சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

கலில் சூரியனும் இருளில் சந்திரனும் ஒளி தந்து உலகைக் காக்கிறார்கள். ஆனால் அந்தச் சந்திர பகவானே ஒருமுறை, சாபத்தால் இருள் படர்ந்த முகத்துடன் வளைய வந்தார்; ஒளியை இழந்து, அழகைத் தொலைத்துவிட்டு, தென்னாடுடைய சிவனாரை மன்றாடிப் பிரார்த்தித்தார் என்பது தெரியுமா? 

##~##

சந்திரனின் பொலிவையும் தேஜஸையும் கண்டு, தன் 27 நட்சத்திரப் பெண்களையும் அவருக்கு மணம் முடித்து வைத்தார், தட்சன். பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்கள் மனம் கொள்ளாத சந்தோஷத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதானே எந்தவொரு தகப்பனின் எதிர்பார்ப்பும்!

அந்த எதிர்பார்ப்புடனும் ஏக்கத்துடனும் இருந்த தட்சன், உண்மை தெரிந்து கலங்கிப் போனார். 27 பெண்களில் ஒருத்தியைத் தவிர மற்ற 26 பேரும் வாடிப்போன முகத்துடன் சோகமாக இருந்ததை அறிந்து பதைபதைத்துப் போனார். 'என்னாச்சு என் செல்வங்களே... ஏனிந்தச் சோகம்?’ என்று தந்தையார் கேட்டதும், அதுவரை அடக்கி வைத்திருந்த சோகத்தையெல்லாம் அழுகையாக வெடித்து, கொட்டத் துவங்கினார்கள், மகள்கள்.

27 மனைவிமார்கள் மீதும் அன்பும் பாசமும் வைத்திருந்தாலும், ரோகிணி மீது மட்டும் அலாதி பாசமும் கொள்ளைப் பிரியமும் கொண்டிருந்தாராம் சந்திர பகவான். அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். எந்நேரமும் அவளையே சுற்றிச் சுற்றி வந்தார். 'நம்மைவிட ரோகிணி மீது அதிக பாசம் கொண்டிருக்கிறாரே, கணவர்’ என்று மற்ற மனைவியர் வருந்தினார்கள். தந்தையார் வந்து கேட்டதும், தங்களை சந்திர பகவான் கண்டுகொள்ளாமல் இருக்கும் விவரத்தைச் சொல்லிப் பொலபொலவெனக் கண்ணீர் உகுத்தார்கள்.

ஆலயம் தேடுவோம்!

அதைக் கேட்டு எந்தத் தகப்பன்தான் சும்மா இருப்பான்? ஆவேசமான தட்சன், ''என் மகள் களை நோகடித்துவிட்டு, நீ மட்டும் சுகவாசியாக இருக்கிறாயா? அவர்கள் நிம்மதியை இழந்து தவிக்கும் போது, நீ மட்டும் நிம்மதியும் சந்தோஷமுமாக உலா வருகிறாயா? நீ பெரிய அழகன் என்கிற கர்வம்தானே உனக்கு? இதோ, உன் கர்வத்தை அடக்குகிறேன், பார்! உன் மொத்தக் குதூகலத்தையும் அழித்தொழிக்கிறேன். உன்னில் இருந்து வெளிக் கிளம்புகிற ஒளிதானே உனக்கு அழகு! அந்த அழகு மொத்தமும் இன்றோடு அழியட்டும். உன்னில் இருக்கிற வெளிச்சம் அனைத்தும் மங்கி, இருள் கவியட்டும்'' எனச் சாபமிட்டார் தட்சன்.

இதனால் ஒளியை இழந்து, களையைத் தொலைத்து, இருள் கவிந்து நின்றார் சந்திர பகவான். ஆனால், அவரைவிட அதிகம் கலங்கித் தவித்தது அவரின் மனைவிமார்கள்தான்! 'ஏதோ நம் அப்பா, கணவருக்கு நாலு வார்த்தை அறிவுரை சொல்லி மனத்தை மாற்றுவார் என்று பார்த்தால், இப்படிச் சாபம் கொடுத்து, அவரது அழகைக் குலைத்துவிட்டாரே!’ என்று கதறினார்கள். 'என்ன இருந்தாலும், ரோகிணி நம் சகோதரிதானே! அவளிடம் கணவர் கொஞ்சம் கூடுதல் பிரியம் காண்பித்தால், அது ஒரு பெரிய குற்றமா?’ என்று கணவரின் பக்கமாகச் சாய்ந்தார்கள்.

பிறகு, 27 சகோதரிகளும் ஒன்று சேர்ந்து, சந்திர பகவான் தனது பழைய பொலிவைப் பெறவேண்டும் எனச் சிவனாரை நோக்கித் தவமிருந்தனர். அதில் மகிழ்ந்த சிவனார், சந்திரனுக்குக் காட்சி தந்து, ''ஒளி பொருந்திய உன் பேரழகு, மீண்டும் உலகெங்கும் பரவி, வெளிச்சம் தரட்டும். ஆனால், மாறிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை; பிறப்பது எல்லாம் அழிவதற்கே; அழிவது மீண்டும் பிறப்பதற்கே என்பதை மானிடர்க்கு உணர்த்துகிற விதமாக, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒளிர்வாய். பிறகு, மீண்டும் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவாய்'' என அருளினார்.

ஆலயம் தேடுவோம்!

சந்திரனுக்காக 27 நட்சத்திரப் பெண்கள் தவமிருந்ததும், அவரின் சாபம் போக்கி சிவனார் அருளியதுமான திருத்தலம்... ஒளிமதி. திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஒளிமதி கிராமம். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ளது நீடாமங்கலம். அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஒளிமதி.

