மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

நாடி ஜோதிடம் கணிப்பது எப்படி?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

நாடி ஜோதிடம் எப்படிக் கணிக்கப்படுகிறது? நமது எதிர்காலம் குறித்து மிகத் துல்லியமாக அதில் விவரிக்கப்படுவது எப்படி? வேதங்களில் நாடி ஜோதிடம் குறித்த தகவல்கள் உண்டா?

 - வி.செந்தில்குமார், கோவை-2

ஜாதக பலனைச் சொல்லும் ஜோதிடப் பகுதி வேதத் துடன் சம்பந்தப்படாது. அகண்டவெளியில் தென்படும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றிய வானசாஸ்திர விளக்கவுரைகளுக்கு வேதத்துடன் தொடர்பு உண்டு. ஒரு சூரியோதயத்தில் இருந்து அடுத்த சூரியோதயம் வரை இருக்கும் 24  மணி நேரத்துக்கு, 60 நாழிகைகள் வரும். அந்த 60 நாழிகைகளில், 12 ராசிகளின் ஒரு சுற்று முடிவடையும். சூரியன் உதிக்கும் ராசி மேஷ ராசியானால், ஒவ்வொரு ஐந்து நாழிகையும் (தோராயமான கணக்கு) அடுத்தடுத்த ராசியாக மாறி, அடுத்த நாள் சூரியோதயத்துக்கு முன்பு 12 ராசிகளும் முடிந்துவிடும்.

கேள்வி-பதில்

ஒருநாள் தென்படும் 12 ராசிகளை லக்னமாக வைத்து, அதில் பிறந்தவர்களின் ஜாதகத்தைக் கணித்துவிடலாம். ஒருநாளில் 12 லக்னங்களில் பிறந்த 12 ராசி ஜாதகங்கள் உருவாகும். ஒரு மாதத்துக்கு 12 ஜ் 30;  ஒரு வருடத்துக்கு 30 ஜ் 12 அல்லது 12 ஜ் 365. இப்படி, ப்ரபவ முதலிய 60 வருடங்களுக்கும் 12 ஜ் 365 ஜ் 60 என்ற கணக்கில் ஜாதகங்கள் உருவாகும். அதற்குப் பிறகு மீண்டும் 60 வருடங்களுக்குக் கணித்தால், 120 வருடங்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக, 80 வயது முதியவருக்கு தான் பிறந்த வருடம், மாதம், தேதி, லக்னம் தெரிந்தால், நாடி ஜோதிடத்தில் ஜாதகம் கிடைக்கும். லக்னவாரியாகப் பிரித்து, த்ருவ நாடி ஜோதிட நூலை சேமித்து வைத்திருக்கிறார்கள் (சென்னை ஓரியண்டல் லைப்ரரியில் பார்க்க இயலும்). 2016-ஆம் ஆண்டு பிறக்கப் போகும் குழந்தைக்கு இப்போதே ஜாதகம் இயற்றலாம். நேரத்தை வைத்து ஜாதகம் உருவாவதால், நமது கற்பனையில் 2016-ல் குழந்தை பிறப்பதாக நினைத்து வருடம், மாதம், தேதி, நேரம் ஆகியவற்றை அளித்தால் ஜாதகம் உருவாக்க இயலும். 'எஃபிமரீஸ்’ (பஞ்சாங்கத்துக்கான தகவல் தொகுப்பு) குறிப்புகள் பல வருடங்களுக்குக் கிடைக்கும். அதை வைத்து, வருங்காலத்தில் பிறப்பவர்களுக்கு இப்போதே ஜாதகம் எழுதி வைத்து அவர்களை அசத்தலாம். பஞ்சாங்கம் கணிப்பவர்களில் சிலர் 'எஃபிமரீஸ்’-ஐ பயன்படுத்திப் பயன்பெறுகிறார்கள்.

கேள்வி-பதில்

நாடி ஜோதிட குறிப்புகளில் ராசிக் கட்டம் மட்டும்தான் இருக்கும். ஜோதிடத்தில் கையாளப்படும் அம்சகம் போன்ற விரிவாக்கம் அதில் தென்படாது. நாமும் தினமும் 12 ராசி என்ற கணக்கில் 60 வருடங்களுக்குக் கணித்து (ராசிக் கட்டம் மட்டும்) வைத்துக் கொள்ளலாம். பிற்பாடு நமக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் ஜாதகத்தை நாம் சேமித்த நாடியிலிருந்து எடுத்து மகிழலாம். இது நாடியைப் பற்றிய ஒரு தகவல். எல்லாத் தகவல்களையும் கேள்வி- பதில் பகுதியில் சேர்க்க இயலாது. அவரவர் முயற்சி செய்து தெரிந்துகொள்ள வேண்டும். நல்ல நாடி ஜோதிடரை அணுகி அதன் நுணுக்கங்களை அறிவதே சிறப்பு!

