மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 12

சித்தம் அறிவோம்...

சித்தம்... சிவம்... சாகசம்! - 12
##~##

'பார்த்திருந்த சித்தர்களை பார்க்க வைத்தே
பக்குவமாய் போகரவர் தயங்கிடாமல்
சீர்நிறை என்போல் அவரை ஏய்த்துப் போட்டு
சிதறாமல் உரகையினில் என்னைக் கண்டார்
போர் விளங்கப் புதுமையுடன் எனை அழைத்துப்
பொய்கை நல்லூர் என்றிடும் பூங்கா சென்றார்
நேர்மையுடன் எனக்கு அடக்கம் நிலைமை காட்டி
நெடிய கடல் தாண்டி மறுதேசம் போனார்!’

- கோரக்கர் சந்திரரேகை 

போகருடைய வாழ்வில் எவ்வளவோ அதிசயங்கள்! அதில், அவர் ஒரு பூனைக்கு வேதத்தை உபதேசம் செய்த சம்பவம் சித்த உலகில் வேடிக்கையாகவும், அதேநேரம் ஆழ்ந்த பொருளுடையதாகவும் கருதப்படுகிறது. போகர் ஒரு மருத்துவர்; போகர் ஒரு யாத்ரீகர்; போகர் ஒரு தவசி; போகர் ஒரு நாடோடி...  இப்படி, போகரை எல்லா நிலைப்பாட்டிலும் பொருத்திச் சொல்லலாம்.

நான்கு முழத்தில் ஒரு துவராடை, காலில் ஜாதிபத்திரி மரத்தால் ஆன பாதரட்சை, கையில் ஐம்பொன் கமண்டலம். தோளில் துணி மூட்டை - இதுதான் போகர். எங்கு வேண்டுமானாலும் கிளம்பிவிடுவார். ஆகாய மார்க்கம், நீர் மார்க்கம், தரை மார்க்கம் என்று எதிலும் பயணிக்க வல்லவர். தூரம் இவருக்கு ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை. போகரின் இந்தச் சாதுர்யங்கள் இன்று நம்மில் யாரேனும் ஒரு மனிதனிடம் இருந்தாலும் போதும். அவனை இந்த உலகமே வியந்து நோக்கும். அது மட்டுமல்ல; போகரின் சாதுர்யங்கள் நம்மிடம் இருந்தால் நமக்கு எந்த ஒரு வாகனமும் தேவையில்லை. எரிபொருள் என்ன விலை விற்றாலும் கவலையில்லை; பாஸ்போர்ட், விசா என்று எந்த நடைமுறைகளும் நமக்கு தேவையில்லை. இதெல்லாம் நடக்கற காரியமா என்றுதான் நம் பட்டறிவு நம்மைப் பார்த்துக் கேட்கும். ஆனால், போகர் வாழ்வில் அதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்திருக்கின்றன.

சரி, பூனை கதைக்கு வருவோம். போகர் ஒரு யாத்ரீகர் என்பவரும்கூட என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன் இல்லையா? ஒருநாள் காலார கிளம்பிவிட்டார். ஓர் ஊருக்குள் நுழைந்தபோது, நடந்த களைப்பில் தாகமும் பசியும் மேலிட்டது. காடாக இருந்தால் மூலிகை உணவாகிவிடும். இருப்பதோ நாடு... பாலும் கனியும் கிடைக்காதா என்று தேடத் தொடங்கினார். அப்போது ஒரு வேதியர் வீடு குறுக்கிட்டது. அந்த வீட்டின் உள்ளே பெரிதாக ஹோமம் நடந்துகொண்டிருந்தது. வேதியர்கள் வேத மந்திரங்களைக் கூறி, ஹோமம் வளர்த்தபடி இருந்தனர். அங்கே தன் தேவைக்கு உணவு கிடைக்கும் என்று கருதிய போகர், அந்த வேதியர் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 12

அலைந்து திரிந்து வந்தமையால் பார்ப்பதற்குப் பக்கிரி போல தென்பட்ட அவரை, வேதம் ஓதும் வேதியர்கள் பார்த்து முகம் சுளித்தனர். அவரது அருமை உணராது அவரை எழுந்து போகச் சொன்னார்கள். போகருக்குக் கோபம் வந்துவிட்டது.

''வேதியர்களே! என்னை ஏன் துரத்துகிறீர்கள்? நானும் உங்களைப்போல் ஒருவன்தானே?'' என்று கேட்டார். அவர்கள் சிரித்துவிட்டனர்.

''பார்க்கப் பரதேசி போல் இருக்கும் நீ எங்களைப் போன்றவனா? எங்களைப் பார்... நாங்கள் உன்னைப் போலவா இருக்கிறோம்?'' என்று ஏகடியம் பேசினர்.

