மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 14

சித்தம் அறிவோம்...

சித்தம்... சிவம்... சாகசம்! - 14
##~##

'போடுவது திலகமடா மூலர் மைந்தர்
போகர் கருவூராரைத் தியானம் பண்ணு
நாடு நகரந் தனிலுள்ள ஜீவசந்து
நாதாந்த சித்தருக்கும் தோணாதையா
ஏடதனில் எழுதினோர் பாடல் என்று எண்ணாதே
ஒருநாளும் தப்பே இல்லை
தேடின பேர் பொருள் கோடி தனமீந்தாலும்
செப்பாதே இக்கருவை உலகத்தோர்க்கே’

- சட்டைமுனி

 போகர் சமாதிகொள்ள புறத்தே கோரக்கர் அவருக்கான சமாதியை எழுப்பி முடித்துவிட்டார். போகரும் உடலினை அங்கே உதிர்த்துவிட்டு, தன் தவவலிமையால் தனக்கு ஏற்பட்ட ஞானத்தினால் சூட்சும உடம்பை உருவாக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி, தான் விரும்பும் காலம் வரை இந்த மண்ணுலகில் வாழ முடிவு செய்தார்.

இந்தக் கருத்தைக் கேட்கையில் குழப்பமாகவும், நம்பமுடியாத ஒன்றாகவும் இருக்கும். ஒரு மனிதன் உடம்போடு சமாதியுறும்போது அவன் முற்றாக முடிந்தவன் ஆகிறான். சமாதிக்குள் காற்றைக் கொண்டு சுவாசிக்கவோ, ஒருவேளை சுவாசிக்க முடிந்தாலும் உணவில்லாததால் உயிர் வாழவோ முடியாமல் போவதே மானுட வாழ்வில் யதார்த்த நிலை. காலங்காலமாக அவன் கண்டு வருவதும் இதைத்தான். ஆனால், இந்த யதார்த்தம் சித்த புருஷர்களுக்குக் கிடையாது என்பதே உண்மை. அது எப்படி என்கிற கேள்விக்கு சித்தர்கள் வாயிலாகச் சிந்திக்க முடிந்தாலே விடை கிடைக்கும்.

அந்த விடையை இன்றைய விஞ்ஞானம் எந்த அளவு ஏற்கும் என்று தெரியாது. ஆனால், சித்த புருஷர்களுக்கு இந்த விஞ்ஞானம் ஒரு சுண்டைக்காய்! இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என, தான் சொன்னதையே மறுத்துப் பேசும் விஞ்ஞானம். கேட்டால்... அதுதான் வளர்ச்சி; வளர்ச்சி நிலையில் மாற்றங்கள் வந்து கொண்டுதானே இருக்கும் என்று அது எதிர்க் கேள்வி கேட்கும். ஒரு கோணத்தில் மிகுந்த நியாயத்துக்குரியதான இக்கருத்துக்குள் உண்மையில் ஒரு பெரும் உண்மையோ, உலகை வென்று காட்டும் பலமோ இல்லை என்பதே யதார்த்தம்.

இப்போது நாம் போகரின் சமாதி நிலைக்கு வருவோம். அவர் தன் உடலை உதிர்த்து சூட்சும உடலை எப்படி எடுத்தார் என்று பார்ப்போம். இப்படிச் சொல்லும்போதே, உடல் என்பது இரண்டாக இருப்பது தெரிய வருகிறது. ஒன்று பருவுடல்;  இன்னொன்று சூட்சும உடல்.

இந்தப் பருவுடல், தாய்- தந்தையரின்  சுக்கில சுரோணிதத் தயாரிப்பு. இந்தப் பருவுடலில் ஏழு தலைமுறை கண்ட நம் ஏழு பாட்டன், பாட்டிமார்களின் அணுக்கூறுகள் நிச்சயமாக இருக்கும். முதலாம் தாத்தனின் நெற்றி, நான்காம் தாத்தனின் தலைமுடி, ஆறாம் பாட்டியின் விரல் நகங்கள் என்று ஒவ்வொருவருள்ளும் ஏழு தாத்தன்களின்- பாட்டிகளின் ஜீவ அணுக்கள் இருந்தே தீரும். அது எப்படி? தாய் வழித் தாத்தா, பாட்டிகள் என்று ஏழு தலைமுறையினர், தந்தை வழியில் ஏழு தலைமுறையினர் என்று பதினான்கு தலைமுறைக் கணக்குப்படி 28 பேரின் ஜீவ அணுக்களும் அல்லவா நம் உடம்பில் இருக்கவேண்டும் என்று கூட சிலர் கேட்கலாம். ஆனால், அதற்கு இடமில்லை. ஒரே கோத்திர வழியில் ஆணும், மாறுபட்ட கோத்திர வழியில் பெண்ணும் திருமணம் புரிந்துகொள்வதால், அந்த ஒரு கோத்திர வழி விந்துவுக்குள்தான் வினைப்பாடுகள் நடைபெறுகின்றன. இதனால் தாய்வழித் தாத்தா, பாட்டிகள் தொடர்பு உடம்பளவில் தொடர்வதில்லை. வினைவழியிலும் தொடர்வதில்லை.