இன்றைய அவசர யுகத்தில், அதிதி சத்காரம் போன்ற உத்தம தர்மத்தை அனுசரிக்க முடியாத நிலைமையில் உள்ளோருக்குத் தாங்கள் கூறும் அறிவுரை என்ன? தர்ம சாஸ்திரத்தில் ஏதேனும் பிராயச்சித்தங்கள் கூறப்பட்டுள்ளதா?

- பா. சுப்ரமணியராவ், பெங்களூரு-97

எல்லா விஷயங்களிலும் மாற்று வழியைத் தேடும் மனநிலை தென்படுகிறது. பழைய நடைமுறையைப் புறக்கணிக்கத் துணிந்து விட்ட மனத்தின் வெளிப்பாடு இது. தவற்றை ஏற்று பிராயச்சித்தத்தை வரவேற்றால், தவறு செய்யாமல் இருக்கவேண்டும் எனும் எண்ணத்துக்கு மதிப்பளிக்கவில்லை என்றே பொருளாகும்.பழைமையை மொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, புதிய வழியில் பயணிக்க வேண்டும். அல்லது, எப்பாடு பட்டாவது, பழைமையான நல்ல நடைமுறைகளைப் பின்பற்ற முயற்சிக்கவேண்டும். புதிய தகவல்களோ நடைமுறைகளோ அமைதியளிக்கவில்லை. பழைய நடைமுறைகளிலும் பிடிப்பு இல்லை. இப்படியரு மனக் கலக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது சரியல்ல. கலங்கிய நீரில் மீன் பிடிப்பவர்கள் உண்டு. பிறரது பிழைப்புக்கு நாம் இரையாகக் கூடாது. சமுதாய மாற்றமானது பழைமையை ஏற்க மறுக்கும்.

எது நல்லது என்பதை ஆராய்ந்து எடுத்துக்கொள்ளும் மனம் வேண்டும். இந்த அவசர யுகத்திலும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள, மாற்று வழியைத் தேடுவது இல்லை. புலன்களின் வேட்கையைத் தணிக்க எது உயர்ந்ததோ அதையே முயன்று பெறுகிறோம். அப்படியான மாற்று வழிகள் திருப்தி அளிக்காது என்பதை உணர்கிறோம். ஆனாலும், அறத்துக்கு மாற்று வழிகளையே தேடுகிறோம். விசித்திரம்தான்!

ஸ்ரீதுர்காதேவியை ராகு காலத்தில் வழிபடுவது விசேஷம் என்கிறார்களே, ஏன்?

- கே.எல்.சுபாக்னி, மேலகிருஷ்ணன்புதூர்

கேள்வி-பதில்

கடவுள் திருவுருவங்களுக்கு நேரம் காலம் என்ற சம்பந்தத்தால் சிறப்பு இருக்காது. முழுமை பெற்ற கடவுளுக்கு எந்த நேரமும் பணிவிடை செய்யலாம். நேரம்- காலம் எல்லாம் நம்மோடு சம்பந்தப்பட்டது. மற்ற அலுவல்களில் இருந்து விடுபட்டு பூஜையில் இறங்க வேண்டும். ராகு

காலத்தில் வேறு அலுவல்களுக்கு இடம் இல்லாததால், அது பணிவிடைக்கு உகந்ததாக மாறிவிடும். நம் மனம் மற்ற அலுவல்களின் தொடர்பு இல்லாமல் இருக்கும் வேளையில், கடவுள் வழிபாட்டில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். இறை உருவத்தை மட்டுமே மனத்தில் நிறுத்தி, அதில் லயித்து வழிபடும்போது, அந்த வழிபாடு சிறப்பு பெறும். இந்த அடிப்படையில் ராகு கால வழிபாடும் சிறப்பு பெற்றுவிடுகிறது.

நமது விருப்பப்படி மற்ற அலுவல்களைத் துறந்து, இறையுருவத்தை தியானிக்க வேண்டும். இந்த வழக்கம் வளர்வதற்கு ராகுகால பூஜை அடித்தளமாக அமையும். அதற்காக, மற்ற அலுவல்கள் இல்லாத வேளையை மட்டுமே வழிபாட்டு வேளையாக நினைக்கக் கூடாது. அலுவல்கள்

இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு வழிபாட்டில் பிடிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மனத்தை ஒருநிலை யில் நிறுத்த இயலாதவர்கள், அதைப் பழக்கப்படுத்த ராகுகால பூஜையை ஏற்கலாம். மற்றபடி, ராகு கால பூஜை மட்டும்தான் செய்வேன், அது மட்டுமே சிறப்பு என்று இருக்கக்கூடாது.

