புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
##~##

டைப்புக் கடவுளாம் ஸ்ரீபிரம்மா தனது படைப்புத் தொழிலைச் செய்வதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; நாம் செய்கிற சத்தான காரியங்களாகட்டும், தவறான செயல்களாகட்டும்... நம் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கு ஒரு படையையே வைத்திருக்கிறார் என்பதை நினைவில்கொண்டு நாம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியது அவசியம்.

பிரம்மாவின் கண்காணிப்புப் படையினர் எட்டுத் திசையிலும் இருந்துகொண்டு, தேர்ந்த உளவுப்படையினர் போன்று இமைமூடாமல் நம்மைக் கண்காணித்து வருகிறார்கள். நாம் செய்கிற பாவம், புண்ணியம் அனைத்தையும் தங்களின் தலைவனான ஸ்ரீபிரம்மாவுக்கு, 'உங்களால் படைக்கப்பட்ட இன்னார் இப்போது இப்படி இப்படியான செயல்களைச் செய்துகொண்டிருக்கிறார்’ என்று உடனுக்குடன் செய்தி அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் எட்டுத்திக்கிலும் இருந்து செயல்படுவதால் அவர்களை 'அஷ்டதிக் பாலகர்கள்’ என்பார்கள். கிழக்கில் இந்திரனும், தென்கிழக்கில் அக்னியும் இருக்கிறார்கள். மேற்கில் வருண பகவானும், வடமேற்கில் வாயு பகவானும் அமர்ந்திருக்கிறார்கள். வடக்கில் குபேரனும், வடகிழக்கில் ஈசானனும் கண்கொத்திப் பாம்பாக இருந்து நம்மைக் கண்காணிக்கிறார்கள். தெற்கில் யமனும், தென்மேற்கில் நிருதி பகவானும் கோலோச்சுகிறார்கள்.

மனிதர்களின் செயல்கள் அத்தனைக்கும் சாட்சியாகத் திகழும் அஷ்டதிக் பாலகர்களே ஒருமுறை செயலற்று ஸ்தம்பித்துப் போனார்கள். ஆமாம்... சிவனார் ஆலகால விஷத்தை உண்டபோது அஷ்டதிக் பாலகர்கள் மட்டுமின்றி திருமால், ஸ்ரீபிரம்மா, இந்திரன் என அத்தனை பேருமே தங்கள் தொழிலை மறந்து விக்கித்து நின்றுவிட்டார்கள்.  

ஆலயம் தேடுவோம்!

உலகின் அனைத்துச் செயல்பாடுகளும் ஸ்தம்பித்து அப்படி அப்படியே நின்றுவிட... தேவர்களும் முனிவர்களும் சிவனாரிடம் ஓடி வந்து, கதறினார்கள். பிறகு சிவனின் உத்தரவுப்படி சிவபூஜையில் இறங்க முடிவு செய்தார்கள்.

காசியாரண்யம் என்கிற க்ஷேத்திரத்தைச் சுற்றி வந்து, அவரவர் திசைக்குச் சென்றார்கள். காசியாரண்யம் என்பது தற்போது ஆலங்குடி என்று அழைக்கப்படுகிறது. ஆமாம்... தஞ்சாவூருக்கு அருகில் உள்ள குரு ஸ்தலம் ஆலங்குடிதான்! இந்தத் தலத்துக்கு அருகில் சுமார் 1 கி.மீ. தொலைவில், பூளைவன நத்தம் என்றொரு கிராமம் உள்ளது. பூளை மரங்கள் அடர்ந்த வனம் என்பதால் இந்தப் பெயர். இப்போது இது புலவர்நத்தம் என வழங்கப்படுகிறது. வங்கனார் எனும் சங்கப்புலவர் இந்தத் தலத்தின் மேன்மையை அறிந்து உலகுக்கு உணர்த்தியதால், அந்தப் புலவரின் நினைவாக புலவர்நத்தம் என வழங்கப்படுவதாகவும் சொல்வர்.

