தொடர்கள்
Published:Updated:

புனலூர் தாத்தா - 8

புனலூர் தாத்தா - 8

புனலூர் தாத்தா - 8
##~##

'அக்காவுக்கும் தம்பிக்குமான உறவு ரொம்பவே விசேஷமானது. ஏன்னா, கிட்டத்தட்ட அந்தத் தம்பிக்கு அன்பு, வாஞ்சை, பிரியம்னு அக்கா ஸ்தானத்துல இருக்கிறவ இன்னொரு அம்மாவாகவே மாறிடுவா! தம்பி பத்திப் பேசும்போதெல்லாம் பூரிச்சுப் போயிடும் அக்காவோட முகம். அதேபோல, அக்கா பத்திப் பேசும் போதெல்லாம் தம்பியின் முகத்தில் சட்டுனு ஒரு பவ்யமும் மரியாதையும் எட்டிப் பார்க்கும். எங்க அம்மாகிட்ட யாராவது அவங்களோட தம்பியைப் பத்தி பெருமையா நாலு வார்த்தை சொல்லிட்டாப் போதும்... நெகிழ்ந்து போயிடுவாங்க! அந்த முகத்துல அப்படியரு கனிவும் குழைவும் இழையோடிக் கிடக்கும்'' என்கிறார் கிருஷ்ணன். இவரின் தாயார் வள்ளிமுத்து அம்மாள்.

 ''அக்கா- தம்பி உறவுங்கறது, அம்மா- பையன் உறவுக்கு இணையானதுதான்! கிட்டத்தட்ட இந்த உறவுக்கு இணையான உறவுன்னு தாய்மாமன் உறவைச் சொல்லலாம். அம்மா, அப்பா தவிர நம்ம மேல அதிக பிரியம் காட்டுற உறவு மாமா உறவுதான். என் மாமாவைப் பத்தி ஊர்ல யாராவது ரெண்டு வார்த்தை புகழ்ச்சியா சொன்னாப் போதும்... மனசு அப்படியே நிறைஞ்சு போயிடும் எனக்கு. அதேபோல, என்னைப் பத்தி என் மாமாகிட்ட சொன்னா, 'தங்கமான பயலாச்சே! கெட்டிக்காரன். ஓஹோன்னு வருவான்’னு அக்கறையோட சொல்வார். இன்னிக்கு எனக்குக் கிடைச்சிருக்கிற நிறைவான வாழ்க்கைக்கு முக்கியக் காரணம் என் மாமாதான்!'' என்று உருகிச் சொல்கிறார் கிருஷ்ணன். இவர் சென்னை, திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார்.

புனலூர் தாத்தா - 8

வள்ளிமுத்து அம்மாளின் சகோதரனும் கிருஷ்ணனின் தாய்மாமனுமான புனலூர் சுப்ரமணிய ஐயர் என்கிற புனலூர் தாத்தா, தன் உறவுகளுக்கு ரோல்மாடலாகத் திகழ்வதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

''சின்ன வயசுல ஸ்கூல் லீவு விட்டதும், மாமா வீட்டுக்குப் போறதுன்னா குஷியாயிடுவேன். அடேங்கப்பா... புனலூர்ல இருக்கற ஷண்முக விலாசம் வீடு அரண்மனை மாதிரி இருக்கும். பசுமாடுகள், காளைகள், நூத்துக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள்னு வீட்டுக் கொல்லைப்பக்கமே ஒரு நந்தவனம் மாதிரி இருக்கும். எப்பவும் ஜிலுஜிலுப்பான காத்து வீட்டுக்குள்ளே தென்றலாக வீசிக்கிட்டே இருக்கும். முன்பக்க வாசலைச் சுற்றிலும் ஏகப்பட்ட செடி-கொடிகள். பார்க்கிறதுக்கே அத்தனை ரம்மியமா இருக்கும்.

எல்லாத்துக்கும் மேலே எங்க மாமா புனலூர் சுப்ரமணிய ஐயர்.

'வாடா இங்கே... கை கட்டி உட்கார்’ங்கிற மாதிரியான அதட்டல்உருட்டலெல்லாம் பண்ணவே மாட்டார். 'பூஜை ஏன் பண்ணணும் தெரியுமா? ஸ்வாமியை ஏன் கும்பிடணும் தெரியுமா?’ன்னு உபதேசமும் பண்ணமாட்டார்.

சாஸ்தா மேல அளவு கடந்த பக்தி கொண்டிருந்த அவர் தினமும் செய்யற பூஜைகளையும், கூடை கூடையா பூக்களைக் கையில் எடுத்து அவர் அர்ச்சனை பண்ற அழகையும் பார்க்கப் பார்க்க நமக்கே அது போல பூஜை பண்ணணும்னு ஆசையா இருக்கும். வீட்டுப் பூஜையறையில எல்லாப் பூக்களும் சேர்ந்து வர்ற நறுமணம் இன்னும் என் நாசியிலயும் ஞாபகத்துலயும் அப்படியே இருக்கு'' என்று சிலிர்த்தபடி சொல்கிறார் கிருஷ்ணன்.

''கழுத்துல ஜபமாலைகளும் இடுப்புல காவியுடையுமாத்தான் மாமா எனக்கு அறிமுகம். வேற எந்த ஆடையும் உடுத்தி அவரைப் பார்த்ததே இல்லை. மாமாவின் பேச்சு, அந்தப் பேச்சுல இருக்கிற கனிவு, மெல்லிசா ஒரு புன்னகை, அந்தப் புன்னகைக்குள்ளே இருக்கிற கருணைன்னு அவரைப் பார்க்கவே தெய்வாம்சமா இருக்கும்.

