சண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்!

##~## |
கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருஆய்ப்பாடி. ஜெயங்கொண்டம், அணைக்கரை ஆகிய ஊர்களில் இருந்தும் இந்த ஊருக்குப் பேருந்துகள் உள்ளன. திருஆய்ப்பாடியில் ஊருக்குள்ளேயே அமைந்துள்ளது ஸ்ரீபாலுகந்தீஸ்வரர் கோயில்.
திருநாவுக்கரசர், இந்தத் தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பாடப்பட்ட அற்புதமான இந்தத் தலம், சுமார் 1000 வருடங்களைக் கடந்த பழைமையான ஆலயம்!
எல்லா சிவாலயங்களிலும் ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குச் சந்நிதி அமைந்திருக்கும். அத்தகு பெருமை கொண்ட சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருத்தலம் இதுதான். இங்கே, சிவனாருக்கு அருகிலேயே காட்சி தருகிறார் ஸ்ரீசண்டிகேஸ்வரர்.
இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரைத் தரிசித்தால், 1008 தலங்களுக்குச் சென்று தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தத் தலத்தின் க்ஷீரகுண்ட தீர்த்தமும் விசேஷம். இதில் தீர்த்த நீராடி சிவ தரிசனம் செய்தால், சகல பாவங்களும் விலகும்; பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபெரியநாயகி. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோரும் அற்புதமான மூர்த்தங்களாக அழகு தரிசனம் தருகின்றனர்.
சண்டிகேஸ்வரருக்கு ரிஷபாரூடராக, உமையவளுடன் தரிசனம் தந்து ஆட்கொண்டார் சிவபெருமான். இது நடந்தது, மகாசிவராத்திரி அமாவாசை நன்னாளில் என்பார்கள். எனவே, மாசி மாதத்தில் வருகிற மகாசிவராத்திரி நன்னாள் மற்றும் அமாவாசையில் இங்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
மகா சிவராத்திரி நாளில் கும்பகோணம், ஆடுதுறை, பாபநாசம், அணைக்கரை, அரியலூர், ஜெயங் கொண்டம் எனச் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீபாலுகந்தீஸ்வரரைத் தரிசிக்க இங்கு வருகின்றனர்.

மகா சிவராத்திரி நாளில் இங்கே உள்ள தீர்த்தத்தில் நீராடி அல்லது தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டு, ஸ்ரீபெரியநாயகிக்கு அரளிமாலையும் ஸ்ரீபாலுகந்தீஸ்வரருக்கு வில்வமாலையும் சார்த்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால்... பிறவிப் பயனை அடையலாம்; சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து நிம்மதியுடன் வாழலாம்; முன் ஜன்மப் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீசண்டிகேஸ்வரருக்கு முக்தி அளித்து அவரை ஆட்கொண்ட ஸ்ரீபாலுகந்தீஸ்வரர் தலத்துக்கு வாருங்கள்; சகல தோஷங்களும் விலகி சந்தோஷம் பெருகுவதை உணர்வீர்கள்.
- எம்.ஜெ.கௌதமன்
படங்கள்: செ.சிவபாலன்