புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கல்விக் கோயில்! - வெள்ளனூர்

கல்விக் கோயில்! - வெள்ளனூர்

கல்விக் கோயில்! - வெள்ளனூர்
##~##

புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில், சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளனூர். இங்கே, புராதனப் பெருமைகள் கொண்ட ஸ்ரீபிரகதாம்பாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு அருகிலேயே காவல்தெய்வமாக, கிராம தேவதையாகக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீஅழகு நாச்சியம்மன். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் வள்ளல் இவள்.

''கடந்த ஐந்தாறு தலைமுறைக்கும் மேலாக எங்களையும் இந்த ஊரையும் கட்டிக் காப்பவள் ஸ்ரீஅழகு நாச்சியம்மன்தான். புள்ளைங்க சரியா சாப்பாடு, தூக்கம்னு இல்லாம இருந்தாலோ, படிப்புல மந்தமா இருந்தாலோ, இந்த அம்மன் சந்நிதிக்கு வந்து, 'உம் புள்ளையைக் கரை சேர்க்கறது உன் பொறுப்பு தாயீ! நீதான் கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும்’னு வேண்டிக்குவோம். உடனே பலன் கிடைச்சிடும்'' என்று பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர், ஊர்க்காரர்கள்.  

பெயருக்கேற்றாற்போல் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் ஸ்ரீஅழகு நாச்சியம்மன். மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது என்பதுபோல, சிறிய ஆலயம்தான் என்றாலும், சாந்நித்தியம் நிறைந்திருக்கிற திருக்கோயில் இது.

கல்விக் கோயில்! - வெள்ளனூர்

இங்கே, சப்த கன்னியரும் காட்சி தருகின்றனர். வீட்டில் சுப காரியம் நிகழவேண்டும் என்றாலோ, அந்த முறை விவசாயம் செழிக்கவேண்டும் என்றாலோ, சப்த கன்னிமார்களுக்கும் ஸ்ரீஅழகு நாச்சியம்மனுக்கும் புது வஸ்திரம் சார்த்தி, தீபாராதனை காட்டினால், அதில் குளிர்ந்துபோய், பூமியையும் இல்லத்தையும் நிறைக்கச் செய்வாளாம் அம்மன்.

அதேபோல், வம்சத்தைக் காப்பவள் என்றும் இவளைப் போற்றுகின்றனர் பக்தர்கள். கரு உண்டானதும் அழகு நாச்சியம்மன் சந்நிதிக்கு வந்து, 'குழந்தை நல்லபடியா பூமிக்கு வரணும்மா. நீதான் அருள்புரியணும்’ என வேண்டிக்கொள்கின்றனர். அதன்படி சுகப்பிரசவம் நிகழ்ந்ததும், பிறந்த குழந்தைக்கு அழகு நாச்சியம்மன் என்றோ அழகு நாச்சியப்பன் என்றோ பெயர் சூட்டி, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆகவே, இந்த ஊரில் அழகு நாச்சியம்மன்களும் அழகு நாச்சியப்பன்களும் ஏராளம்!

கல்விக் கோயில்! - வெள்ளனூர்

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து விளக்கேற்றி வணங்கி வழிபட்டால், கல்வியில் மேன்மையும் ஞானத்தில் தெளிவும் பெறலாம் என்பது நம்பிக்கை. இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளுடன் வந்து, அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு, பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இப்படிச் செய்தால் பிள்ளைகள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவர், நல்ல உத்தியோகத்தில் சேருவர், பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பக்தர்கள்.

வெள்ளனூர் ஸ்ரீஅழகு நாச்சியம்மனுக்குச் சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வேண்டிக்கொள்ளுங்கள். நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வாள், அம்மன்.

 - க.அபிநயா

படங்கள்: தே.தீட்ஷித்