புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!
##~##

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் பயணித்துக்கொண்டிருந்தனர் தாத்தாவும் பேரனும்.

 ''ஒருகாலத்துல இது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் ஜில்லாவாதான் இருந்துச்சு. இதோ... காவிரிக் கரையும் அதையட்டி வாழைகளும் அடர்ந்து இருந்துது. வாழைப்பழத்துக்கு கதலின்னு ஒரு பேரு உண்டு, தெரியுமில்லியா? அதனால இதை கதலிவனம்னு சொல்லுவாங்க. அது அப்புறம் எப்படி எப்படியோ மாறி, கடைசியில கருவாழைன்னு ஆயிடுச்சு. இப்ப இந்த ஊருக்குக் கருவாழைன்னுதான் பேரு!'' என்று தாத்தா பேரனிடம் சொல்லிக்கொண்டே வந்தபோது, காற்று முகத்தில் மோதி, அவர்களின் தலைமுடியைக் கலைத்தது.

''இன்னொண்ணும் சொல்லுவாங்கடா கண்ணா... அதாவது, வாழையின் கரு உதிச்சதே இங்கேதானாம். அதனாலதான் கருவாழைன்னு பேரு வந்துச்சாம். காவிரிக்கரையில இருக்கிறதால, கருவாழக்கரைன்னும் ஊருக்குப் பேரு வந்ததா சொல்லுவாங்க!'' என்றார் தாத்தா.

''கோயில் கிட்டதான் இருக்கா தாத்தா?'' என்று பேரன் கேட்க, ''ஆமாம்டா செல்லம்! நடந்தே போயிடலாம்'' என்று சொல்லியபடியே, பேச்சைத் தொடர்ந்தார் தாத்தா.

கதை கேளு... கதை கேளு!

''சக்தியும் சாந்நித்தியமும் குடிகொண்டிருக்கிற அற்புதமான ஊர் இது. வயிற்றில் வளரும் கருவைக் காபந்து செய்து, அதற்கு உரமும் தெம்பும் தந்து, நல்லவிதமா இந்த பூமிக்கு குழந்தையா பிறக்கச் செய்கிற கருணையே வடிவானவள், இங்கே இருக்கிற மாரியம்மன்'' என்றார் தாத்தா.

''வம்சம் வாழையடி வாழையா செழிக்கணும்னு நீங்க அடிக்கடி சொல்வீங்களே, அந்த வார்த்தைகூட இங்கேருந்துதான், இந்த ஊர்லேருந்துதான் வந்திருக்குமா தாத்தா?'' என்று ஆவலுடன் கேட்டான் பேரன்.

''அடேடே! நல்லா யோசிக்கிறியே!'' என்று பேரனின் புத்திக்கூர்மையை வியந்த தாத்தா, தொடர்ந்து... ''அது தெரியலை. ஆனா, இங்கே வந்து ஸ்ரீமாரியம்மனை வணங்கினா, நம்ம குடும்பமும் குழந்தையும் வாழையடி வாழையா செழிக்குங்கறது ஐதீகம். சுமார் 400 வருஷத்துக்கு முன்னால சதாசிவ ஐயர், நரசிம்ம ஐயங்கார், தாண்டவராயப் பிள்ளைன்னு மூணு பேரும் ஒரு வழக்குக்காக, தஞ்சாவூர் கோர்ட்டுக்குப் போனாங்க. அப்ப, காவிரியிலேருந்து பிரிஞ்சு உப நதியா ஓடுற வடவாற்றுல குளிச்சாங்க. அப்படியே, அங்கிருந்த கல்லுல துணி துவைக்கும்போது, அந்தக் கல் அப்படியே சரிஞ்சுதாம். அதைத் தூக்கி நிறுத்தலாம்னு மூணு பேரும் முயற்சி பண்ணினப்போதான் தெரிஞ்சுது... அது அம்மன் விக்கிரகம்! அந்த இடம் கருந்தட்டான்குடிங்கற பகுதி. இன்னிக்குக் கரந்தைன்னு சொல்றாங்க. அப்ப, 'இந்த அம்மனை எடுத்துச் சென்று, உங்க கிராமத்துல வெச்சு வழிபடுங்கள். உங்க ஊர்ல ஒரு ஒளி வந்து, பிரதிஷ்டை செய்வதற்கும் கோயில் கட்டுவதற்கும் இடம் காட்டும். பிறகு கோயில் கட்டினால், மொத்த ஊரும் சிறக்கும்; செழிக்கும்!’னு அசரீரி கேட்டுதாம்'' என்று தாத்தா சொல்லச் சொல்ல, பேரன் விழிகள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டான்.  

கதை கேளு... கதை கேளு!

''அதன்படியே, வானில் இருந்து தெரிந்த ஒளி, ஊரில் இடம் காட்டிச்சாம். அங்கே, அந்த அம்மன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செஞ்சு வழிபடத் தொடங்கினாங்கன்னு ஸ்தல வரலாறு சொல்லுது. ஆரம்பத்துல, சின்னதா ஒரு கீத்துக் கொட்டகைலதான் அம்மன் இருந்தாளாம். அன்னிலேருந்து, சுத்துப் பட்டு ஊர்ல இருக்கிற மக்கள் எல்லாருக்கும் இஷ்ட தெய்வமாவும் கண்கண்ட தெய்வமாவும் இருந்து அருள்பாலிச்சுக்கிட்டு வர்றா, இந்த மாரியம்மன்'' என்றார் தாத்தா.

