சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

'நாமக்கல் தலத்துக்கு ஸ்ரீஆஞ்சநேயர் எப்படி வந்தார், அவருக்கு இங்கே என்னென்ன சிறப்புக்கள்னு சொன்னதெல்லாம் உனக்குப் புரிஞ்சுதுதானே? இப்ப... இதே ஊர்ல இருக்கிற நாமகிரித் தாயாரோட மகிமையையும் ஸ்ரீநரசிம்மரின் மகிமையையும் சொல்றேன். அத்தோட, மலையில இருக்கிற ஸ்ரீரங்கநாதர் பத்தியும் சொல்றேன். அதையும் கேட்டு உள்வாங்கிக்கோ'' என்று தாத்தா சொல்ல... காது தீட்டிக் கேட்கத் துவங்கினான் பேரன்.   

##~##

''ஊர்ப் பெயர் நாமகிரின்னும் சொல்லுவாங்கன்னும் சொல்லியிருந்தேன் இல்லியா... இங்கே அருள்பாலிக்கிற தாயாரின் திருநாமம்- ஸ்ரீநாமகிரித் தாயார். பல்லவி நரசிம்ம ஐயங்கார்னு ஒருத்தர், கர்னாடக சங்கீதத்துல கொடிகட்டிப் பறந்தார். இவருக்கு நாமகிரித் தாயாரோட பரிபூரண அருள் கிடைச்சதுதான், அவர் அத்தனை பேரும் புகழுமா இருந்ததுக்குக் காரணம்னு சொல்லுவாங்க. ஸ்ரீநாமகிரித் தாயாரின் அழகையும் சாந்நித்தியத்தையும் பாடிப் போற்றிய கன்னடத்தைச் சேர்ந்த நரஹரி ஆசார்யர் பிறந்த ஊர் இதுதான்னு சொல்றாங்க. நாமக்கல் கவிஞர் பிறந்த ஊரும் இதுதான். கணிதமேதை ராமானுஜத்துக்கு அறிவையும் ஆற்றலையும் கொடுத்து அருள்புரிந்ததும் ஸ்ரீநாமகிரித்தாயார்தான்னு ஊர்க்காரங்க பெருமையாச் சொல்றாங்க.

நாமகிரித் தாயார் ரொம்பவே வரப்பிரசாதி. நாம கேக்கறதையெல்லாம் கொடுக்கற தாயுள்ளம் கொண்டவள். நம்மைப்போல இருக்கிற சாமானியர்களின் கனவுலகூட தாயார் வந்து அருள்பாலிப்பதா ஸ்தல வரலாறு சொல்லுது. தாயார் உண்டாக்கின கமலாலயப் புஷ்கரணில கங்கையும் காவிரியும் வந்து நீராடி தங்களோட பாவங்களைப் போக்கிக்கிட்டதா ஸ்தல புராணம் தெரிவிக்குது. கொள்ளை அழகுல ஜொலிக்கிற ஸ்ரீநாமகிரித் தாயாரைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம்'' என்று சொல்லி நிறுத்தினார் தாத்தா.

கதை கேளு... கதை கேளு!

''அடுத்து, ஸ்ரீநரசிம்மர் கோயிலைப் பார்ப்போம். ஊருக்கு நடுவே உள்ள சின்னக்குன்றைக் குடைந்து சந்நிதி பண்ணியிருக்காங்க. அந்தச் சந்நிதில வீராசனமா அமர்ந்திருக்கார் ஸ்ரீநரசிம்மர்.

அவருக்குப் பக்கத்துலயே சூரிய- சந்திரர்களும், சிவனாரும், பிரம்மாவும் காட்சி கொடுக்கறாங்க. அதனால திருமூர்த்திகள் திருத்தலம்னு இந்தக் கோயிலைக் குறிப்பிடுவாங்க!

