தொடர்கள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம் - 25

சாருசர்யா பி.என்.பரசுராமன்

##~##

சார- அனுஷ்டானங்கள் மிகவும் கடைப்பிடிக்கப்படுகிற இடம் என்று கேள்விப்பட்டாலே போதும்; மெள்ள அங்கிருந்து நகர்ந்து, ஒதுங்கிவிடுவோர்தான் நம்மில் பலர். ஒதுங்குவது மட்டுமல்ல; ''ஆசாரம் என்ன சார் ஆசாரம்! (நெஞ்சைத் தொட்டுக் காட்டி) இது சுத்தமா இருந்தா போதும் சார்! இந்த ஓட்டல்ல அடை- அவியல் பிரமாதமா இருக்கும். வாங்க, ரெண்டு வாங்கி வயித்துக்குள்ள போட்டுக்கிட்டுப் போகலாம்'' என்று நம்மைக் கைப்பிடித்து அழைப்பார்கள்.

 உடனே நாமும், 'அதானே..! மனசு தூய்மையாக இருந்தால் போதாதா? இது பிரபலமான உணவு விடுதி. ரொம்பச் சுத்தபத்தமாக ஒவ்வொன்றையும் தயார் பண்ணுகிறார்கள் என்று கேள்வி. நண்பர் செலவில் சுவை மிகுந்த உணவை நாமும்தான் ஒருகை பார்ப்போமே’ என்று அவரோடு இணைந்து கொள்வோம்.

வாகனத்தில் போகும்போது தெரிந்தோ தெரியாமலோ 'நோ என்ட்ரி’யில் போய், வழியில் போக்குவரத்துக் காவலர் மடக்கிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, ''ஐயா! மனசு சுத்தமாக இருந்தால் போதாதா? இப்படி மடக்கி நிறுத்துகிறீர்களே! இது நியாயமா?'' என்று கேட்போமா என்ன? மாட்டோம்தானே?

ஞானப் பொக்கிஷம் - 25

தெருப் பயணம் என்பது சற்று நேரம்தான். அதற்கே எவ்வளவு எச்சரிக்கை உணர்வோடு செயல்படுகிறோம்? அப்படி இருக்கும்போது, வாழ்க்கைப் பயணத்தில் இன்னும் எத்தனை தீவிரமான எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும் நமக்கு?

அதற்கு உண்டான வழிவகைகளைச் சொல்பவைதான் 'ஸ்ம்ருதி’கள் எனப்படுபவை. 'ஸ்ம்ருதி’கள் பல இருக்கின்றன. அவையெல்லாம் பெரும்பாலும் ஆசாரங்களையும், அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றியும் விரிவாகக் கூறும். அந்த ஆசாரங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து உயர்வை அடைந்தவர்களின் கதைகளை இதிகாச- புராணங்கள் விரிவாகக் கூறும்.

இந்த இரண்டையும் சேர்த்து நாம் அறிந்தால், வாழ்க்கை பலன் உள்ளதாக இருக்கும். சரி, ஆசார- அனுஷ்டானங்களையும், அவற்றை அனுசரித்து உய்வடைந்தவர்களின் கதைகளையும் சேர்த்து யாராவது சொல்லி இருக்கிறார்களா? ஆம்... அப்படி ஓர் அற்புதமான நூல் நம் கண்களில் அகப்படுகிறது. அதன் பெயர் 'சாருசர்யா’. இதற்கு  சதாசாரம் அல்லது நல்லொழுக்கம் என்று பொருள் கொள்ளலாம்.

இந்த நூலில் இரண்டிரண்டு வரிகள் கொண்ட பாடல்களாக (ஸ்லோகங்கள்) நூறு பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒரு விசேஷ அமைப்பு உண்டு. அதாவது, ஒவ்வொரு பாடலிலும் பாதிப் பாடலில் சாஸ்திர தகவலும், மீதிப் பாடலில் அதைக் கடைப்பிடித்தவர்களின் கதையும் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நூலை எழுதியவர் மகாகவி க்ஷேமேந்திரர் என்பவர். மந்திரிகளின் பரம்பரையில் உதித்த இவர் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

ஸுவ்ருத்த திலகம், ராமாயண மஞ்ஜரீ, பாரத மஞ்ஜரீ, சாருசர்யா முதலான பல பிரசித்தமான நூல்களை எழுதிய இவருக்கு 'வியாஸதாஸர்’ என்ற பெயரும் உண்டு. நூலை எழுதத் துவங்கும்போதே நீராடல், சிவபூஜை என்று சொன்னவர், அடுத்த பாடலிலேயே ஓர் அழுத்தமான சாஸ்திரத் தகவலை, உதாரணக் கதையுடன் நம் முன் வைக்கிறார். அது...

முன்னோர்களுக்காகச் செய்யப்படும் சிராத்தத்தை, சிரத்தையுடன் முறைப்படி செய்ய வேண்டும். (இன்று பெரும்பாலும் இச்செயல் 'சிரார்த்தம்’ என்றே, 'ர்’ சேர்த்து உச்சரிக்கப்படுகிறது; எழுதப்படுகிறது. அது தவறு. சிரத்தையுடன் செய்யவேண்டியது என்பதால், அது 'சிராத்தம்’ எனப்பட்டது.)

