Published:Updated:

புனலூர் தாத்தா - 9

புனலூர் தாத்தா - 9

புனலூர் தாத்தா - 9
##~##

வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தான். இதில் பல சுவாரஸ்யங்களையும் சந்தோஷங்களையும் நமக்குத் தருபவை, இந்த இகலோக வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணங்கள். பக்தியும் பயணமும் நம் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. மனம்

சோர்வுற்று, கவலைகளால் சூழப்பட்டு,  வேதனைகளும் வலிகளுமாக இருக்கிற நிலையில், பக்தியும் பக்தியால் நாம் மேற்கொள்ளும் பயணமும் அந்த வலிகளையும் வேதனைகளையும்  பெருமளவு குறைக்கின்றன என்பது அனுபவபூர்வமான உண்மை.

குறிப்பாக... கார், வேன் அல்லது பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஒரு குழுவாகத் திருத்தலங்களுக்குச் செல்கிறவர்கள் இன்றைக்கு அதிகரித்துவிட்டார்கள். உறவுக்காரர்களும், அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து, தமிழகக் கோயில்களுக்கோ அல்லது கர்நாடகா, கேரளா போன்ற அக்கம்பக்கத்து மாநிலங்களில் உள்ள ஆலயங் களுக்கோ சென்று வழிபடுகிறார்கள். தவிர, அலுவலக நண்பர்களும் கூட்டாகவும் குடும்பமாகவும் சேர்ந்து, வட மாநிலக் கோயில்களுக்கும் ஷீர்டி, புட்டபர்த்தி போன்ற ஆஸ்ரமங்களுக்குச் சென்று, தரிசித்து வருகிறார்கள்.

புனலூர் தாத்தா - 9

இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமாகவும் முன்மாதிரியாகவும் திகழ்வது சபரிமலை யாத்திரைதான்! முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பிருந்தே சபரிமலைக்கு விரதம் இருந்து குழுவாகச் செல்லும் மனோநிலையும், அப்படிச் செல்கிற வழியில் உள்ள புராதனமான ஆலயங்களைத் தரிசிப்பதும் வழிபடுவதுமான நிலையும், இன்றைக்குப் பலரிடமும் பரவியிருக்கிறது.

சபரிமலை எனும் புண்ணிய க்ஷேத்திரத்தின் வாயிலாக நாம் கற்றுக்கொள்வதற்கு இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக, ஹரிஹரசுதனின் ஆத்மார்த்தமான பக்தரான புனலூர் தாத்தாவை நாம் பின்பற்றவேண்டும்.

புனலூர் தாத்தா - 9

''எனக்கு இருட்டில், காட்டில் ஏதேனும் ஆயிடுமோ என்று யாரும் பயப்படத் தேவையில்லை. நான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியை முழுசா நம்பறேன். எப்பவும் என் கூடவே இருந்து என்னைக் காப்பாத்தறதும் வழிநடத்தறதும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமிதான்னு உறுதியா இருக்கேன். பக்திக்கு நம்பிக்கையும் உறுதியும்தான் தேவை. அதுவும் கடவுள் மேலே முழுமையான நம்பிக்கை வைக்கணும். சிரத்தையா பக்தி பண்ணினா, கடவுள் எனும் மாபெரும் சக்தி நம்மைத் தேடி வந்து அருள்பாலிக்கும்'' என்று  புனலூர் தாத்தா அடிக்கடி சொல்வாராம்.

