சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

ஸ்ரீராமனை, தாரக மந்திரமாம் ஸ்ரீராம நாமத்தை வைணவ அடியார்கள் மட்டுமின்றி, மதபேதம் இல்லாமல் எல்லோரும் போற்றிக் கொண்டாடியிருக்கிறார்கள்.

'காசியில் பிராணப் பரித்தியாகம் செய்பவர்களின் செவிகளில், ஸ்ரீகாசிவிஸ்வநாதர் 'ராம’ நாமத்தைக் கூறுகிறார். அப்படிப்பட்ட அந்த தாரக பிரம்ம வடிவான ஸ்ரீராமனைப் பாடுங்கள், துதியுங்கள்’ என்கிறார் ஆதிசங்கரர் (யதா வர்ணயத் கர்ணமூலே...). சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியரும்...

##~##

ஒளியதான காசிமீது வந்து தங்கு வோர்க்கெலாம்
வெளியதான ஜோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியுமங்கை உடனிருந்து செப்புகின்ற தாரகம்
எளியதான ராமராம ராம இந்த நாமமே

- என்று பாடியிருக்கிறார்!

இப்படியான மிக உன்னதம் வாய்ந்த ஸ்ரீராம நாமத்தை உச்சரித்து, ஒருகணம் ஒரேயரு கணம் நம் உள்ளத்தில் அந்த காகுத்தனை தியானித்து வணங்கிட, கோடி புண்ணியம் உண்டு. அதுவும் அண்ணலின் பட்டாபிஷேகக் கோலத்தை தரிசிப்பதும் மனத்தில் தியானித்து வழிபடுவதும் அதிவிசேஷம். இதனால், நமது பாவங்கள் எல்லாம் பட்டுப்போகும்.

பெரும்பாலும் வைணவத் திருக்கோயில்களில், வலப்புறத்தில் சீதாதேவியுடன் ஸ்வாமி அருள்வதை திருக்கல்யாண கோலம் என்பார்கள். பிராட்டியார், ஸ்வாமிக்கு இடப்புறத்தில் காட்சி தந்தால்... அது பட்டாபிஷேகத் திருக்கோலம் ஆகும்.

தசாவதார திருத்தலங்கள்!

இந்தத் தொடரில் நாம் ஏற்கெனவே பார்த்த கும்ப கோணம் அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி திருக்கோயிலில், மூலவர் பட்டாபிஷேக ராமனாகவே அருள்கிறார். விஜயநகரப் பேரரசின் வாரிசான ராமன் என்பவனுக்கு, அவனது ராஜ்ஜியத்தை மீட்டுக்கொடுத்து, அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த தஞ்சை மன்னன் ரகுநாத நாயக்கன், கும்பகோணத்தில் கோயில் எழுப்பி, ஸ்ரீராமனையும் பட்டாபிஷேகக் கோலத்திலேயே எழுந்தருளச் செய்ததாக தலவரலாறு சொல்கிறது.

ஸ்ரீராமன் தர்ப்பசயனத்தில் அருளும் திருப் புல்லாணி தலத்திலும், பட்டாபிஷேகக் கோலத்தில் தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீபட்டாபி ராமனைத் தரிசிக்கலாம். இலங்கை சென்று ராவணனை வீழ்த்தி சீதையை மீட்டு திரும்பும் வழியில், ஸ்ரீராமன் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீஆதிஜெகந்நாதரை பூஜித்ததாக தலபுராணம் சொல்கிறது.

இந்தத் தலத்துக்கு வந்து இவரைத் தரிசித்து வழிபட்டால் தொழிலில் மேன்மை, உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

செங்கல்பட்டில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் பொன்விளைந்த களத்தூர். பெருமாள், வெள்ளைப் பரிமுகனாக வந்து ஸ்வாமிதேசிகனுக்கு அருள் செய்த திருத்தலம் இது.  

