மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

தர்ப்பணம்-சிராத்த காரியங்களை ஆலயங்களில் செய்யலாமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

திருக்கோயில்களில் பித்ரு தர்ப்பணம், சிராத்த காரியங்களைச் செய்யலாமா? இதுகுறித்து தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது?

 - பா.சுப்ரமணியராவ், பெங்களூரு-97

பித்ரு காரியங்கள் நித்ய கர்மாவில் அடங்கும். அவற்றை நமது இல்லங்களில்தான் செய்யவேண்டும். அறத்தைக் கடைப்பிடிப்பதற்கே வீடு ஏற்பட்டது. முன்னோர் ஆராதனையும் அறம். அதைத் திருக்கோயில்களில் வைத்துச் செய்வது பொருந்தாது.

ஆடம்பரமோ அட்டகாசமோ இல்லாமல் தூய்மையுடனும் அமைதியுடனும் சிரத்தையோடு வீட்டில் நிகழவேண்டிய அத்தனை அறங்களும் வாசற்படி தாண்டி தெருவுக்கு வந்துவிட்டன. அதில் பழகிப்போன மனம், இதுமாதிரியான கேள்விகளை எழுப்பும்.  

உலக அமைதி குறித்த கடவுள் வழிபாட்டுக்காகத் திருக்கோயில்கள் தோன்றின. அந்தக் கோயில்கள் மக்களுக்குச் சொந்தமில்லாதவை. நமக்குச் சொந்தமான இடத்தில் முன்னோர் கடனைச் செய்வதே சிறப்பு. பண்டைய நாட்களில் பூணூல் கல்யாணம், திருமணம் போன்றவை வீட்டில் நிறைவேற்றப்பட்டன. நல்ல காரியங்கள் அனைத்தும் சத்திரத்தில் நிகழும். பித்ரு காரியங்களுக்குத் தனியாக ராம தீர்த்தம், கிருஷ்ண தீர்த்தம் போன்ற பல பெயர்களில் சத்திரங்கள் உண்டு. இறப்பும் பிறப்பும் மருத்துவமனையில் நிகழும். இன்னாளில், தர்ப்பணமும் சிராத்தமும் எங்கு பண்ணினாலும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 'வீட்டில்தான் பண்ணவேண்டும்’ என்றால், தர்ப்பணத்தையும் சிராத்தத்தையும் விட்டுவிடத் துணிபவர்களும் உண்டு. கர்மலோபம் வந்து சூன்யமாகிவிடாமல் காப்பாற்ற, தவற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கேள்வி - பதில்

இப்படித் தவறு ஒவ்வொன்றையும் பயந்து பயந்து ஒப்புக்கொண்டு செயல்பட ஆரம்பித்ததும், தர்மசாஸ்திரம் மறைந்துவிட்டது. இப்போது தர்மசாஸ்திரம் ஏட்டில் இல்லை. மக்களிடம் அவ்வப்போது மாறி வரும் நடைமுறைகளின் தொகுப்பே, எழுதப்படாத தர்மசாஸ்திரமாகத் திகழ்கிறது.

திருமணத்துக்கு, ஒரு வருடம் முன்னதாகவே சத்திரம் தேட வேண்டும். 10-ஆம் நாள் காரியத்துக்கும் சத்திர வேட்டை தொடர்கிறது. மின்சாரத்தில் தகனம், 10-ஆம் நாள் காரியம் ஓர் இடத்தில், 11 மற்றும் 12 நாள் காரியங்கள் வேறோர் இடத்தில், 13-ஆம் நாளுக்கு வேறொரு தனியிடம். இப்படி இடம் மாறி, நமது விருப்பத்துக்கு உட்பட்டுச் செயல்படுவதை, தர்மசாஸ்திரத்துக்கு உட்பட்டதாக விளக்கம் அளிக்கும் திறமைசாலிகளும் உண்டு.

