Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
##~##

முனிவர்களும் மகான்களும் வழிபட்ட இடங்கள் பின்னாளில் மன்னர்களால் அடையாளம் காணப்பட்டு, அங்கெல்லாம் அழகிய ஆலயங்கள் உருவாயின. பிறகு அவை மக்களின் வழிபாட்டு ஸ்தலங்களாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன.

 இறைசக்தி மிக்க இடங்களை முனிவர்களும் ஞானிகளும் வெகு எளிதில் கண்டு உணர்வார்கள். அப்படியான இடத்தில், சதாசர்வகாலமும் கடவுள் சிந்தனையுடன் கடும் தவம் புரிவார்கள். அது அந்த இடத்தில் மேலும் வலுவான சக்தியைச் சேர்க்கும். இந்தச் சக்தியை உணரும் மன்னர் பெருமக்கள், மிகப் பெரிய ஆலயங்களை அங்கே நிர்மாணித்து, அந்தக் கோயிலில் பூஜைகள் நடைபெறுவதற்கும் வழிபாடுகள் சிறப்புற நடப்பதற்கும் நிவந்தங்கள் அளிப்பார்கள். விளக்கேற்றுவதற்கு எண்ணெயும், அபிஷேகத்துக்குப் பாலும் தடங்கலின்றிக் கிடைப்பதற்கு ஆடுகளையும் மாடுகளையும் வழங்குவார்கள். நைவேத்தியங்களுக்காக, கோயிலின் பெயரில் நிலங்களை எழுதிக் கொடுப்பார்கள்.

இன்றைக்கு நாம் தரிசிக்கிற புராதன ஆலயங்கள் யாவும் அப்படி முனிவர்களாலும் சித்த புருஷர்களாலும் வழிபடப்பட்டு, பின்னர் மன்னர்களால் பிரமாண்டமான கோயிலாக, வழிபாட்டுத் தலமாக உருவானவைதான்.

ஆலயம் தேடுவோம்!

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த் தேக்கத்துக்கு அருகில் உள்ளது நெய்வேலி (நாம் அறிந்த பழுப்பு நிலக்கரிப் புகழ் நெய்வேலி அல்ல!) எனும் சிறிய கிராமம். ஊரின் நாலாப்புறமும் வயல்கள் சூழ்ந்து வேலி போலான அமைப்பில் இருந்த தால், நெல்வேலி என்று ஊரின் பெயர் அமைந்ததாகவும், பிறகு காலப்போக்கில் அதுவே நெய்வேலி என்று மருவியதாகவும் சொல்கிறார்கள், ஊர்க்காரர்கள்.

ஊருக்கு வடக்குப் பகுதியில், வயல்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீஅக்னீஸ்வரர் திருக்கோயில். கோயில் என்றதும் கோபுரம் இருக்கும்; கோயிலைச் சுற்றிலும் மதில் இருக்கும்; கோயிலுக்குள் நுழைந்ததும் ஒருபக்கம் நந்தவனமும், நடுவில் பிராகாரங்களும் அமைந்திருக்கும்; சந்நிதி சந்நிதியாக தரிசனம் செய்யலாம் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.

ஆலயம் தேடுவோம்!

பன்னெடுங்காலமாகச் சிதிலமுற்ற நிலையில், முள்ளும் புதருமாகவே காட்சி அளிக்கிறது கோயில்.

இந்தக் கோயிலின் சிறப்பு - கல்லால மரம். கல் ஆல மரத்தின்கீழ் அமர்ந்தபடி, சனகாதி முனிவர் களுக்குக் குரு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவனார் உபதேசித்து அருளினார் அல்லவா? அதேபோன்று, இங்கே இந்தக் கல்லால மரத்தின் கீழும் அழகிய லிங்க வடிவாக இருந்தபடி, நமக்கெல்லாம் ஞானமும் யோகமும் தரக் காத்திருக்கிறார் ஈசன்.

இப்படியரு கிராமத்தில் சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஈசன் குடிகொண்டிருக்கும் ஆலயம் வழிபாடு களே இல்லாமல் இருப்பதை அறிந்து, அன்பர்கள் சிலர் ஊர்மக்கள் உதவியுடன் ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலய சேவா கமிட்டி ஒன்றை அமைத்து, முள்ளையும் புதரையும் அகற்றி கோயிலைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். கல்லால மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத் திருமேனியை நீராட்டி, அபிஷேகங்கள் செய்து, வஸ்திரம் சார்த்தி வழிபடத் துவங்கினார்கள். பிறகு, கோயிலுக்குப் பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில், கோயிலில் இறைவனின் திருநாமம் ஸ்ரீஅக்னீஸ்வரர் என்றும், அம்பாளின் திருநாமம் ஸ்ரீலலிதாம்பாள் என்றும் தெரியவந்ததாம். தவிர, ராகு-கேது பரிகாரத் தலமாக ஒருகாலத்தில் போற்றப்பட்ட தலம் இது என்றும் சொன்னார்களாம் பிரஸ்னம் பார்த்தவர்கள்.அத்துடன், கருவூர்ச் சித்தரும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராளும் இங்கு தவமிருந்து வழிபட்டதாகவும், இன்றைக்கும் அவர்கள் இரவு வேளையில் சூட்சும வடிவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்றும் பிரஸ்னத்தில் தெரிவித்துள்ளார்கள்.

