Published:Updated:

கேள்வி-பதில்

சிசேரியன் குழந்தைகளுக்கு ஜாதகக் கணிப்பு பலிக்குமா?

கேள்வி-பதில்

சிசேரியன் குழந்தைகளுக்கு ஜாதகக் கணிப்பு பலிக்குமா?

Published:Updated:
கேள்வி-பதில்
கேள்வி-பதில்

மருத்துவக் காரணங்களுக்காக குழந்தைப் பிறப்பு சிசேரியன் முறையில் நிகழ்ந்தால், ஜாதகக் கணிப்பு செய்வது எப்படி? தவிர, தற்காலத்தில் சிசேரியன் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர், தங்களுக்கு ஏற்ற நல்ல நேரத்தை- நாளை மருத்துவர்களிடம் தெரிவித்து, அன்றைய தினத்தில் ஆபரேஷன் ஏற்பாடு செய்யச் சொல்லி குழந்தைப்பேறு நிகழ்வதும் அதிகரித்து வருகிறது. இது சரியான ஒன்றா? இப்படிப் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியுமா? தங்களின் அறிவுரை தேவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 - என்.வேம்பு, சென்னை-42      - கே.ஜனார்த்தனன், கோவை-2

##~##

குழந்தை காலத்தோடு இணையும் வேளையே ஜாதகத்துக்கு ஆதாரம். அது, யோனி வழியாக வந்தாலும், வயிறு வழியாக வந்தாலும் காலத்துடன் இணையும் வேளையில் மாற்றம் இருக்காது.

தாயின் கருவறையில் தொப்புள் கொடியோடு இணைப்பு துண்டிக்கப்பட்டு, தனியாக வெளியுலக காலத்தோடு இணையும் வேளை லக்னமாக மாறும். ஆதலால், ஜாதகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நல்ல நாள் பார்த்து குழந்தைப் பிறப்பை வைத்துக்கொண்டாலும், எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் ஜாதகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது. உண்மையில் காலத்தின் பதிப்பு ஜோதிடம். அதற்கு ஆரம்பத்தை குழந்தை தென்படும் காலத்தைக் கொண்டு நிர்ணயிக்கிறோம்.

உடலுறவில் சுக்லம் சேரும் வேளையை வைத்து ஜாதகம் கணிக்கச் சொல்லும். அது இயலவில்லை என்றால் உயிரோட்டம் ஏற்பட்ட வேளையில் (சைதன்ய ப்ரவேசம்) கணிக்கச் சொல்லும். அதுவும் இயலாவிட்டால், முன்னீர்க் குடம் உடைந்த வேளையைச் சொல்லும். அதுவும் இயலாது என்றால், யோனியில் சிரம் தென்படும் வேளையை ஏற்கச் சொல்லும். அதுவும் இயலவில்லை என்றால், பூமியில் விழுந்த வேளையை ஏற்கச் சொல்லும். பூமியைத் தொட்ட வேளை என்பது வெளி உலகை முழுமையாக எட்டிப் பார்த்த வேளை. அதில்தான் மற்றதைவிடச் சரியாகப் பார்க்க இயலும் என்பதால் அதை ஏற்பது சிறப்பு. அது சிசேரியனுக்கும் பொருந்தும்.

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

இன்றைய சூழலில் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. இதை ஒட்டுமொத்தமாகத் தடுக்க இயலாவிடினும், ஓரளவாவது கட்டுப்படுத்துவதற்கு தர்மசாஸ்திரத்தில் வழிமுறை இருக்கிறதா? ஏனெனில், எங்களது சிந்தனையில் காலப்போக்கில் எல்லா திருமணங்களுமே விவாகரத்தைச் சந்திக்க நேரிடுமோ என்ற பயம் எழுகிறது. உதாசீனப்படுத்தாமல் பொதுவான ஒரு வழியைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

- ஐஸ்வர்யா, மேற்கு மாம்பலம்.