சித்தம்... சிவம்... சாகசம்! - 14

அடுத்து, சித்தவியிலின்படி பெண் என்பவள் ஆண் தரும் மண்ணைக் கொண்டு தன் வசம் உள்ள தண்ணீரைக் கலந்து பானை செய்து தருபவள் மட்டுமே! அவளிடம் இருந்து ஜீவ அணு எதுவும் பிறவித் தொடர்பால் தொடர்வதேயில்லை. தொடரவும் கூடாது என்பதால்தான், ஒரு கோத்திரத்தில் உள்ள ஆண்- பெண்ணுக்கு நம்மவர்கள்  திருமணம் புரிவதில்லை. ஒரு கோத்திர வழி என்னும் ஒரே வழிக்குள் சகோதர உறவு நிலைதான் உள்ளது. சகோதரன் என்ற சொல்லே 'சக உதிரன்’ அதாவது, 'ஒரே ரத்தம் கொண்டவன்’ எனும் பொருளில்தான் வந்தது.

ஒரே கோத்திரத்தில் சகோதரனுக்கும் சகோதரிக்கும் ரத்த வகை வேறாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் மரபுவழி ஜீவ அணுக்களின் தொடர்ச்சி ஒன்றே! இந்த ஜீவ அணுக்கள் வழியாகவே பூர்வ ஜென்ம பந்தங்கள் தொடர்பான அம்சங்களும் தொடர்கின்றன. பொருத்தம் பார்த்து மணம் முடிப்பதெல்லாம் இதை உத்தேசம் செய்தே தோற்றுவிக்கப்பட்டது. இந்த வகையில், காதல் மணங்களில் ஜீவ அணுக்களின் தொடர்பு அறுந்து போய், ஒரு புது வரிசை உருவாகிவிடும். அதனுள் மரபுத் தொடர்பு, வினைத்தொடர்பு எல்லாமே நீக்கப்பட்டு, வெறும் உயிர்த் தொடர்பு மட்டும் இருக்கும்.

இதனால், வழிவழியாகத் தொடர்ந்து கிடைத்து வரும் விஷயங்களை இழந்துவிடுவோம். உதாரணமாக, நான்கு தலைமுறைக்கு முன் நம் தாத்தாக்களில் ஒருவர் ஒரு ஊரையே பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஊரில் உள்ளோர் ஒன்றுகூடி அவரை மனதார வாழ்த்தியிருப்பார்கள். அந்த வாழ்த்து அவர் செவிவழியே பருவுடலில் பதிவாகி, பின் சூட்சும உடலிலும் பதிவாகியிருக்கும். பருவுடலில் பதிவானது அவர் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியின் திரட்சியான விந்துவிலும் சென்று பதிவாகியிருக்கும். அதன் வழியாகத்தானே தலைமுறைகள் தொடர்கின்றன? அந்தப் பதிவு, ஏழு தலைமுறை வரை உறுதியாகத் தொடரும். எட்டாம் தலைமுறைக்குதான் அது மிச்சமிருக்காது. இது ஒரு கணக்கு.

இப்படித் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கின்ற விஷயங்கள் வாழ்த்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை; சாபங்களாகவும் இருக்கலாம். அதனால்தான் எந்தவொரு நல்லதும் சரி, கெட்டதும் சரி... நமக்குப் பிறரால் தரப்படுவதில்லை. நாம்தான் வரவழைத்துக் கொள்கிறோம். நம் நடவடிக்கைகளால் எனும் பொருளில்தான், 'தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றனர்.