பிதாமகர் பீஷ்மர்கூட, சிராத்தத்தில் பிண்டப்பிரதான காலத்தில் கொடுக்கப்பட வேண்டிய பிண்டத்தை, தர்ப்பைகளைப் பரப்பி, அவற்றின் மேலேயே வைத்தார். தகப்பனாரான சந்தனுவின் கைகளில் கொடுக்கவில்லை.

சிராத்தத்தைப் பற்றிய தகவலையும், அதை அனுசரித்த பீஷ்மரைப் பற்றிய தகவலையும் சொல்லும் பாடல்...

ச்ராத்தம் ச்ரத்தான் விதம் குர்யாச்சாஸ்த்ரோக்
                                            தேனைவ வர்த்மநா
புவி பிண்டம் ததௌ வித்வான் பீஷ்ம: பாணௌ ந
                                            சந்தனோ:

(சாருசர்யா - 5)

இந்தப் பாடலில் சொல்லப்பட்ட பீஷ்மரைப் பற்றிய கதை:

ஞானப் பொக்கிஷம் - 25

பித்ருக்(முன்னோர்)களுக்கான சிராத்தத்தைச் செய்துகொண்டிருந்தார் பீஷ்மர். அப்போது, அவருக்குள்ள சாஸ்திர நம்பிக்கையைச் சோதனை செய்வதற்காக, பிண்டப் பிரதான காலத்தில் அவருடைய தகப்பனாரான சந்தனு, பூமியைப் பிளந்துகொண்டு கையை நீட்டி, ''பீஷ்மா! பிண்டத்தை இந்தக் கையில் கொடு!'' என்று கேட்டார்.

ஆனால், பீஷ்மர் அதை ஒப்புக்கொள்ள வில்லை. ''பிண்டத்தைத் தகப்பன் கையில் கொடுக்கும்படி சாஸ்திரங்களில் விதிக்கப்பட வில்லை'' என்று மறுத்தார். தந்தையின் கையை விலக்கிவிட்டு, தரையில் பரப்பப்பட்டிருந்த தர்ப்பைகளின் மீதே பிண்டத்தை வைத்தார். தந்தையே வந்து கேட்டும், பீஷ்மர் சாஸ்திரத்தை மீறத் துணியவில்லை.

இன்னொரு பாடல், 'பிற உயிரைக் காக்கும் கருணையுடன் இருக்க வேண்டும். சிபி என்ற அரசன் ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காக, தன் உடலில் இருந்து சதையை அறுத்து, புறாவைத் துரத்திக்கொண்டு வந்த கழுகுக்கு அளித்தான்’ என விவரிக்கிறது.

பரப்ராண பரித்ராண பர: காருண்யவான் பவேத்

மாம்ஸம் கபோத ரக்ஷ£யை ஸ்வம் ச்யேநாய ததௌ சிபி:

(சாருசர்யா-23)

சிபிச் சக்கரவர்த்தி கதை எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால், பலன்? அடுத்த உயிர்களைக் காப்பாற்றாவிட்டால்கூடப் பரவாயில்லை; 'ஆசிட்’ ஊற்றி அழிக்கும் காலமாக அல்லவா இருக்கிறது!

இவ்வளவுக்கும் காரணம்.... துவேஷம். சிதைத்துப் பார்க்கவேண்டுமென்ற வெறி!

இதைச் சொல்லி, நம்மை எச்சரிக்கிறது அடுத்த பாடல்.

'மனத்தைத் துவேஷம் அற்றதாக, மலர் போல மிருதுவாக வைத்துக் கொள்ள வேண்டும். துவேஷம் என்ற தோஷத்தால், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அழிவு ஏற்பட்டது’ என்று சொல்லும் அந்தப் பாடல்...

அத்வேஷ ஷேசலம் குர்யான் மந: குசுமகோமலம்
பபூவ த்வேஷ தோஷேண தேவதானவ ஸம்க்ஷய:

(சாருசர்யா - 24)

'தேவர்களும் அசுரர்களும் முறையே பிருஹஸ்பதி, சுக்ராச்சார்யர் ஆகியோரிடம் இருந்து அரிய உபதேசங்களைப் பெற்றார்கள். பல அம்சங்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். இருந்தாலும், ஒருவருக்கொருவர் துவேஷம் கொண்டதால், அவர்களுக்கு அடிக்கடி நாசம் விளைந்தது’ என்கிறது மேற்படி பாடல்.

வடமொழியில் அமைந்த இந்த நூலை 50 ஆண்டுகளுக்கு முன்னால், ஆர்.முத்துகிருஷ்ண சாஸ்திரி என்பவர், தமிழில் விரிவான- எளிமையான உரை எழுதி வெளியிட்டார். 100 பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து நாம் பார்த்தது, ஒரு சோறு பதம்தான்.

ஒரு பருக்கைச் சோறே இத்தனை அமுதமாக இனித்தால், ஒரு பானைச் சோறு எத்தனைத் தேவாமிர்தமாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!

- இன்னும் அள்ளுவோம்...