Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

தசாவதார திருத்தலங்கள்!

Published:Updated:
##~##

சாந்தோக்ய உபநிடதம் ஒரு கதை சொல்கிறது. உப கோசலன் என்றொரு அன்பன். அவனுக்கு பிரம்ம வித்தையைக் கற்றுகொள்ள ஆசை. அதற்காக ஆசார்யர் ஒருவரிடம் சென்று, தனக்கு பிரம்ம வித்தை உபதேசிக்கும்படி வேண்டினான்.

அந்த ஆசார்யர், தீர்த்த யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அவர் அக்னி ஹோத்ரம் செய்பவர். தீர்த்த யாத்திரை சென்றால் யாக அக்னியைப் பாதுகாப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார். உபகோசலன் வந்து சேர்ந்தது அவருக்கு வசதியாகப் போய்விட்டது. ''நான் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும். வரும் வரை யாக அக்னியை பாதுகாத்து வா. இரண்டு மூன்று மாதங்களில் நான் வந்துவிடுவேன். பிறகு பிரம்ம வித்தையை உபதேசிக்கிறேன்'' என்றார். உபகோசலனும் ஒப்புக்கொண்டான். ஆசார்யர் சந்தோஷமாகப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் நான்கைந்து மாதங்கள் கழிந்தும் அவர் திரும்பவில்லை. மாதங்கள், வருடங்களாயின! 12 வருடங்கள் அக்னியை அணையாமல் பாதுகாத்துவந்தான் உபகோசலன். சொல்லப்போனால் அதுவே அவனது வழிபாடானது. ஒருநாள், அக்னி பகவான் காட்சி தந்தார். பிரம்ம வித்தைக்கும் மூலமான வைச்வானர வித்தையை, உபகோசலனுக்கு உபதேசித்து மறைந்தார்.

தசாவதார திருத்தலங்கள்!

மிகச்சரியாக மறுநாள் ஆசார்யர் வந்துசேர்ந்தார். அவனுக்கு உபதேசம் நிகழ்ந்ததை அறிந்து கோபம் கொண்டார். ஆசிரமத்திலிருந்து வெளியேறும்படி கட்டளையிட்டார். மறு கணம், அக்னி பகவான் காட்சி தந்து ஆசார்யரை தடுத்து, அவரது தவற்றைச் சுட்டிக்காட்டினார். அக்னி பகவானைத் தரிசித்த ஆசார்யர் மெய்சிலிர்த்துப் போனார். இத்தனை காலம் தவம் கிடந்தும் தனக்குக் கிடைக்காத அக்னி பகவானின் தரிசனம், இப்போது உபகோசலனால் கிடைத்தது என்பதை உணர்ந்தார். சீடனை மகிழ்வோடு அணைத்துக்கொண்டார்.

அதுமட்டுமா? மிக அற்புதமான அந்த வித்தைக்கு, 'உபகோசல பிரும்ம வித்தை’ என்றே பெயர் அமைந்தது. உபகோசலனின் 12 ஆண்டு கால வைராக்கியத்துக்கு, பொறுமைக்கு, வழிபாட்டுக்குக் கிடைத்த பலன் இது.

நமக்கும், உபகோசலனின் வைராக்கியம் கிட்டுமா?

அதற்கு, ஆத்ம தியாகம் செய்ய வேண்டும்! அந்த அளவுக்கு நம் மனம் பக்குவப்பட, நல்லதோர் ஆசார்யர்- குரு கிடைக்க வேண்டும். லவனுக்கும் குசனுக்கும் அப்படியரு நல்ல குரு கிடைத்திருந்தார்.

அவர், மாமுனிவர் வால்மீகி.

யாரோ ஒரு சலவைத் தொழிலாளி ஏதோ சொன்னான் என்பதற்காக, ஸ்ரீராமர் தன் மனைவியையே தியாகம் செய்யத் துணிந்தார்; அவளை கானகம் அனுப்பினார் என்று சொல்லப்படும் கதை நமக்குத் தெரியும் அல்லவா? வனத்தில் அவள் தங்கியிருந்தது வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில். அங்குதான் இரட்டைக் குழந்தைகளாக லவனும் குசனும் பிறந்தனர்.

தோ... பூமகளின் பச்சைப் பட்டாடையில் வெண் முத்துக்கள் கோத்தது போன்று, ஆங்காங்கே திட்டுத் திட்டாய் வெண்பனி சுமந்திருக்கும் பரந்துவிரிந்த பசும்புல் பரப்பில், நடுநாயகமாக ஓர் ஆலமரம். அதன் அடிமரத்தைச் சுற்றிலும் பீடம் போன்று மேடை. அதில் வால்மீகி அமர்ந்திருக்க, தரையில் பணிவுடன் அமர்ந் திருந்தார்கள் லவனும் குசனும். அவர்களுக்கு மிக உன்னதமான உபதேசம் நடந்துகொண்டிருந்தது.

கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள் அந்த பாலகர்கள். பொறுமையாகப் பதிலுரைத்தார் வால்மீகி.

''ஸ்வாமி, கடவுள் எங்கிருக்கிறார்?''

''எங்கும் இருக்கிறார்.''

''எனில், இந்த புற்பரப்பும் நீலவானமும்கூட கடவுள்தானா?''

தசாவதார திருத்தலங்கள்!

''வானம் மட்டுமல்ல குழந்தைகளே... மலை, தீர்த்தங்கள், மரங்கள், நீங்கள், நான் என சகலத்திலும் இறை சாந்நித்தியம் உண்டு. ஞான நூல்கள் பலவும் அப்ஜா, கோஜா, ருதஜா... என அவரது இருப்பிடங்களைப் பட்டியலிடுகின்றன. அப்ஜா என்றால் தீர்த்தம். எல்லா தீர்த்த நிலைகளிலும் அவர் உறைகிறார். கோஜா- பசுக்களிலும் அவர் இருக்கிறார். பசுவை வணங்கினால், சகல தேவர்களையும் வழிபட்டதற்குச் சமம். பசுவை வலம் வந்தால், இந்த பூவுலகையே வலம் வந்ததற்குச் சமம்.

எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்த உண்மையில்- சத்தியத்தில் இறைவன் நித்யவாசம் செய்கிறார்!''

குசன் குறுக்கிட்டுக் கேட்டான்:

''ஸ்வாமி, சத்தியம் இறைவனின் இருப்பிடம் என்கிறீர்களே... இந்த பூவலகில், சத்தியத்தை பூரணமாகக் கடைப்பிடிக்கும் மனிதர் எவரேனும் உண்டா?''

வால்மீகி அசந்துபோனார். இப்படி யான ஒரு கேள்வியை நாரதரிடம்  இவர் கேட்கப்போய்தானே, ஸ்ரீராமர் எனும் அவதாரப் புருஷனை, அவரது திருக்கதைகளைத் தெரிந்துகொள்ள  முடிந்தது.

சரிதான்... இறை சித்தத்தை நிறைவேற்ற காலம் கனிந்துவிட்டது. ஸ்ரீராமரின் கதையை, அவருடைய புதல்வர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்; அவர்கள் மூலமாகவே அந்தப் புண்ணியக் கதை, இந்தப் பூவுலகில் பரவ வேண்டும்; அதனால் இந்த பூமி காலகாலத்துக்கும் புனிதம் பெற வேண்டும் என மனத்துக்குள் தீர்மானித்தவர், தான் இயற்றிய ராம காவியத்தை லவ-குசனுக்கு விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.

ஜெகம் புகழும் இந்தப் புண்ணியக் கதை வால்மீகியால் இயற்றப்பட்டு, ஸ்ரீராமனின் புதல்வர்களாம் லவ-குசன் மூலம் உலகுக்குச் சொல்லப்பட வேண்டும் என்பது இறை சித்தம். அது அப்படியே நிறைவேறியது.

தசாவதார திருத்தலங்கள்!

அதுவும், முதல் அரங்கேற்றம் அண்ணல் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருமுன்னே நிகழ்ந்தது என்பது அதிவிசேஷம்!

இந்த உலகுக்கு எத்தகையதொரு அற்புதமான பொக்கிஷத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள், ஸ்ரீராமரின் குழந்தைகள். அவர்களை அப்படியே கட்டியணைத்து உச்சிமுகரத் தோன்றுகிறது, இல்லையா? தருமமிகு சென்னையில், கோயம்பேடு ஸ்ரீவைகுண்டவாசல் பெருமாள் ஆலயத்துக்குச் சென்றால், அண்ணலின் குழந்தைகளை ஆசைதீர தரிசிக்கலாம்.

சென்னை- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 நிமிட நடை பயணத் தூரத்தில் இருக்கிறது ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் கோயில். மெயின் ரோட்டில் இருந்து இந்த சிவாலயத்துக்குச் செல்லும் தெருவில் திரும்பி, கோயிலை நெருங்கினால் இடப்புறமாக அமைந்துள்ளது அருள்மிகு வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில்.

இங்கே தவக்கோலத்தில் வால்மீகி அமர்ந்திருக்க, அவரின் இருபுறமும் லவனும் குசனும். இந்த ஆலயத்தில், சீதாப்பிராட்டி கர்ப்பிணி கோலத்தில் அருள்வதாக ஐதீகம். இங்கு வந்து வழிபட சகல காரியங்களும் ஸித்திக்கும்.

அருகிலேயே ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் கோயில் இருக்கிறது என்று பார்த்தோம் இல்லையா? அங்கு அருள்வது, குசனும் லவனும் வழிபட்ட ஈஸ்வரன். ஆகவே, அவருக்கு ஸ்ரீகுசலவபுரீஸ்வரர் என்றொரு திருப்பெயரும் உண்டு.

ஸ்ரீராமரின் யாகக் குதிரையை லவனும் குசனும் பிடித்துக் கட்டிப்போட்ட கதை தெரியும். அந்த யாகக் குதிரையை மீட்க வந்த லட்சுமணன் உள்ளிட்டோரை தோற்கடித்ததுடன், ஸ்ரீராமரையும் எதிர்க்கத் துணிந்தார்கள் லவனும் குசனும். பிறகு, அவரே தங்களின் தந்தை என்று தெரிந்ததும் மனம் வருந்தினர். தந்தையை எதிர்க்கத் துணிந்த தங்களது தவற்றுக்குப் பிராயச்சித்தம் என்ன என்று குருநாதர் வால்மீகியைக் கேட்டார்கள்.

அவர், 'சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபடுங்கள்’ என்று அறிவுறுத்தினார். அதன்படியே, லவனும் குசனும் ஸ்தாபித்து வழிபட்ட ஈஸ்வரனே ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் எனும் ஸ்ரீகுசலவபுரீஸ்வரர். இந்த சிவாலயத்தின் தூண்களில் உள்ள ராமாயணச் சிற்பங்கள் கொள்ள அழகு! சென்னைக்குச் செல்லும் அன்பர்கள் இந்த இரண்டு கோயில்களையும் தரிசித்து அருள் பெற்று வரலாம்.

ஸ்ரீராம மைந்தர்களின் கதையைப் பார்த் தோம். அதேபோல், மேரு மலையின் மைந்த னுக்கு, ஸ்ரீராமர் அருளிய கதையும் உண்டு!

- அவதாரம் தொடரும்..

படங்கள்: சு.குமரேசன்