காசியாரண்யம் எனும் தலத்தைச் சுற்றி அஷ்டதிக் பாலகர்களும் சென்றார்கள். ஆரண்ய தலத்தில் இந்திரன் தீர்த்தம் உருவாக்கி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். எனவே, இங்கே உள்ள தீர்த்தம் இந்திர தீர்த்தம் எனப்படுகிறது. அதேபோல், பூனாயிருப்புப் பகுதியில் அக்னி பகவான் (அக்னி தீர்த்தம்), நரிக்குடியில் எமன் (எம தீர்த்தம்), பூந்தோட்டத்தில் வருண பகவான் (வருண தீர்த்தம்), மருதூரில் வாயு பகவான் (வாயு தீர்த்தம்), கீழ அமராவதியில் குபேரர் (குபேர தீர்த்தம்), சித்தன்வாழூரில் ஈசான்யர் (ஈசான்ய தீர்த்தம்) மற்றும் பூளைநத்தத்தில் நிருதி பகவான் (நிருதி தீர்த்தம்) ஆகியோர் தீர்த்தக் குளம் அமைத்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, இழந்த தொழிலை மீண்டும் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம்.

ஆலயம் தேடுவோம்!

பூளைநத்தம் என அழைக்கப்பட்டு தற்போது புலவர்நத்தம் என மருவியுள்ள இந்தக் கிராமத்தில், நிருதி பகவான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனி அமைந்துள்ள ஆலயத்தையும் தீர்த்தக் குளத்தையும் இன்றைக்கும் காணலாம்.

திருவாரூர் மாவட்டத்தில், ஆலங்குடிக்கு அருகில், புலவர்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயத்தில் கோயில்கொண்டுள்ள சிவனாரின் திருநாமம்- ஸ்ரீநிருதிபுரீஸ்வரர். நிருதி பகவான் வழிபட்டு வரம் பெற்ற தலம் என்பதால் சிவனாருக்கு இந்தத் திருநாமம். வழக்குச் சொல்லில் ஸ்ரீநிருதீஸ்வரர் என்கிறார்கள்.

இங்கு வந்து வழிபட்டால், இழந்தவை அனைத்தையும் பெறலாம்; தொழில் அபிவிருத்தியாகும்; மனதில் நிம்மதியும் தைரியமும் பிறக்கும்; இல்லறத்தில் இனிமை யான சம்பவங்கள் அரங்கேறும் என்பது ஐதீகம்.

சோழர்கள் காலத்தில், இங்கே ஸ்ரீநிருதீஸ்வரருக்கு மிகப்பெரிய விழாக்களெல்லாம் நடந்திருக்கின்றன; அப்படி விழாக்கள் நடைபெறுகிறபோது திருவாரூர், நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்சிராப்பள்ளியில் இருந்தெல்லாம் மக்கள் குடும்ப சகிதமாக வந்து வழிபடுவார்களாம். கொஞ்சம் வில்வம் சார்த்தி, வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் குடும்பத்தில் ஒரு குறைவும் இருக்காது என்கின்றனர், ஊர்க்காரர்கள்.

ஆலயம் தேடுவோம்!

ஆனால், இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வழிபாடுகளின்றி, கவனிப்பதற்கு ஆட்களும் இல்லாமல் சிதிலமுற்று முள்ளும் முட்புதருமாகி, ஆலயம் அவல நிலைக்குள்ளானது கண்டு கலங்கிப் போனார்கள் ஊர்மக்கள். அதையடுத்து அனைவரும் ஒன்றுகூடி, கமிட்டி ஒன்றை அமைத்து, கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

''நம்ம வாழ்க்கைல சின்ன தடைகள் இருந்தாக்கூட, அதையெல்லாம் தகர்த்து நல்வழி காட்டுவார் நிருதி பகவான். இந்தத் தீர்த்தக் குளத்துல நீராடி, நிருதி பகவான் பிரதிஷ்டை செஞ்ச சிவபெருமானை வணங்கி வழிபட்டா, எல்லாத் தடைகளும் நீங்கும். எல்லா வளமும் கிடைச்சு நிம்மதியா வாழலாம்கறது ஐதீகம்! அப்பேர்ப்பட்ட கோயில்ல, கும்பாபிஷேகம் நடக்கணும். அதான் எங்க ஊர்க்காரங்களோட ஆசை!'' என்று கலங்கிய கண்களோடு தெரிவிக்கிறார் தட்சிணாமூர்த்தி.