''ஒவ்வொரு வருஷமும் சபரிமலைல லட்சம் லட்சமா கூட்டம் அதிகரிச்சுக்கிட்டே வருது. பக்தி சிரத்தையா மாலை போட்டு சபரிமலைக்குப் போன காலம் போய், பக்தி குறைஞ்சு சிரத்தையும் இல்லாம ஏதோ ஒரு த்ரில்லுக்காக, சுற்றுலா மாதிரி வந்து போறவங்க இப்ப இருக்காங்க. 'நானும் மாலை போட் டிருக்கேன்; மலைக்குப் போறேன்’னு சொல்லிக்கிறது அவங்களுக்கு ஒரு ஃபேஷனா ஆகியிருக்கு. இது ரொம்ப தப்பு. அவங்க மாறணும். வருஷத்துக்கு ஒரு தடவை மாலை போட்டு, விரதம் இருந்து, மலைக்கு வர்றீங்க. புனலூர் தாத்தாவைப் போல உண்மையான பக்தனா, சிரத்தையான பக்தியோட வரணும்; தரிசனம் பண்ணணும்னு நினைச்சு வாங்க. நிச்சயமா, உங்களுக்கு ஐயப்பன் காட்சி தருவார்; அருள்பாலிப்பார்'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் வாஞ்சீஸ்வர ஐயர்.

உண்மைதான். பக்திக்காகப் பயணப்பட்டாலும், தற்போது ஆழ்ந்த பக்தி என்பது பலரிடம் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றுதான்! எவர் வேண்டுமானாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சபரிமலைக்கு வரலாம்; சபரிகிரிவாசனைத் தரிசிக்கலாம் என்று நினைப்பது தவறு. தவறான சிந்தனைகளுடன் வருபவருக்கு, சிரத்தை இல்லாமல் வருபவருக்கு, ஏதேனும் ஒரு வடிவில் வந்து ஐயப்ப ஸ்வாமியே பாடம் நடத்திவிடுவார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

''அப்பா அடிக்கடி சொல்வார்... ஆண்டவனுக்கு பூஜையையும் அடியவர்களுக்கு அன்னதானத்தை யும் ஒருபோதும் நிறுத்திடவே கூடாது. எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ, அப்பெல்லாம் ஸ்வாமி தரிசனம் பண்ணணும்; பூஜை செய்யணும். அது நமது இந்த ஜன்மத்துக்கான கடமை. நம்ம கடமையை ஒருபோதும் செய்யாம இருக்கவே கூடாது. நாம செய்யவேண்டிய நித்தியப்படி அனுஷ்டானங்கள்லேருந்து பகவானுக்கும் அடியவர்களுக்கும் செய்யக் கிடைக்கிற தொண்டுகள் வரைக்கும் சந்தோஷமா, ஆத்மார்த்தமா, முழு ஈடுபாட்டோட செஞ்சுக்கிட்டே இருக்கணும்.

புனலூர் தாத்தா - 9

இதுதான் கடவுளை அடையறதுக்கான வழி. 'எவ்வளவு காசு- பணம் சம்பாதிச்சாலும் சரி... அடுத்த வேளை சாப்பாட்டுக்கே என்ன பண்றதுன்னு தவிக்கிற நிலைல இருந்தாலும் சரி... பூஜை- புனஸ்காரங்களையும் நித்தியப்படி கடமைகளையும் ஒருக்காலும் கைவிட்டுடாதே! அப்படிக் கைவிட்டுட்டா, பகவானும் நம்மைக் கைவிட்டுடுவார், புரியுதா?’ன்னு அப்பா சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலிச்சுக்கிட்டே இருக்கு!'' என்று வியந்தபடி சொல்கிறார் புனலூர் சுப்ரமணிய ஐயர்.  

''நேரம் காலம் பார்க்காம, எப்ப வேணாலும் புனலூர் தாத்தாவைப் பார்க்கறதுக்காக எங்கிருந்தெல் லாமோ ஐயப்ப பக்தர்கள் வந்து கிட்டே இருப்பாங்க. 'சபரி மலைக்கு மாலை போட்டு, விரதம் இருக்கத் துவங்கும்போதே, இந்த முறை புனலூர் தாத்தாவைப் பார்த்துடணும்; அவர் வீட்டுச் சாப்பாட்டை எப்படியும் சாப்பிட்டுடணும்’னு சங்கல்பம் பண்ணிட்டுத்தான் கிளம்புவோம்’னு பலபேர் சொல்லிருக்காங்க! அதனால இப்படியான பக்தர்கள் எப்ப வேணா வருவாங்கன்னு தாத்தா வீட்ல எப்ப வும் சாப்பாடு தயாராயிட்டே இருக்கும். 'ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு நாளும் அன்னத்துக்குக் குறைவே இருக்கக்கூடாது. அப்படி அன்ன தானம் பண்ணாது போயிட்டா, அன்னதானப் பிரியனேனு ஐயப்பன் புகழைப் பாடுறதும் கோஷமிடுறதும் பொய்னு ஆயிடாதா?’னு கேட்பார் புனலூர் தாத்தா'' என்கிறார் வாஞ்சீஸ்வர ஐயர்.

