புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!
##~##

கோவர்த்தனம்- ஸ்ரீகண்ணனின் மகிமைகள் நிரம்பி வழியும் புண்ணிய பூமி. மதுராவில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பிருந்தாவனம் தரிசனம் முடிந்து மதுராவில் தங்கிய நாங்கள், மறுநாள் காலையில் கோவர்த்தனத்துக்குப் பயணமானோம்.

 'கோ’ என்றால் பசுக்கள் என்றும், 'வர்த்தன்’ என்றால் பராமரிப்பு என்றும் பொருள். இங்கேயும் திரும்பிய பக்கம் எல்லாம் கிருஷ்ணர் கோயில்களே! ஊருக்குச் செல்லும் வழி நெடுகிலும் குட்டிக் குட்டிக் கிராமங்கள். சாலையின் இருபுறங்களிலும் பெட்டிக் கடைகள், சிறிய சிறிய வீடுகள் காணப்படுகின்றன. எங்கும் பசுக்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

ஜனக் கூட்டம் அதிகமாகவும், வண்டிக் கடைகள் நிரம்பியும் இருக்கும் இடமான கோவர்த்தனத்தை அடைந்த பின்பு, ஆழ்வார்களால் பாடல்பெற்ற கோயிலைக் கண்டறிவதில் பெரும் சிரமம் இருந்தது. உள்ளூர் மக்களால் அந்தக் கோயிலை நமக்குத் தெளிவாக அடையாளப்படுத்த முடியவில்லை. எனினும், நாம் கோவர்த்தன மலை இருக்கும் அந்த பூமியையே திவ்ய தேசமாக வழிபடலாம். இருந்தாலும், அங்கே இருந்த இரண்டு முக்கியமான கோயில்களுக்குச் சென்றோம்.

கோவர்த்தனத்துக்குள் நுழையும்போதே வலது புறமாக ஓர் அழகிய ஆர்ச் நம்மை வரவேற்கிறது. அதைத் தாண்டி நடந்தால், ஒரு சிறிய சந்து. வளைந்தும் நெளிந்தும் செல்லும் அந்தச் சந்தின் முடிவில் அழகிய ஓர் ஆலயம். அதுதான் ஸ்ரீகிரிராஜர் ஆலயம். அங்கே ஒரு கல்லை வைத்து, பக்கத்திலேயே பண்டிட்கள் அமர்ந்திருக்கின்றனர். பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. அந்தக் கல் கோவர்த்தனகிரியின் ஒரு பகுதி என்கிறார்கள்.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

கோயிலை அடுத்து மிகப் பெரிய குளம் ஒன்று அழகாகத் தென்படுகிறது. 'மானச கங்கா’ என்று அதற்குப் பெயர். இங்கே அனுமனுக்கும் சந்நிதி இருக்கிறது. கொஞ்சம் ஏமாந்தால் இங்கே பண்டிட்கள் எதையாவது சொல்லிக் காசைப் பிடுங்கும் சாத்தியங்கள் மிக அதிகம்.

ஆலயத்துக்குள்ளேயே இருக்கும் கடைகளில் பால், தயிர், தேன், கங்கா தீர்த்தம் அனைத்தும் விற்கிறார்கள். மறுபடியும் பிரதான சாலைக்கே வந்து, சுமார் அரை கிலோ மீட்டர் நடந்தால், இரட்டைக் கோபுரங்களோடு இன்னொரு கிருஷ்ணர் ஆலயம் தென்படுகிறது. சாமந்திப்பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது கோயிலின் நுழைவாயில்.

