புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கல்விக் கோயில்! - கோணூர்

கல்வியில் துணை நிற்பார் கருப்பண்ண சுவாமி!

##~##

திண்டுக்கலில் இருந்து கசவனம்பட்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோணூர். இங்கே காவல்தெய்வமாக இருந்து ஊரையும் மக்களையும் காத்து வருகிறார் ஸ்ரீசந்தன கருப்பண்ண சுவாமி! கோ என்றால் பசு. பசுக்கள் நிறைந்த ஊர் என்பதால், இந்தப் பெயர் அமைந்ததாம் ஊருக்கு!

 வீட்டில் எந்தக் காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும் ஸ்ரீசந்தனகருப்பண்ண சுவாமி சந்நிதிக்கு வந்து பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் காரியத்தில் இறங்குகிறார்கள் பக்தர்கள்!

அதேபோல், விதை நெல்லை எடுத்துக்கொண்டு இங்கு வந்து வேண்டிய பிறகுதான் வயலில் விதைக்கிறார்கள், விவசாயிகள். குழந்தைகளைப் பள்ளியில் முதன்முதலாகச் சேர்க்கும்போது, இங்கு வந்து, 'எங்க புள்ளை நல்லாப் படிச்சு, பெரியாளா வரணும். நீதான் அருள்புரியணும்’ என்று சூடமேற்றி வேண்டிக் கொள்வதும் நடைபெறுகிறது.

கல்விக் கோயில்! - கோணூர்

இந்த ஊருக்கு அருகில் உள்ள அம்மாபட்டி எனும் கிராமத்தில்தான் ஸ்ரீசந்தனகருப்பண்ண சுவாமி குடிகொண்டு அருள்பாலித்திருக்கிறார். பிறகு அந்த ஊர்மக்களில் சிலர், ஊரைவிட்டு இடம்பெயரும்போது, சுவாமியின் விக்கிரகத்தைத் தங்களுடன் எடுத்துச் சென்றனர். அப்போது வழியில், ஓரிடத்தில் இறக்கி வைத்து, இளைப்பாறினார்கள். சிறிது நேரம் கழித்து, விக்கிரகத்தை எடுக்க முயன்றால்... அசைக்கக் கூடமுடியவில்லையாம். 'கருப்பண்ண சாமி இங்கே இருக்கணும்னு விரும்புறார்’ என்று அங்கே இருந்தவர் அருள் வந்து சொல்ல... அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்களாம், மக்கள். அன்றிலிருந்து இன்றளவும் எல்லோரையும் காத்து, சங்கடங்களை அகற்றி சந்தோஷத்தைத் தந்து வருகிறார் ஸ்ரீசந்தன கருப்பண்ணசுவாமி.  

வீட்டில் பொருட்கள் திருட்டுப் போய்விட்டால், இவரிடம் வேண்டினால் போதும்... தொலைந்த பொருள் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இவரின் சந்நிதிக்கு வந்து முறையிட்டால்  எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

குழந்தைகளுக்கு இங்கு வந்து காதுகுத்துதல் முதலான சடங்கு சாங்கியங்களைச் செய்கின்றனர். அப்படிச் செய்தால்... அந்தக் குழந்தை வளர்ந்து, நன்றாகப் படித்து எதிர்காலத்தில் சிறந்து விளங்க, சந்தனக் கருப்பண்ணசுவாமி துணை நிற்பார் என்கின்றனர் பக்தர்கள்.

- க.அருண்குமார்

படங்கள்: வீ.சிவக்குமார்