சமீபத்தில்தான் ராகுகால பூஜை பிரபலமாகியிருக்கிறது. மக்களின் ஆதரவு பெருகியுள்ளதால், அவர்களை நம்பி அந்த பூஜை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. கோயில்களில் நான்கு கால பூஜை, ஆறு கால பூஜை, பிரம்மோத்ஸவம், தீர்த்தவாரி போன்ற நடைமுறைகளில் எல்லாம் ராகு கால பூஜை இருக்காது.

வருங்காலத்தில் ஏதாவதொரு இறையுருவத்துக்கு குளிக கால பூஜையும் வரலாம்; ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆங்கில வருடப் பிறப்பன்று, நடுநிசியில் கோயில்களில் பூஜை- பணிவிடைகள் நடைபெறுகின்றன. ஆகமத்தை உதறித் தள்ளிவிட்டு, ஆண்டின் ஆரம்ப நாளில், அதாவது ஆங்கிலேயர்களின் வருடத் துவக்க நாளில் நம்மவர்கள் இரவு 12 மணிக்கு பூஜை- பணிவிடைகளை நடத்துகிறார்கள். பூஜைகளும் வர்த்தரீதியில் செயல்படும் போது, அதற்குச் சிறப்பு கிட்டிவிடுகிறது. துர்கையை ராகு காலத்தில் வழிபடுவீர்கள். சாஸ்திர சம்மதம் இல்லை என்று சொன்னால் பூஜையை விட்டுவிடுவீர்கள்.

சாஸ்திர சம்மதமான வேளைகளில் பூஜை செய்ய மனம் இருக்காது; அல்லாத வேளைகளில் மனம் இருக்கும். ஆகையால், பூஜையில் ஈடுபட வைப்ப தற்காக ராகு காலத்தை ஏற்கலாம். காலப்போக்கில் தெளிவு வந்த பிறகு, ஆஸ்திகத்தில் பற்று ஏற்பட்டு பணிவிடையில் விருப்பத்தை அடைய வழி பிறக்கும். ஆகையால், தவறானாலும் நன்மையை எண்ணி ஏற்றுக்கொள்ளலாம். அக்டோபர்-2 என்றதும் மகாத்மா காந்தி ஞாபகத்துக்கு வருவார். ராகுகால துர்கை என்றதும் அம்பாள் ஞாபகம் வரும். அப்போது வழி படுவது சிறப்பு. 'தினமும் துர்கையை நினை’ என்றால், மனம் அதைச் செய்யாது. ராகு காலம் துர்கைக்கு விசேஷம் என்றால், உடனே ஏற்கும்.

'தேவ தார்ச்சனம்’ என்ற பெயரில் நித்தமும் வழிபடச் சொல்லும் சாஸ்திரம். அதில் ஐந்து இறையுருவங்கள் இருக்கும். அதற்கு பஞ்சாயதனம் என்று பெயர். ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, ஈசன் ஆகியோரை வழிபடச் சொல்லும். இதுவே முழு வழிபாடாக மாறுவதால், ராகு கால துர்கை, குளிகை கால பைரவர் என்று தேவையில்லாமல் மனம் குழம்பி யிருப்பது தவறு. எந்த வேளையிலாவது ஏதாவதொரு இறையுருவை வழிபடுங்கள். விருப்பம் ஈடேறும்.

முற்காலத்தில் அரசவைகளில் 'ஸதஸ்’ கூட்டப் பட்டது. ஊருக்கு ஊர் சத்சபைகள் கூடி பல நல்ல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இன்றைய சூழலில் தங்களைப் போன்றோரின் சொற்பொழிவுக் கூட்டங் களை சத்சபையாகக் கருதலாமா?

- சீ. வேணுகோபாலன், ஆழ்வார்திருநகரி

சொற்பொழிவு சத் சபைக்கு மாற்று ஆகாது. சொற்பொழிவில் மக்களை ஈர்க்கும் வகையில் விளக்க மளிக்க முன்னுரிமை இருக்கும். குட்டிக் கதைகளும், உவமைகளும், நகைச்சுவைகளும் மக்கள் மனத்தில் பதியுமே தவிர, சொல்ல வந்த விஷயம் அவர்கள் மனத்தில் பதியும் என்று சொல்ல முடியாது.