இங்கு இரண்டு கோயில்கள். ஒன்று ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயம். மற்றொன்று ஸ்ரீராமர் ஆலயம். இந்தக் கோயிலில் நின்ற கோலம், சயனத் திருக்கோலம் மற்றும் அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீராமரைத் தரிசிக்கலாம்.

மூலவர் ஸ்ரீபட்டாபிராமர் சீதாதேவியை மடியில் அமர்த்தியபடி பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்ஸவர் ஸ்ரீகோதண்டராமர் நின்ற கோலத்தில் அருள்கிறார். சயனக் கோலத்தில் அருள்வது ஸ்ரீதர்ப்பசயன ஸ்ரீராமர். ஆதிசேதுவில் உள்ளது போன்று இங்கும் தர்ப்பசயன ராமனைத் தரிசிக்கலாம்.

இதேபோன்று, திருவையாறு அருகில் உள்ள புது அக்ரஹாரம் எனும் திருத்தலத்திலும் பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமனைத் தரிசிக்கலாம்.

தசாவதார திருத்தலங்கள்!

இங்கே, 'அரியணை அனுமன் தாங்க...’ என்று கம்பர் சித்திரிப்பதற்கு ஏற்ப, திருவடியில் வாயுமைந்தனாம் அனுமன் திகழ... மிக அற்புதமாக பட்டாபிஷேக திருக்கோலம் காட்டுகிறார் ஸ்ரீபட்டாபி ராமன்.

மேலும், பெரும்பாலான பெருமாள் திருக்கோயில்களில் பெருந் திருவிழாக் களின்போது, ஸ்வாமியை பட்டாபிஷேக திருக்கோலத்தில் அலங்கரிப்பார்கள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தின் போது ஒருநாள், பட்டாபிஷேக ராமன் அலங்காரத்தில் அருள்வார் ஸ்ரீபார்த்தசாரதி.

இதே கோயிலில் அருளும் ஸ்ரீகோதண்டராமன், ஸ்ரீராமநவமி உத்ஸவத்தில் ஒருநாளும், மாசி தெப்போத்ஸவத்தன்றும்... இடப்புறம் தேவியுடன் பட்டாபிஷேக அலங்காரத்தில் காட்சி தருவார். பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமன் அருளும் தலங்களுக்குச் செல்ல இயலாத அன்பர்கள், அருகிலிருக்கும் பெருமாள் திருக்கோயில்களில் நிகழும், இதுபோன்ற அலங்கார வைபவங்களைத் தரிசித்து பலன் பெறலாம்.

வசிஷ்டர் முடிசூட்ட ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் கண்ட அற்புத வைபவத்தையும், அந்தக் கோலத்தில் அண்ணல் ராமன் அருளும் ஆலயங்கள் குறித்தும் படிக்கும் இந்த வேளை யில்... ஸ்ரீராமப்ரியன் எனும் திருநாமம் கொண்ட பெருமாளுக்கு, கருடாழ்வார் திருமுடி சூட்டி மகிழ்ந்த கதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது!

நான்முகனாம் பிரம்மதேவன் ஸ்ரீராமனுக்கு பெருமாள் விக்கிரகம் ஒன்றை அளித்திருந்தார். ஸ்ரீராமன் வழிபட்ட அந்த விக்கிரகத்தை பிறகு அவரின் மகன் குசன் வழிபட்டான். பிறகு, குசனின் மகள் கனகமாலினியின் திருமணத்தின்போது, சீதனமாகத் தரப்பட்டது இந்த விக்கிரகம்.

பின்னர் யதுசேகர மகாராஜாவால் வழிபடப்பட்டு வந்த இந்த விக்கிரகம், அவர் பரம்பரையில் வந்த வசுதேவரால் வழிபடப்பட்டு, பின்னர் பலராமன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணரால் பூஜிக்கப்பட்டது.