அவரோட செல்லப் பிராணி எது தெரியுமா? யானைதான். மொத்தம் ஏழு யானைகளை வளர்த்துட்டு வந்தார் மாமா. ஏழு யானைகளும் மாமாவைப் பார்த்துட்டா ரொம்பவே குஷியாயிடும். ஒரு யானை துதிக்கையை நீட்டி அவரோட கழுத்தைக் கட்டிக்கும். இன்னொண்ணு தன்னோட துதிக்கையால மாமாவோட இடுப்பை வளைச்சுக்கும். அடுத்த யானை, அவரோட தலையை ஆசீர்வாதம் போல வருடிக் கொடுக்கும்.  

புனலூர் தாத்தா - 8

மோகினிங்கற யானைதான் மாமாவுக்கு ரொம்பச் செல்லம். வாராவாரம் வெள்ளிக் கிழமையன்னிக்கு அதிகாலைல ஸ்ரீகணபதி ஹோமம் பண்ணுவார் மாமா. அவரோட சேர்ந்து மாமாவோட சிஷ்யகோடிகள் பலரும் வந்திருப்பாங்க.

காலைல நாலு நாலரைக்கெல்லாம் பூஜை ஆரம்பிச்சிடும். இந்த பூஜைல கலந்துக்கிறதுக்காகவே புனலூர்லேருந்தும் சுற்றுவட்டார ஊர்கள்லேருந்தும் நிறையப் பேர் வருவாங்க.

கணபதி ஹோமம் முடிஞ்சதும் விநாயகருக்கு நைவேத் தியம் பண்ணின பிரசாதத்தைச் சாப்பிடுறதுக்காக மோகினி யானை தயாரா காத்துக்கிட்டு நிக்கும். அதைத் தன் கை அசைவுல மாமா கூப்பிடுறதும், அந்த அழைப்புக்காகத்தான் இத்தனை நேரம் காத்திருந்ததுபோல மோகினி யானை ஓட்டமா ஓடி வந்து மாமாகிட்டே நிக்கிறதும்... அப்பப்பா! சினிமாவுலகூட பார்க்கமுடியாது அத்தனை ரசனையான காட்சியை. சிலிர்த்துப் போயிடும் உடம்பும் மனசும்!'' என்று சொல்லும்போதே பரவசமாகிறார் கிருஷ்ணன்.

''உண்மைதான். விலங்குகள், மனிதர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், எல்லா உயிர்களின் மீதும் வாஞ்சையுடனும் அன்புட னும் பழகினார் என் அப்பா. யாரும் எவரையும் எதற்காகவும் காயப்படுத்த ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார்.

எல்லாரையும் சமமா பாவிக்கிறதுக்கு ஒரு மனப்பக்குவம் வரணும். அந்தப் பக்குவமும் பரந்த மனசும் என் அப்பாகிட்ட இருந்துது. அது சாஸ்தாவின் மேல் அப்பா கொண்ட பக்தியால கிடைச்சுதா... அல்லது, அப்படியரு மனசு இருந்ததாலதான் சாஸ்தாவின் அருள் அப்பாவுக்குப் பரிபூர்ணமா கிடைச்சுதா? தெரியலை. ஆனா, அப்பாகிட்ட ஏதோவொரு சக்தி இருந்துதுங்கறது மட்டும் உண்மை'' என்று வியப்பு மாறாமல் தெரிவிக்கிறார் புனலூர் தாத்தாவின் மகன் ராமகிருஷ்ண ஐயர்.

''கடவுள்கிட்ட மொத்தமா சரணடைஞ்சவர் புனலூர் தாத்தா. 'நீதான் எனக்கு எல்லாமே!

என் வாழ்க்கைல நடக்கற நல்லது கெட்டது எல்லாத்துக்குமே நீதான் காரணம். அதனால, என்னைக் கடைத்தேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் உனக்குத்தான் இருக்கு. இது ஒண்ணுதான் என் பிரார்த்தனை’ன்னு அவர் அடிக்கடி சொல்வார்.

புனலூர் தாத்தா - 8

இடையறாத கடவுள் பக்தியால, இறைவன் மேல கொண்ட விருப்பத்தால, சாஸ்தாவையே நினைச்சுக்கிட்டிருந்ததால, ஒரு கனிவும் கருணையும் நிரந்தரமா அவருக்குள்ளே குடிகொண்டு விட்டதா நான் உணர்றேன்.

இன்னிக்கு எத்தனையோ பேர் மாலை போட்டு, விரதம் இருக்காங்க. வீடு கொள்ளாத அளவுக்கு பூஜை, பஜனை, அன்ன தானம்னு ஈடுபடுறாங்க. 'வருஷா வருஷம் ரெண்டு சாமிமாரை என் செலவுல கூட்டிட்டுப் போறதை வழக்கமா வைச்சிருக்கேன்’னு பெருமையா சொல்றவங்களும் உண்டு.

எல்லாமே நல்ல விஷயங்கள்தான். ஆனா, சாஸ்தாவின் மிகச் சிறந்த பக்தரான புனலூர் தாத்தாவைப்போல ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமிகிட்ட தன்னை மொத்தமா ஒப்படைக்கிறவங்க எத்தனை பேர்?! அதானே முக்கியம்! அப்படி ஒப்படைச்சிட்டா, எல்லார்கிட்டயும் வாஞ்சையாவும் ஸ்நேகமாவும் இருக்க முடியும். ஐயப்பனின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமாகவும் முடியும்!'' என்கிறார் வாஞ்சீஸ்வர ஐயர்.

சரண கோஷம் எழுப்பும் அன்பர்கள் அத்தனை பேரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது!

- அடுத்த இதழில் நிறைவுறும்