Published:Updated:

தாலி பாக்கியம் பெற சேலை காணிக்கை!

திருக்கல்யாணத் திருத்தலங்கள்!

தாலி பாக்கியம் பெற சேலை காணிக்கை!

திருக்கல்யாணத் திருத்தலங்கள்!

Published:Updated:
##~##

காரைக்குடியில் இருந்து குன்றக்குடி செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கோவிலூர். இந்த ஊரில் அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீகொற்றவாளீஸ்வரர் திருக்கோயில்.

  ஒருகாலத்தில், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த வீரசேகர பாண்டிய மன்னர் வேட்டையாடச் சென்றார். அப்போது, வன்னி மரத்தின் நிழலில் சிறிது நேரம் கண்ணயர்ந்து ஓய்வு எடுத்தார். பிறகு, கண்விழித்துப் பார்த்தபோது, தனது உடைவாள் காணாமல் போயிருந் தது கண்டு பதறிப்போனார். தனது பரிவாரங்களுடன் வனம் முழுவதும் உடைவாளைத் தேடியலைந்தார். அப்போது, வெட்டவெளியில் ஒரு சிவலிங்கத்தையும், அருகில் தனது உடைவாள் இருப்பதையும் பார்த்துப் பரவசமானார் மன்னர்.

'இது இறைவன் சித்தம். இறைவன் தன்னை வெளிப் படுத்திக்கொள்ளும் தருணத்தைச் சுட்டிக்காட்டி அருளியிருக்கிறார்’ என உணர்ந்த மன்னர், அதே இடத்தில் அழகுறக் கோயில் எழுப்பி, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். கொற்றவனின் வாளைக் கொண்டு சிவனார் அடையாளம் காட்டியதால், இங்கே உள்ள சிவனாருக்கு ஸ்ரீகொற்றவாளீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தல வரலாறு. சம்ஸ் கிருதத்தில் 'ராஜகட்க பரமேஸ்வரர்’ என்று பெயர்.

தாலி பாக்கியம் பெற சேலை காணிக்கை!

அம்பாளின் திருநாமம்- திருநெல்லையம்மன். சம்ஸ்கிருதத்தில் சாலிவாடீஸ்வரி (சாலி என்றால் நெல்). கோயில் நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர், தன் மகனை நெல்மணிகளுக்குக் காவல் வைத்துச் சென்றார். அந்தச் சிறுவன் சிறிது நேரத்தில் விளையாடச் சென்றுவிடவே, அவனுக்குப் பதிலாக அம்பாளே அவன் வடிவில் வந்து நெல்மணிகளைக் காவல் காத்தாள். மதியம் நெருங்கியதும் அந்த விவசாயி திரும்பி வந்து, பையனுக்குத் தயிர்சாதம் கொடுக்க, மகன் வடிவில் இருந்த அம்பிகை அதை வாங்கி விரும்பிச் சாப்பிட்டாள்.

விளையாடச் சென்றிருந்த சிறுவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து, 'பசிக்கிறது. சாப்பாடு போடுங்கள்’ என்று கேட்க, அப்பாவுக்கோ குழப்பம்! 'இப்போதுதானே சாப்பாடு கொடுத் தோம்’ என்று யோசித்துக்கொண்டே வர... வழியெங்கும் தயிர்சாதம் சிதறிக் கிடந்தது. அதனைப் பின்தொடர்ந்து செல்ல, கோயிலின் சந்நிதியை அடைந்தார். அங்கே, அம்பிகையின் உதட்டோரத்தில் தயிர்சாதப் பருக்கைகள் ஒட்டியிருந்தது கண்டு மெய்சிலிர்த்தார் விவசாயி.

தாலி பாக்கியம் பெற சேலை காணிக்கை!

விஷயம் தெரிந்து ஊரே திரண்டு வந்து அம்பாளைத் தரிசித்தது. இதனால் அவளுக்குத் திருநெல்லையம்மன் எனும் திருநாமம் அமைந்ததாம். இன்றைக்கும் உச்சிக்கால பூஜையில், நெல்லை அம்மனுக்குத் தயிர் சாதம் சமர்ப்பிக்கப்படுகிறது.

இங்கே, இன்னொரு சிறப்பு... ஸ்ரீநித்யகல்யாணி சமேதராக ஸ்ரீகயிலாசநாதரும் குடிகொண்டிருக்கிறார். இங்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஸ்ரீநெல்லையம்பாளுக்குப் புடவை சார்த்தி வேண்டினால், கல்யாண வரம் நிச்சயம் என்கின்றனர், பக்தர்கள். அதே போல், ஸ்ரீநித்யகல்யாணி அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், மாங்கல்ய பலம் பெருகும்; தாலி பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தாலி பாக்கியம் பெற சேலை காணிக்கை!

ஆடிப்பூரத்தன்று இங்கு நடைபெறும் திருக்கல்யாணத்தைத் தரிசிக்க காரைக்குடி, கோட்டையூர், சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை எனப் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருவர். அப்போது சிவ- பார்வதியை தரிசித்து, மாலை அணிவித்து வழிபட, விரைவில் கல்யாண மாலை தோள் சேரும். அன்றிரவு, அருகிலுள்ள திருக்குளத்தில் ஸ்ரீகொற்ற வாளீஸ்வரர் தெப்பத்தில் பவனி வருவதைக் காணக் கண் கோடி வேண்டும். மேலும், இங்கே உள்ள ஸ்ரீநடராஜர் விக்கிரகம், கோயில் கட்டும்போது பூமியில் இருந்து எடுக்கப்பட்டதாம்.

இங்கு, நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் அருள்வது விசேஷ அம்சம். தை அமாவாசை முதலான நாட்களில், கோயில் திருக்குளத்தில் பித்ருக்களுக்கான ஆராதனைகளைச் செய்து சிவனாரைப் பணிந்தால், காசியிலும் ராமேஸ்வரத்திலும் திதி கொடுத்த புண்ணியங்களைப் பெறலாம்.

  - சு.ராம்குமார்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்