மட்டுமல்ல; இந்தப் பெயருக்கான விளக்கமும் நம் கவனத்தை ஈர்க்கிறது. பாங்கே என்ற வார்த்தைக்கு 'மூன்று வளைவுகள்’ என்று பொருள். விஹாரி என்றால் 'விளையாட்டுப் பிள்ளை’. இந்த ஆலயத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையான ஸ்ரீகிருஷ்ணர் உடலை வளைத்து அருட்கோலம் காட்டுவதால், கோயிலுக்கு இப்படியரு பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். ரிக்‌ஷாகூட நுழையமுடியாத நெரிசலான சந்துப் பகுதியில் அமைந்திருக்கிறது கோயில்.

மொகலாயர்களின் படையெடுப்பின்போது, ஒரு துறவியின் கைகளில் கிருஷ்ண விக்கிரகம் ஒன்று கிடைத்ததாம். அவர் அதைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டாராம். சில நாட்களுக்குப் பிறகு அந்த வழியாகச் சென்ற ஸ்வாமி ஹரிதாஸ் என்பவர், களைப்பு மேலிட அங்கே படுத்து உறங்க... அவரது கனவில் தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர். அங்கே மண்ணில் புதைந்துள்ள தமது விக்கிரகம் பற்றி அவர் சொல்ல, திடுக்கிட்டு விழித்த ஸ்வாமி ஹரிதாஸ் அந்த விக்கிரகத்தைத் தோண்டி எடுத்து, ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து கோயிலும் எழுப்பினார். அதுதான், இந்த பாங்கே விஹாரி மந்திர் என்கிறது கோயில் ஸ்தல வரலாறு.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

ஸ்வாமி ஹரிதாஸுக்குக் கிருஷ்ணரும் ராதையும் காட்சி கொடுத்தபோது, அவர்கள் இருவரையும் ஒரே உருவில் காண வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார் ஹரிதாஸ். அவரது விருப்பப்படி காட்சி தந்த ஸ்ரீகிருஷ்ணர், பக்தர் ஆசைப்பட்டபடி அமைந்த தமது விக்கிரகம் ஒன்றையும் அவருக்குக் கொடுத்தருளியதாகச் சொல்வர்.

இந்தக் கோயிலில் அவ்வப்போது ஸ்வாமியை திரையிட்டு மறைத்துவிடுகிறார்கள். நீண்ட நேரம் திறந்து வைத்திருந்தால், இத்தலத்து இறைவனான குட்டிக் கிருஷ்ணன், பக்தர்கள் கூட்டத்துக்குள் ஓடி மறைந்து விளையாட்டு காட்டுவான்; அதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று விளக்கம் சொன்னார்கள் கோயிலில் உள்ளவர்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்கு முன்பாகப் போடப்பட்டுள்ள திரை எப்போது விலகும் என்று சொல்ல முடியாது. அதனால், நெரிசலைப் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் காத்திருந்து, திரை விலகியதும் பக்தர்கள் அவரை தரிசிக்கிறார்கள்.

மற்ற கோயில்களைப் போல அதிகாலை வேளையில் இங்கே பூஜைகள் நடப்பது இல்லை. காலை 9 மணிக்குத்தான் முதல் பூஜையே ஆரம்பமாகிறது. 'ஸ்வாமி ஹரிதாஸுக்குக் குழந்தை கிருஷ்ணர்மீது அளவற்ற பிரியம் உண்டு. அவர் நன்றாகத் தூங்கட்டும் என்கிற காரணத்தாலேயே, அவர் இப்படி நெறிமுறைப்படுத்தி இருக்கிறார்’ என்று விளக்கம் தந்தார்கள், கோயிலில் இருந்தவர்கள். அவர்கள் இப்படிச் சொன்னபோது...

'கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்’

- என்று பெரியாழ்வார் பாடியதுதான் என் நினைவுக்கு வந்தது. 'தொட்டிலில் போட்டால் அதைக் கிழித்து விடுகிறான்; இடுப்பில் வைத்துக்கொண்டால், எலும்பே முறிந்துவிடுவதுபோல் உதைக்கிறான்; தோளில் போட்டுக்கொண்டாலோ, வயிற்றில் தாக்குகிறான்; இதனால் நான் மெலிந்தே போய்விட்டேன்’ என்று, குழந்தைக் கண்ணனின் முரட்டுத்தனம் குறித்து தாய் யசோதை செல்லமாகப் புலம்புவதைச் சொல்கிறது இந்தப் பாடல்.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பாங்கே விஹாரி மந்திரில் ஸ்வாமி சந்நிதிக்கு முன்பாக மலர்ச் சரங்கள் சாண்டிலியர் விளக்குகளைப்போலத் தொங்க விடப்பட்டிருப்பது பக்தர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அதில், குட்டிக் குட்டிப் பித்தளை மணிகள் வட்ட வடிவில் இருக்கின்றன.