''இங்கே வந்து வேண்டிக்கிட்டா, நாமோ நம்ம முன்னோர்களோ தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச அத்தனைப் பாவங்களும் விலகிப் போயிடும். புண்ணிய பலன்கள் கிடைக்க ஆரம்பிச் சிடும். இங்கே உள்ள அம்பாள் ஸ்ரீதர்மசம்வர்த்தினி ரொம்பவே வரப்பிரசாதி. இவ குடியிருக்கிறதுக்கு ஒரு சந்நிதி கட்டிக்கொடுத்தா, வழக்குல நமக்குதான் நல்ல தீர்ப்பு வரும். சத்தியம் ஜெயிக்கும். தர்மம் தழைக்கும்!'' என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

ஆலயம் தேடுவோம்!

நாம் செய்யும் செயல்களையெல்லாம் கண்காணித்துக்கொண்டிருக்கிற அஷ்டதிக் பாலகர்களில் ஒருவரான நிருதி பகவான் சிவபெருமான வணங்கி, இழந்த தன் தொழிலைத் திரும்பப் பெற்ற திருத்தலம் இப்படிச் சிதைந்தும் புதைந்தும் கிடக்கலாமா? சிவனார் குடிகொண்டிருக்கும் சந்நிதி நன்றாக இருந்தால்தானே, நிருதி பகவானுக்கு அருளியதுபோல இழந்தவற்றையெல்லாம் நமக்கும் அள்ளித் தருவான்; நம் துயரங்களையெல்லாம் கேட்டு அருள்புரிவான் அந்த ஈசன்! முன்வினைகளால் செல்வத்தையோ நீதியையோ நாம் இழந்திருந்தால், அவற்றை நாம் திரும்பப் பெற வேண்டாமா? அதற்கு இந்த ஆலயத்தை நாம் சீரும் சிறப்புமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம் அல்லவா?

எத்தனையோ தெய்வங்களும் மகான்களும் வழிபட்ட தலம் இது. ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள் வணங்கி வழிபட்ட ஆலயம் இது. அஷ்டதிக் பாலகர்கள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆலயங்கள் என்பது நம் தமிழகத்தில் வெகு குறைவுதான். அப்படி அரிதான, அற்புதமான ஆலயங்களில் ஒன்றான புலவர்நத்தம் கோயிலைப் பாதுகாப்பதும் சீரமைப்பதும் நம் கடமை அல்லவா?

நூறு செங்கல்லோ சிமென்ட் மூட்டையோ, மணலோ கற்களோ உங்களால் முடிந்ததை இந்தக் கோயிலுக்கு, நிருதி பகவான் வழிபட்ட இந்தத் தலத்துக்கு, ஸ்ரீநிருதிபுரீஸ்வரர் கோயிலுக்கு வழங்கி, திருப்பணியில் பங்கு பெறுங்கள். இழந்த செல்வத்தை, இழந்த நிம்மதியை அடைவீர்கள். வேலையில் பதவி உயர்வும், தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, படைத்த பிரம்மா மகிழ்ந்து போய், உங்கள் வம்சத்தை வாழ்வாங்கு வாழ அருளுவார்.

நிருதி பகவானே போற்றி!

படங்கள்: செ.சிவபாலன்

எங்கே இருக்கிறது?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஆலங்குடி குரு பகவான் திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள ஆலங்குடி தலத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீநிருதிபுரீஸ்வரர் கோயில். கும்பகோணத்தில் இருந்தும் மன்னார்குடியில் இருந்தும் சுமார் 18 கி.மீ. தொலைவு. பஸ் வசதி உண்டு.