தொடர்கள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 13

சித்தம் அறிவோம்...

சித்தம்... சிவம்... சாகசம்! - 13
##~##

'மாயத்தைக் கண்ட சித்தர்
மதியதைப் பெருக்கிக் கொண்டு
காயத்திலிருக்கும் போதே
கர்த்தனைக் கலந்து கொள்வார்.
நேயத்தை விட்டபோது
நேர் சிவந்தன்னை சேர்வார்
மாயத்தைக் கண்டு சூட்ட
வாசியில் வாழுவாரே!’

- சுப்பிரமணியர் சுத்தஞானம்

 போகரின் சமாதி நிலைக்குப் பின்னே நாம் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் சூட்சுமமான விஷயங்கள் நிறையவே உள்ளன. உலகில் பிறந்தோர் ஒரு நாள் இறந்தே தீர வேண்டும். இது இயற்கை நியதி. இதற்குச் சித்த புருஷர்களும் விதிவிலக்கல்ல. ஆனால், இவர்கள் விதியின் பொம்மைகளாக, வெந்ததைத் தின்றுவிட்டு வேளை வந்ததும் செத்துப் போகிறவர்கள் அல்லர்!

நான் யார் என்னும் வினா எழுப்பி, தன்னை அறிந்துகொண்டதாலேயே இவர்கள் சித்தர்கள் எனப்பட்டார்கள். தன்னையே அறிந்தபின், இந்த உலகை அறிவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உலகையும் அறிந்து, அதன் வசம் உள்ள பஞ்ச பூதங்களையும் அறிந்து தெளிந்து விட்ட நிலையில், இவர்கள் உலகில் இருந்து கொண்டே இல்லாமலும் இருக்கத் தெரிந்துகொண்டார்கள். தண்ணீரில்தான் மிதக்கிறது தாமரை இலை; ஆனால், தண்ணீரோடு அது ஒட்டுவதேயில்லை. அப்படியே இந்தச் சித்தர்களும் இந்த உலகோடு தங்களை வைத்துக்கொண்டார்கள்.

தன்னையும் உலகையும் அறிய முடிந்ததால் விதியையும் அறிய முடிந்தது. அப்படி அறிந்த விதியை மீறாமல், அதே நேரம் விதி விலக்காகவும் இவர்களால் திகழ முடிந்தது.

பிறந்தோர் இறந்தாக வேண்டியதே விதி. இறந்தும் வாழ முடிவதே விதிவிலக்கு!

அது எப்படி?

இந்தக் கேள்விக்கு விடை பகர்பவைதான் சித்தர்களின் ஜீவ சமாதிகள். சமாதி என்ற சொல்லைப் பிளந்து பார்த்தால் உண்மை தெரியும். சமாதிக்குள் 'ஆதி’ என்னும் பதம் ஒளிந்துள்ளது. 'ஆதி’ என்றால் தொடக்கம் என்று பொருள். ஏதோ ஒன்றின் தொடக்கம் அல்ல; உயிரின் தொடக்கம். அனைத்துக்கும் முதலான தொடக்கம். அந்தத் தொடக்கம், அதாவது... அந்த ஆதியானதுடன் சமாதியுறும் சித்தர்களின் ஜீவனும் சமமாகக் கலக்கிறது. அதாவது, சென்று சேர்கிறது. அந்த ஆதிக்குச் சமம் இது; அதற்குச் சமமான ஆதி... சமாதி எனலாம்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 13

அந்த ஆதி (பகவனுக்கு)க்குச் சமமான ஆதியை சமாதி என்றாலும், அது கோயிலுக்கு நிகரானதன்றோ? நம்மைப் போன்ற ஊனப் பிறப்புடையோரும் புதைக்கப் பட்டு சமாதியே கொள்கிறோம். ஆனால், இங்கே ஜீவனில்லை. உடம்பு மட்டும் உள்ளது. ஜீவன் நீங்கிய உடல் வெறும் குப்பை. எனவே, நமது சமாதிகள் வெறும் குப்பைக் குழிகளே! ஆனால், சித்த புருஷர்களின் சமாதிகளில் ஜீவன் அப்படியே இருக்கிறது. இது, சூட்சும உடம்பெடுத்து வந்து நடமாடவும் செய்யும். உள்ளே இருந்துகொண்டு அருள் அதிர்வுகளை வெளியிட்டபடியும் இருக்கும். பிரபஞ்ச வெளியோடும் நட்சத்திரங்களோடும் கோள்களோடும் தொடர்புகொண்டு இருக்கும்.