அதற்குள் கோயில் நெருங்கிவிடவே, இரண்டு பேரும் மௌனமானார்கள். சற்று நேரத்துக் குப் பிறகு, தாத்தாவே மெல்லிய குரலில் தொடர்ந்தார்...

''இங்கே... ஊருக்குப் பக்கத்துல, ஆலுபாதிங்கற கிராமம் இருக்கு. காவிரி இந்த இடத்துல வடக்கு தெற்கா ஓடுறது

ரொம்பவே விசேஷம்! இதை உத்தர வாஹினின்னு சொல்லுவாங்க. காஞ்சி மகா பெரியவா இங்கே வந்து அம்மனைத் தரிசனம் பண்ணி, சில காலம் தங்கியிருந்தார். இந்த அம்மனோட பேர் மாரியம்மன்னு இருந்தாலும், மகா பெரியவா காமாட்சி, காமாட்சின்னே சொல்லியிருக்கார். அதன் பிறகு இந்த அம்மனுக்குக் காமாட்சியம்மன்கிற பேரே நிலைச்சிடுச்சு'' என்ற தாத்தா, கருவறையில் இருந்த ஒரு வெள்ளிப் பிரம்பைப் பேரனுக்குக் காண்பித்தார்.

கதை கேளு... கதை கேளு!

''இதோ பார்த்தியா... அம்மனுக்கு முன்னாடி இருக்கிற இந்த வெள்ளிப் பிரம்பை வெச்சுதான் பூசாரிகள் அந்தக் காலத்துல குறி சொல்லுவாங்க. அவங்க சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு. இந்தக் கோயில்ல இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? சாதிப் பாகுபாடு இல்லாம, நிறைய இனத்தாருக்கு கருவாழக்கரை அம்மன்தான் குலதெய்வம். ஊர்ப் பெயருக்கு ஏத்த மாதிரி, வாழைப்பழத்தைப் பிசைஞ்சு, இலை அல்லது தாம்பாளத்துல வைச்சு, நடுவுல குழி விட்டு, அதுல கொஞ்சம் நெய் விட்டு, திரியிட்டு விளக்கேத்தி வழிபடுறது இங்கே வழக்கம். அப்படி வழிபட்டா, குலமும் குடும்பமும் செழிக்கும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்னு இந்தக் கோயிலுக்கு நிறையத் திருப்பணிகள் செய்திருக்கிற டெக்கான் கிருஷ்ணமூர்த்திங்கற அன்பர் சொல்லியிருக்கார். தியாக பிரம்ம கான சபாவோட தலைவர் இவர். இவரோட குலதெய்வம் இந்த அம்மன் தான். இன்னும் நிறைய பிரபலங்களுக்கும் இவள்தான் குலதெய்வம்!'' என்றார் தாத்தா.

''செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகள்ல ராகு காலத்துல புதுப்பானை வைச்சு, அதுல முக்கால் அளவு தண்ணீர் பிடிப்பாங்க. ஒரு வாழைப்பூவைப் பிரிச்சு, அந்தப் பானையின் வாய்ப் பகுதியில வைப்பாங்க. அப்புறம், 27 நட்சத்திரங்களுக்கு அடையாளமா 27 தென்னங்குச்சிகளை எடுத்து, அதன் நுனியில பஞ்சு சுத்தி, வேப்பெண்ணெய், இலுப்ப எண்ணெய் முதலான கசப்பான எண்ணெய்களால நனைச்சு, வாழைப்பூவைச் சுத்தி அந்த 27 தென்னங்குச்சிகளைச் செருகி, விளக்கேத்து வாங்க. அப்படியே ஒன்பது முறை அப்பிரதட்சணமா வலம் வரணும். அப்புறம், ஒவ்வொரு குச்சியும் தானாவே அணையற வரைக்கும் காத்திருந்து எடுத்துட்டுப் போய் கோயில் குளத்துல போட்டுட்டு வந்து, அம்மனை வேண்டிக்கிட்டா, செவ்வாய் தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்னு ஐதீகம்.

வேலை கிடைக்காம கஷ்டப்படுற வங்க, பேச்சு மற்றும் படிப்பு சரிவராத குழந்தைங்க, திருமணத் தடையால கலங்கற பெண்கள், தொழில்ல தொடர்ந்து நஷ்டம்னு இடிஞ்சு போயிருக்கறவங்கன்னு எல்லாரும் இங்கே வந்து அம்மனை இந்த முறையில வணங்கினா போதும்... கவலையெல்லாம் போக்கிடுவா கருவாழக்கரையம்மா!'' என்ற தாத்தா அம்மனை வணங்கிவிட்டு, அடுத்த தாக எதிரில் இருந்த ஒரு சந்நிதிக்குப் பேரனை அழைத்துச் சென்றார்.

''இதோ... இதுதான் காத்தவராயன் சந்நிதி. பில்லி, சூனியத்தால பாதிப்புக்கு உள்ளானவங்க அம்மனையும் இந்த காத்தவராய ஸ்வாமியையும் மனசார வேண்டிக்கிட்டாப் போதும்... ஏவல், சூனியத்துலேருந்து முழுமையா விடுபட்டுடலாம்'' என்று தாத்தா சொல்லவும், 'கருவாழக்கரைத் தாயே, சரணம்!’ என்று முணுமுணுத்தபடி, கண்கள் மூடிப் பிரார்த்தனை செய்தான் பேரன்.

- அடுத்த இதழில் நிறைவுறும்

  படங்கள்: ஜெ.ராம்குமார்