''தோற்றத்தை வைத்து எடைபோடாதீர்கள். உங்களுக்கு நான் இளைத்தவனில்லை. சொல்லப்போனால், எனக்கு இணை உங்களில் ஒருவர்கூட இல்லை!'' என்றார் போகர்.

''என்ன... பேச்சு தடம் மாறுகிறது. நாங்கள் வேதியர்கள். இங்கே நடப்பது புனிதமான மஹாமிருத்யுஞ்சய ஹோமம். அப்படி என்றால் என்னவென்றாவது உனக்குத் தெரியுமா?''

''என்னைச் சோதிக்கிறீர்களா?''

''இல்லை... சோதிப்பது என்பது, சந்தேகம் வரும்போது நடக்கும் ஒன்று. இங்கே உன் மேல் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. உன்னோடு நாங்கள் இவ்வளவு பேசியதே அதிகம். எங்களை இனியும் பேசவிடாமல்- நாங்கள் ஹோமம் செய்ய இடையூறு செய்யாமல் இடத்தை காலி செய்!'' என்று கூறிவிட்டு அவர்கள் விலகிட. போகர் முகத்தில் கோபம் குடியேறத் தொடங்கியது. அப்போது பூனை ஒன்று அவரைக் கடந்து ஹோமம் நடைபெறும் இடம் நோக்கிச் சென்றது. ஒரு வேதியர் அதை அடிப்பதுபோல பாவனை காட்ட, அது பயத்துடன் ஓடிவந்து போகரின் காலடியில் விழுந்தது.

போகர் உடனே குனிந்து அதை எடுத்தார். பரிவோடு பார்த்து வருடிக் கொடுத்தார். பூனைக்கும் இதமாக இருந்தது. அப்படியே அதன் நெற்றி மீது தன் கட்டை விரலை வைத்து தன் தவசக்தியைச் சற்று அந்த பூனைக்குள் பாய்ச்சவும், அந்தப் பூனை பேச ஆரம்பித்தது. 'முனிவர் பிரானுக்கு என் வணக்கம்’ என்றது.

''நான் முனிவனல்ல பூனையே... முனைந்து தவம்புரிபவனே முனிவன். அவனுக்கு வரசித்தி பெறவேண்டும் என்னும் நோக்கம் இருக்கும். நான் சித்தன். சகல ஸித்திகளையும் நான் என்னை வென்றே பெற்றுவிட்டவன்'' என்று பூனைக்கு விளக்கமளித்தவர், அதன் காதில் வேதமந்திரங்களை உபதேசிக்கத் தொடங்கினார். பூனையும் சிஷ்ய பாவனையுடன் கேட்டுக்கொண்டது.

அதே நேரம், ஹோம மந்திரம் ஜெபித்தபடி இருந்த வேதியருக்கு, சொல்லி வந்த மந்திரத்தில் அடுத்த அடி மறந்துபோய், முதல் அடியையே திரும்பத் திரும்பச் சொல்லி, தன் தலையிலும் அடுத்த அடி நினைவு வருவதற்காகக் குட்டிக் கொண்டார்.

போகர் வெளியே இருந்தபடியே அதைக் கேட்டுச் சிரித்தார். பிறகு, அவர் பூனையுடன் அங்கே போய் நின்று பூனையைப் பார்க்க, அது அடுத்த அடியை எடுத்துக்கொடுத்தது. அதைக் கண்ட வேதியர்கள் அப்படியே ஸ்தம்பித்து, ஆச்சரியத்தில் மூழ்கினர். இது ஏதும் மாயமா, ஸித்து வேலையா எனத் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள, பூனை மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்து, முழுவதுமாகச் சொல்லி முடித்தது. பின்பு போகரைப் பார்த்து, ''குருநாதா... நான் செல்லட்டுமா?'' என்று கேட்க, ''நீ செல்லலாம்'' என்றார் போகர். அதுவும் தன் வழியே துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கியது.

இப்போது வேதியர்களிடம் ஒரு மாற்றம்.

''ஐயனே... தாங்கள் யார்?''

''நீங்களே சொன்னீர்களே... பரதேசி என்று!''

''மன்னியுங்கள். நாங்கள் தோற்றத்தை வைத்துத் தவறாகக் கருதிவிட்டோம்.''

''அப்படிக் கருதக்கூடாது என்றேனே..''

''உண்மைதான். எங்கள் செருக்கு உங்கள் பேச்சைக் கேட்கவிடவில்லை.''

''அது போகட்டும். இந்த ஹோமத்தின் நோக்கம்?''

''நாட்டில் மழையில்லை. அதனால் கடும் வறட்சி. வாழ்விலும் இதனால் ஒளியில்லை. எனவே, இறையருளுக்காகவே இந்த வேள்வி. நாங்களும் வறுமையில் வாடுகிறோம்.''

