தொடர்கள்
Published:Updated:

ஆன்மிக திருவிழா!

ஆன்மிக திருவிழா!

##~##

சென்னையில் ஆறு நாட்கள் அமர்க்களமாக நடந்து முடிந்திருக்கிறது 5-வது 'இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி’. சென்னை- மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில், கடந்த பிப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை அன்று, நமது முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி துவங்கி வைக்க, பிப்ரவரி 24 வரையிலும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது இந்த ஆன்மிகத் திருவிழா.

 'உலகம் முழுக்க உள்ள இந்து அமைப்புகள் எவ்வளவோ சேவை செய்கிறார்கள். வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்பது போல் அவர்கள் செய்யும் சேவை வெளிச்சத்துக்கு வருவது இல்லை. இப்படிப்பட்ட இந்து அமைப்புகளின் சேவை மனப்பான்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதும், பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்து மதத்தின் பெருமையை எல்லோரும் அறியும்படி செய்வதுமே கண்காட்சியின் நோக்கம்'' என்றார்கள் இந்தக் கண்காட்சியின் அமைப்பாளர்கள்.

ஆன்மிக திருவிழா!

சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா நாடு முழுக்கத் தற்போது நடைபெற்று வருவதால், அவரது சிந்தனையை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், இந்தக் கண்காட்சி சுவாமி விவேகானந்தருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. சுமார் 10 லட்சம் பேர் கண்காட்சியைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர். 200-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள், மடங்கள், கோயில்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆன்மிக திருவிழா!

ஆன்மிகம் வளர்க்கும் புத்தகங்கள் மட்டுமின்றி மகான்களின் திருவுருவப் படங்கள், விக்கிரகங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. தவிர, ஆன்மிகத்தோடு ஆரோக்கியத்தையும் பேணும் வழிமுறைகளை எடுத்துரைப்பதாகவும் இந்தக் கண்காட்சி அமைந்தது கூடுதல் சிறப்பு.

ஆன்மிக திருவிழா!

பிராணாயாமம், பிரமிடு தியானம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வது எப்படி என்றும் சில ஸ்டால்களில் விளக்கம் அளிக்கப்பட்டது. பார்வையாளர்கள் அவற்றை ஆர்வமோடு கற்றுக்கொண்டதையும் காண முடிந்தது. கோபூஜை, குரு பூஜை, கன்யா பூஜை, பூமி பூஜை உள்ளிட்டவை ஒவ்வொரு நாளும் நடைபெற்றன. பிப்ரவரி 23-ஆம் தேதி அன்று காலையில், சென்னை தர்ம ரக்ஷண சமிதி நிகழ்த்திய கோசாலைகள் பராமரிப்பு குறித்த விளக்க சந்திப்பு நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது.

அன்று மாலையில், கண்காட்சியின் விசேஷ நிகழ்ச்சியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாணத்தைத் தரிசித்து மகிழ்ந்தனர்.

ஒரே இடத்தில் இவ்வளவு அமைப்புகளையும் அன்பர்களையும் கூட்டுவது என்பது சவாலான விஷயம்தான். அதைத் திறம்பட செய்து சாதித்திருக்கிறார்கள் கண்காட்சி அமைப்பாளர்கள். அடுத்த ஆண்டு முதல் மருத்துவம், கலை சார்ந்த விஷயங்களையும் இந்த சேவைக் கண்காட்சியில் இடம்பெறச் செய்யவும், வருங்காலத்தில் இந்தக் கண்காட்சியை இந்தியா முழுவதும் நடத்துவதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள்.  

ஆன்மிக திருவிழா!

'மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆன்மிகம் வளர்ப்பதுடன் சமூகத்துக்கு அருந்தொண்டு ஆற்றும் ஆன்மிக அமைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியதும் அவசியம். அதற்கு இதுபோன்ற ஆன்மிகத் திருவிழாக்கள் கட்டாயம் தேவை.

படங்கள்: வீ.நாகமணி