மக்களின் அறியாமையே தவறான முடிவை ஏற்க வைக்கிறது. சுயநலத்தில் பிடிப்பும், ஆசையில் ஈர்ப்பும் நல்லுரைகளை ஏற்காமல் வெளியே தள்ளிவிடுகிறது. ஆடம்பர வாழ்க்கையைச் சுவைக்கும் வகையில், நல்ல அடித்தளம் அமைந்த வரனைத் தேர்ந்தெடுக்கிறோம். சுதந்திரம் தடைப்படும் போது, திருமண ரத்தை ஏற்றுச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவோம். சேர்ந்து வாழ்ந்து சுகத்தை அனுபவிக்க நினைத்து இணைவோம்; நினைத்ததை அடையமுடியாவிட்டால், இணைப்பைத் துண்டிக்க தயங்கமாட்டோம்.

பசி, தாகம் போன்று இதை ஓர் உணர்வாக எண்ணி, கிடைத்த இடத்தில் தணித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் ஒரு சிலரிடம் தென்பட ஆரம்பித்துள்ளது. திருமண இணைப்பின் பிணைப்பைப் புனிதமாக எண்ணாமல், வியாபார நோக்கில் பார்க்கும் துணிவும் சிலரில் தென்படுகிறது. தனது குறையை நிறைவு செய்ய, படித்துப் பட்டம் பெற்றுக் கை நிறையச் சம்பாதிக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுத்து, தனது வாழ்க்கையை செழிப்பாக்கிக்கொள்ள நினைக்கும் எண்ணமும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. அதாவது, தனது முன்னேற்றத்துக்கு ஒரு கருவியாக திருமணத்தை ஏற்பவர்களும் தென்படுகிறார்கள். ஒருதலைப்பட்சமான ஆசைகளின் காரணமாகவும் இணையத் துடிப்பார்கள். ஆசை அவர்களை இணைக்க உதவுகிறது; மனம் இணைவது இல்லை. மனம் ஒன்றாத நிலையில் விவாகரத்து வெற்றி அடைகிறது. இருவரும் பேசி ஒப்பந்த முறையில் திருமணம் நடக்கிறது. ஒப்பந்தம் சரிந்தால், தானாகவே விவாகரத்து ஏற்பட்டுவிடும். முழுமையான சாஸ்திர சம்பிரதாயத் திரு மணங்கள் இன்று நிறைவேறுவது குதிரைக் கொம்பு. தாமரை இலைத் தண்ணீர்போல் அதில் இணைந்தாலும், அதில் ஏற்படும் குறையைத் தெரிந்திருந்தும் அலட்சியப் படுத்துபவர்களே பெரும்பாலும் தென்படுகின்றனர். தர்ம சாஸ்திரத்தின் பங்கு இன்றைய திருமணத்தில் கிடைக்காது.

கேள்வி-பதில்

இதையெல்லாம் சீர்திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய பெரியோர்களில்- மகான்களில் பலரும் பாராமுகமாகவே இருக்கின்றனர். ஜாதகம் பார்த்தல் என்பது ஒரு நாடகமாகவே காட்சியளிக்கிறது. இணையைத் தேட ஒரு கருவியாக ஜாதகம் பயன்படுகிறது. ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர் களை விரல்விட்டு எண்ணலாம். மணமகன்-  மணமகள் ஆகியோருடைய தகுதியை அறிய ஜாதகம் உதவுகிறது. ஜாதகம் பார்க்காவிட்டால் விபரீதம் நிகழுமோ என்ற பயத்தில் நிறையப் பேர் அதைத் தழுவுவது உண்டு. ஒரே நொடியில் பிறந்த இரு ஜாதகங்களின் பலனை ஒன்றாகக் காட்டும் கணினி. அந்தக் கணினிக்கு தகவல் அளித்தவர் ஒரு ஜோதிடர். அவர் சிந்தனையிலும் ஒரே பலன்தான் தோன்றியிருக்கிறது. ஆனால், ஜோதிடம் ஒரே பலனைச் சொல்லாது. இந்த இடத்தில் அடிப்படை ஜோதிடமே நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்காது. இருந்தாலும் நாம் ஏற்போம். தற்போது ஜோதிடம் நல்ல தொழில். பொறுப்பு இல்லாமல் பொருளீட்ட இயலும். கணிப்பு தவறு என்று எவரேனும் சுட்டிக் காட்டினால், வேறொன்று சொல்லித் தப்பிக்க இயலும். ஆயுர்வேதத்தை சட்டதிட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வைத்து, போலியை விலக்கியது அரசாங்கம். ஜோதிடத்தை கண்டு கொள்ளவில்லை. அது தடையின்றி செயல்பட உதவுகிறது. ஜோதிடத்தின் வாசனையே தீண்டாத மக்கள் நிரம்ப இருக்கிறார்கள். சங்கடத்தைச் சந்திப்பது அவர்கள்தான்.

