தொடர்கள்
Published:Updated:

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!
##~##

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் காலடி பட்ட மண்ணில் உலவிய குதூகலத்துடன், இரவில் மதுராவில் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினோம். விடிந்ததும், காலை 6 மணிக்கு ஆட்டோ ஒன்றை 50 ரூபாய் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மதுரா கோயிலுக்குப் புறப்பட்டோம். அங்கு சென்று சேர்வதற்குள், புகழ்பெற்ற இந்த நகரம் பற்றிய சில சிறப்புத் தகவல்களைப் பார்த்து விடுவோமே!

 உலகின் முக்தி அளிக்கும் ஏழு தலங்களில் மதுராவும் ஒன்று (மற்ற திருத்தலங்கள்: அயோத்தி, காசி, மாயாபூர், காஞ்சிபுரம், அவந்திகா மற்றும் துவாரகா). உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆக்ராவுக்கு 50 கி.மீ. வடக்கிலும், டெல்லிக்கு 145 கி.மீ. தென்கிழக்கிலும் அமைந்திருக்கிறது மதுரா. பிருந்தாவனத்துக்கு 11 கி.மீ. தொலைவிலும், கோவர்த்தனத்துக்கு 22 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. தற்போதைய மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகர் இதுதான். ஏறக்குறைய 25 லட்சம் ஜனத்தொகை கொண்டதாக விளங்குகிறது மதுரா.

ஸ்ரீகண்ணன் அவதரித்த ஜென்ம ஸ்தலம்தான் மதுரா. ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருக்கும் விரஜபூமி எனப்படும் புண்ணிய பூமியின் மையம்தான் இந்த நகரம். மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி சூரசேன வம்சத்தினரின் தலைநகராக இருந்தது இது. அந்த வம்சத்தினரில் குறிப்பிடத் தக்க மன்னன் கம்சன். இவன் கண்ணனின் ஒன்றுவிட்ட தாய்மாமன்.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

ராமாயணத்திலும் மதுராவைப் பற்றிய குறிப்பு வருகிறது. ஸ்ரீராமரின் ஆணைப்படி சத்ருக்னன், லவணாசுரன் என்ற அரக்கனை வீழ்த்தினான். யமுனை நதிக்கரையில் அர்த்தசந்திர வடிவில் மாட மாளிகைகள், தடாகங்களுடன் மதுரா நகரை அமைத்தான். சத்ருக்னனுக்குப் பிறகு, மதுரா நகரம் யாதவர்கள் வசமானது. வசுதேவர் பரம்பரையினர் இந்த நகரை ஆண்டதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.

புருரவாவுக்கும் ஊர்வசிக்கும் பிறந்த மூத்த மகனான ஆயுவினால் உருவாக்கப்பட்டதுதான் மதுரா என்றும் புராணங்களில் தகவல் காணப்படுகிறது. கி.மு.1600-களில் இப்பகுதியை ஆட்சி செய்த மது என்ற மன்னனின் பெயரால் இந்த நகர் மதுரா எனப் பெயர்பெற்றதாகச் சொல்வோரும் உண்டு.

'மெதோரா’ என்ற பெயரில் மதுரா அழைக்கப்பட்டதாக மெகஸ்தனிஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். ஏராளமான மரங்களைக் கொண்டு இருந்ததால் இந்தப் பகுதி 'மதுவனம்’ எனப்பட்டது. பின்னர் 'மதுபுரா’ என்று அழைக்கப்பட்டு, அதுவே இப்போது 'மதுரா’ ஆனது.

கண்ணன் பிறந்த மதுராநகர் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட திவ்ய க்ஷேத்திரமாகும். ஆழ்வார்களால் பாடல்பெற்ற கோயில்கள் தற்போது இல்லை. பிற்காலத்தில் கட்டப்பட்ட துவாரகாநாதர் மற்றும் மதுராநாதர் ஆலயங்கள்தான் இருக்கின்றன.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

இப்படி, சிறப்புகள் பல கொண்ட புண்ணிய பூமியான மதுராவுக்குச் செல்கையில், மாயக் கண்ணன் அவதரித்த அந்த அற்புத ஸ்தலத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற பரவசமே நம் நெஞ்ச மெல்லாம் நிறைகிறது.

''மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்'

என்று, திருப்பாவையில் ஆண்டாள் அகம் மகிழ வாயார வாழ்த்திய வடமதுரைத் தலத்தை நாம் அடைந்தபோது, உடல் தானாகச் சிலிர்த்தது. மதுராவை அரசாளும் ஸ்ரீகண்ணனை மனம் உருகிச் சேவித்தால், செய்த பாவம் எல்லாம் தீ முன் பஞ்சுபோல் வெந்துபோகும் என்ற மேற்படி பொருள் பொதிந்த திருப்பாவைப் பாடல் வரிகள் மனத்தில் ஒலித்தபடி இருந்தன.

