புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கல்விக் கோயில்! - உத்தமர்கோவில்

கல்விக் கோயில்! - உத்தமர்கோவில்

கல்விக் கோயில்! - உத்தமர்கோவில்
##~##

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில் அமைந்துள்ளது உத்தமர்கோவில். ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசிவனார், ஸ்ரீதிருமால் மூவரும் ஒரே இடத்தில் தரிசனம் தருகிற அற்புதமான திருத்தலம் இது. மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து வணங்கினால், இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் சந்தோஷங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

 'பேரானைக் குறுங்குடியெம் பெருமானைத் திருத்தண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார்திண் கடலேழு மலையேழிவ் வுலகேழுண்டும்
ஆராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே...’

என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திருப்பதிகளில் இந்தத் தலமும் ஒன்று!  

அதேபோல், சிவனாரின் திருக்கோலங்களில் ஒன்றான பிச்சாண்டார் திருக்கோலம் பூண்டதும் இந்தத் தலத்தில்தான். அதனால்தான், இந்த ஊருக்கு பிச்சாண்டார்கோவில் என்று பெயர் அமைந்ததாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.

கல்விக் கோயில்! - உத்தமர்கோவில்

அடுத்து... 'குருர் பிரம்மா குருர் விஷ்ணு...’ என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தின்படி, முதல் குருவாக வணங்கி வழிபடக்கூடிய ஸ்ரீபிரம்மா, இந்தத் தலத்தில் ஸ்ரீபிரம்ம ஞான சரஸ்வதி தேவியுடன் தம்பதி சமேதராகக் காட்சி தந்தருள்கிறார்.

'நீ பெரியவனா... நான் பெரியவனா’ என்று ஸ்ரீவிஷ்ணுவுக்கும் ஸ்ரீபிரம்மாவுக்கும் சண்டையும் போட்டியும் வந்தது. அப்போது, சிவனாரின் அடிமுடி தேடினர். ஆனால் முடியவில்லை. இறுதியில், சிவனாரின் திருமுடியில் இருந்து கீழே விழுந்த தாழம்பூவிடம் ஓர் உடன்படிக்கை போட்டுக்கொண்டார் ஸ்ரீபிரம்மா. 'நான் திருமுடியைப் பார்த்துவிட்டேன்’ என்று அவர் சொல்ல, 'ஆமாம், ஆமாம்... பிரம்மா திருமுடியைப் பார்த்தார்’ என்று தாழம்பூவும் பொய்சாட்சி சொல்ல... சிவனாருக்கா உண்மை தெரியாது? 'பூலோகத்தில் உனக்கென தனி ஆலயம் இருக்காது’ என்று ஸ்ரீபிரம்மாவுக்கும், 'வழிபாட்டில் உன்னைப் புறக்கணிப்பார்கள்’ என்று தாழம்பூவுக்கும் சாபம் கொடுத்தார் சிவபெருமான்.

பிறகு, இந்தத் தலத்துக்கு வந்த பிரம்மா, சிவபூஜை செய்து, கடும் தவம் மேற்கொள்ள... அதில் மகிழ்ந்த சிவனார், இங்கே தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்க அருளினார் என்கிறது ஸ்தல புராணம்.

இங்கே... ஸ்ரீபிரம்மாவின் சந்நிதிக்கு இடதுபுறம், தனிச்சந்நிதியில் இருக்கிறாள் ஸ்ரீசரஸ்வதிதேவி. கல்விக் கடவுளாம் சரஸ்வதிதேவி இங்கு வீணைக்குப் பதிலாக ஏட்டுச்சுவடியை ஏந்தியபடி அபய, வரத அஸ்த முத்திரைகளுடன் அமர்ந்து அருள் வழங்கும் அழகே அழகு! ஞானத்தின் திசையான தெற்கு நோக்கியபடி ஸ்ரீசரஸ்வதிதேவி காட்சி தருவதால், இங்கு வந்து தேவியை வணங்கினால், மாணவர்கள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவார்கள்; ஞானமும் யோகமும் கிடைக்கப்பெற்று, தேர்வில் வெற்றி வாகை சூடுவார்கள்; நல்ல உத்தியோகமும் பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்!

கல்விக் கோயில்! - உத்தமர்கோவில்

ஸ்ரீவிஷ்ணு பகவான், இங்கு ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் எனும் திருநாமத்துடன் கிழக்குப் பார்த்த நிலையில் பள்ளி கொண்டபடி, மார்பில் ஸ்ரீமகாலட்சுமித் தாயாருடன் சேவை சாதிக்கிறார்.

தாயாரின் திருநாமம்- ஸ்ரீபூரணவல்லித் தாயார். தனிச்சந்நிதியில் அழகே உருவெனக் கொண்டு காட்சி தருகிறார். ஸ்ரீபிரம்மாவின் சிரசில் ஒன்றைக் கொய்ததால், பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளான சிவனார், தோஷம் நீங்க பிச்சைப் பாத்திரத்துடன் அலைந்தார். அப்போது, கருணையும் கனிவும் பொங்க அன்னமிட்டவள் இந்தத் தாயார்தான். எனவே இந்தத் தாயாரை வணங்கினால், வீட்டில் சகல கடாட்சங்களும் பெருகும் என்கின்றனர், பக்தர்கள்.

ஸ்ரீபிட்சாடனாராகத் திருக்கோலம் பூண்ட திருத்தலத்து சிவனாரைத் தொழுதிட, தீய எண்ணங்களும் சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

பிள்ளை பாக்கியம் வேண்டி, தசரதச் சக்கரவர்த்தி வழிபட்ட சிவலிங்கமும் இங்கு உள்ளது. இதனை தசரத லிங்கம் என்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து அர்ச்சித்து வழிபட்டால், விரைவில் குழந்தை வரம் பெறலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பெண்கள்.

கல்விக் கோயில்! - உத்தமர்கோவில்

முக்கியமாக, ஏழு குருமூர்த்திகளும் அருளும் ஒப்பற்ற திருத்தலம் இது. ஸ்ரீபிரம்ம குரு, ஸ்ரீவிஷ்ணு குரு, ஸ்ரீசிவ குரு, ஸ்ரீசக்தி குரு, ஸ்ரீசுப்ரமணிய குரு ஆகியோருடன் தேவகுருவாகிய ஸ்ரீபிரகஸ்பதி, அசுரகுருவான ஸ்ரீசுக்கிராச்சார்யர் என ஸப்த குருக்களும் ஒருசேர தரிசனம் தந்து, பக்தர்களுக்கு குரு யோகத்தை வாரி வழங்கும் சிறப்புமிக்க ஆலயம்.

வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு குருமார்களையும் வணங்கி, சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும், ஸ்ரீஞான சரஸ்வதியையும் மனதாரத் தொழுது வணங்கினால், கல்வியில் மேன்மை, தெளிந்த ஞானம், சகல யோகம், வியாபார விருத்தி, மனதுக்கு நிறைந்த திருமணம், கண்ணுக்கு நிறைவான குழந்தைகள் ஆகியவற்றைப் பெறலாம்.

மாணவர்கள் ஒரே ஒருமுறை இங்கு வந்து வழிபட்டாலும் போதும்... குரு யோகம் கைகூடும்; படிப்பில் முன்னேற்றம் உண்டு; அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுவார்கள்.

- பி.விவேக் ஆனந்த்

படங்கள்: தே.தீட்ஷித்