இன்றைய வாழ்வில் உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு சித்தனின் ஜீவ சமாதியும் ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு சமம். அந்தக் கூடத்தில் இருப்பவர்கள் உலகில் எங்கே வேண்டுமானாலும் தொடர்புகொள்ள முடிந்தவர்களாக இருப்பர். இருந்த இடத்தில் இருந்துகொண்டே பூவுலகோடு மட்டுமல்ல, விண்ணில் ஏவப்பட்டிருக்கும் கோள்களோடும் அவர்கள் தொடர்பில் இருப்பார்கள். புயல், மழை, காற்றை முன்னரே கூறுவார்கள். கோள்கள் நெருங்கி வருவதை, பூமி மேல் உரசப் போவதை முன்னரே கணித்துக் கூறுவார்கள். அப்படியே இன்னமும் அறியப்படாத நட்சத் திரங்களைத் தேடியும், கோள்களைத் தேடியும் ஆய்வு நிகழ்த்தியபடி இருப்பார்கள்.

இதை எல்லாம் அறிவாற்றலால் கண்டறிந்த கருவிகளைக் கொண்டும், மின்னாற்றல், மின் காந்த ஆற்றல் கதிர்களின் ஆற்றல் கொண்டும் செய்தவண்ணம் இருப்பார்கள். இதன் பின்னே, பல ஆண்டு கால உழைப்பு, பல நூறு கோடி ரூபாய் செலவும் இருக்கும்; இன்னும் செலவழிந்தபடியேயும் இருக்கும்.

ஆனால், ஒரு கருவியும் இல்லாமல், மின்னாற்றல் மின்காந்த ஆற்றல், கதிர் ஆற்றலை எல்லாம் தன் உடம்பிலேயே கண்டறிந்து, அதை வெளிப்படுத்தி ஒரு சித்த யோகி ஜீவ சமாதிக்குள் இருந்து செய்தபடி இருப்பார். கால்காசு செலவு கிடையாது. நெடிய தவமும் புலனடக்கமும்தான் இவர்களுக்குத் தேவை. இது விந்தையிலும் விந்தையான பேருண்மை.

எனவே, ஒரு ஜீவ சமாதிக்குப் பின் உள்ள இந்த ஆற்றலை முதலில் நாம் புரிந்துகொண்டாக வேண்டும். அடுத்து, இதன் வகைகளையும் தெரிந்துகொள்ளுதல் நல்லது. ஜீவசமாதியிலும் வகைகளா என்று ஆச்சரியமோ, குழப்பமோ அடையாமல் அவற்றைப் பார்ப்போம்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 13

நிர்விகற்ப சமாதி, விகற்ப சமாதி, காயகல்ப சமாதி, சஞ்ஜீவித சமாதி, ஜோதி சமாதி, பரிபூர்ண சமாதி என்று ஜீவசமாதிகளில் வகைகள் உள்ளன. ஏன் இந்த வகைகள் என்பதன் பின்னே காரண- காரியம் உள்ளது. நிர்விகற்ப சமாதி என்பது, ஒரு சித்தன் மீண்டும் பிறவாதபடி பிரம்மத்தோடு கலந்துவிட்டதைக் குறிப்பது. விகற்ப சமாதியோ, மறுபிறப்புக்கு இடமுள்ள சமாதி. அதாவது, ஒரு சித்தர் சமாதியுறுகிறார். அவர் மீண்டும் பிறக்கும் விருப்பமோ அல்லது கடப்பாடோ கொண்டிருந்தால், அவரது சமாதி விகற்ப சமாதியாகும். சஞ்ஜீவித சமாதியில், உள்ளே அடங்கியிருக்கும் உடல் துளியும் கெடாது. அப்படியே இருக்கும். மண்ணால் இந்த உடலைத் தின்றுவிட முடியாது. ஜோதி சமாதி என்பது, ஒரு சித்தன் தன் பருஉடலைத் தீச்சுடர்போல ஆக்கிக்கொண்டு வானில் கலந்துவிடுவதாகும்.

