Published:Updated:

ஞானப்பொக்கிஷம் - 26

ஞானப்பொக்கிஷம் - 26

ஞானப்பொக்கிஷம் - 26

ஞானப்பொக்கிஷம் - 26

Published:Updated:
ஞானப்பொக்கிஷம் - 26
##~##

 ந்தக் காலத்தில், கோயில்களில் தினந்தோறும் தெய்வீகக் கதைகளைச் சொல்லிக் கொடுப்பார்கள். பாமரர்கள் உள்பட பலரும் அதைக் கேட்டுப் பயன்பெறுவார்கள். அதாவது, கோயில்களே வாழ்க்கைக் கல்வியைப் புகட்டும் கல்விச் சாலைகளாகத் திகழ்ந்தன. பண்பாடும் படிப்பும் இணைந்து செழித்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பிற்காலத்தில் பள்ளிக்கூடங்கள் என்று தனியாக உருவாயின. அவற்றால் படிப்பு மட்டும் வளர்ந்ததே தவிர, காலப்போக்கில் பண்பாடும் ஒழுக்கமும் குறையத் தொடங்கியது. பாரதியார் காலத்திலேயே இந்தப் பிரச்னை வந்துவிட்டது. அதனால்தான் அவர், 'பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்’ என்றார். 'பள்ளிக்கூடங்களை எல்லாம் இடித்துவிட்டு, அந்த இடங்களில் கோயில்களைக் கட்டுவோம்’ என்று இதற்குப் பொருள் கொள்ளமுடியாது. 'பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் கோயில்களாகப் பள்ளிக்கூடங்களை மாற்றுவோம்’ என்பதே இதன் உண்மையான பொருள்.

அதை அனுசரித்தே, போன தலைமுறை வரையில் எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் 'நீதி போதனை வகுப்பு’ இருந்தது. அந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் ஒழுக்கத்தை போதிக்கும் நல்லதொரு நீதிக் கதையை நயம்படச் சொல்வார்கள். கூடவே, அந்தக் கதைக்குப் பொருத்தமாக ஒரு திருக்குறளையும் சொல்வார்கள். அதுமட்டுமல்ல, ''இந்த நூல்களெல்லாம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த சொத்துக்கள்'' என்று அறிவுறுத்தவும் செய்தார்கள்.

ஞானப்பொக்கிஷம் - 26

நமக்குத் தெரிந்த வழக்கமான பல நீதி நூல்கள் தவிரவும், நமக்குத் தெரியாத இன்னும் ஏராளமான அபூர்வ நூல்களும் உள்ளன. அவற்றில் பல, திருக்குறளை அடிப்படையாக வைத்து உருவான நூல்கள். 'வெண்பா’ முறையில் உருவான அந்த நூல்களில் உள்ள பாடல்களின் பின் பகுதியில், ஒரு திருக்குறள் அப்படியே முழுவதுமாக இடம் பெற்றிருக்கும். பாடலின் முன் பகுதியில், அந்தத் திருக்குறளின் கருத்தை விளக்கும் இதிகாச, புராண, காப்பியக் கதைகள் இடம்பெற்றிருக்கும்.ஒவ்வோர் அதிகாரத்துக்கும் ஒவ்வொரு குறளாக மொத்தம் 133 திருக்குறள்களும், அதை விளக்கும் 133 கதைகளும் அந்த நூல்களில் இடம் பெற்றிருக்கும். அவ்வாறு வெளியான அற்புதமான நூல்களில் சிலவற்றின் பெயர்கள்... முருகேசர் முதுநெறி வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, இரங்கேச வெண்பா எனும் நீதி சூடாமணி, முதுமொழி மேல்வைப்பு, தினகர வெண்பா, வடமலை வெண்பா, திருமலை வெண்பா, திருமலைக் கொழுந்து வெண்பா, வள்ளுவர் நேரிசை, சிவசிவ வெண்பா.

அபூர்வமான அமைப்புகொண்ட அந்த நூல்களில் ஒன்றான 'முருகேசர் முதுநெறி வெண்பா’ என்ற நூலை இப்போது பார்க்கலாம். இந்த நூல், சிதம்பரம் ஈசானிய மடம் ராமலிங்க சுவாமிகள் என்பவரால் இயற்றப்பட்டது. முருகப் பெருமானை முன்னிலைப்படுத்திப் பாடுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. அபூர்வமான கதைகளும், அவற்றின் மூலம் நாம் அறியவேண்டிய நீதியையும், வாழ்வியல் உண்மையையும் விளக்கும் திருக்குறளும் ஒவ்வொரு பாடலிலும் உள்ளன. அவற்றில் இருந்து நாம் அவசியம் அறியவேண்டிய ஒரு கதையும் திருக்குறளும், இங்கே உங்கள் பார்வைக்கு...