இங்குள்ள பலருக்கும் பாங்கே விஹாரி கோயில்தான் குலதெய்வக் கோயில் என்பதால், அவர்கள் தங்கள் குடும்ப விசேஷங்களை இங்கே வந்து கொண்டாடுவதைப் பெருமையாக கருதுகிறார்கள்.

பாங்கே விஹாரி மந்திரைத் தொடர்ந்து, நாம் அடுத்ததாகச் சென்றது, ஸ்வாமி ஹரிதாஸ் மந்திர்! பிருந்தாவனத்தில் கொஞ்சம் பெரிய கட்டடமாக இருப்பது இந்த மந்திர்தான். 1480-ல், பிருந்தாவனத்துக்கு அருகில் உள்ள ராஜ்பூரில் பிறந்தவர் ஸ்வாமி ஹரிதாஸ். இவர் சிறந்த இசைவாணர். கவிஞரும்கூட! ஸ்ரீகிருஷ்ணர்மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தவர். இரவும் பகலும் மதுர பக்தியிலேயே லயித்திருந்தவர். பக்தியில் மூழ்கியபடியே தியானத்தில் இருந்தவர், அப்படியே பூமியில் மறைந்துவிட்டாராம். அவருடைய சமாதியையே கோயிலாக மாற்றியிருக்கிறார்கள். காலையில் கோயில் திறந்தது முதல் இரவு சாத்தப்படுவது வரை பஜனைப் பாடல்களை இடைவிடாமல் ஒலிபரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

அடுத்ததாக நாம் சென்றது, ஷாஜி மந்திர். கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பாக, சிவப்புக் கற்கள் கொண்ட உயரமான நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. ஆலயம், பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆலயம் கட்டப் பயன்படுத்தப்பட்ட பளிங்குக் கற்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று விளக்கம் தந்தார் எங்களுடன் வந்த கைடு.

லக்னோ நகரில் இருந்த ஷா குந்தன்லால் மற்றும் ஷா ஃபுந்தன்லால் ஆகிய இரண்டு நகை வியாபாரிகள் இந்தக் கோயிலைக் கட்டி முடித்திருக்கிறார்கள். இதற்கு 8 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆலயம் உருவான ஆண்டு 1860.

வெளி முற்றத்தில் நீரோடைகளும் நீரூற்றுகளுமாக அற்புதமாக இருக்கிறது கோயில். சிங்கச் சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு இருக்கின்றன. நீளமான வெராந்தாவில் திண்ணைகளும் படிகளும் அமைத்து இருக்கிறார்கள். இங்கே நம்மை ஆச்சரியப்பட வைக்கும் விஷயம், பளிங்குக் கல்லால் ஆன 12 தூண்கள்! ஒவ்வொரு தூணும் 15 அடி உயரம். அவை நேராக இல்லாமல் வளைந்து நெளிந்து இருப்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. உள்ளூர்வாசிகள் இந்தக் கோயிலை 'தேடே கம்பே வாலா மந்திர்’ என்கிறார்கள். வளைந்த கம்பக் கோயில் என்பது பொருள். கோயிலுக்குள் தர்பார் ஹாலும் இருக்கிறது. ஆனால், அதன் உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

அடுத்து, நாங்கள் சென்ற இடம்... ராதா வல்லப் மந்திர். இங்கே ராதைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ராதா வல்லப் என்ற சம்பிரதாயத்தை அனுசரிக்கும் குழுவினரே கோயிலை நிர்வகிக்கிறார்கள். மூன்று அடுக்குகளைக் கொண்டது கோயில். இதை, 16-ஆம் நூற்றாண்டில் ஹிட் ஹரிவம்ச கோஸ்வாமி என்பவர் கட்டி இருக்கிறார். தொல் பொருள் இலாகா, பாதுகாக்கப்பட்ட சின்னமாக இதை ஏற்றிருக்கிறது. ஹோலி, ஜன்மாஷ்டமி போன்ற நேரங்களில் பக்தர்கள் கூட்டம் இங்கே மிக அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