நமக்கு இன்றுள்ள அனைத்து விஷயங்களுக்கும் இப்படி ஓர் அடிப்படை இருக்கிறது. நாம் ஒவ்வொருவருமே ஏழு தலைமுறைகளின் தொடர்ச்சியில் வருபவர்கள்தான். இந்த ஏழு தலைமுறைக்காலம் எப்படிப்பட்டதாக இருந்ததோ, அதைப் பொருத்ததே நம் அறிவு; இந்த ஏழு பேர் எப்படி வாழ்ந்தார்களோ, அதைப் பொருத்ததே நம் வாழ்வு! இவர்கள் பெரும் கல்வியோடும், தர்ம சிந்தனையோடும், பாவத்துக்கு அஞ்சியும் வாழ்ந்திருந்தால், நம் வாழ்விலும் நல்ல கல்வி, செல்வம் நிரம்பியிருக்கும். அதற்கேற்ற காலப்புள்ளியில் அந்த விந்தின் போக்கு ஜனனம் கண்டுவிடும். இல்லாவிட்டாலும் இல்லைதான்!

இதை மாற்ற நம்மால் இயலாது. ஒரு வகையில் இந்தப் பிடிப்பு ஒரு தொடர்கதையாக, பலரின் வாழ்க்கை எச்சமாய், பலகால நிலைப்பாடாய் இருப்பதே அடிப்படையான உண்மை.

இதனால்தான், நாம் பார்க்க ஒருவர் கோட்டையில் இருக்கிறார்; இன்னொருவர் குப்பைமேட்டில்  இருக்கிறார். சத்தியம் தவறாமல் வாழ்ந்தும் ஒருவர் சிரமப்படுகிறார்; தவறு செய்வதையே வாழ்வாகக் கொண்டும் ஒருவர் உல்லாசியாக உள்ளார். இவர்களின் இன்றைய போக்குக்குப் பின்னாலே அந்த ஏழு தலைமுறையின் பாவ- புண்ணியக் கணக்கு உட்கார்ந்துகொண்டு, தன் கணக்கைத் தீர்த்தபடி உள்ளது.

இன்றைய நம்முடைய போக்கு, நம் பிள்ளைகள் கணக்கில் எதிரொலிக்கும். இதில் எந்த மாயத்துக்கும், மாய்மாலத்துக்கும் இடமில்லை. இதுவும் ஒரு விஞ்ஞானமே! இந்த விஞ்ஞானம் புரிய, மனித உடம்பைப் பற்றிய பெரும் ஞானப்பாடு அவசியம். இன்றைய மருத்துவ விஞ்ஞானம் உடம்புக்கும், அதன் உறுப்புகளுக்கும் பெயரை வைத்துள்ளது. வியாதிக்குக் காரணமான கிருமிகளைக் கண்டறிந்து, அந்தக் கிருமிகளைக் கொல்லும் மருந்துகளைக் கண்டறிந்துள்ளது. கண்ணுக்குப் புலப்படுகின்ற பருவுடலைக் கையில் எடுத்துக்கொண்டு, ஓர் உச்சத் தைக் கூடத் தொட்டுவிட்டது. செயற்கை இதயம், மூளை மாற்று என்று உடம்பை இயக்கத்தோடு வைத்துக்கொள்ள முயன்றபடியே உள்ளது.

ஆனால், உடம்புக்குள் ஒளிந்திருக்கும் சப்தம் சார்ந்த மனம் என்னும் விஷயத்தில் அது மிக மிகப் பின்தங்கியே உள்ளது. குறிப்பாக, மன ஒடுக்கம்- அதன் தவம்- அதனால் உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் மற்றும் இந்த பருவுடல்- ஒளியுடல் பற்றியெல்லாம் அது இனிதான் மேம்பட வேண்டும். இந்த வகையில், ஒவ்வொரு சித்தனும் ஒரு விஞ்ஞான ஆய்வுக் கூடத்துக்கு ஒப்பானவர்கள். அவர்கள் தாங்களாகவே தங்கள் உடல் பற்றி அறிந்து, அதன் பசி- தாகத்தை முதலில் வெற்றிகண்டு, பிறகு... மனத்தை அடக்கி, தாங்கள் யார் என்கிற கேள்வியில் விழுந்தனர். தாம் ஒரு பரம்பரைத் தொடர்பாளன் என்பதை உணர்ந்து, தம் முன்னோர் பற்றிப் பின்னோக்கிச் சென்று அறிந்தனர். அதோடு, அவர்கள் புரிந்த வினைகளை அறிந்து, அதனால் தம் பருவுடல், ஒளியுடல் இரண்டிலும் உள்ள பதிவுகளைத் தெரிந்துகொண்டனர். பிறகு, அந்தப் பதிவுகளில் அழிக்க முடிந்ததை அழித்து, அழிக்க முடியாததை அனுபவித்து முடித்து, தங்களோடு தங்கள் பரம்பரைத் தொடர்புக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்து, 'போதும் இந்த இடைவிடாத பிறப்பு’ என்று, பிறப்புகளில் இருந்தே தப்பித்துக் கொண்டார்கள்.

