புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கல்விக் கோயில்! - கோவை - கோட்டைமேடு

கல்விக் கோயில்! - கோவை - கோட்டைமேடு

கல்விக் கோயில்! - கோவை - கோட்டைமேடு
##~##

கொங்கு தேசமாம் கோவை நகரின் முக்கியப் பகுதியான கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில். கரிகால்சோழன் கட்டிய அழகிய ஆலயம் இது.

புராதனப் பெருமை கொண்ட இந்தக் கோயிலில், தட்சிணாயனம் மற்றும் உத்தராயனம் ஆகிய காலங்களுக்கான இரண்டு வாசல்கள் உள்ளன. அதேபோல், சொர்க்க வாசல் உள்ள கோவைக் கோயில்களில் இதுவும் ஒன்று, என்கின்றனர் பக்தர்கள். தற்போது பாதுகாப்பு கருதி கதவு சார்த்தியே வைக்கப்பட்டுள்ளது.

இங்கு தாயாரின் திருநாமம்- ஸ்ரீமகாலட்சுமித் தாயார். கருணையும் கனிவும் கொண்டு, தன்னை நாடி வரும் பெண்களுக்குத் திருமண வரம் தரும் தேவி இவள், எனப் போற்றுகின்றனர் பெண்கள்.

அசுரர்களை அழித்து, அவர்களிடம் இருந்து வேதச் சுவடிகளைக் கைப்பற்றி, கலைவாணியிடம் தந்தருளினார் ஸ்ரீஹயக்ரீவர். அவருக்கும் இங்கே சந்நிதி உண்டு. இங்கே... இவருக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் அதிகம் நடைபெறுகின்றன.

கல்விக் கோயில்! - கோவை - கோட்டைமேடு

ஸ்ரீலக்ஷ்மிதேவியைத் தாங்கியபடி இருப்பதால், ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். புதன்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரை வணங்கித் தொழுதால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை, திராட்சை மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வணங்கினால், கல்வி ஞானம், ஞாபக சக்தி ஆகியவை அதிகரிக்கும்.

கல்விக் கோயில்! - கோவை - கோட்டைமேடு

வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில், இந்தக் கோயிலில் ஸ்ரீசுதர்சன ஹோமமும் ஸ்ரீஹயக்ரீவ ஹோமமும் பிரமாண்ட மாக நடைபெறும். அப்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கே அழைத்து வந்து, ஸ்வாமி தரிசனம் செய்து, ஹோமத்திலும் பங்கு பெறுகின்றனர். இந்த நாளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். தங்கள் பெயர், தேர்வு பதிவு எண், நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியவற்றைக் காகிதத்தில் எழுதி, உத்ஸவருக்கு அருகில் வைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.

'ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாகிருதம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே’

ஞானம் மற்றும் ஆனந்தத்தின் வடிவமாய், குற்றமற்ற ஸ்படிக மணியைப் போன்ற திருமேனி கொண்டவனும், எல்லாக் கலைகளுக்கும் பிறப்பிடமாகத் திகழ்பவனும், குதிரை முகத்தைக் கொண்டு பீதாம்பர ஆடை தரித்து ஸ்ரீமகாலட்சுமி தாயாரை மார்பில் கொண்ட ஹயக்ரீவரை மனதார வழிபடுகிறேன் என்பது பொருள்.

இதனை தினமும் காலையில் 12 முறை சொல்லிவிட்டு ஸ்ரீஹயக்ரீவரை வணங்கினால், கல்விச் செல்வம் குறைவறக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  - இரா.வசந்த்

படங்கள்: த.சித்தார்த்