ஆலயம் அருகே ஆட்டோ நின்றது. பரபரப்பான கோயில் வீதி. மிக அதிகப்படியான பாதுகாப்பு. பல மாநிலங்களையும் சேர்ந்த ராணுவ வீரர்கள் கைகளில் அதிநவீன துப்பாக்கிகளோடு காவல் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். (இதே மாதிரியான பாதுகாப்பு அயோத்தி ராமர் ஜென்மபூமியிலும் உண்டு.)

கடைத்தெரு முழுக்கப் பலகாரங்கள், வளையல்கள், பால், அலங்கார விற்பனைப் பொருட்கள் என வியாபாரம் மும்முரமாக நடைபெறுகிறது. தெருவில் எல்லாத் திசைகளிலும் காளை மாடுகளும் பசுக்களும் பரபரப்பின்றி அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றன. சில ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கின்றன.

கோயிலின் முகப்பு வாசலில் ஈட்டிகள் தாங்கிய இரு காவலர்களின் சிலைகளைப் பார்க்க முடிகிறது. ஆலயத்துக்குள் நுழையும் அனைத்து பக்தர்களையும் ஆண் மற்றும் பெண் காவலர்கள் தனித்தனியே முழுச் சோதனை செய்த பிறகே அனுமதிக் கின்றனர். செல்போன், கேமரா போன்றவற்றைத் தனிக் கவுன்டர்களில் வாங்கி வைத்துக்கொண்டு, வெளியே வரும்போதுதான் தருகின்றனர். கோயிலுக்கு உள்ளே புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டு இருக்கிறது.

மதுரா கோயிலில் அருளும் மூலவரின் திருநாமம் ஸ்ரீகோவர்த்தநேசன். நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உடனுறைபவர் சத்யபாமா தாயார்.

ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி இங்கே மிகவும் விசேஷம். அந்த விழாவின் முதல் ஒரு வாரம் வரை ஸ்ரீகிருஷ்ண சரிதம் முழுவதையும் நாடகமாக நடிக்கிறார்கள். பல லட்சம் மக்கள் அதைக் கண்டுகளிப்பார்களாம்.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

கோயில் மிகவும் விஸ்தாரமாக இருக்கிறது. செயற்கையாக ஒரு குன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குன்றுக்குள் போய்ப் பார்த்துவிட்டும் வரலாம். அங்கே... வெட்டவெளி முற்றத்தில் துளசிச் செடிகளுடன் யாக குண்டம் ஒன்று தென்படுகிறது. சிற்ப வடிவில் தேவகியும் வசுதேவரும், கையில் வாளோடு கம்சனும் நிற்கிறார்கள். விலங்கோடு வசுதேவரும் தேவகியும் உட்கார்ந்திருக்கும் சிற்பம், ஒரு குழந்தையைத் தலைகீழாகப் பிடித்திருக்கும் கம்சன் என மேலும் பல சிற்பங்களையும் பார்க்க முடிகிறது.

இன்னும் சற்று உள்ளே போனால் வருவது, கல்கோட்டை போன்ற ஒரு பகுதி. வலதுபுறம் இருக்கும் பெரிய கதவுகளை அடுத்து அமைந்திருக்கும் அறையில் ஒரு மேடை இருக்கிறது. எல்லோரும் அந்த மேடையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு செல்கிறார்கள். சிலர், அங்கேயே அமர்ந்து தியானம் செய்கிறார்கள்.

இந்த மேடைதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இடம் என்கிறார்கள். அந்த மேடைக்கு உயரமான மேற்கூரை அமைத்திருக்கிறார்கள்.

அந்த திவ்ய இடத்தைத் தரிசித்துவிட்டு வெளியே வருகிறோம். கோயில் கட்டடத்தை ஒட்டியே இன்னொரு பெரிய கட்டடம் தென்படுகிறது. விலாசமான படிகளின் வழியாக ஏறி, அதற்குள் செல்கிறோம். எதிரே, மிகப் பெரிய ஹால். அங்கே எக்கச்சக்கமான தூண்கள். அவை சதுர வடிவில் அமைந்திருக்கின்றன. தூண்களில் மகாபாரதம் மற்றும் ராமாயணக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டு இருக்கின்றன. சந்நிதியில் பளிங்கினால் ஆன கடவுள் திரு உருவங்கள் காணப்படுகின்றன.

சந்நிதிக்கு வெளியே தசாவதாரக் காட்சிகளை வரைந்து தொங்கவிட்டு இருக்கிறார்கள். ஆஞ்ச நேயர் சந்நிதி ஒன்றும் அங்கே அழகுறக் காட்சி தருகிறது.

மதுராவின் சரித்திரத்தைப் புரட்டினால்... பல காலங்களில் வேறு வேறு வகையில் அங்குள்ள கோயில் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

மதுராவில் கேசவ தேவ் ஆலயம் (ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி), துவாரகீஷ் ஆலயம், நாம் யோக் சாதனா மந்திர் (பாபா ஜெய் குருதேவ் ஆலயம்), விஷ்ரம் காட் (யமுனை நதிக் கரை), மியூசியம், பிர்லா மந்திர் ஆகியவையும் நாம் காண வேண்டிய முக்கியமான இடங்கள்.

- யாத்திரை தொடரும்...

தகவல், படங்கள்: துளசி கோபால்