கோயிலுக்குள் நுழைந்தவுடன், மிகப் பெரிய ஹால் ஒன்று நம்மை வரவேற்கிறது. சுவர்களில் இருக்கும் மாடங்களில் ஹனுமன், ஸ்ரீநாத் விநாயகர் ஆகியோருக்கு சந்நிதி அமைத்திருக்கிறார்கள். ஸ்ரீகிரிராஜ் சேவக் சமிதி என்கிற அமைப்பு இந்தக் கோயிலை நிர்வகிக்கிறது. இங்கே ராதா மற்றும் கிருஷ்ணரின் பளிங்குச் சிலைகள் அழகுறக் காட்சி அளிக்கின்றன. கூடங்கள் பெரிதாகத்தான் இருக்கின்றன. பிரசாதங்கள் இங்கேயே தயாராகின்றன. எதிரில், கோவர்த்தன மலையைத் தன்னுடைய சுண்டு விரலால் தூக்கி நிறுத்தும் ஸ்ரீகிருஷ்ணர் தரிசனம் தருகிறார். குன்றுக்கு அடியில் பசுக்களும் மனிதர்களும் பாதுகாப்பாக நிற்கின்றனர். சந்நிதிக்கு முன்னால் நீர் இல்லாத குளம் ஒன்று தெரிகிறது.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

ஆதிசேஷன் குடைபிடிக்க, வசுதேவர் கூடை ஒன்றில் குழந்தை கிருஷ்ணரைச் சுமந்து செல்லும் சிற்பம் ஒன்று அங்கே நம் கவனத்தை ஈர்க்கிறது. கோயிலுக்கு எதிரே சுமார் 50 மீட்டர் தூரத்தில் கிரிவலப் பாதை தென்படுகிறது. 'சரி, கோவர்த்தன கிரியையும் பார்த்துவிடலாமே’ என்று அருகில் போனால், சிறிய குன்றாகத்தான் தெரிகிறது கோவர்த்தன கிரி. சுற்றிலும் கம்பி வேலி போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கே பன்றிகளும், குரங்குகளும், பசுக்களும் மிக அதிக எண்ணிக்கையில் நடமாடிக்கொண்டு இருக்கின்றன. இந்தக் குன்று, ஒரு காலத்தில் பிரமாண்டமான மலையாக இருந்ததாம். அது இப்படிச் சிறிய குன்றாக மாறியதற்கு ஒரு தல புராணம் சொல்கிறார்கள்.

த்ரோணாசல் என்ற பெயரில் ஒரு மலை அங்கே இருந்ததாம். அந்த மலையின் மகன்தான் கோவர்த்தன். கிரிராஜாவான கோவர்த்தன் அழகே வடிவானவர். நல்ல அம்சமான மலையாக வளர்ந்துகொண்டு இருக்கிறார். அவர் மீது அழகான மரங்கள், செடி- கொடிகள் எல்லாம் படர்ந்து வளர்ந்து ஜொலிக்கிறார். கம்பீரமும் அழகுமாக நிமிர்ந்து நிற்கும் மகனைப் பார்க்கப் பார்க்க, அப்பாவுக்கு ரொம்பவே பெருமிதம்.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

அப்போது சத்ய யுகம் ஆரம்பித்தது. காசி நகரில் தவம் செய்துகொண்டிருந்த புலஸ்திய முனிவர் தீர்த்த யாத்திரையாக அங்கே வந்தார். வந்தவர், கிரிராஜனின் அழகில் மயங்கினார். இத்தனை அழகான மலைமேல் உட்கார்ந்து தவம் செய்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை அவர் மனத்தில் உதித்தது. உடனே, த்ரோணாசல் மன்னனின் அரண்மனைக்கு சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, 'கங்கை நதி பாயும் காசி அருகே மலைகளே இல்லை. உன் மகன் கிரிராஜனை என்னுடன் அனுப்பி வை. காசிதான் அவனுக்கு ஏற்ற இடம்' என்றார் மன்னனிடம்.