கன்யகாதானம் முடிந்ததும், முகூர்த்தப் புடவை அளிக்கப்பட்டுவிடும். அந்தப் பெண் புதுப் புடவை அணிந்த பிறகு, கால் அலம்பாமலேயே இருக்கையில் அமர்ந்துவிடுவாள். புடவை கட்டிக்கொள்ளப் போகும் இடைவெளியில், அக்னிமுகம் முடிந்துவிடும். லாஜஹோமம் செய்யவேண்டிய கைகளுக்கு ஸம்ஸ்காரம் விடுபட்டுவிடும். ஆனால், தாலி கட்டும்போது புரோகிதர் ஒரு சொற்பொழிவு ஆற்றுவார். அதில், 'பாணிக்ரஹணம் நடைபெறுவதற்கு முன்னால் எவரும் தம்பதிக்குக் கைகுலுக்கி அன்பைப் பரிமாறிக் கொள்ளாதீர்கள்’ என்று அறிவுரை வழங்குவார்; அதில் சாஸ்திரம் நிறைவு பெற்றதாகப் பெருமிதம் அடைவார். இப்படி, புரோகிதரின் சொற்பொழிவு தர்மசாஸ்திரத்தில் நுழைந்து, புரோகிதரின் பொறுப்பாக மாறிவிட்டது.

பரார்த்த பூஜைக்காக கோயில்கள் தோன்றின. பூஜை செய்ய இயலாதவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் கோயில்கள் வரப்பிரசாதமாக மாறின. அவர்களை நல்வழிப்படுத்த மக்கள் பிரதிநிதியாக ஒருவர் (கோயில் குருக்கள்) பரார்த்த பூஜையில் செயல்பட்டு மக்களுக்கு உதவினார்கள். ஆகமம் தனிப்பட்ட ஒருவரின் தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றைக் கோயிலில் நுழைய அனுமதிக்காது. செல்வாக்கை வைத்தோ அல்லது வர்த்தகரீதியில் அவர்களே இடம் அளித்தாலும், நாம் அங்கு நிறைவேற்றுவது சரியல்ல.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

நதீ தீரத்திலோ, குளக்கரையிலோ தர்ப்பணம் செய்யலாம். அது பொது இடம்; எவரும் சொந்தம் கொண்டாட இயலாது. ஓட்டலில் தங்கிக் காரியாலயம் சென்று வருபவர்களுக்கு வீடு இருக்காது. அதற்கு அவசரகால நிலையாக பாவித்து, புரோகிதரின் வீட்டில் நடத்தலாம். உண்மையை விளக்கிப் பிரர்த்தித்துச் செயல்படலாம். அலங்கார வீடு அலங்கோலமாகும் என்ற எண்ணத்தில் தர்ப்பண சிராத்தங்கள் வெளியே நடத்தப்படுவது உண்டு. இடம் இல்லாமல் தவிக்கும் தறுவாயில், கோயிலில் அவர்களின் அனுமதியுடன் செய்யலாம். ஆனால், அதையே நடைமுறைப்படுத்துவது பலன் தராது.

ஆகவே, தர்ப்பண- சிராத்தங்களைக் கோயிலைத் தவிர்த்து, மற்ற இடங்களில் செய்வது நல்லது. அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு, குடியிருக்கும் இடத்தில் அறத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் தோன்றாது. இடநெருக்கடியைச் சுட்டிக்காட்டி, எல்லா அறங்களையும்... காதுகுத்தில் துவங்கி கல்லெடுப்பு வரையிலும் சத்திரத்தில் செயல்பட்டு, குடியிருப்புக்கு மாசு ஏற்படாமல் வைக்கத் தோன்றும். எல்லாம் கான்ட்ராக்ட் முறையில் விடப்படுவதால் பொறுப்பேற்க வேண்டியதில்லை. உபசரிப்பு என்பது கான்ட்ராக்டரிடம் இருப்பதால், தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் செயல்படுவதற்குத் தோதாக இருக்கிறது.

கர்மாவில் இருக்கும் சிரத்தை அறவே அகன்று விடுவதால், எது எப்படி நடந்தாலும் மனம் ஏற்றுக் கொண்டுவிடும். எல்லாம் நல்லபடி நடந்ததாக சமுதாயத்துக்குக் காட்டினால் போதும். மனசாட்சி எங்கே இருக்கிறது என்று தேடினால் கிடைக்காது.