ஒருகாலத்தில், பிரகலாதனின் மைந்தனான விரோசனன் என்பவன், பாற்கடல் சென்று பெருமாளின் மணிக் கிரீடத்தை கவர்ந்து சென்று விட்டான். அதை மீட்டு வரும்படி கருடனுக்குக் கட்டளையிட்டார் ஸ்வாமி.  கருடனும் விரோசனனை வீழ்த்தி, அந்த மணிக் கிரீடத்தை மீட்டு வந்தார்.

வழியில் துவாரகையை அடைந்தவர், ஸ்ரீநாராயணரின் அவதாரமான ஸ்ரீகிருஷ் ணரின் தலையில் அந்தக் கிரீடத்தைப் பொருத்தினார். ஆனால் அவருக்கு அது சரியாகப் பொருந்தவில்லை. அதே நேரம்... ஸ்ரீகிருஷ்ணர் வழிபட்டு வந்த பெருமாள் விக்கிரகத்துக்கு அணிவித்தபோது, மிகச் சரியாகப் பொருந்தியது. பாற்கடல் சென்ற கருடன் இந்தத் தகவலை பெருமாளிடம் சொல்ல... அந்தக் கிரீடத்தை பூலோகத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் அரண்மனையில் இருக்கும் தனது அர்ச்சாவதார மூர்த்தமாகிய விக்கிரகத் துக்கே அணிவிக்கும்படி ஆணையிட்டார் பாற்கடல் நாயகன்.

தசாவதார திருத்தலங்கள்!

அதன்படியே துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணர் வழிபட்டுவந்த பெருமாள் விக்கிரகத்துக்கு அந்த மணிமுடியைச் சூட்டி மகிழ்ந்தார் கருடாழ்வார். ஆதியில் ஸ்ரீராமன் வழிபட்டதால் இந்தப் பெருமாளுக்கு ஸ்ரீராமப்ரியன் என்றே திருநாமம். இந்தப் பெருமாளுக்கு இன்னொரு விசேஷமும் உண்டு. டில்லி பாதுஷாவின் அரண்மனை அந்தப்புரத்தில், அரச குமாரியின் வசம் இருந்து, பின்னாளில் உடையவர் ஸ்ரீராமானுஜர் வந்து 'செல்லப் பிள்ளாய் வாரும்’ என்றழைக்க, உடனே ஓடோடி வந்து அவரின் மடியில் சேர்ந்த மூர்த்தி இவர்தான். எனவே, இவருக்கு 'செல்லப் பிள்ளை’ என்றொரு திருநாமமும் உண்டு.இவர் அருளும் திருத்தலம்- மேல்கோட்டை திருநாராயணபுரம். கர்நாடக மாநிலம், மைசுரில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்தில், வருடம்தோறும் பங்குனி மாதத்தில் செல்லப் பிள்ளைக்கு நிகழும் ராஜமுடி, வைரமுடி உத்ஸவம் வெகு விசேஷம்.

மைசூர் அரசர்கள் இந்தப் பெருமாளுக்கு பலவிதமான ஆபரணங்களை காணிக்கை தந்துள்ளனர். அதில் ஒன்று தங்கத்தால் ஆன மணிமுடி. அதை அணிந்தபடி பெருமாள் வீதியுலா வருவது, ராஜமுடி உற்ஸவம். அதேபோன்று கருடன் சூட்டிய மணிமுடியை அணிந்தபடி பெருமாள் திருப்பவனி வருவதை, 'வைரமுடி உத்ஸவம்’ என்பர். கருடன், வினதையின் மகன். அவருக்கு வைனதேயன் என்றும் பெயர் உண்டு. அவரால் சூட்டப்பட்டதால் அந்த மணி முடிக்கு, 'வைனமுடி’ என்று பெயர். இதுவே பின்னாளில் வைரமுடி என்றாகிவிட, அந்த உத்ஸவமும், 'வைரமுடி உத்ஸவம் என்றே பெயர் பெற்றுவிட்டதாம். யாவரும் தரிசித்து அருள்பெற வேண்டிய அற்புத உத்ஸவம் இது.

- அவதாரம் தொடரும்...

படங்கள்: எம்.என். ஸ்ரீநிவாஸன்