மன்னனுக்கோ மகனைப் பிரிய மனம் இல்லை. அதே நேரம், முனிவரின் கோபத்துக்கு ஆளாகவும் விருப்பம் இல்லை. அப்போதுதான் கிரிராஜாவான கோவர்த்தனுக்கு அந்த யோசனை தோன்றியது. 'தந்தையே! முனிவருடன் என்னை அனுப்பி வையுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. என்னை அவர் சுமந்துமொண்டே காசிக்குப் போக வேண்டும். காசியை அடையும்வரை என்னை எங்கேயும் கீழே இறக்கி வைக்கக்கூடாது!' என்றான்.

புலஸ்தியரும் அதற்குச் சம்மதித்தார். தமது உள்ளங்கையில் கிரிராஜனைச் சுமந்தபடி, காசி நோக்கி நடக்கலானார். வழியில், தற்போது கோவர்த்தனம் இருக்கும் இடத்தைப் பார்த்தான் கிரிராஜன். தர்மம் செழித்தோங்கி இருந்த அந்தப் பகுதியிலேயே தங்கிவிட வேண்டும் என விரும்பினான். அதையடுத்து, தவ வலிமையால் தன்னுடைய எடையைக் கூட்டிக்கொண்டே போனான். ஒருகட்டத்தில், எடையைத் தாங்க முடியாமல் கிரிராஜனைக் கீழே இறக்கி வைத்துவிட்டார் முனிவர் புலஸ்தியர்.  

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!
பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

பிறகு, மீண்டும் மலையைத் தூக்க முயன்றார். ஆனால், அதைக் கொஞ்சம்கூட அசைக்க முடியவில்லை. முனிவருக்குப் புரிந்துவிட்டது. கிரிராஜன் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்து, கடும் கோபம் கொண்டார். கோபத்தின் உச்சத்தில், அந்த மலையை மண்ணுக்குள் புதையும்படி சபித்து விட்டார். கொஞ்ச நேரத்திலேயே கோபம் தணிந்து சமாதானமாகி, தனது சாபத்துக்கு ஒரு விமோசனத்தையும் சொன்னார். 'நீ உடனடியாக மண்ணில் புதைய மாட்டாய். தினசரி ஒரு கடுகளவு உயரமே குறைவாய். இன்னும் சில யுகங்கள் கழிந்து கலியுகம் பிறந்து பத்தாயிரம் வருடங்கள் கடந்த பின்புதான் நீ முழுவதுமாக மறைவாய்' என்று விமோசனம் கொடுத்தார் புலஸ்திய முனிவர் என்கிறது தலவரலாறு.

இந்த சம்பவம் நடந்தது சத்ய யுகத்தில்! முனிவரின் சாபத்தின் விளைவாகத்தான் மிகப் பெரிய மலை இப்போது சிறிய குன்றாகக் காட்சி அளிக்கிறது என்கிறார்கள். இந்தக் கோவர்த்தனத்தை குடையாகப் பிடித்துதான் இந்திரனின் சீற்றத்தில் கொட்டிய மழையில் இருந்து மக்களையும் பசுக்களையும் ஸ்ரீகிருஷ்ணர் காப்பாற்றினாராம். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் 'கோவர்த்தன தினம்’ இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை!

தமிழகத்தில் திருவண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் வருவது போன்று இந்த மலையையும் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். பலர் தங்கள் கைகளில் பாய் அல்லது மெல்லிய மெத்தையை எடுத்துக்கொண்டு இந்த மலையை வலம் வருவது விசித்திரமான காட்சியாக இருக்கிறது. கிரிவலம் செல்லும் வழியில், தாங்கள் கொண்டு செல்லும் பாய் அல்லது மெத்தையைத் தரையில் விரித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு எழுந்து நடையைத் தொடர்கிறார்கள். கொஞ்ச தூரம் சென்றதும், மீண்டும் பாய் விரித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்து... சுமார் 14 கி.மீ. தொலைவுக்கு இதே போன்று வழிபட்டபடியே மலையை வலம் வருகிறார்கள் அவர்கள்.