முன்னேறிய சமுதாயம் ஜாதகத்தை அணுகாது. அடித்தளத்தில் வாழ்வோரும் ஜாதகத்தை அறியமாட்டார்கள். நடுத்தர வர்க்கமே நடுத்தெருவில் நிற்கிறது. ஜாதகம் பார்ப்பதை அறவே அகற்றினால், தவறான இணைப்பை உண்டுபண்ணும் முயற்சி முறியடிக்கப்படும். விவாகரத்துகள் கணிசமாகக் குறையும். ஜோதிடம் நமக்கு நன்மையைச் சேர்க்கும் சாஸ்திரம். முனிவர்களும் படித்த மேதாவிகளும் அதை விரிவுபடுத்தி அளித்துள்ள னர். அதன் ஆழத்தை முனிவர்கள் அறிந்தனர். இன்றைய சில சிந்தனைகள் ஆழம் வரை ஊடுருவவில்லை; நுனிப்புல் மேய்வதில் திருப்தி அடைந்துவிடுகின்றன. குறைந்த உழைப்பில் நிறைந்த வருவாயை ஏற்கும் எண்ணம் நிறையப் பேரிடம் தென்படுவது உண்டு. காலத்தால் விளைந்த இந்த சிந்தனை காலவிதான சாஸ்திரத்தில் கலக்காமல் இருக்க இயலாது. இன்றைய ஜோதிடம், நமது புதுச் சிந்தனைக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையவில்லை.

திலீபன் அரசாட்சியில், நாட்டில் திருட்டு இல்லை; ஏட்டில் இருந்தது என்பான் காளிதாசன். இன்று சீலம்- அதாவது, ஒழுக்கம் நாட்டில் இல்லை; ஏட்டில்தான் உண்டு. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றிப் பின்பற்றி தழும்பேறி, அதுவே இயல்பாக மாறுவது ஒழுக்கம். அதன் இழப்பே இன்றைய திருமணத் திரிசமனுக்குக் காரணம். மக்கள் மனத்தில் ஒழுக்கத்தை விதைத்தால் நினைத்தபடி திருமணம் இனிக்கும். விவாகரத்து குலப் பரம்பரையை அழிக்கும். விவாகரத்தால் மாறி மாறி கணவன்- மனைவி சேரும்போது, மாறுபட்ட ஜீவாணுக்களின் தொடர்பு, மாறாப் பிணியைத் தோற்றுவிக்கும். குழந்தைகளில் அப்பா, அம்மா என்ற ஈர்ப்பு அற்றுவிடும். தந்தை, தந்தையின் தந்தை, அவருக்கும் தந்தை என்ற 3 தலைமுறைகள் சின்னாபின்னமாகிவிடும். அவர்களுக்குத் தர்ப்பணம் செய்ய இயலாது. நாந்தீ சிராத்தம், மஹாளயம் செய்ய இயலாது. அப்பாவின் தலைமுறையில்... புது அப்பாவா பழைய அப்பாவா என்கிற சந்தேகம் எழும். அதற்கு தர்மசாஸ்திரத்தில் பதில் இருக்காது. பழைய அப்பா இறந்தால், அம்மா விதவையாவாள்; புது அப்பா இறந்தால் விதவை ஆகமாட்டாள். மகன், பழைய அப்பாவுக்குக் கொள்ளி வைக்கலாம்; புது அப்பாவுக்குக் கொள்ளி வைக்கவேண்டாம். மாமா, அத்தை உறவுகள் மாறிவிடும்.

விவாகரத்தைச் சந்தித்துப் பிறகு நிகழும் மறுமணத்தை பரஸ்த்ரீ கமனம், பரபுருஷ கமனம் என்றே தர்மசாஸ்திரம் பார்க்கும். பாரதப் பண்பாட்டை இழந்து விவாகரத்தை ஏற்கிறோம். விவாகரத்தான பெண்மணியை கன்யகா தானம் செய்ய இயலாது. மந்திரம் சொல்லித் திருமணத்தை நடத்த இயலாது. பதிவுத் திருமணம் செய்யலாம். விவாகரத்து சமுதாயத்துக்கு நஷ்டம் இல்லை. தர்மசாஸ்திரத்தின் கோட்பாடுகள் தானாகவே செயலிழந்துவிட்டன.

