Published:Updated:

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

Published:Updated:
கதை கேளு... கதை கேளு!
##~##

'இப்ப நாம இருக்கிற ஊர் ஸ்ரீமுஷ்ணம். திருமால் சுயம்புமூர்த்தமா தோன்றிய தலங்கள் எட்டு. அதுல இதோ, இந்த ஸ்ரீமுஷ்ணமும் ஒண்ணு. தேவர்களாலும் ரிஷிகளாலும் மனிதர்களாலும் தோற்றுவிக்கப்பட்ட க்ஷேத்திரங் களைவிட, இப்படி இறைவனே சுயம்புவாகத் தோன்றிய தலங்கள் பல மடங்கு உயர்ந்தவைன்னு முன்னோர்கள் சொல்லியிருக்காங்க!'' என்று தாத்தா சொல்லிக் கொண்டே நடக்க... பேரனும் ஸ்ரீமுஷ்ணம் ஊரின் எளிமையை ரசித்தபடியே நடந்து வந்தான்.

 ''இங்கே பெருமாள் எப்படி, எந்த ரூபமா வந்தார் தெரியுமா? வராகமா அவதரிச்சு வந்தார். வராகம்னா பன்றி. ரொம்ப விசேஷமான தலம் இது.

ஹிரண்யாக்ஷகன் என்கிற அசுரன் தன்னோட கெட்ட குணத்தால, எல்லாரும் அழியணும்னு நினைச்சு, பூமியை அப்படியே சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள்ளே ஒளிச்சு வைச்சிட்டான்!

இந்த பூமியையும் மக்களையும் காப்பாத்தறதுக் காக வராகமா, அதாவது பன்றி உருவம் எடுத்து கடலுக்கடியில் புகுந்து, அங்கேருந்து பூமியை எடுத்து மேலே கொண்டு வந்து சேர்த்தார் திருமால். பகவான் எல்லார்க்கும் ஆனந்தத்தைத் தந்ததால, இதுக்கு ஆனந்தபவனம்னு ஒரு பேர் உண்டு. ஹிரண்யாக்ஷகனோட மனைவி ஜில்லிகை. அவள் திருமாலின் தீவிர பக்தை. அதனால இந்தத் தலத்துக்கு ஜில்லிகாவனம்னும் ஒரு பேரு உண்டு'' என்று தாத்தா விவரிக்க...

கதை கேளு... கதை கேளு!

''ஜில்லிகாவனம்... ஆஹா! பேரே ஜில்லுனு இருக்கே!'' என்று சிலாகித்த பேரன், ''அப்படின்னா ஸ்ரீமுஷ்ணம்னு ஏன் பேரு வந்துது தாத்தா?'' என்று கேட்டான்.

''நமக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ சில பாவங்கள் செஞ்சிருப்போம். அதனால தீய செல்வம், தீய புகழ், குறைந்த ஆயுள்னு நமக்கு விதிக்கப்பட்டிருக்கும். இத்தனைக் குறைகளையும் நீக்கி, நமக்கு மோட்சத்தைத் தரக்கூடிய ஸ்தலம் இது. அதை உணர்த்துற விதமாதான் ஸ்ரீமுஷ்ணம்னு பேர் அமைஞ்சுது.

வராக அவதாரத்தின் நோக்கம் முடிஞ்சதும், வைகுண்டம் போறதுக்குத் தயாரானார் பெருமாள். அதைத் தெரிஞ்சுக்கிட்ட பிரம்மா, 'ஸ்வாமி, பக்தர்களின் பாவங்களைப் போக்கி, அவங்களுக்கு எப்பவும் ஆனந்தத்தையும் மோட்ச கதியையும் வழங்கி அருள்பாலிக்கணும்.

கதை கேளு... கதை கேளு!

அதுக்கு இந்த க்ஷேத்திரத்துலயே நீங்க இருக் கணும்’னு வேண்டுகோள் விடுத்தார்.

உடனே பெருமாளும், 'ஆஹா... இருந்துட்டாப் போச்சு’ என்று சந்தோஷமாகச் சம்மதித்தாராம். அதனால, இங்கே வந்து ஸ்ரீவராக மூர்த்தியைத் தரிசனம் பண்ணினா, நம் பாவம் மொத்தமும் விலகி, நல்லது நடக்குங்கறது ஐதீகம்!'' என்று விழிகள் விரியச் சொன்னார் தாத்தார். தொடர்ந்து...

''வாயுபகவானும் திருமாலை வழிபட்டார். அதாவது கங்கைக்கு அருகில், புன்னை மரத்தடியில் அமர்ந்தபடி வாயு பகவான் திருமாலின் திருவடியை அடைய தவம் செஞ்சார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், 'வராக உருவத்தில், சாளக்ராமச் சொரூபமாக பூமியில் ஓரிடத்தில் இருக்கேன். விஸ்வகர்மாவைக் கொண்டு அங்கே திருவிமானம் அமைக்கச் செய்வாயாக!’ என அருளினார்.