இங்கே... 27 நட்சத்திரப் பெண்களின் தவத்தை ஏற்றுக்கொண்டு, சந்திரனின் சாபம் போக்கிய ஈசன், ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.

சிதிலம் அடைந்த நிலையில் இருந்த இந்தக் கோயில் குறித்து, கடந்த 22.2.11 தேதியிட்ட இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதி, அதைத் தொடர்ந்து வாசகர்களின் பேருதவியால் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷே கமும் (29.6.12) நடைபெற்றது.

''சந்திர பகவானோட சாபம் போகணும்னு 27 நட்சத்திரப் பெண்கள் தவமிருந்தப்ப, வெப்பத்தால தகித்துப் போனதாம் இந்த ஊரு. அப்ப ஊர்மக்கள் நிறையப் பேர் அம்மை வந்து, அல்லாடினாங்க.

இதையெல்லாம் அறிந்த பராசக்தி, இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, 'சந்திரனின் சாபத்துக்கு விமோசனம் கொடுங்க’ன்னு சிவனாரைக் கேட்டுக்கிட்டா. அதேநேரம், அம்மனின் பேரருளால அம்மை நோய் குணமாகி, ஊர்மக்கள் ஆரோக்கியமா வாழ்ந்தாங்கன்னு சொல்லுவாங்க. அதனால, எங்க ஊர்ல அம்மனுக்குத் தனியாகவே கருங்கல் திருப்பணி செய்யப்பட்ட கோயில் இருக்கு!'' என்று திருப் பணியில் ஈடுபட்டு வரும் பாஸ்கரன் எனும் அன்பர் தெரிவிக்கிறார்.

ஒளிமதி கிராமத்தின் சனிமூலையில் ஸ்ரீவஜ்ரபுரீஸ் வரர் கோயில் உள்ளது. ஈசான்ய மூலையில், கிழக்குப் பார்த்தபடி கோயில்கொண்டிருக்கிறாள் ஸ்ரீமகா மாரியம்மன். ஒருகாலத்தில், சித்திரையிலும் ஆடியிலும் விமரிசையாக அம்மனுக்கு விழாக்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பன்னெடுங் காலமாக விழாக்களும் இல்லாமல் பூஜைகளும் இன்றி சிதிலமுற்றுக் கிடக்கிறது ஸ்ரீமகா மாரியம்மன் கோயில்.

ஆலயம் தேடுவோம்!

''இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக்கிட்டா போதும்... அம்மை நோய் சீக்கிரமே இறங்கி, குணமாயிடுவோம்னு நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயித்துக்கிழமைகள்ல திருவாரூர், தஞ்சாவூரில்  இருந்தெல்லாம் வண்டி கட்டிக்கிட்டுவந்து, பொங்கல் படையல் வைச்சு, அம்மனை வேண்டிக் கிட்டு, தீர்த்தப் பிரசாதம் வாங்கிட்டுப் போவாங்க'' என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

சந்திரன் மனோகாரகன். இழந்த ஒளியையும் தேஜஸையும் அவர் திரும்பப் பெற்ற தலம் என்பதாலும், அதற்கு அருளிய அம்மன் இங்கே குடிகொண்டிருப்பதாலும் இந்தத் தலம் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த தலம் என்றும், இங்கு வந்து மகா மாரியம்மனையும் ஈஸ்வரனையும் பிரார்த்திக்க, சந்திர பலம் கூடும்; மனோ பலம் பெருகும் என்கின்றனர் பக்தர்கள்.

''எங்க ஊர்ல, ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் ஆலயமும் ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலும் சக்தி வாய்ந்த ஆலயங்களா போற்றப்பட்டு வருது. இந்த ரெண்டு கோயில்களுமே வழிபாடு இல்லாம சிதிலம் அடைஞ்சு, நித்தியப்படி பூஜைகளும் இல்லாம களையிழந்து கிடந்துச்சு. சக்தி விகடன் வாசகர்களின் பேருதவியால, உலகத்தின் பல ஊர்கள்லேருந்தும் உதவிக்கரங்கள் நீள, சிவாலயத்துக்குத் திருப்பணிகள் செஞ்சு, கும்பாபிஷேகமும் செஞ்சுட்டோம். இப்ப... ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் திருப்பணியைத் துவக்கியிருக்கோம். இதுவும் நல்லபடியா முடிய, அந்த மாரியம்மன்தான் மனசு வைக்கணும்'' என்கிறார்கள் திருப்பணிக் குழுவினர்.

வீட்டில் உள்ள பெண் பூவும் பொட்டுமாக இருந்து, வீட்டைச் சுத்தமாக பளிச்சென்று வைத்துக்கொண்டால்தான், அந்த வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் தங்கும் என்பார்கள். அதேபோல், ஒரு ஊரின் காவல்தெய்வமாக, ஊருக்கே இஷ்ட தெய்வமாகத் திகழும் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் பூஜை வழிபாடுகளுடன் பொலிவுற இருந்தால்தான், அந்த ஊரும், தேசமும் செழிக்கும்.

ஒளிமதி மாரியம்மனின் ஆலயம் பொலிவு பெற உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்; அவளின் அருள் மொத்தத்தையும் பெறுங்கள்!

படங்கள்: ஜெ.ராம்குமார்

எங்கே இருக்கிறது?

ஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில், சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ளது நீடாமங்கலம். அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஒளிமதி கிராமம். இங்கே ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் கோயிலும், ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயமும் உள்ளது.

சந்திர பலம் தரும் அற்புதமான திருத்தலம் இது. 27 நட்சத்திரக்காரர்களும் வணங்கவேண்டிய தலமும்கூட!