சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

அன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்!

அன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்!

அன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்!

செண்பக மன்னன் என்பவன், சுமார் 950 வருடங்களுக்கு முன்பு வெம்பகோட்டை எனும் பகுதியை ஆட்சி செய்து வந்தான். மிகுந்த சிவ பக்தன். ஒருநாள், செண்பக மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், 'பொன்மலைக்கு அருகில் உள்ள களாக்காட்டுக்குச் சென்றால், உன் கண்ணில் ஒரு சிவலிங்கம் தென்படும். அந்த லிங்கத் திருமேனியை வழிபடு; வளம் பெறுவாய்!’ என அருளினார்.

அன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்!

 விடிந்ததும், களாக்காட்டுக்குச் சென்ற மன்னனின் கண்ணில் லிங்கத் திருமேனி தென்பட்டது. அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்துச் சிலிர்த்த மன்னன், அங்கே தவத்தில் ஈடுபட்டிருந்த முனிவர் பெருமக்களையும் வணங்கினான். பிறகு அவர்களின் ஆலோசனைப்படி, அங்கே சிவனாருக்கு அழகிய கோயிலை எழுப்பினான்.

களாக்காட்டை சீர்செய்து கோயில் கட்டியவன், கோயிலைச் சுற்றிலும் மக்கள் வசிப்பதற்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தான்.

அன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்!

சிவனாருக்கு ஒரு கோயிலும் அம்பிகைக்கு ஒரு கோயிலுமாகக் கட்டி முடித்த மன்னன், அம்பிகைக்கு ஸ்ரீசெண்பகவல்லி என்று திருநாமம் சூட்டினான். இறைவனின் திருநாமம்- ஸ்ரீபூவனநாதர். அந்த ஊரின் பெயர்- கோவில்புரி. பின்னாளில் அதுவே கோவில்பட்டி என மருவியதாகச் சொல்கிறது, ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள் ஆலயத்தின் ஸ்தல வரலாறு.

அன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்!

மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ளது கோவில்பட்டி. மதுரையில் இருந்து சுமார் 96 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து சுமார் 59 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்த ஊர். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீபூவனநாதர் ஆலயம். களாவனத்தில் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் என்பதால் களாவன நாதர் எனும் திருப்பெயரும் இறைவனுக்கு உண்டு.

கிழக்குப் பார்த்தபடி இறைவனும் இறைவியும் காட்சி தரும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீபஞ்சமுக விநாயகர், ஸ்ரீசண்முகர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அகத்திய முனிவர் உருவாக்கிய அகத்திய தீர்த்தம் இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று.  

சிவ ஸ்தலம்தான் என்றாலும், வருடம் முழுவதும் ஸ்ரீசெண்பகவல்லி அம்பாளுக்கே முன்னுரிமையும் விழாக்களும் நடைபெறுகின்றன. சுமார் ஏழடி உயரத்தில் கொள்ளை அழகுடன் ஒயிலாகக் காட்சி தருகிறாள் தேவி. கேட்டவர்க்குக் கேட்டதைக் கொடுக்கும் கருணைத் தெய்வம் இவள். அம்பாளிடம் பிள்ளை வரம் கேட்கும் கோவில்பட்டி மக்கள், தங்கள் வீட்டில் குழந்தை பிறந்தால்... பெண் குழந்தை எனில் செண்பகம், செண்பகவல்லி, செண்பகலட்சுமி என்றும், ஆண் குழந்தை எனில் செண்பகராமன், செண்பகராஜன் என்றும் எனப் பெயர் சூட்டுகின்றனர்.

தை அமாவாசை நாளில், (10,000 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்து) பத்திர தீப விழா விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த ஆலயத்தில், மகா சிவராத்திரி விழாவில் சிவனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாளில் இங்கு வந்து வழிபட, சகல வினைகளும் நீங்கும்; சகல ஐஸ்வரியங்களும் ஸித்திக்கும் என்பது ஐதீகம்! மகா சிவராத்திரி நாளில் சிவனாரையும் அம்பிகையை

யும் விளக்கேற்றி வணங்கினால், ராகு- கேது தோஷங்கள் விலகும்; தீராத நோயும் தீரும்; ஞானமும் யோகமும் பெறலாம்.

ச.பா.முத்துகுமார்  படங்கள்: ஜெ.பிரதீப் ஸ்டீபன்ராஜ்

##~##