இதுபற்றி ஓரளவு சிந்திக்கமுடிந்த எல்லோருக்குள்ளுமே  நியாயமான கேள்வி ஒன்று இருக்கும்; ஒன்றல்ல, பல கேள்விகள்கூட இருக்கும்.

* ஏன் எவ்வளவு முயன்றும் சில விஷயங்கள் வசப்படவே மாட்டேன் என்கின்றன?

* எதனால் எனக்கு மட்டும் சராசரி உடலமைப்பு அமைந்துவிட்டது?

* நான் எவ்வளவு முயன்றும் சில பாடங் களைச் சுலபமாக படிக்க முடியவில்லையே, ஏன்?

* நான் ஏன் ஒரு ஏழையின் வயிற்றில் வந்து பிறந்தேன்?

* நான் ஏன் பாழாய்ப்போன இந்தப் பட்டிக்காட்டில் பிறந்தேன்? அமெரிக்கா விலோ ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் நல்ல ஆங்கிலம் பேசிக்கொண்டு பளிச்சென்ற ஒரு நகரவாசியாக இருந்திருப்பேனே!

இப்படி, அந்தக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் நிச்சயம் விடைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்த விடை இரண்டு விடையாக உள்ளன. ஒன்று, பளிச்சென்று உணர முடிந்ததாகவும், இன்னொன்று ஒளிந்தும் உள்ளது. முதலில், பளிச்சென்று தெரியும் விடைக்கு வருவோம்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 14

முதல் கேள்வி, 'ஏன் எவ்வளவு முயன்றும் சில விஷயங்கள் வசப்படவே மாட்டேன் என்கின்றன?’ இதற்கான அறிவியலார் பதில், 'வசப்பட வேண்டிய அளவுக்கு நீங்கள் முயற்சிக்கவில்லை. எனவே, தொடர்ந்து முயலுங்கள். நிச்சயம் ஒரு நாள் வசப்பட்டு விடும்’ என்பதாகத்தான் இருக்கும். இதன் ஒளிந்துள்ள விடை என்ன தெரியுமா? 'அது எப்போது வசப்பட வேண்டும் என்று இருக்கிறதோ, அப்போதுதான் வசப்படும். அதுவரை எவ்வளவு முயன்றாலும், அது வசப்படாது. இதுதான் அதன் விதிப்பாடு’ என்பதே!  

இந்த இரு விடைகளில், அன்றைய நம் உணர்வு நிலைக்கேற்ப நாம் ஒரு விடையை ஏற்றுக்கொண்டு, ஒன்று... தொடர்ந்து முயற்சி செய்வோம்; இல்லாவிட்டால், அது வசப் படும்போது வசப்படட்டும் என்று மனத்தை ஆற்றுப்படுத்திக் கொள்வோம்.

இப்படித்தான் மனித வாழ்வின் சகல நிலைப்பாடுகளிலும் நாம் இருவகையாக இயங்கிக் கொண்டு இருக்கிறோம். ஒன்று, இடைவிடாத முயற்சி; இன்னொன்று, கிடைத்ததை ஒப்புக் கொண்டு திருப்தியோடு வாழ முயற்சிப்பது.

அடுத்து, இடைவிடாத முயற்சியால் ஒன்றை அடைகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். அதை அடைந்த பிறகு, நம் மனத்துக்கு அது சாதாரணமாகி, அதற்கும் அடுத்ததை நோக்கி நம் மனம் புறப்பட்டு விடுகிறது. கிடைத்ததை வைத்துத் திருப்தியாக வாழ்வதாக கருதிக் கொள்வதிலும் ஒருநாள் அலுப்பும் சலிப்பும் ஏற்படத்தான் செய்கிறது.

இறுதியாக ஒரு கேள்வி எல்லோர் முன்னாலும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்குகிறது.