''இதைப் போன்ற வேள்விகளின்போது மனத் தூய்மையும் பணிவும் மிக முக்கியம். அப்போது தான் வேத மந்திரங்கள் வானில் முழுமை யாகப் பரவி அதிர்வு உருவாகி, மேக மண்டலத் தில் மாற்றம் தோன்றி, மழைக்கான கார்மேகங்கள் ஒன்றுதிரளும்...''

''உண்மைதான். நாங்கள் தெளிந்தோம். தங்களைப் பற்றித் தயவுசெய்து கூறுங்கள்.''

''என் பெயர் போகன். நானோர் சித்தன்!''

சித்தம்... சிவம்... சாகசம்! - 12

''போகர் பெருமானா? கேள்வியுற்றிருக் கிறோம். இன்று நேரிலும் பார்த்துவிட்டோம். மட்டற்ற மகிழ்ச்சி! ஒரு பூனைக்கே வேதத்தைப் புகட்டி தாங்கள் எங்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டீர்கள்...''

''வேதம் இறைவனின் மொழி. அதை மொழிவது வேதியர் கடப்பாடு. அப்போது சுயநலம் துளியும் கூடாது. அடுத்து, உச்சரிப்பு பிசகினாலும் அது ஆபத்து.''

''தாங்கள் கூறுவதை ஏற்கிறோம். எங்கள் வேள்வி வெற்றி பெற்றிட, தாங்களும் உடனிருந்து அருளுங்கள்.''

''கவலை வேண்டாம். உங்கள் வேள்வி வெற்றி காணும். மழை வளம் இனி பொய்க்காது. உங்களின் வறுமையையும் நான் போக்குகிறேன். நான் எனில், என் சித்த ஞானம்!'' என்ற போகர், அந்த வீட்டில் இருந்த அவ்வளவு அண்டா குண்டாக்களையும் கொண்டுவந்து தன் முன் போடச் சொன்னார். கடப்பாரை, மண் வெட்டியைக்கூட விடவில்லை.

பிறகு, அவற்றை வறட்டி எனப்படும் பசுஞ்சாணத் தட்டைகள் கொண்டு மூடி நெருப்பிட்டார் போகர். கொழுந்துவிட்ட நெருப்பால் அவ்வளவு உலோக பாண்டங்களும் சிவப்பேறிப் பழுத்து நின்றன. அப்போது அதன் மேல், தன் வசம் இருந்த ஆதிரசம் எனும் ரசவாத மூலிகைச் சாற்றைத் தெளித்தார். பின்பு அதைக் காற்றில் ஆறிய நிலையில் காணச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்தபோது அவ்வளவும் தங்கமாக மாறியிருந்தது.

'இது உங்கள் வறுமையை வெல்ல உதவட்டும்; உங்கள் மனமும் பொன்போல மின்னட்டும்'' என்று ஆசி கூறிவிட்டுப் புறப்பட்டுவிட்டார் போகர்.

இந்தச் சம்பவம் போகர் வாழ்வில் ஒரு பாட்டாக காணக் கிடைக்கிறது.

குருவென்றே தாகத்துக்கு அமுதம் ஈந்தார்
கொண்டுமே வந்துவொரு சித்தி ஈந்தே
அருவென்றே பாத்திரங்கள் ஈந்து ஐயா
ஆயி அவன் உபதேசம் அனுகிரகித்து
தருவென்றே அவரவர் வீட்டில் உள்ள
தவலை செம்பு மண்வெட்டி உழவுப்பாறை
வெருவென்றே வெளிதனில் குவிக்கச் சொல்லி
விராட்டிப் போர் தனையடுக்கி நெருப்பிட்டேனே
இட்டுமே சிவந்த பின்பு கொணர்ந்த சூதம்
எள் அளவாய் எடுத்துமே திவலை வீசி
கட்டுமே கனகம்பத் தரையுமாச்சு
கணக்காக அவரவர்கள் எடுத்துக் கொண்டார்கள்!’

- எனும் இந்தப் பாடல், போகிற போக்கில் தங்கம் செய்ய முடிந்தவர் போகர் என்பதை உணர்த்துவதுபோல் உள்ளது. அது மட்டுமல்ல, வேத மந்திரங்களும் அவருக்கு தெரிந்திருந்தன.