 இப்படி, சமாதிகளின் உள் அடங்கிக் கிடக்கும் சித்தர் பெருமக்களின் நோக்கம், விருப்பத்துக்கு ஏற்ப அவை பெயர் கொண்டுள்ளன. இந்த வகையில், போகர் பிரம்மத்தோடு கலந்து மீண்டும் பிறவாதிருக்க விரும்பியதால், அவரது சமாதி நிர்விகற்ப சமாதியாகும். மீண்டும் பிறவாமையைத் தங்கள் வாழ்வின் நோக்க மாகக் கொண்டவர்களுக்கு இங்கே மனம் ஒடுங்கும்போது, அவர்களின் நோக்கமும் விரைந்து ஈடேறிவிடும்.

எது சமாதி எனும் கேள்வியில் தொடங்கி, அதன் வகைகளையும் சிந்தித்தோம். இனி, இந்தச் சமாதிக்குள் சித்தர்கள் எப்படி ஒடுங்கு கிறார்கள் என்று சிந்திப்போம்.

உடம்போடு முதுமை எய்தி தவத்தைத் தொடரும்போது அதைப் பேணுவதற்காக மூச்சைக் கட்டுப்படுத்துதல், பச்சிலை உண்ணுதல் போன்றவை தேவைப் படுகின்றன. ஒருகட்டத்தில் அந்த உடம்பைச் சுமந்தபடி வாழ்வது என்பது பாரம் சுமப்பது போலாகி விடுகிறது. இத்தனைக்கும் அது நமது உடம்புபோல பித்த, வாத, வாயு சிலேத்துமங்களால் பாதிக்கப்பட்ட ஊத்தை உடம்பு அல்ல. காயகல்பங்களால் கல்போல் விளங்கும் உறுதியான உடம்பு. ஆனாலும், அது சுமைதானே?

இந்தச் சுமையோடு இதுவரை சுற்றித் திரிந்தது போதும்; இதை உதிர்ப்போம் என்கிற முடிவுக்கு எப்போது ஒரு சித்தன் வருகிறானோ, அப்போதே அவன் சமாதியுற விரும்புகிறான் என்று பொருள். அப்படிச் சமாதியுறும்போது, அவன் தானறிந்த ரகசியங்களால் தன் ஒரு உடலை எட்டு சூட்சும உடம்புகளாக ஆக்கிக்கொள்ள முடியும். இது எட்டு ஸித்திகளான அனிமா, மஹிமா, லஹிமா, கரிமா, பிராகாமியம், வஸ்யம், பிராப்தி, ஈசத்வம் என்பதன் கூறாகும். இப்படி எட்டாக ஆக்கிக்கொண்டு, எட்டு இடங்களில் சமாதி கொள்ள முடியும்.

இந்த தகவல் ஆச்சரியம் தரலாம். ஆனால், இதுதான் உண்மை. இந்த உண்மைக்குச் சான்றாக உள்ளதுதான் போகர் வாழ்வு.

போகரின் ஜீவசமாதி என்றவுடன், பழநியின் நினைவு வரும். ஆனால், சமாதி நிலை அடைந்த பின், அவர் அதிலிருந்து வெளிவந்து நாகப்பட்டினம், வடபொய்கை, நல்லூர், பிறகு... சீனதேசம் என்று சூட்சும உடம்போடு சுற்றித் திரிந்தார். எட்டு தேகத்தில் ஒன்று மட்டுமே பிரம்மத்தோடு கலந்து பிரம்மமாகிவிட்டது. மீதமுள்ள ஏழு, இந்தப் பூவுலகில் பல்வேறு இடங்களில் சமாதி நிலை கொண்டது. அவை எங்கே என்பதில் தெளிவில்லை. இப்படிச் சமாதி நிலையை பல இடங்களில் கொள்வதை அட்டாங்க நிலைப்பாடு என்பர். 'ஒருவர் ஏன் எட்டாகி அடங்க வேண்டும்? ஒன்றே ஒன்று கூடாதா? போதாதா?’ என்றெல்லாம் நமக்குள் கேள்விகள் எழலாம்.