காது கொடுத்துக் கேட்டு விஷயத்தை அலசி ஆராய்ந்து உணர முற்படாமல், ஆராய்ச்சியில் இறங்குபவர்களும் இருப்பார்கள். பேச்சு சுதந்திரமானது, சொற்பொழிவாளர்களைத் திசை திருப்பி, சான்றில்லாத பல விஷயங்களை மக்கள் மத்தியில் பரப்ப ஏதுவாகி விடுவதும் உண்டு. அதேநேரம், உண்மையை உள்ளபடி விளக்கும் சொற்பொழிவுகளும் உண்டு. ஆனால், பெரும்பாலும் மக்களின் மனத்தை மற்ற விஷயங்களில் திருப்பிவிடும் சொற்பொழிவுகளே அதிகம்! தனிமனித ஆராதனையில் பிடிப்புள்ளவர்களுக் குச் சொற்பொழிவுகளால் பயன்பெற இயலாது. அது ஏனோ தெரியவில்லை... விஷயத்தைவிட சொற்பொழிவாளரின் பெருமையே அதிகம் பேசப்படுகிறது. வர்த்தக ரீதியில் சொற்பொழிவு நிகழும் போது, ஒருவிதக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு சொற்பொழிவுகள் முகம் மாறிவிடும். சின்னத் திரைகளில் விளம்பரங்களின் இடையூறால், சொற்பொழிவு பொழுதுபோக்காக மாறிவிடும் வாய்ப்பு உண்டு.

விஷயம் தெரிந்த அறிஞர்களின் கூட்டம் ஸதஸ். அதில் குட்டிக் கதைகளோ, கிளுகிளுப்பை ஏற்படுத்தும் நகைச்சுவையோ இருக்காது. பொறுப்புள்ள அறிஞர்கள், மற்றவர்களின் முகம் பார்க்காமல் உண்மையை விளக்கி உயர்வுக்கு வழிகோலுவர். மக்கள் நலனை முன்நிறுத்தி, ஆராய்ச்சியின் போக்கைக் கட்டுப்படுத்துவர். பொதுச் சேவையில் நாட்டம் கொண்ட அவர்கள், தற்பெருமைக்கு இடமளிக்க மாட்டார்கள். பொதுநலத் தொண்டினைக் கடமையாக ஏற்பர். அதிலேயே மனநிறைவு பெறுவார்கள்.

இன்றையச் சூழலுக்கு அவர்களைப் போன்ற அறிஞர்களே தேவை. சொற்பொழிவாளர்கள் தேவையில்லை. வாழ்க்கைப் பயணத்துக்கு சொற்பொழிவை ஒரு வேலையாக ஏற்றவர் களால், மனம் திருப்தி அடையும் அளவுக்குச் சொற்பொழிவைக் கையாள இயலாது. குறிக் கோளின் மாற்றமானது பலனிலும் பிரதிபலிக்கும். சொற்பொழிவு என்பது பொழுதுபோக்கு; ஸதஸ் - மக்களுக்கு வழிகாட்டி. எனவே, ஸதஸுக்கு ஈடாக சொற்பொழிவைப் பார்க்க இயலாது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை. ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற அறநூல்கள் நிறையப் பேருக்கு வாழ்வளித்துக்கொண்டிருக்கின்றன. கதாகாலக்ஷேபத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் போதும். ஒன்பது வித பக்திகளில் அதுவும் ஒன்று. அது ச்ரவண பக்தி. அற விளக்கங்களுக்கு முன்னுரிமை இல்லை. 'சதஸ்’ஸில் அற விளக்கம் இருக்கும். மக்கள் மனத்தில் அற விளக்கம் பதியும். சொற்பொழிவில் காதில் விளக்கம் விழுந்தால் போதும்; வீடுபேறு வரை எட்டிவிடலாம். சதஸ்ஸில் சிந்தனையாளர்களுக்குப் பங்கு உண்டு. சொற்பொழிவில் காது கேட்பவர்கள் அத்தனை பேரும் பங்கு பெறலாம். அறிஞர்கள் கூட்டத்துக்கு 'ஸமாஜம்’ என்றும், அறிஞர்கள் அல்லாதோர் கூட்டத்துக்கு 'ஸமஜம்’ என்றும் இலக்கணம் விளக்கம் அளிக்கும் (ஸமுதோரஜ: பசுஷ§). ஸமாஜம் என்பதே ஸதஸ்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.