தொடர்கள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!
##~##

ஸ்ரீமத் ராமாயணத்தின் தியான சுலோகம் ஒன்று- மிக அற்புதமான விளக்கத்தைத் தருகிறது. 'வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே...’ அதாவது, 'வேதங்களின் நாயகனாகக் குறிக்கப்படும் பரம்பொருளே தசரதச் சக்ரவர்த்திக்கு மகனாக, ஸ்ரீராமனாக அவதரித்தார்’ என்பது கருத்து.

அந்தச் சுலோகத்தின் அடுத்த வரி, 'வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷ£த் ராமாயணாத்மநா’ என்கிறது. அதாவது, பரம் பொருளாகிய ஸ்ரீராமனின் கல்யாண குணங்களை விவரிக்க, அந்த வேதங்களே வால்மீகியின் வாக்கில் இருந்து ராமாயணமாகப் பிறப்பெடுத்தனவாம்.

எனில், சதுர்வேதங்களுக்கும் கருப்பொருள் சாட்ஷாத் ஸ்ரீராமன்தான். அவனுடைய திருக்கதையைப் படிப்பது, நான்கு வேதங்களையும் படிப்பதற்குச் சமம்!

எப்படி?

'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்று, ஓர் ஆசிரியரின் கண்டிப்புடன் புத்தி சொல்லும் வேதம். தசரதரின் வாக்குக்கு இணங்க ஸ்ரீராமன் காட்டுக்குச் சென்ற கதையைச் சொல்லி, அதே கருத்தைத் தோழமையுடன் அறிவுறுத்தும் ராமாயணம்.

தசாவதார திருத்தலங்கள்!

'உயர்வு- தாழ்வு பேதம் கூடாது’ என வேதம் கட்டளையிடும். அதையே, குகனையும் சபரியையும் உதாரணமாக எடுத்துக்காட்டி அன்புடன் விளக்கும் ராமாயணம். 'பிறன் மனை நோக்காதே’ என வேதம் எச்சரிக்கும். இந்த விஷயத்தை, ராவணனின் நிலையைச் சொல்லி நேசத்துடன் போதிக்கும் ராமாயணம்.

வேதத்தில் கண்டிப்பின் தொனி; இதிகாச- புராணங்களிலோ நேசத்துடன் கூடிய அறிவுரை. இந்த இரண்டுமாக இருப்பவன் ஸ்ரீராமன்.

அந்த வேத நாயகனை, காவியத் தலைவனை ஞான ரூபத்தில், யோக திருக்கோலத்தில் நமக்குக் காட்டித் தருகின்றன, சில புண்ணிய க்ஷேத்திரங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

கதாம்பிகையாம் அம்பாள் ஸ்ரீரேணுகாதேவியாகக் கோயில் கொண்டிருக்கும் தலம் படைவீடு எனப்படும் படவேடு. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீயோக ராமர் திருக்கோயில்.

பட்டாபிஷேகத்துக்குப் பிறகு, ஸ்ரீராம ராஜ்ஜியம் உலகம் உவக்கத் திகழ்ந்த காலம். தசகண்டனாம் ராவணனை அழித்து மெய்கீர்த்தி கொண்ட சக்ரவர்த்தி ஸ்ரீராமனுக்கு, சதகண்ட ராவணனைக் குறித்த தகவல் கிடைத்தது.

இலங்கேஸ்வரனுக்குப் பத்துத் தலைகள் என்றால், இவனுக்கோ நூறு தலைகள். எனவே, சதமுக (சதகண்டன்) ராவணன் என்று நாமகரணம். பாற்கடலில் மிகப் பிரமாண்டமாக- ஹேமசிருங்க பட்ட ணம் எனும் நகரை நிர்மாணித்து ஆண்டு வந்தான் இந்த அசுரன். இவனை அழித்தாலொழிய, அசுரர் கொட்டம் பூரணமாக அடங்காது என்பதும் தெரிய வந்தது.

கணமும் தாமதிக்காமல் ஸ்ரீராம சேனை ஆயத்தமானது. தம்பியரும் அனுமனும் உடன்வர, போர்க்களம் புறப்பட்டார் ஸ்ரீராமன். இந்த முறை சீதாதேவியும் உடன் வந்தாள்.

அனைவரும் கடற்கரையை அடைந்தனர். சமுத்திரத்தின் மையத்தில் இருக்கும் ஹேமசிருங்க பட்டணத்தை அடைவது எப்படி என்று எல்லோரும் யோசித்த வேளையில், அனுமன் விஸ்வரூபம் எடுத்தார். அப்படியே நெடுஞ்சாண் கிடையாகப் படுத்தார். அவரின் கால்கள் கடற்கரையில் இருக்க, கைகள் ஹேமசிருங்க பட்டணத்தின் கரையைத் தொட்டன.

ஆமாம்! அஞ்சனை மைந்தன் தன்னையே பாலம் ஆக்கிக்கொள்ள, ஸ்ரீராம சேனை மிக எளிதில் கடலைக் கடந்தது.

ஆனால், சதமுக ராவணனை வெல்வது அத்தனை எளிதாக அமையவில்லை. அவனது மூச்சுக்காற்றே ராமசேனையை சுட்டெரித்தது. நீண்ட நெடுநேரம் வெகு உக்கிர மாக, எப்பக்கமும் வெற்றி தோல்வியின்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது போர். அசுரனை வெல்வது எப்படி?

தசாவதார திருத்தலங்கள்!

அவன் உயிரைப் போக்கும் ரகசியம்தான் என்ன? கண்மூடி தியானித்தாள் சீதா. அவளுக்கு ஓர் உண்மை புலப்பட்டது. ஆஞ்சநேயனை அழைத்தாள்.