இவற்றுக்கான விடையை ஜீவ சமாதிகளால் ஏற்படும் நன்மை களைக் கொண்டே உணர முடியும். எந்த ஒரு ஊரில் ஜீவசமாதி உள்ளதோ, அந்த ஊரில் பெரும் இயற்கைச் சீற்றமோ, அரக்க குணம் கொண்ட மக்களோ, பஞ்ச பூதங்களின் கொடுந்தாக்கமோ இருக்காது. மாறாக, அருளாளர்கள் நிறைய இருந்து, பாவ- கர்ம வினைப்பாடுகளைச் சமன் செய்தபடி இருப்பார்கள். அந்த அருளாளர்கள் ஜீவசமாதிகளின் தொடர்பில் இருப்பார்கள்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 13

போகரும் தன் நெடிய தவமும் அருளும் தன் சமாதி நிலைக்குப் பின்பும் இந்த உலகுக்குப் பயன்பட எண்ணியே இப்படி எட்டு இடங்களைத் தேர்வு செய்து ஒடுங்கியிருக்கலாம். இப்படித்தான் நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்கு என்ன சான்று என்று கேட்பவருக்கு, 'கோரக்கர் சந்திர ரேகை’யில் வரும் 22, 23-ஆம் பாடல் சான்றாக உள்ளது.

கோரக்கரும் ஒரு சித்த புருஷர். இவர் போகரை குருவாய் வரித்துக்கொள்கிறார். சமாதியுறவும் விரும்புகிறார். இப்படிச் சித்த புருஷர்கள் சமாதியுற விரும்பும்போது, தங்கள் சீடர்களைக் கொண்டு அதை நிகழ்த்திக் கொள்வர். சமாதிக் குழிக்குள் உடம்பானது அடங்கிய நிலையில், அதன் மேலே கற்களைக் கொண்டு அக்குழியை மூடி, அங்கே தூய்மையான சூழ்நிலையை உருவாக்கிட வேண்டியது அவசியம். அல்லாத பட்சத்தில், உள்ளிருக்கும் உடம்பை விலங்குகள் உண்டுவிடும், பாம்புகள் விழுங்கிவிடும் ஆபத்து உண்டு.

அதே நேரம், சில சித்த புருஷர்கள் பிறர் அறியாதபடி சமாதியுற விரும்புவர். இந்த உலகு அறியாதபடி வெளியே வந்து நடமாடிவிட்டும் செல்வர். எதற்கு இந்த ரகசியத்தன்மை என்று நாம் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. அதை நாம் அறிய வேண்டுமென்றால், நாமும் சித்தம் ஒடுக்கிச் சித்தனாக வேண்டும்.

ஒரு வழக்கறிஞர் அறையில் தலையணை தலையணையாய் வழக்குக்குப் பயன்படும் நூல்கள் உள்ளன. வழக்கறிஞராக இல்லாத வர்களுக்கு அந்த நூல்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. எனவே, அவர்கள் அதை நூலாக மட்டுமே காண்பர். அதன் உட்பொருள் தெரியவே தெரியாது. தெரிய வேண்டுமென்றால் வழக்கறிஞராக ஆக வேண்டும். சித்தமும் அப்படித்தான்.

இன்றைய செல்போன் யுகத்தின் விஞ்ஞானத் தாக்கங்களால், காலிருந்தும் நடைசெத்துப்போய் வாகனங் களின் அடிமைகளாகி, கருவி களின் தயவால் அதை இயக்கும் அறிவுடன் மட்டுமே வாழும் நம்மால், தன் உடம்பின் ஒவ்வொரு செயலையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒரு சித்தனின் பேராற்றலை எல்லாம் அவ்வளவு சுலபத்தில் உணர முடியாது.