விரத காலம் தவிர மற்ற நாட்களில் ஸ்வாமி ஐயப்பன் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

- ஜி.மோகன் ராம், சென்னை-117

உணவு- உறக்கத்தைத் துறந்து இறைவனில் மனம் ஒன்றியிருக்க வேண்டும் (உபவாசம், ஜாகரணம், உபாசனை). அப்போது அந்த மனம் இறைவனை மட்டுமே அறியும். அப்படி, இறைவனுடன் ஒட்டிக்கொண்டு பழக்கப்பட்ட பிறகு, மனமானது கரைந்து மற்றவை யாவும் மறைந்துபோகும்போது, மிஞ்சியிருக்கும் ஆன்மா மட்டுமே தெரியும். இறைவன், ஆன்மா இரண்டும் ஒன்றுதான் என்ற உணர்வு வந்துவிடும்.

இந்த நிலையை எட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், அசையாமல் நிலைத்துச் செயல்படுவதை விரதம் என்கிறது ஸனாதனம் (யஸ்ய விரதம் பசவோயந்திஸர்வே...). உணவில் இறங்கினால் மனம் உணவில் மூழ்கி, உண்ட ஆயாசத்தில் சோர்வுற்று முடங்கிவிடும். உறக்கத்தில் ஓய்வெடுக்கும் மனமானது ஒட்டுமொத்தமாகப் படுத்துவிடும். இந்த நிலையில் மனத்தை இறைவனோடு இணைய வைப்பது இயலாத ஒன்றாக மாறிவிடும்.

கேள்வி - பதில்

ஊணிலும் உறக்கத்திலும் போலி இன்பத்தை நுகர்ந்த மனம், அதை விட்டு வெளிவர இயலாததை மறைக்க, 'உண்ணாமலும் உறங்காமலும் எப்படி இறைவனை நினைக்க இயலும்?’ என்ற கேள்வியை எழுப்பும். அந்த இரண்டையும் மறந்த மனத்தால் மட்டுமே இறைவனை நினைக்க இயலும். ஆனாலும், இரண்டும் இருந்தால் மட்டுமே இறைவனை நினைக்க இயலும் என்ற விபரீத எண்ணத்தை உறுதியாக அது நம்பும். இதை அறியாமை என்று சொல்லலாம். இந்த அறியாமை அகன்றால் மட்டுமே விருப்பம் ஈடேற வாய்ப்பு இருக்கும். ஆகவே, தினம் தினம் ஐயப்பன் ஆராதனையில் ஈடுபட்டால், அந்தப் பழக்கமானது விரத காலங்களிலும் மனம் அசையாமல் இறைவனில் லயிக்க உதவும்.

போர் இல்லாதபோதும் போர்பயிற்சி தினமும் இருக்கும். தீ விபத்து இல்லாத காலங்களிலும் தீயணைப்புப் படையினருக்குப் பயிற்சிகள் தொடரும். மோப்ப நாய்களுக்கும் தினம் தினம் மோப்பப் பயிற்சிகள் தொடரும்.

தினமும் நாராயண நாமத்தைச் சொல்லிப் பழக்கப்பட்டதால், இறக்கும் தருணத்தில் அஜாமிளன் வாயிலிருந்து நாராயண நாமம் வந்தது என்றொரு கதையுண்டு. ஆகவே, விரத நாட்களில் நமது விரதம் வெற்றி பெற, அனுதினமும் ஐயப்பன் ஆராதனை அவசியம். பயிற்சியும் பற்றற்ற நிலையும் மனத்தைக் கட்டுப்படுத்தும் என்று சொல்வார் கண்ண பரமாத்மா (அப்யாசேனசகௌந்தேய வைராக்யேணச க்ருஹ்யதை). ஊண் உறக்கத்தில் பற்று அகல வேண்டும். தியானத்துக்குத் திரும்பத் திரும்ப முயற்சிக்க வேண்டும். அப்போது மனம் நாம் சொன்னதைக் கேட்கும். ஒப்புக்கு விரதத்தில் இறங்காமல், உண்மையில் இறங்குங்கள். அதற்கு தினமும் செய்யும் ஐயப்பன் ஆராதனை ஒத்துழைக்கும்.

பரம்பொருளின் ஸ்தூல வடிவம் ஐயப்பன். திருப்பெயரும் உருவமும் மனம் பற்றிக்கொள்ள ஒத்துழைக்கும். ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிய மனம், உலகத்தை மட்டும் மறக்காது, ஐயப்பனின் பெயரையும் உருவத்தையும்கூட மறந்துவிடும். பரம்பொருளோடு தானாகவே இணைந்துவிடும். விண்கலத்தை விண்ணில் நிறுத்த ஓர் உந்து இயந்திரம் தேவைப்படும். அந்த இயந்திரம் ஒரு நிலைக்கு மேல் விண்ணில் செல்லாது. அதுபோன்றே, ஸ்தூல வடிவம் இங்கேயே தங்கிவிடும்.