நாம் தரிசித்த இந்த ஆலயங்கள் தவிர, இன்னும் எண்ணற்ற ஆலயங்கள் இங்கே இருக்கின்றன. மாதக்கணக்கில் தங்கினால்தான் அத்தனை ஆலயங்களையும் தரிசிக்க முடியும். நாம் ஒருசில ஆலயங்களையே தரிசித்தாலும், நம் மனம் ஸ்ரீகிருஷ்ணரின் நினைவுகளில் ததும்புவது நிச்சயம்!

பிருந்தாவனத்தை விட்டுப் புறப்படும்போது, இன்னொரு காட்சி எங்கள் மனத்தை நெகிழ வைத்தது. சில கட்டடங்களில் முழுக்க வெள்ளை ஆடை அணிந்த கைம்பெண்கள் நூற்றுக்கணக்கில் வசிக்கின்றனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து வந்து, இங்கே நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள் அவர்கள். தினமும் காலை முதல் இரவு வரை ஸ்ரீகிருஷ்ணர்மீது பஜனைப் பாடல்களைப் பாடியபடி தங்களது எஞ்சிய காலத்தைக் கழித்து வருகிறார்கள் இவர்கள் என்று கைடு சொன்னபோது எங்கள் மனம் கசிந்தது.

ரிக்‌ஷாக்காரர் மற்றும் கைடு ஆகியோரிடம் விடைபெற்றபோது, நாங்கள் மறுபடியும் மதுரா புறப்பட ஆட்டோ தயாராக நின்றிருந்தது.

- யாத்திரை தொடரும்...

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

படங்கள்: துளசி கோபால்

பிருந்தாவனம் செல்வோர் கவனத்துக்கு...

பிருந்தாவனத்தில் குரங்குகள் தொல்லை அதிகம். நாம் கொண்டுவரும் தின்பண்டங்களை மட்டுமின்றி, கைப் பை, செல்போன், மூக்குக் கண்ணாடி என்று எதை வேண்டுமானாலும் அவை கவர்ந்து சென்றுவிடுகின்றன. அதனால், இவற்றிடம் உஷாராக இருப்பது அவசியம்.

பிருந்தாவனம் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள நாம் விரும்பினால் ஆங்கிலம் அல்லது தமிழ் தெரிந்த கைடை அமர்த்திக்கொள்வது நல்லது.

பிருந்தாவனத்தில் இரண்டு நாட்கள் தங்குமாறு பயணத் திட்டத்தை அமைத்துக்கொண்டால், பதற்றமின்றி பல ஆலயங்களை நிதானமாகத் தரிசிக்கலாம்.

ங்கே கடைகளில் கிடைக்கும் கடுகு எண்ணெயில் தயாரித்த இனிப்பு வகைகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். வயிற்றைப் பதம்பார்த்துவிடும்.

முடிந்தவரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையே குடியுங்கள். பொதுவாகவே இந்தப் பகுதிகளில் சுகாதாரம் குறைவு.

நீங்கள் பயணிப்பது ஆட்டோ, டாக்ஸி அல்லது ரிக்‌ஷா எதுவாக இருந்தாலும், அவர்களை எந்த இடத்தில் காத்திருக்கச் சொன்னோம் என்பதைக் கவனமாக நினைவில் வைத்திருங்கள். முடிந்தால், ஒரு தாளில் வரைபடம் மாதிரி குறித்துவைத்துக்கொண்டாலும் நல்லதுதான். திரும்பிய பக்கம் எல்லாம் ஒரே மாதிரியான சந்துகள்; ஒரே மாதிரியான கோயில்கள்; ஒரே மாதிரியான கடைகள் இருப்பதால், குழப்பத்தைத் தவிர்க்க இந்த மாதிரியான குறிப்பு அவசியமாகிறது.

பாங்கே விஹாரி கோயிலில் முதல் பூஜையே காலை 9 மணிக்குத்தான் ஆரம்பம். இதை அனுசரித்து இந்தக் கோயிலுக்கு வருவதுபோல உங்கள் நிகழ்ச்சி நிரலை அமைத்துக்கொள்ளலாம்.