நலன் என்ற அரசன் வேட்டையாடப் போனான். அவனிடமிருந்து ஒரு மான் தப்பி ஓடியது. அதைத் துரத்தித் துரத்தி, அரசனுடைய தேரில் இருந்த குதிரைகள் களைத்துப் போய்விட்டன.நலனும் சோர்ந்துபோய், காட்டில் இருந்த வாமதேவ முனிவரைச் சந்தித்தான். ''முனிவர் பெருமானே! உங்களிடம் உள்ள இரண்டு குதிரைகளை இரவலாகக் கொடுங்கள். அரண்மனை திரும்பியதும், உடனே திருப்பித் தந்து விடுகிறேன்'' என்று அவரிடம் வேண்டி, அந்தக் குதிரைகளைப் பெற்றுத் தேரில் பூட்டிக்கொண்டு சென்றான்.

நாட்கள் கடந்தன. வாமதேவர், 'என்ன இது... குதிரைகள் திரும்பி வருகிற வழியாகக் காணோமே?!’ என்று எண்ணி, ஓர் ஆளை மன்னனிடம் தூது அனுப்பி, தமது குதிரைகளைப் பெற்று வருமாறு கூறினார். அப்போதும், நலன் குதிரைகளைக் கொடுக்கவில்லை. அதன் பிறகு, வாமதேவ முனிவரே நேரில் சென்று, மன்னரிடம் தமது குதிரை களைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

மன்னன் மறுத்தான். வாமதேவ முனிவரின் குதிரைகளின் கம்பீரமும் அழகும், அவற்றின் வேகமும் மன்னன் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அதனால் அவற்றைத் தானே சொந்த மாக்கிக்கொள்ள ஆசைப்பட்ட மன்னன், ''முனிவரே! உங்கள் குதிரைகளைக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் அவற்றுக்குப் பதிலாக என் குதிரைகளில் இரண்டைத் தருகிறேன்'' என்றான்.

வாமதேவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பலவிதமான நீதி, நியாயங்களையும் எடுத்துச் சொல்லி, ''அரசனான நீயே இப்படிச் செய்யக்கூடாது. நீ செய்வதைப் பார்த்து, மக்களும் தீய வழியில் செயல் படுவார்கள். நாடே கெட்டுப் போய்விடும்; தீங்கு விளையும்'' என்று எச்சரித்தார்.

ஞானப்பொக்கிஷம் - 26

மன்னனுக்குச் சினம் மூண்டது. வாமதேவரைக் கொல்ல, வீரன் ஒருவனை ஏவினான்.

வாமதேவர் தமது மந்திர சக்தியால் ஓர் அசுரனைப் படைத்து, அரசனையும் அவன் அனுப்பிய வீரனையும் அக்கணமே கொன்றார்.

நலன் இறந்த பின்பு, அவனது தம்பி அரசனாகப் பொறுப்பேற்றான். அவனிடமும் போய், வாமதேவர் தமது குதிரைகளைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

தம்பியோ அண்ணனைவிட வஞ்சனை மிகுந்தவன். எதிர்பாராமல் கிடைத்த அரச பதவி அவனிடம் ஆணவத்தை அளவில்லாமல் வளர்த்திருந்தது. அதனால் அவன் தன் அண்ணனைப் போல ஆளை அனுப்பாமல், தானே முனிவரைக் கொல்ல முயன்றான். வில்லை எடுத்து, அதில் அம்பைப் பூட்டியபோது, வாமதேவர் சற்றும் தாமதிக்காமல் சாபம் கொடுத்தார்.

அதன் விளைவாக, அம்பைத் தொடுத்த அரசனின் கை அப்படியே செயலிழந்து அசைவற்று நின்றது. தவிர, அரசனின் மகனும் அப்போதே சுருண்டு விழுந்து இறந்து போனான்.

அரசன் மிகவும் பயந்து, வாமதேவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவருடைய குதிரைகளைத் திரும்பக் கொடுத்தான். முனிவரின் அருளால், பிறகு மன்னனின் கை பழையபடியே இயங்கத் தொடங்கியது. மன்னனின் மகனும் உயிர்பெற்று எழுந்தான்.

'சான்றோரான முனிவர், மன்னன் ஒரு வார்த்தை கேட்டவுடனேயே தமது குதிரைகளை அவனுக்குத் தந்து உதவினார். பண்பாடு இல்லாத அரசனோ, கரும்பைப் போல நன்றாக வைத்து நசுக்கிப் பிழிந்து கொன்றால்தான் பலன் தருகிறான்’ என்கிறது முருகேசர் முதுமொழி வெண்பா.

அந்தப் பாடலும், குறளும் இதோ...

வஞ்ச நலன் வாமதேவர்க்கு உதவான் வாசினச்சேய்
முஞ்சிய பின் ஈந்தான் முருகேசா - எஞ்சலின்றிச்
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்.

(முருகேசர் முகநெறி வெண்பா: 108-ஆம் பாடல்)

நல்லவர் ஒருவரின் தன்மையையும், அடுத்தவர் பொருளில் ஆசைகொண்டு அழிந்த ஓர் அரசரின் கதையையும், அதற்கு உண்டான திருக்குறளையும், நான்கே வரிகளில் நயம்படச் சொல்லும் பாடல் இது. இதுபோல 133 பாடல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

- இன்னும் அள்ளுவோம்...