அறியாமையில் தத்தளிக்கும் மனத்துக்கு இளைப்பாறும் இடத்தைச் சுட்டிக்காட்டுவது விரதம். உலக இன்பத்துக்கு அதைப் பயன்படுத்தி உழன்றுகொண்டிருக்காமல், நிரந்தர ஆனந்தத்தை எட்ட முயற்சிக்க வேண்டும். அதற்கான முதல் பாடம்தான் நித்ய பூஜை. விதைக்காமல் அறுவடை செய்ய முடியாது. மனத்தை எளிதில் கட்டுப்படுத்த இயலாது. இரக்கப்பட்டு, முயற்சி இல்லாதவனையும் கரையேற்ற மாட்டார் கடவுள். லாட்டரிச் சீட்டு வாங்காதவனுக்குப் பரிசு விழாது.

'மரம் வைத்தவன் தண்ணி ஊத்துவான்’, 'கல்லுக்கு அடியில் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பான்...’ என்று சும்மா இருந்தால், கடவுள் வரமாட்டார்; எமதருமன்தான் பாசக்கயிற்றுடன் வருவான். தேரையும் மரமும் இயற்கையின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுச் செயல்படுபவை; தவறு செய்யாதவை. ஆறாவது அறிவை அழிவுக்குப் பயன்படுத்தத் துணிந்தவனை ஆண்டவன் ஆட்கொள்ள மாட்டான். பாவச் செயலிலிருந்து மனத்தை விடுவித்து, தியானப் பயிற்சியில் ஆழ்ந்தால் ஆதாயம் உண்டு. அதற்கான எல்.கே.ஜி நிலையே நித்ய பூஜை!

குழந்தைகளுக்கு தெய்வப் பெயர்களை வைப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன? சில தருணங்களில் குழந்தைகளைப் பெயர் சொல்லித் திட்டும்போது, தெய்வத்தை நிந்திப்பதாகிவிடாதா?

- சு.பாலசுப்பிரமணியன், ராமேஸ்வரம்
- மதுமிதா, சென்னை-44

முன்னோர் சொல்லி வைத்திருக்கிறார்கள் எனில், அதில் ஏதாவது நல்ல குறிக்கோள் இருக்கும். ஆனால், அந்த நல்ல குறிக்கோள் என்ன என்று தேடுவதில் நாட்டம் இருக்காது. அதில் குறையைச் சுட்டிக்காட்டி, 'ரிவ்யூ’ செய்வதில்தான் மனம் ஈடுபடும். முன்னோர் சொன்னதை முழுமையாக ஆராய்ந்தவன் போல் நடித்து, அதில் குறைகளே மிஞ்சியிருக்கின்றன என்றொரு முடிவைச் சொல்பவருக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும். மற்றவர்களும் அவர் சொல்வதை ஆராய முற்படாமல், அவருக்குப் பெருமை அளித்து, அவரின் கூற்றுக்குத் துணைபோவதும் உண்டு.

இப்படி விஷயம் தெரியாமலேயே, ஒவ்வொன்றுக்கும் மாற்று விளக்கம் அளித்து, அதனால் பெருமை பெற்றவர்கள் ஏராளம். நமது பண்பில் விளைந்த பல நடைமுறைகளின் உள்ளர்த்தத்தை உணராமல், விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் மாற்று விளக்கத்தை அள்ளி வீசி, பெருமையில் மிதப்பவர்களும் இருக்கிறார்கள்.