கோவர்த்தனம் நகர் முழுவதும் பால், கெட்டித் தயிர், இனிப்புகள் என எல்லாவற்றிலுமே ரோஜா இதழ்களைக் கலந்து, கடைவீதிகளில் வைத்து விற்கிறார்கள். இங்கு வரும் மக்களும் அவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். குரு பூர்ணிமா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கிரிவலம் செய்து புண்ணியம் பெறுகிறார்கள். நாங்களும் கோவர்த்தன கிரியை வலம் வந்து முடித்து, அந்த மலையை நிமிர்ந்து பார்த்தபோது,

'கொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள் கோல மும்அழிந் திலவா டிற்றில
வடிவே றுதிரு வுகிர்நொந் துமில மணிவண் ணன்மலை யுமோர்சம் பிரதம்
முடியே றியமா முகிற்பல் கணங்கள் முன்னெற் றிநரைத் தனபோ லஎங்கும்
குடியே றியிருந் துமழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே''

என்று, பெரியாழ்வார் பாடிய பாசுரம் காதில் ஒலித்தது.

'இவ்வளவு பெரிய மலையை இடைவிடாது தூக்கிக்கொண்டு இருக்கும் ஸ்ரீகிருஷ்ணரின் கை விரல்கள் களைப்படையவில்லை. நகங்களும் மாறுபாடு அடையவில்லை. அழகோ கொஞ்சம்கூடக் குறையவில்லை. இது ஏதோ மாயாஜாலம் போல இருக்கிறதே!’ என்று அப்போது பெரியாழ்வாருக்கு ஏற்பட்ட வியப்பு இப்போது நமக்கும் ஏற்படுகிறது.

- யாத்திரை தொடரும்...

படங்கள்: துளசி கோபால்

ஏமாற வேண்டாம்... உஷார்!

கோவர்த்தனம் கோயிலுக்குள் தரிசனம் செய்யச் செல்லும்போது, திடீரென்று சில பண்டிட்கள் நம்மை அரவணைத்து, கையில் பூ கொடுப்பார்கள். பேர், நட்சத்திரம் எல்லாம் கேட்பார்கள். நாமும் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்காமல் சொல்லிவிட்டால், சில மந்திரங்களை உச்சரித்து, அதை நம்மைத் திரும்பச் சொல்லச் சொல்வார்கள். பின்பு, ரூபாய் கேட்பார்கள். நாமும் போனால் போகட்டும் என்று 10 ரூபாய் நோட்டை நீட்டினால், நம்மை முறைத்துப் பார்ப்பார்கள். 100 ரூபாய் வேண்டும் என்று கறாராகக் கேட்பார்கள்.

'100 ரூபாயா? அநியாயமாக இருக்கிறதே! அவ்வளவு பணமெல்லாம் தர முடியாது’ என்று நீங்கள் மறுத்தால், அந்த நொடியே 'காச்மூச்’ என்று கத்தி, ஆர்ப்பாட்டம் செய்துவிடுவார்கள் அந்த பண்டிட்கள். அப்புறம் என்ன... ஊரு விட்டு ஊரு வந்து இனியும் அசிங்கப்பட வேண்டாம் என்று, அவர்கள் கேட்ட 100 ரூபாயை வேறு வழியின்றி கொடுத்துவிட்டு வர வேண்டியது இருக்கும். அதனால், முதலிலேயே உஷாராகி, நகர்ந்துவிடுங்கள்.

மேலும், கோவர்த்தன நகர் வீதியோரங்களில் தின்பண்டங்கள் விற்கிறார்கள். இந்த ஸ்வீட் பார்க்க மிக அழகாக, வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அதை வாங்கித் தின்றுவிடாதீர்கள். மீறினால், வயிற்று வலியால் அவதிப்படப் போவது நீங்கள்தான்.

இங்கே சுத்தமான தண்ணீர் கிடைப்பது சிரமம். எனவே, மினரல் வாட்டரையே பயன்படுத்துங்கள்.