''அனுமந்தா, இந்த அசுரன் ரேணுகாதேவியின் தீவிர பக்தன். அவள் கோயில் கொண்டிருக்கும் குண்டலீபுரத்தில், ஒரு தடாகத்தில் மலர்ந்திருக்கும் கமலத்தில் தான் இவனின் ஜீவன் பாதுகாக்கப்படுகிறது. அந்த அன்னையின் அனுக்கிரகத்தால் ஐந்து வண்டுகள் கமலத்தைக் காவல் காக்கின்றன. நீ ஒரு நாழிகைப் பொழுதுக்குள் குண்டலீபுரம் சென்று வண்டுகளை வதைத்து, அந்த ஜீவனைப் பறித்து வா!'' என்று கட்டளையிட்டாள்.

மனோவேகத்தில் புறப்பட்டார் வாயுமைந்தன். அவர் வருவதை அறிந்த ஸ்ரீரேணுகாதேவி, தாமரை தடாகத்தை மறைத்துவிட்டாள். அனுமன் கோபம் கொண்டார். நூறு முகங்களுடன் பேருருவம் எடுத்தவர், குண்டலீபுரத்தையே பெயர்த்தெடுக்க முயற்சித்தார். இதைக் கண்ணுற்ற ஸ்ரீரேணுகாதேவி நூறு கற்களாகும்படி அனுமனைச் சபித்தாள். பதிலுக்கு அனுமனும், 'மண்மாரி பெய்து குண்டலீ புரம் அழியக்கடவது’ என்று சாபம் தந்தார்.

இதையறிந்த ஸ்ரீராமன் குண்டலீபுரத்துக்கு எழுந்தருளினார். அசுர வதம் நிகழ வேண்டியதன் அவசியத்தை அம்பிகையிடம் எடுத்துரைத்தார். தேவியும் சினம் தணிந்தாள். அனுமனுக்கு அவள் தந்த சாபம் மாற்றியமைக்கப்பட்டது. ''நூறு தலை களுடன் இவன் வந்ததால், இவனின் அம்சம் நூறு சிலைகளாக மாறட்டும். இந்த குண்டலீபுரத்தின் எண் திசைகளிலும் இருந்து இவனே காவல் காக்கட்டும்!'' என்று அருளினாள். அதன் பிறகு, அம்பிகையின் அனுக்கிரகத்தால் தடாகத்தில் இருந்த வண்டுகள் அழிக்கப்பட்டன. அசுரனும் வீழ்த்தப்பட்டான். போர் முடிந்த பிறகு, சீதாதேவியுடனும் தம்பி லட்சுமணன் மற்றும் அனுமனுடனும் குண்டலீபுரம் எனும் இந்தத் தலத்துக்கு (படவேடு) வந்து கோயில்கொண்டாராம் ஸ்ரீராமன்!

நெடுங்குணம் என்ற திருத்தலத்திலும் ஸ்ரீயோக ராமரைத் தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும், ஆரணி மற்றும் வந்தவாசியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது நெடுங்குணம்.

தசாவதார திருத்தலங்கள்!

இலங்கையில் ராவணனை அழித்துத் திரும்பியபோது, வழியில் இந்தத் தலத்தில் இருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆஸ்ரமத்துக்கு எழுந்தருளினார் ஸ்ரீராமன். சுக மகரிஷி, தான் பாதுகாத்து வைத்திருந்த அரியச் சுவடிகளை ஸ்ரீராமனுக்குத் தந்தார். அந்தச் சுவடிகளைப் பெற்று அனுமன் படிக்க, அதற்கு ஸ்வாமி ஞான விளக்கம் தந்தாராம். சுகப்பிரம்ம மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று இந்தத் தலத்தில் தங்கிய ஸ்ரீராமன், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுக்கு சாஸ்திர விளக்கங்களை உபதேசித்த ஸ்ரீராமன் அதே கோலத்தில் இங்கு எழுந் தருளியிருப்பதாக ஐதீகம்.

அழகுற அமைந்திருக்கும் ஆலயத்தின் உள்ளே கருவறையில், வலப்புறம் லட்சுமணன் நின்றிருக்க, இடப்புறத்தில் சீதாபிராட்டியுடன் காட்சி தருகிறார் ஸ்ரீராமன். பத்மாசனத்தில் அமர்ந்து, ஞானம் உபதேசிக்கும் ஸ்வாமியின் அருட்கோலம், காண்பதற்கரிய தரிசனம். சுவடியுடன் அமர்ந்திருக்கும் அனுமனும் கொள்ளை அழகு! இங்கு அருளும் தாயாரின் திருநாமம் ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார்.

ஆடியில் பவித்ரோத்ஸவம், வைகாசி யில் கருடசேவை, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி என விழாக்களுக்குக் குறைவில்லாத இந்த ஆலயத்தில், ஸ்ரீராமநவமி விழாவும் மிக விசேஷம். பத்து நாள் விழாக்களில் ஏதேனும் ஒருநாள் இங்கு வந்து, ஸ்ரீயோக ராமரைத் தரிசித்தால், ஞானம் கைகூடும்; இல்லறம் செழிக்கும் என்பது ஐதீகம்!

படவேடு, நெடுங்குணம் மட்டுமின்றி ரகுநாத சமுத்திரம் முதலான இன்னும் சில தலங்களிலும் ஸ்ரீயோக ராமரைத் தரிசிக்கலாம்.

- அவதாரம் தொடரும்...

படங்கள்: பா.கந்தகுமார்,

எம்.என்.ஸ்ரீநிவாசன்