சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

நள்ளிரவில் லலிதா சகஸ்ரநாமம்...

நள்ளிரவில் லலிதா சகஸ்ரநாமம்...

நள்ளிரவில் லலிதா சகஸ்ரநாமம்...
##~##

துரையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது கோவிலாங்குளம். இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், வயல்களும் பனைமரங்களும் சூழ அழகுடன் அமைந்திருக்கிறது ஸ்ரீஜோதி பால பத்ரகாளியம்மன் கோயில்.

 கோவிலாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு பத்ரகாளியம்மன்தான் இஷ்டதெய்வம், குலதெய்வம் எல்லாமே! விவசாயம் சிறப்புறத் திகழ வேண்டும் என்பதில் துவங்கி, வழக்கில் வெற்றி கிடைக்க வேண்டும், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள், பக்தர்கள்.

ஆலயத்தில் ஸ்ரீசர்வ சக்தி விநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீவீரபத்திரர் மற்றும் நவக்கிரகங்களுக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

நள்ளிரவில் லலிதா சகஸ்ரநாமம்...

ஆலயத்தின் ஸ்ரீசர்வ சக்திவிநாயகர், தன்னைத்தானே நிர்மாணித்துக் கொண்டதாக ஐதீகம். அதாவது, யானையானது தன் துதிக்கையால் ஸ்ரீவிநாயகரின் விக்கிரகத் திருமேனியை எடுத்து வைத்ததாகச் சொல்வர். இவரை சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்கினால், சங்கடங்கள் அனைத்தும் விலகும் என்கின்றனர், பக்தர்கள்.

நள்ளிரவில் லலிதா சகஸ்ரநாமம்...

இங்கு சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்கையும் விசேஷமானவர். தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு எலுமிச்சை மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தித்தால், திருமணத் தடை அகலும்; விரைவில் கல்யாண வரம் கைகூடும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.

ஸ்ரீஜோதி பாலபத்ரகாளியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. வேப்ப இலை, கீழாநெல்லி இலை, அரச இலை ஆகிய மூன்று இலைகளையும் அம்மனின் திருப்பாதத்தில் வைத்து எடுத்து, பிறகு சாறு எடுத்து அருந்தினால், விரைவில் பிள்ளை பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். தாமரைப் பூவால் அம்மனை அர்ச்சித்து வேண்டினால், விரைவில் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.  

வெள்ளிக்கிழமைகளில், இங்கு நடைபெறும் கோபூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் தங்கும். லட்சுமி கடாட்சத்துடன் வாழலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

மாசி மகமும் மகா சிவராத்திரி நன்னாளும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. மகா சிவராத்திரி நாளில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகுறக் காட்சி தருவாள், தேவி. அப்போது ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்து நடைபெற, அர்ச்சனை நடந்துகொண்டே இருக்கும். இன்னொரு பக்கத்தில், அரிசியை வடித்து நைவேத்தியத்துக்கு வைத்திருப்பார்கள்.

நள்ளிரவில் லலிதா சகஸ்ரநாமம்...

அதிகாலை 3 மணிக்கு மகா சிவராத்திரி பூஜைகள் முடிந்து, பிறகு பிரம்ம முகூர்த்த வேளையில் அனைவருக்கும் சுடச்சுட அன்னதானம் நடைபெறும். மகா சிவராத்திரியன்று, அம்மனை தரிசித்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டால், வழக்கில் வெற்றி, கல்வியில் மேன்மை, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள்.

  - ச.பா.முத்துகுமார்

படங்கள்: எஸ்.கேசவசுதன்