தொடர்கள்
Published:Updated:

விடமுண்டகண்டனுக்கு கும்பாபிஷேக விழா!

விடமுண்டகண்டனுக்கு கும்பாபிஷேக விழா!

##~##

ற்சாகத்திலும் குதூகலத்திலும் இருக்கிறார்கள் கன்னியாபட்டி மக்கள். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில், சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது இலுப்பூர். இங்கிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. பயணித்தால், கன்னியாபட்டி கிராமத்தை அடையலாம். இங்கே, ஸ்ரீசிவகாமி அம்பாளுடன் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீநீலகண்டேஸ்வரர்.

 சக்தி விகடனில், கடந்த 13.12.11 தேதியிட்ட இதழில், 'விடமுண்டகண்டனுக்கு விழா என்றைக்கு?’ என்ற தலைப்பில், ஸ்ரீநீலகண்டேஸ்வரர் கோயில் பற்றியும், அதன் அவல நிலை குறித்தும் 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம்.

கற்றளிக் கோயிலாக இருந்த ஆலயம் மழையாலும் வெள்ளத்தாலும் சிதைந்து போய், கற்குவியலாகக் காட்சி அளிக்கிறது என்றும் சொல்லி நம் வேதனைகளைத் தெரிவித்திருந்தோம். 'விவசாயத்தைச் செழிக்கச் செய்த ஸ்ரீநீலகண்டேஸ்வரர் கோயில், இன்றைக்கு ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம்கூட இல்லாமல் இருக்கிறதே’ என்று கண்ணீருடன் குறிப்பிட்டிருந்தோம்.

இதைப் படித்துவிட்டு, ஏராளமான வாசகர்கள் கோயிலைத் தொடர்பு கொண்டார்கள். தங்களால் இயன்றதைக் கோயில் திருப்பணிக்கு வழங்கினார்கள். அதையடுத்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மூவருக்கும் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. கோயில் மதில், கோபுரம், விமானம், பிராகாரம் என அடுத்தடுத்துப் பணிகள் வேகமாக நடைபெற்றன. இப்போது புதுப்பொலிவுடன் திகழ்கிறது ஆலயம். இதையடுத்து வாசகர்களின் பேருதவியாலும் இறை அன்பர்களின் நன்கொடைகளாலும், வருகிற 18.3.13 திங்கட்கிழமை அன்று காலை 9.34 முதல் 10.30 மணிக்குள் ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

விடமுண்டகண்டனுக்கு கும்பாபிஷேக விழா!

''நீலகண்டேஸ்வரர் கோயிலுக்கு நல்லது நடந்தாத்தான் ஊரும் நல்லாருக்கும். எப்ப கும்பாபிஷேகம் நடக்கும்னு ஏங்கிக்கிட்டே இருந்தோம். இப்ப சக்தி விகடன் வாசகர்களோட கைங்கர்யத்தாலயும், சிவனடியார்களோட பேராதரவாலயும் கோயில் பொலிவாயிடுச்சு. இதோ, கும்பா பிஷேகமும் நடக்கப்போகுது. சக்தி விகடன் வாசகர்களுக்கு நன்றி!'' என்கிறார் கோயில் திருப்பணியில் ஈடுபட்டுள்ள ஆண்டப்ப தென்னத்திரையர்.

''புதுசு புதுசா கோயில்களைக் கட்டுறதை விட, புராதனக் கோயில்களை சீரமைக்கறதும் திருப்பணி செய்வதும் மகா புண்ணியம்னு காஞ்சி மகாபெரியவாளே சொல்லியிருக்கார். அதன்படி, விளக்கு எரியாத எத்தனையோ கோயில்களுக்கு விளக்கு, திரி, எண்ணெய் வழங்கற பணியைச் செஞ்சுக்கிட்டிருக்கோம். இப்ப, சிதிலம் அடைந்த ஆலயத்தைச் செப்பனிட்டுச் சீர்படுத்தி, கன்னியாபட்டி கோயில்ல கும்பாபிஷேகமும் நடக்கப் போகுது. இதுக்கு உறுதுணையா இருந்த சக்தி விகடன் வாசகர்களுக்கும் அடியார்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம்'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் கந்தசாமி சிவனடியார்.

விடமுண்டகண்டனே போற்றி!

- வி.ராம்ஜி

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்