கேள்வி-பதில்

குருக்ஷேத்திரப் போர் உண்மை நிகழ்வல்ல; அது உயர்ந்ததோர் உருவகம் என்பதுபோல் கருத்து சொல்லியுள்ளார் பிரபலம் ஒருவர். இந்தக் கருத்து ஏற்புடையதாக இல்லையே? தாங்கள் இதற்குச் சரியானதொரு விளக்கம் அளித்தால் மகிழ்வேன்.

- சொ.ஜ.சங்கர், திருநெல்வேலி-6

கடவுளே உருவகம், உண்மை இல்லை என்று சொல்லும் பிரபலங்களும் உண்டு. காகிதமும் எழுதுகோலும், சரித்திரம் எழுதும் பழக்கமும் வளர்ந்த பிறகு, நமது சிந்தனைக்குப் பொருந்தும் நிகழ்வுகள் மட்டுமே உண்மையானவை; மற்றவை யாவும் உருவகங்கள் என்று சொல்லும் பிரபலங் களும் உண்டு. நமது அனுபவத்துக்கு வராத விஷயங்கள் அத்தனையுமே கற்பனை என்று சொல்லும் மகான்களும் உண்டு. 'பிரபலம்’ என்ற அவரது சமுதாய அங்கீகாரம், அவர் விடும் தகவல் களுக்கு முக்கியத்துவம் அளிக்கும். அறிவியல், ஆன்மிகம், சமூகசேவை, கலைகள், தொல்பொருள் ஆராய்ச்சி, வானவியல், நாம சங்கீர்த்தனம், தெருக்கூத்து, நடனம், உபன்யாசம் ஆகிய அத்தனையிலும் தலைமை ஏற்று, பிரபலங்கள் அந்தந்தத் துறையில் உயர்ந்த கருத்துக்களை வெளியிடுவது உண்டு.

கேள்வி-பதில்

எல்லோரும் எல்லாம் தெரிந்தவராக இருக்க இயலாது என்பார் சாணக்யன். ஆனால், பல பிரபலங்களை எல்லாம் தெரிந்தவராகவே நாம் ஏற்போம். அவரைப் பற்றிய சரித்திரம் தெரியாமலேயே, அவரைப் பிரபலமாகக் கொண்டாடுவோம். பிரபலம் சொன்னார் என்பதற்காக ஒன்றை ஏற்க இயலாது; ஆராய்ந்து ஏற்க வேண்டும். ஜனாதிபதி விருது பெற்றவர்கள் உண்டு. அதில், சிபாரிசு மூலம் விருது பெற்றவர்களும் இருப்பர். விருது பெற்ற பிறகு அவர் பிரபலம் ஆகிவிடுவார். ஆகையால், உண்மையான பிரபலம் எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மகாபாரதத்தில், குறிப்பிட்ட குருக்ஷேத்திரம் உருவகமா உண்மையா என்பதைப் புரிந்துகொள்ள அறிவு வேண்டும். வேதம் சொல்லும் விஷயங்கள் அத்தனை யையும் அறிவுபூர்வமாக ஆராயும்போது, அவை உண்மையென்று விளங்கும். அப்படியிருக்க, மகாபாரத நிகழ்வுகள் கற்பனை என்பது பிரபலத்தின் சொந்தக் கருத்து. அதை, அவர் வழியில் செல்பவர்கள் உருவகமாக எடுத்துக்கொள்ளலாம்.

கேள்வி-பதில்

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்தால் அந்த ஜோடிக்கு விவாகம் செய்யக்கூடாது என்கிறது ஜோதிடம். 'இந்தக் கருத்து மருத்துவரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த தோஷக்காரர்களின் ரத்தப் பிரிவு ஒரே வகையாக இருக்கும்; இவர்கள் இந்த தோஷம் இல்லாத ஒருவரை மணக்கும்போது, குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது’ என்பது சிலரின் வாதம். மருத்துவரீதியாக இது குறித்த தகவல் ஆயுர்வேதத்தில் உண்டா?