சித்த வாழ்வு என்பது ஒரு நம்பமுடியாத புனைகதையாகவோ அல்லது ஃபேன்டஸி எனப்படும் மாயமாகவோதான் தோன்றும். தோன்றிவிட்டுப் போகட்டும். சித்தர் பெருமக்களும் ஊத்தை உடல்கொண்ட நமக்காக இல்லை. பின்னால் வரப்போகும் தங்களைப் போன்ற சிலருக்காகவே உடல் துறந்தும் சூட்சும உடம்போடு இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழ விரும்பியே போகரும் ஜீவ சமாதி ஆகிடத் தயாரானார்.

அதற்கு ஏற்ற இடமாக பழநிமலை ஸ்ரீதண்டபாணிச் சந்நிதிக்கு அருகிலேயே ஒரு மூலையைத் தேர்வுசெய்தார். முன்னதாக, அவர் சமாதிநிலை கொண்ட கமலமுனி என்னும் சித்தரைக் கண்டார்.

'நெருங்கியே கமலரது சமாதி கண்டார்
நேர்மையுடன் யாகோபு வணங்கி நின்றார்''

என்னும் 'போகர் ஏழாயிரம்’ நூலின் வரிகள் இதற்குச் சான்று. இதன்படி, கமலமுனி சமாதியில் யாகோபு சித்தர் என்னும் ராம தேவரை போகர் சந்திக்கையில், கமலமுனி போகரின் வாழ்வியல் அனுபவங்களை நூலாக எழுதச் சொல்கிறார்.

'தொழுதிட்ட என்தனக்கு முனிதான் சொன்னார்
தொல்லுலகில் (சீனா) நீர்கற்ற வித்தை தன்னை
முழுத்திட்டம் தன்னுடனே முனிதான் சொல்ல
முயற்சியுடன் கற்ற வித்தை பழுதில்லாமல்
வழுதிட்டமுடன் நானும் மறைப்பை எல்லாம்
மாநிலத்தில் கொட்டிவிட்டேன் வண்மை பாரே...’

- என்கிறார் போகர் தன் ஏழாயிரத்தில்!

இதன்படி, அவர் தனது 'ஜனன சாகரம்’ நூலை எழுதி முடித்தார். தன் சீடர்களில் ஒருவரான கோரக்கரை அழைத்து தனக்கு சமாதி எழுப்பச் சொல்லி, அதில் சென்று அமர்ந்துகொண்டார். அப்படிச் சமாதி எழுப்பச் சொல்லும்போது, கோரக்கருக்கும் சமாதி கொள்ளும் விருப்பம் ஏற்பட்டிருந்தது.

''குருவே.... நீங்கள் சமாதியுற நானிருப்பதுபோல, நான் சமாதியுற யார் இருக்கிறார்?'' என்று கேட்க, 'உனக்கு நானே சமாதி எழுப்புவேன்' என்கிறார் போகர்.

கோரக்கரும் சித்தர் என்பதால், புரிந்துகொண்டு மிகவே மகிழ்ந்தார். அதன் பின், பழநியம்பதியில் மலைமேலுள்ள குகைப் பகுதியில், ஒருபுறம் ஸ்ரீதண்டாயுதபாணியின் ஞானக் கோயிலும், அதில் பூஜா க்ரமங்களும் ஈடேறிக்கொண்டிருக்க... போகர் சமாதி கொள்ள, கோரக்கர் அதை எழுப்பி முடித்தார். இதை கோரக்கரே தன் சந்திரரேகை நூலில் 22, 23-ஆம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

அது சரி, போகர் இங்கே சமாதியாகிவிட, கோரக்கருக்கு அவர் எப்படி சமாதி எழுப்பினார்? முன்னதாக, போகர் சமாதிக்குள் தன் குண்டலினியை சஹஸ்ராரத்துக்குக் கொண்டுவந்து கபாலம் திறந்துகொண்டது எப்படி?

எப்படி இதனின்றும் வெளியேறினார்? அதன்பின் சூட்சும உடலுடன் அவர் செய்த செயல்பாடுகள் எல்லாம் என்ன?

- சிலிர்ப்போம்