அதன்படி, பிரம்மாவும் வாயு பகவானும் இந்த க்ஷேத்திரத்துக்கு வந்து வழிபட்டாங்க. இடுப்பில் ரெண்டு கைகளையும் வெச்சபடி கம்பீரமா நிக்கிற ஸ்ரீபூவராகரைப் பார்த்துக் கிட்டே இருக்கலாம். அவ்ளோ அழகு தெரியுமா பெருமாள்?'' என்று தாத்தா சொல்லி முடிப்பதற்கு உள்ளாகவே, ''பூவராகனா... ஸ்வாமிக்கு அப்படியரு பேரா?'' என்று கேட்டான் பேரன்.

கதை கேளு... கதை கேளு!

''ஆமாம்! பூமியைக் காப்பாத்தி ஆனந்தப்படுத்தினார் இல்லியா... அதனால அவருக்கு பூவராக மூர்த்தின்னு ஒரு பேரு அமைஞ்சுது. வெள்ளை நிறத்துல வராக அவதாரம் எடுத்ததால, அவருக்கு ஸ்வேத வராஹர் என்றும் ஒரு பேரு வந்துச்சு.    

இவரோட கீர்த்திக்கு எல்லையே இல்லை. வேத ஸ்வரூபமான விமானத்தின் கீழே அட்டகாசமா நின்ன கோலத்துல தரிசனம் தர்றார் பெருமாள். அசுரனை அழிக்கும்போது, சங்கு- சக்கரத்தை மறைச்சுக்கிட்டாராம் திருமால். பட்டாச்சார்யர் பூஜை பண்ணும்போது, ஸ்வாமியோட கிரீடத்தை எடுத்துக் காண்பிக்கும்போதுதான் அப்படி மறைச்சு வைச்சிருக்கிறதை நாமளும் பார்க்கமுடியும். ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும் பக்கத்துலயே இருக்காங்க!'' என்ற தாத்தா தொடர்ந்தார்...

''திருமாலைத் திருமணம் பண்ணிக்கறதுக்காக, ஒரு மகரிஷிக்கு மகளா அவதரிச்சாங்க ஸ்ரீமகாலக்ஷ்மி. அவளிடம் ஒரு சின்ன சோதனை செய்ய விரும்பினார் திருமால். அதன்படி பிரம்மதேவர் அன்னப்பறவையா உருவெடுத்து, பெருமாளைப் பத்தி அவதூறாப் பேச, அதைக் கேட்டுப் பதறிப்போன தேவி, தன் ரெண்டு காதுகளையும் மூடிக்கிட்டாளாம்.

அப்புறம், மகரிஷியோட பிரார்த்தனையாலயும் அம்பிகையோட வேண்டுதலாலயும் திருமால் மகாலட்சுமியை ஏத்துக்கிட்டுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதாக ஸ்தல புராணம் சொல்லுது! இங்கே, தாயாரோட திருநாமம்- ஸ்ரீஅம்புஜவல்லித் தாயார். தீர்த்தம்- நித்திய புஷ்கரணி. விருட்சம்- அரசமரம்.

இதெல்லாத்தையும்விட இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? ஸ்ரீமுஷ்ணத்துக்குப் பக்கத்துல தைக்கால்னு ஒரு கிராமம் இருக்கு. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிற ஊர் இது. நவாப் ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட தர்கா ஒன்று இங்கே பிரசித்தம்.

ஸ்ரீமுஷ்ணம் கோயில்ல மாசி மகம் பத்து நாள் விழா, பிரம்மோத்ஸவ வைபவமா நடக்கும். அப்போது, தீர்த்தவாரிக்காக கிள்ளை கடற்கரைக்கு புறப்பட்டுச்செல்லும் பெருமாளுக்கு, வழியில் தைக்கால் கிராமத்தில்- அந்த தர்காவைக் கடக்கும் போது, மேளதாளங்களோடு வரவேற்பு நடக்கும்.

கதை கேளு... கதை கேளு!

நவாபுக்கு வெகுநாட்களாக குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. பின்னர் ஸ்ரீமுஷ்ணம் பூவராகரின் திருவருளால் குழந்தைச் செல்வம் கிடைத்ததாம். இதற்கு நன்றிக்கடனாக, அன்று தொட்டு இன்று வரை பிரம்மோத்ஸவத்தின்போது, இந்தப் பகுதியில் பெருமாளுக்கு தடபுடலா வரவேற்பு நடக்கறது வழக்கமாயிடுச்சு.

அதுமட்டுமில்ல... பூவராகப் பெருமாளின் ஞாபகார்த்தமா பூராசாஹிப்னு இங்கே நிறையக் குழந்தைகளுக்குப் பெயர் வைச்சதாகவும் சொல்றாங்க.

இங்கே வந்து ஸ்ரீவராகர்கிட்ட மனசார வேண்டிக்கிட்டா பதவி உயர்வு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நிலைத்த செல்வம்ன்னு சகலமும் கிடைக்கும். தவிர, குரு யோகம் கிடைக்கக் கூடிய ஸ்தலம் இது. ராகு-கேது தோஷம் நீங்கும். இங்கே கோரைக் கிழங்கு நைவேத்தியப் பிரசாதம் விசேஷம். நீயும் நல்லா வேண்டிக்கோ!'' என்று தாத்தா சொல்ல...

ஸ்ரீவராகரின் திருச்சந்நிதியில் கண் மூடிப் பிரார்த்தித்தனர், தாத்தாவும் பேரனும்!

இன்னும் தரிசிப்போம்

படங்கள்: தே.சிலம்பரசன்