ஆலயம் தேடுவோம்!

ஒரு காலத்தில் நாக தோஷ நிவர்த்தி தலமாக, ராகு-கேது பரிகாரத் தலமாகப் போற்றப்பட்ட இந்தத் தலம், இன்றைக்கு வழிபாடுகளின்றி, பொலிவு மொத்தத்தையும் இழந்து நிற்கிறது. பன்னெடுங் காலமாக இருளில் மூழ்கியிருந்த சிவாலயம் இன்றைக்கு மின்வசதி கிடைத்து, முள்ளும் புதரும் அகற்றப்பட்டு, பிராகாரமாக வலம் வரும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்களின் நிதியுதவி இருந்தால்தான், கோயில் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேக வைபவம் செய்ய முடியும்; பக்தர்கள் தங்கள் தோஷங்களைப் போக்கிக்கொள்ள வந்து வழிபடவும் ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர், சேவா கமிட்டி நிர்வாகிகள்.

கோயிலுக்கு அருகில் அக்னி தீர்த்தக் குளம் உள்ளது. நெடுங்காலமாக தூர்வாரப் படாமல் இருந்து, இப்போது ஊர்மக்களின் உதவியுடன் சேவா கமிட்டியினரால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆலயம் தேடுவோம்!

''முனிவர்களும் சித்தர்களும் வழிபட்ட ஸ்தலம் இது. ராகு-கேது பரிகாரத் தலமாகவும் உள்ள இந்தக் கோயிலில், முதலில் விநாயகருக்குச் சந்நிதி அமைத்து, அதற்குக் கும்பாபிஷேகம் நடத்திவிட்டு, அடுத்த திருப்பணியில் இறங்கியுள்ளோம். ஸ்ரீமுருகப்பெருமான் சந்நிதி, ஸ்ரீலலிதாம்பாள் சந்நிதி ஆகியவற்றை அமைத்துவிட்டோம். கருவறையில் புதிதாகச் சந்நிதி அமைத்து, அங்கே ஸ்ரீஅக்னீஸ்வரரின் புதிய மூர்த்தத்தைச் செய்து பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம். தவிர, கல்லால மரத்தடியில் உள்ள லிங்கத் திருமேனியை ஸ்ரீஆதி அக்னீஸ்வரராக வழிபட உள்ளோம். திருப்பணி வேலைகள் மளமளவென நடந்து வந்த நிலையில், நிதிப் பற்றாக்குறை காரணமாக தற்போது பணிகள் தேக்கம் அடைந்திருக்கின்றன. வாசகர்களின் பேருதவியால் பணிகள் விரைவில் துவங்கும்; சீக்கிரமே கும்பாபிஷேகமும் நடைபெறும் என நம்புகிறோம்'' என்கிறார் நிர்வாகிகளில் ஒருவரான சங்கர் திரிவேதி.

ராகு-கேது தோஷங்களை நீக்கி அருளும் தலமான ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம், வழிபாடுகளின்றி இருக்கலாமா? ராகு- கேதுவுக்குச் சந்நிதி அமைப்பதற்கு உதவினால், அந்த தோஷங்களில் இருந்து விடுபட்டு, வாழ்வில் வளம் பலவும் பெறலாம்.

ஆலயம் தேடுவோம்!

சந்நிதியின்றி வெட்டவெளியில் கல்லால மரத்தடியில் காட்சி தரும் ஸ்ரீஆதி அக்னீஸ்வரருக்குச் சந்நிதி அமைக்கவும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறவும் உங்களால் இயன்றதைத் திருப்பணிக்கு வழங்குங்கள். நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்வார் சிவபெருமான். மாங்கல்ய பாக்கியம் முதல் பெண்களுக்குத் தேவையான சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும் ஸ்ரீலலிதாம்பிகை குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு, நாம் மனமுவந்து தருகிற சிறிய தொகைகூட, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கச் செய்து, சகல ஐஸ்வரியங்களையும் தந்து செழிக்கச் செய்யும் என்பது உறுதி.  நெய்வேலி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயிலுக்கு அள்ளித் தாருங்கள். அருளையும் பொருளையும், ஞானத்தையும் யோகத்தையும் நமக்கு அருள்பாலிப் பார்கள் ஸ்ரீலலிதாம்பிகையும் ஸ்ரீஅக்னீஸ்வரரும்.

நாம் செய்யும் கைங்கர்யத்தால், அந்தக் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்பது உறுதி!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

எங்கே இருக்கிறது?

 திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது பூண்டி நீர்த்தேக்கம். இங்கே, பூண்டி கூட்ரோடில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது நெல்வேலி எனும் நெய்வேலி. இந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறார்கள், ஸ்ரீலலிதாம்பிகையும் ஸ்ரீஅக்னீஸ்வரரும். பூண்டி கூட்ரோடு வரை, பஸ் வசதி அதிகம் உண்டு. அங்கிருந்து ஆட்டோவில் செல்வதே உத்தமம்.