நாம் விரும்பியதுபோல எதுதான் நடந்தது? நடந்ததை விரும்பித்தானே வாழ்ந்துள்ளோம்? அப்படி வாழ்ந்துதான் எதைப் பெரிதாகக் கண்டுவிட்டோம்? அடைய முடியாதவை குறித்த ஏமாற்றங்களும், அடைந்துவிட்டவை குறித்த 'இவ்வளவுதானா’க்களுமாகத்தானே நம் மனது உள்ளது. ஒரு முழுமையான திருப்தி, ஒரு பரிபூரண சந்தோஷம், கிடைத்தற்கரிய வாழ்க்கையை நூறு சதவிகிதம் பூரணமாகப் பயன்படுத்திக்கொண்ட நிறைவு ஒருவரிடமும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், அப்பா- அம்மாக்கள் ஒன்று சேர்ந்ததால் வந்து பிறந்தோம்; பிறந்துவிட்டபடியாலே தின்று வளர்ந்தோம். காலம் எப்படி எல்லாம் அழைத் துச் சென்றதோ அப்படி எல்லாம் சென்றோம். ஆற்று வெள்ளத்தின் மேல் ஒரு துரும்பு விழுகிறது. அந்தத் துரும்புக்கென்று ஒரு தனிப் போக்கு இருக்க முடியுமா என்ன? வெள்ளம் போகின்ற வழிதானே அதன் வழி...?

தனித்த- பிரத்யேகமான சுயமாக தன்னை வழிநடத்திக் கொள்ளுதல், உலகின் சர்வ பிடிமானங்களில் இருந்தும் விடுபடுதல், விரும்பிய வடிவம் எடுத்தல், விரும்பிய வாழ்க்கை வாழல்... மொத்தத்தில், 'உலகம் எனக்குக் கீழ்!

அதற்கு கீழ் நானல்ல’ என்கிற நிலைப்பாடு எத்தனை பேருக்கு இந்த உலகில் சாத்தியம்?

எவன் ஒருவனுக்கு அது சாத்தியப்படுகிறதோ, அவனே சித்தன். சித்தனாவதற்கோ உடம்பு, உலகம் பற்றிய தெளிவு மிக முக்கியம்.

போகரும் தன் புலத்தாலே இந்த உடம்பு, உலகம் குறித்தெல்லாம் தெளிந்தார். பரம்பரை வினைப்பாடுகளை அனுபவித்தும் முடித்தார். உச்சபட்சமாக தண்டாயுதபாணியை நவ பாஷாணத்தால் வடிவமைத்து, வருங்கால உலகம் பக்தி செய்ய, அதாவது ஒவ்வொரு நொடியும் ஒரு நல்வினைப்பாடு அவர் பொருட்டு நிகழ வழிவகை செய்துவிட்டு, தன் பரம்பரைத் தொடர்பால் உண்டான தேகத்துக்கும் சமாதியில் ஒரு முடிவைக் கொடுத்தார். அப்படி முடிவைக் கொடுக்க, அவர் தன் வசம் மிச்சமிருந்த விந்துவைத்தான் பயன்படுத்தினார்.

ஜீவசமாதி என்பதே, நம் உடலில் நம் குதப் பகுதிக்குக் கீழ் கிடக்கும் விந்துவை, குண்டலினி என்னும் யோக முயற்சியால் திரவநிலையில் உள்ளதைச் சற்றே திடமாக்கி (சப்பாத்தி மாவின்

உருண்டைநிலை) ஒரு கோலிக்குண்டு அளவு அதை உருட்டி, பின்புற முதுகுத்தண்டின் வழியாக மெள்ள மேலேற்றி, பிறகு கழுத்தைக் கடந்து, அதன் பிறகு தலை வழியாக அப்படியே அந்தச் சரிவில் சிரமப்பட்டு மலை ஏறுவது போல் ஏற்றி, உச்சந்தலையில் அதைக் கொண்டுபோய் நிறுத்திவிடுவதுதான்! இதைத்தான் குண்டலினி யோகம் என்பார்கள்.

ஆண் ஒருவன் பெண்ணைப் புணர்கையில், அவனது விந்து வெளிப்படும். அப்போது அவனது உடம்பின் சர்வாங்கமும் பரவிடும் பரவச உணர்வு நிலையைப் போன்றதொரு பரவச நிலை குண்டலினி யோகம் புரியும்போதும் ஏற்படும்.

பெண் தொடர்பில்லாத, சன்னியாசம் கெடாத, அதே நேரம் உடல் நலத்துக்கு யாதொரு தீங்கும் இல்லாத, உடம்புக்குள்ளேயே இருக்கும் இன்பம் இது!

- சிலிர்ப்போம்...