இந்த ரசவாத ரசத்தை எப்படிச் செய்வது என்பது குறித்தும் போகர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பொன்னாவரை மூலிகைச் செடியை வேரோடு பிடுங்கி எடுத்து, ஒரு களஞ்சு முப்புவைச் சேர்த்து (உப்பு, கந்தகம், பாதரசம் மூன்றும் சேர்ந்தது) தைலம் போல் காய்ச்ச வேண்டும். பிறகு அதை ரசமாக்க பிரிதொரு முறைகள் உள்ளன. இதில், 'எது பொன்னாவரைச் செடி? அந்த முப்புவின் அளவு எவ்வளவு? அதை எப்படிக் காய்ச்ச வேண்டும்? எப்போது காய்ச்ச வேண்டும்?’ என்பதுவரை அதனுள் நுட்பங்கள் உள்ளன. காய்ச்சப்படும் பாத்திரம் எத்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதில் முக்கியம். இதெல்லாம்தான் ரசவாத ரகசியம்.

போகரின் ரசவாதம் இப்படி என்றால், மற்ற சில சித்தர்கள் வேறு மாதிரிகளில் இதேபோல ரசவாத ரசம் செய்திருக்கின்றனர்.

போகர் ரசவாதத்தில் மட்டுமல்ல, அஷ்டமா ஸித்திகளிலும் சிறந்து விளங்கினார். அதில் ஒன்று இலஹிமா ஸித்தி. அதாவது, எடைப்பாடுள்ள நாம் பஞ்சு போல் ஆகிவிடுதல்.

இது எப்படி சாத்தியம்?

விமானம்கூட மிகுந்த கனமானதுதான்; ஆனால், அது காற்றைச் சமன் செய்யும்போது லேசாகி வானில் மிதப்பதுடன் பறக்கவும் செய்கிறதல்லவா? இதே தத்துவத்தை நம் உடலிலும் நாம் செயல்படுத்தலாம். அதற்குத் தசவாயுக்கள் பற்றிய அறிவு நமக்கு முக்கியம்.

தசவாயுக்களில் ஒரு வாயு அபான வாயு. இன்னொரு வாயு உதான வாயு. இதில் அபான வாயுவுக்குக் கீழ் நோக்கி அழுத்தும் தன்மை உண்டு. உதான வாயுவுக்கு மேல் நோக்கி இழுக்கும் தன்மை உண்டு. இலஹிமாவில் நாம் லேசாக, நம் உடலில் உதான வாயுவை நிரப்ப வேண்டும். அப்போது நாம் லேசாவோம். அதை எப்படி நிரப்புவது என்பதெல்லாம் யோகப் பயிற்சியால், தகுந்த குருநாதர் மூலம் படிப்படியாக அறிய வேண்டியவை.

பௌத்த குருமார்கள் இம்மட்டில் சாதாரணமாக இந்த இலஹிமா வித்தையை செய்தனர். அவர்கள் ஆகாயத்தை ஒரு தனி பூதமாகக் கருதவில்லை. ஆகாயமும் பூமியும் அவர்கள் வரையில் ஒன்றுதான்!

ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவர் பத்மபாதர். அதாவது, தாமரைபோல் மென்மையான பாதங்களை உடையவர் என்பது பொருள். ஆதிசங்கரர் வகுப்பு எடுக்கும் நேரம், பத்மபாதர் வரும் வழியில் ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடியபடி இருக்கிறது. வகுப்புக்குச் சரியான நேரத்துக்குச் செல்லவேண்டிய ஒழுக்கம், கட்டுப்பாடு அவரை நீர்மேல் நடந்து செல்லச் செய்கிறது.

அவர், உதான வாயுவை உள்ளுக்குள் பெருக்கப் பெருக்க... அது உடம்பை மேல் நோக்கி இழுத்திட, எடை இழப்பு ஏற்பட்டு, அவர் நீர்மேல் நடந்து வந்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.

இப்படிப்பட்ட ஸித்திகள் போகர் வரையிலும் சாதாரணம். தானறிந்த இவை அவ்வளவையும் போகர் தன் சீடர்களில் ஒருவரான கோரக்கரிடம் கூறியதாகவும் வரலாற்றுக் குறிப்புகளின்படி தெரியவருகிறது. அவரே 'போகர் ஜனன சாகரம்’ எனும் நூலில் தன் வாழ்வியல் அனுபவங்களை எழுதியதாகவும் தெரிகிறது.

மேற்கண்ட தகவல்கள் அவ்வளவும் சோழ அரசன் இரணியவர்மனுக்கு எடுத்துரைக்கப்படவும், மன்னன் அதைக் கேட்டு நெகிழ்ந்து போனான். அதன்பின், அவன் கருவூராரையும், போகரையும் சென்னியில் வைத்துக் கொண்டாடிச் சிறப்பித்தான்.

இப்படிப்பட்ட போகரின் ஜீவன் முக்தியும் மிக விநோதமாக, சித்தர்கள் உலகமே எண்ணிப் பார்த்து வியப்பதாக உள்ளது.

- சிலிர்ப்போம்...