- கே.சேதுபதி, களக்காடு

ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணத்தில் இணையவேண்டாம் என்கிறது ஆயுர்வேதம். 'அதுல்ய கோத்ரீயம்’ என்கிற தலைப்பில் அதன் பாதகங்களை விளக்கும். ஒரே ஜீவாணுக்களில் உருவானவர்கள் இணையக்கூடாது. மாறுபட்ட ஜீவாணுக்களில் இணைவது சிறப்பு. சகோதரி, சகோதரனின் திருமணம் இருக்காது. பங்காளிகளில் திருமணம் இருக்காது. வம்சவிருத்தி ஏற்பட்டு, சுகாதாரமான சூழலுக்குக் கோத்திர பேதம் வேண்டும் என்று சொல்லும்.

செவ்வாய் தோஷத்துக்கு இணையான தோஷம் இருக்கவேண்டும் என்கிறது ஜோதிடம். செவ்வாய் ஜோஷத்துக்கு செவ்வாய் தோஷமே வேண்டும் என்று சொல்லாது. ரத்தப் பிரிவுக்கும் செவ்வாய் தோஷத்துக்கும் சம்பந்தம் இல்லை. மருத்துவத்தின் அளவுகோலால் ஜோதிடத்தை அளக்க முடியாது. ஆராய்ச்சியில் வளரும் மருத்துவம் மாறுபட்ட தகவல்களை அளிக்கும். ஜோதிடம் இயற்கையின் வரப்பிரசாதம். அதன் தகவலை உரைத்துப் பார்க்க மருத்துவம் தேவையில்லை. குழந்தைப் பிறப்புக்கும் செவ்வாய் தோஷத்துக்கும் சம்பந்தம் இல்லை. சுக்கில சோணிதத்தின் இணைப்பில் குழந்தையின் தரம் நிர்ணயிக்கப்படும். ஜோதிடத்தின் ஆழத்தை உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ள இயலாத இன்றைய சிந்தனை, அதற்கு விஞ்ஞான ரீதியில் விளக்கம் அளித்து, அதன் தகவலை பொருள் படைத்ததாக மாற்ற முயற்சிக்கிறது. விஞ்ஞானம், ஜோதிடம் இரண்டிலும் பரிச்சயம் இல்லாத பாமரர்கள் அதை ஏற்று, ஏமாற்றம் அடைகிறார்கள். ஜோதிடம் விஞ்ஞானம். அதற்கு மருத்துவ விஞ்ஞானம் சான்றளிக்க வேண்டியது இல்லை.

பஞ்சாங்கத்தில் முதல் பதிப்பில் வெளியான செவ்வாய் தோஷ விளக்கத்துக்கும், ரிஷிகள் இயற்றிய ஜோதிட நூல்களில் தென்படும் தகவலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆராயாமலேயே ஜோதிடத் தகவலை ஏற்று, பல பரம்பரையில் ஊறிவிட்ட பிறகு, நம் மனம் அதிலிருந்து வெளிவர இயலவில்லை. இரண்டிலும் செவ்வாய் தோஷம் இருந்தால் சேர்க்கலாம் என்பதற்குச் சான்று, பண்டைய ஜோதிட நூல்களில் இருக்காது. அது, பிற்பாடு வந்த வல்லுநர்களின் சொந்தக் கருத்து. செவ்வாய் மனைவியையோ அல்லது கணவனையோ இழக்க வைக்கும் என்று முடிவானால்... இரண்டிலும் செவ்வாய் இருந்தால் வாழ வைக்கும் என்கிற தகவல் சிந்தனைக்குப் பொருந்தாது.

பாமரர்களின் மனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த விளக்கங்கள் ஜோதிட விளக்கமாக இருக்காது. ஜோதிடத்தைப் படித்து அதன் தகவலைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் தகவலை வேறு சாஸ்திரங்களின் கண்ணோட்டத்தில் அல்லது நமது தற்காலச் சிந்தனையை ஏற்றி உண்மை யாக்க முயற்சிப்பது பலனளிக்காது. ஜோதிடம், தனது தகவல்களைச் சான்றோடு விளக்கும். காரண- காரியத்தோடு வெளியிடும். நம் மனம் ஏற்கும்படி விரிவாக எடுத்துக் கூறும் அதன் தகவல் களில் நம்பிக்கை வைக்கலாம். சிந்தனைக்கு பொருந்தவில்லை என்றால், ஆழமாகப் படியுங்கள்; பொருந்திவிடும்.

-  பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.