புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கல்விக் கோயில்! - திருவாதவூர்

கல்விக் கோயில்! - திருவாதவூர்

கல்விக் கோயில்! - திருவாதவூர்
##~##

துரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர். மாணிக்கவாசகர் அவதரித்த இந்தத் தலத்தில் உள்ள பிரமாண்ட சிவாலயம் ரொம்பவே சிறப்புக்கு உரியது. சிவனாரின் திருநாமம்- ஸ்ரீதிருமறைநாதர். அம்பாள்- ஸ்ரீவேதநாயகி. வேதமும் ஞானமும் யோகமும் தந்தருளக்கூடிய இந்த ஒப்பற்ற தலத்தில் மாணிக்கவாசகர் அவதரித்ததில் வியப்பு என்ன இருக்கிறது?!

 தென்னவன் பிரம்மராயன் எனும் பட்டத்துடன் பாண்டிய மன்னனின் அவையில் அமைச்சராக இருந்தார், மாணிக்கவாசகர். சிவனாரின்மீது மாறாத பக்தி கொண்டவர் இவர். கோடிப் பொன் கொடுத்து குதிரைகள் வாங்கி வர மன்னன் உத்தரவிட, அதன்படி கிளம்பிச் சென்றவர், திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார்கோவிலுக்கு வந்தார்.

அங்கே... குருந்த மரத்தடியில் ஈசனே குரு வடிவில் அமர்ந்து, சிவஞானத்தைப் போதித்து, வாதவூராருக்கு தீட்சை அளித்து அருளினார். அங்கேயே சிவபூஜையில் ஒன்றிப் போனார் மாணிக்கவாசகர். அவருடன் வந்த பணியாளர்கள், 'குதிரை வாங்கக் கிளம்பலாமா?’ என்று கேட்க... 'ஆவணி மூலத்தில் பரிகள் (குதிரைகள்) வரும்; போங்கள்’ எனச் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் அங்கேயே தங்கிவிட்டார்.

கல்விக் கோயில்! - திருவாதவூர்

சொன்ன நாளில் குதிரைகள் வராதது கண்டு கொதித்துப் போனான் மன்னன். மாணிக்கவாசகரைத் தண்டிக்க எண்ணினான். மாணிக்கவாசகர் மனதார சிவனாரை வேண்ட... நரிகளையே பரிகளாக்கி மன்னனிடம் அனுப்பினார் ஈசன். ஆனால், அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறிப்போயிருந்தன. ஆத்திரம் அடைந்த மன்னன், 'கொடுத்த பொற்காசுகளை என்ன செய்தாய்? அவற்றை இக்கணமே திருப்பிக் கொடு’ என்று சொல்லி, மாணிக்கவாசகரை கொதிக்கும் வைகையாற்று மணலில் நிறுத்தும்படி உத்தரவிட்டான். பக்தனின் துயரத்தைப் பொறுத்துக் கொள்வாரா இறைவன்? அங்கே வைகையில், கங்கை நீரானது பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் தகிப்பு மறைந்து, குளிர்ந்து போனது பூமி. மாணிக்கவாசகரின் பேராற்றலை அறிந்து உணர்ந்த மன்னன், அவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதையடுத்து, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தை நாம் அறிவோம் இல்லையா? அவர் அவதரித்த திருவாதவூரில், ஸ்ரீதிருமறைநாதர் கோயிலுக்கு அருகிலேயே மாணிக்கவாசகருக்குக் கோயில் கட்டி வழிபடலாயினர், மக்கள். தினமும் இங்கே இரண்டு கால பூஜைகள் சிறப்புற நடைபெறுகின்றன.

வியாழக்கிழமை மற்றும் மாதந்தோறும் வருகிற மகம் நட்சத்திர நாளில் இங்கே வந்து வழிபடுவது சிறப்பு. இந்த நாளில்... படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், பேச்சுத் திறன் இல்லாமல் தவிப்பவர்கள் ஆகியோர் இங்கு வந்து மாணிக்கவாசகருக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால், விரைவில் ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. மேலும், மக நட்சத்திர நாளில், திருவாசகம் முற்றோதுதல் இங்கே சிறப்புற நடைபெறுகிறது. ஆனி மாத மக நன்னாளில் மாணிக்கவாசகர் குருபூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சிவமே குருவென இருந்து அருளைப் பெற்ற மாணிக்கவாசகரின் சந்நிதிக்கு வாருங்கள்; மங்காத கல்விச் செல்வத்தைப் பெறுவீர்கள்.

        - க.முகமது அபுதாகீர்

படங்கள்: ஜெ.பிரதீப் ஸ்டீபன்ராஜ்