சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பனிமுடி தரிசனம்!

பனிமுடி தரிசனம்!

##~##

திபெத்தின் தார்ச்சன் நகரில் இருந்தபடி கயிலைமலையானின் நேத்ர தரிசனம் கிடைத்த பரவசத்தில், தொடர்ந்து 80 கி.மீ. தொலைவு பயணித்தால், தீர்த்தபுரி என்கிற இடத்தை அடையலாம். பஸ்மாசுரன் வதம் நிகழ்ந்த இடம் இது என்கிறார்கள். அதாவது, 'நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் நொடிப் பொழுதில் சாம்பலாகிவிட வேண்டும்’ என்று சிவபெருமானிடம் வரம் பெற்ற கையோடு, அந்த வரத்தைப் பயன்படுத்தி அவர் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க நினைத்த பஸ்மாசுரனை, இந்த இடத்தில்தான் மோகினி வடிவம் எடுத்து வந்த மகாவிஷ்ணு வதம் செய்தார் என்கிறார்கள். பஸ்மாசுரன் சாம்பலாகிப் போனதாலோ என்னவோ, தீர்த்தபுரியில் உள்ள மலை சாம்பல் நிறத்திலேயே காணப்படுகிறது.

 தவிர, இங்குள்ள மலைக்குன்றின் உச்சியில் மிகவும் பழைமை வாய்ந்த புத்த ஆலயம் ஒன்றும் உள்ளது. இந்த ஆலயத்தின் கூரை நம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலின் மேற்கூரை வடிவில் இருப்பது தனிச்சிறப்பு.

படத்தை கிளிக் செய்யவும் 

பனிமுடி தரிசனம்!

ஆலயத்துக்குப் பக்கத்திலேயே, 'பாவ- புண்ணிய கல்’ என்கிற ஒருவித கல் இருக்கிறது. இதனுள், நம் கை நுழையும் அளவுக்கு துவாரம் உள்ளது. அதன் வழியாக கையை விட்டால், நம் கையில் சிறுசிறு கற்கள் சிக்கும். அதில் ஏதாவது ஒன்றை நாம் எடுக்க வேண்டும். நம் கையில் சிக்கிய கல் வெள்ளை நிறத்தில் இருந்தால், நாம் புண்ணியம் செய்தவர்கள் என்றும், கறுப்புக் கல் கிடைத்தால் பாவம் செய்தவர்கள் என்றும் விளக்கம் தருகிறார்கள். கயிலை மலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களில் பலர், இந்தப் பரிசோதனை முயற்சியையும் மேற்கொள்கிறார்கள்.

தீர்த்தபுரி மலையை ஒட்டியே பிரம்மபுத்திராவின் கிளை நதியான மயில் ஆறு ஓடுகிறது. அந்த நதிக்குச் சற்று உயரே வெந்நீர் ஊற்று ஒன்றும் உள்ளது. இந்த நீரை எடுத்துக் குளிக்கலாம். அப்படிச் செய்தால் சரும நோய்கள் நீங்கும் என்கிறார்கள்.

(ஆன்மிக ஆல்பம் புரட்டுவோம்...)