அதேபோல, ஸ்ரீநரசிம்மரோட திருமேனியை நல்லாக் கவனிச்சுப் பார்த்தேன்னா அந்த அபய ஹஸ்தமும், வலது கையில சம்ஹாரம் செஞ்ச தால உண்டான ரத்தக்கறையும், நகங்களோட கூர்மையும் பளிச்சுன்னு தெரியும். தேவதச்சன் விஸ்வகர்மா உண்டாக்கின திருமேனி இது. அப்புறம் இது பல்லவர்கள் காலத்துல குடைவரைக் கோயிலா உருவாச்சாம்.'' என்று தாத்தா வியப்புடன் விவரிக்க, ''ஆமாம் தாத்தா. நகமெல்லாம் எப்படித் தெரியுது பாருங்களேன்'' என்று பேரனும் வியந்து மகிழ்ந்தான்.

''இன்னொரு விசேஷத்தைச் சொல்றேன் கேட்டுக்கோ... இங்கே, ஸ்ரீஅனுமனை வழிபட்ட பிறகுதான் பெருமாளையும் தாயாரையும்  வழிபடுறாங்க! நாமக்கல்லுக்கு வந்தா, ஸ்ரீஅனுமனையும் ஸ்ரீபெருமாளையும் நாமகிரித் தாயாரையும் வழிபடலாம். அப்படியே ஸ்ரீரங்கநாயகித் தாயார் சமேத ஸ்ரீரங்கநாதரையும் ஸேவிக்கலாம். இப்ப அந்தக் கோயிலுக்குத்தான் போகப் போறோம்'' என்று சொல்லிவிட்டு, பேரனின் கைப்பிடித்து விறுவிறுவென நடக்கத் துவங்கினார் தாத்தா.

கதை கேளு... கதை கேளு!

''கார்க்கோடகன் எனும் பாம்பு, பெருமாளை நோக்கி தவம் செஞ்ச தலம் இது. அதன்பிறகுதான் அதை ஆதிசேஷனா தன் கூடவே வைச்சுக்கிட்டார் பெருமாள். இங்கே வந்து வேண்டிக்கிட்டா, ராகு- கேது தோஷமெல்லாம் நீங்கிடும்னு ஐதீகம்! ஆனா என்ன... அனுமனையும் நரசிம்மரையும் பாத்துட்டு அப்படியே போயிடறாங்க பக்தர்கள்!'' என்று அலுத்தபடி தொடர்ந்தார் தாத்தா.

''கார்க்கோடகன் தினமும் தீர்த்தம் எடுத்துட்டு வந்து பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்ட தலம்னு சொன்னேனே... இப்பவும் மலையில குளத்துலேருந்து கோயில் வரைக்கும் பாம்போட தடத்தைப் பார்க்கலாம்!  

இந்த மலையும் ரொம்ப அழகு பார்த்தியா? ஒரே கல்லால் உருவான இந்த மலை, சாளக்ராமம் எனப்படும் விஷ்ணு அம்சம் பொருந்தின கல்லுக்கு இணையானதுன்னு சொல்லு வாங்க. இரண்டு முகம் கொண்ட இந்தக் குன்றின் ஒரு பக்கத்தில் பள்ளிகொண்ட ரங்கநாதராகவும், இன்னொரு பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும் காட்சி தர்றார் பெருமாள்!

ஒரே ஊர்ல மூணு கோயிலா பக்கத்துப் பக்கத்துல இருக்கிற இந்த நாமக்கல்லுக்கு உன்னைக் கூட்டிட்டு வந்து பெருமாளையும் அனுமாரையும் தரிசனம் பண்ணி வைக்க ணும்னு ரொம்ப வருஷமா ஆசை. அந்த ஆசை இப்ப நிறைவேறினதுல எனக்கு ரொம்பச் சந்தோஷம்டா கண்ணு!'' என்று தாத்தா மனநிறைவுடன் சொல்ல...

''எனக்கும்தான் தாத்தா! இந்த ஊரும், ஊர்ல இருக்கிற கோயில்களும் ஸ்வாமிகளும் ரொம்பவே பிடிச்சிருக்கு தாத்தா'' என்று சொல்லி, தாத்தாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் பேரன்.

- இன்னும் தரிசிப்போம்

படங்கள்: க.ரமேஷ்