கேள்வி - பதில்

அலர்மேல்மங்கை என்ற பெயரை அலமேலு, அலமு என்று சுருக்கிச் சொல்வது உண்டு. ஸ்ரீநிவாஸனை சீனு என்றும், பத்மநாபனை பப்பூ என்றும், சுப்ரமணியனை சுப்பு என்றும் சுருக்கிச் சொல்வது உண்டு. இப்படிக் கடவுள் பெயர்களை அலங்கோலப்படுத்திச் செயல்படும்போது நம் மனம் நெருடலைச் சந்திப்பது இல்லை. குழந்தையின் பெயர் கிருஷ்ணன் என்றிருக்க, தாயானவள் அந்தக் குழந்தையை திருட்டுப் பயலே, போக்கிரி என்று சொல்லும்போது மன நெருடல் ஏற்படுவது இல்லை.நாராயணன் என்ற நாமத்தை 'நாணா’ என்றும், அபிராமியை 'அபி’ என்றும் கூப்பிடும்போது, கடவுள் பெயரை இப்படிச் சிதைக்கிறோமே என்று நெருடல் ஏற்படுவது இல்லை. நமது தசாவதார வரிசையின் உள்ளர்த்தத்தை உணர முற்படாமல், டார்வினின் பரிணாம வாதம் தசாவதாரத்தால் விளக்கப்படுகிறது என்று சொல்லி, விஞ்ஞான விளக்கத்தால் புராணத்துக்குப் பெருமை சேர்த்ததாக நினைத்து, அதன் உள்ளர்த்தத்தை மக்களுக்குத் தெரியவிடாமல் தடுப்பவர்களும் இருக்கிறார்கள். பழைய புராணங்களுக்கு புது விளக்கம் அளித்து புராணத் தகவல்களைக் குழப்பி வருபவர்களும் உண்டு.

இங்கெல்லாம் புராணத் தகவல்கள் இப்படித் தாறுமாறாக சிதைக்கப்படுகிறதே என்று மன நெருடல் தோன்றவில்லை. தெய்வத்தின் பெயர்களைத் தாங்கிய குழந்தைகளைத் திட்டும்போது மட்டும் தெய்வ நிந்தனை வந்ததாக நெருடல் வருகிறது. தெய்வப் பெயரைச் சொல்லிக் குழந்தையைத் திட்டும்போது, ஒருவனின் மனம் அவ்னது குழந்தையைத்தான் நினைத்துக்கொண்டிருக்கும். அவனது அந்தத் திட்டும் குழந்தையையே சேரும். நல்ல நேரத்திலேயே தெய்வத்தை நினைக்காத மனம், திட்டும்போது அது ஓடி வரும் என்பது பொருந்தாது.தெய்வத்தின் முன் அமர்ந்து அவர் பெயரைச் சொல்லும் வேளையில், மனம் பல இடங்களில் பயணிக்கும். இதைத் தெய்வ நிந்தனையாக, தெய்வத்தை இளக்காரமாக நினைப்பதாக நாம் கருதவில்லை. மகனின் பெயர் நாராயணன் என்றிருந்ததால், அதைச் சொல்லிப் பழக்கப்பட்ட அஜாமிளனுக்கு, அந்திம காலத்தில் நாராயணன் என்று சொல் வெளிவந்தது. அதனால் வீடு பேறு கிடைத்தது.

குழந்தைகளை தெய்வ நாமத்தை உச்சரித்துத் திட்டும்போது, தன்னைத் திட்டுவதாக தெய்வம் எண்ணாது. தங்களது மனநிலையை அறிந்து, பெயர் தனக்குரியதாக இருந்தாலும், திட்டு குழந்தைக்கே என்று புரிந்துகொள்ளும். ஏனெனில், திட்டுபவனின் மனத்தில் இறைவன் உறைந்திருப்பதால், திட்டின் இலக்கு எது என்பது அவருக்கு விளங்கும்.

எந்தவொரு நல்ல காரியத்திலும் ஒரு குறையைச் சுட்டிக்காட்டி அதை ஏற்காமல் இருப்பது நல்ல சிந்தனை ஆகாது. புராணங்கள் அத்தனையும் நமது நன்மைக்காகக் காத்திருக்கின்றன. அவரவர்கள் எடுத்துக்கொள்ளும் விதத்தில் அதன் பலம் அமையும். புராணத் தகவல்களை மனதில் வாங்கிக்கொள்ளாமல், நமது விருப்பத்துக்குப் பொருந்தாததை குறையாகப் பார்த்து, ரிவ்யூவில் இறங்கும் பழக்கத்தை உதறித்தள்ளி விட்டு, விஷயத்தைத் தேடுவதில் முனையுங்கள்; தெய்வ நிந்தனை தோன்றாது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.