இன்றைக்கும் கன்னிசாமிகள் எனப்படுகிற, புதிதாக மலைக்கு விரதம் மேற்கொள்கிற பக்தர்கள் வீடுகளில், பஜனையும் அன்னதானமும் சிறப்புற நடத்தப்படுகின்றன. 108 சரணம் சொல்லும்போது, 'அன்னதானப் பிரியனே... சரணம் ஐயப்பா!’ என்கிற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. அப்படியான கோஷங் களைக் கேட்கும்போதெல்லாம், அன்னதானப் பிரியனின் பரம பக்தரான புனலூர் தாத்தாவின் நினைவும் நிறைய பக்தர்களுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல், ஐயப்ப பக்த ஜன சபா எனும் அமைப்பு அன்னதானம் செய்வதையே முக்கியமான பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஐயப்ப பக்த ஜன சபா அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஊரிலும் உள்ள சபா உறுப்பினர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

புனலூர் தாத்தா - 9
புனலூர் தாத்தா - 9

கார்த்திகை துவங்கிவிட்டாலே மலையில் பல இடங்களில் ஐயப்ப பக்த ஜன சபாவினர் அன்னதானம் செய்து வருகின்றனர். ஊட்டியில் இருந்தும் ஒட்டன்சத்திரத்தில் இருந்தும் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு, மிகப் பெரிய அளவில் அன்னதானம் நடப்பதைப் பார்த்தாலே, நம் பசியும் பாவமும் காணாது போய்விடும்.

''அப்பா அடிக்கடி சொல்வார்... 'நம்ம கடமையை ஒழுங்கா செஞ்சா போதும்; கடவுள் நம்ம கூடவே எப்பவும் இருப்பார். அதுமட்டுமில்லாம, அவர் திருவடியில் நமக்கு இடமும் தருவார். இதோ... இப்பக்கூட கடவுள் என்னோடயே இருக்கார்னுதான் உள்ளுணர்வு சொல்லுது’. அதனாலதான் அப்பா தன்னோட மரணத்தைக்கூட முன்கூட்டியே தெரிஞ்சுக்கிட்டார்போல! அதுமட்டுமில்லாம, மரணத்தை ரொம்பவும் சந்தோஷமா எதிர்நோக்கி இருந்தார் அப்பா. அவரோட கடைசி நாட்களை இப்ப யோசிச்சுப் பார்க்கும்போது, அப்பாவை ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தன்னோட திருவடியில் சேர்த்துக்கிட்டார்னுதான் தோணுது!'' எனக் குரல் தழுதழுக்கச் சொல்கிறார் சுப்ரமணிய ஐயர்.

சேவையும் பக்தியும் இரண்டு கண்களெனக் கொண்டு வாழ்ந்த புனலூர் தாத்தாவை இறைவன் தனது திருவடியில் சேர்த்துக்கொண்டதில் வியப்பு என்ன இருக்கிறது? நாமும் அதுபோல் சேவையிலும் பக்தியிலும் திளைத்திருக்க வேண்டும்; அவனது திருவடியில் இணைய வேண்டும் என்பதே அந்த உண்மையான பக்தனின் ஆசை. அதை நிறைவேற்றுவதும் நம் கடமைதான்.

ஓம்... ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

(நிறைவுற்றது)